இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும் சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் மீண்டும் நடத்தப்பட்டது. தயாரிப்பு: கலைவாணர் கிச்சா, ஜெயகீர்த்தனா க்ரியேஷன்ஸ். கதை, வசனம்: டி.வி. ராதாகிருஷ்ணன். இயக்கம்: பி.டி.ரமேஷ்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறார் இளம்பெண் ப்ரியா. அவ்வழக்கில் வாதாடும் ரங்கராஜ் எனும் வழக்கறிஞர், அவளை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அடைக்கலம் தருகிறார். எதிர்த்தரப்பு வழக்கறிஞரான பிரகாஷிற்கு இது பிடிக்கவில்லை. ரங்காராஜின் வீட்டில் இருப்போரின் புரிதலும் தவறுதலாக இருக்கிறது. இவற்றை ரங்கராஜும், ப்ரியாவும் எப்படி எதிர்கொள்கிறார்கள்?
கதையின் மைய கதாபாத்திரம் ரங்கராஜ். தேர்ந்த வழக்கறிஞர் மற்றும் தன்மையான மனிதர் என இரண்டும் சேர்ந்த கலவை. வழக்கம்போல சிறந்த வசன உச்சரிப்பு மற்றும் இயல்பான உடல்மொழி மூலம் பாராட்டத்தகுந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் 'அம்பி' ராகவன்.
இன்னொரு முக்கிய கதாபாத்திரமான ப்ரியாவாக சுஹாசினி. ஆணாதிக்க சமூகத்தின் தவறான பார்வை மற்றும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார்.
கங்காதரனாக விக்னேஷ் செல்லப்பன். மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து நன்றாக நடிப்பதில் வல்லவர். அதனை இங்கும் நிரூபித்துள்ளார்.
போலீஸ்காரராக ரமேஷ். சரியான வேடப்பொருத்தம். யதார்த்தமான நடிப்பு.
வழக்கறிஞராக ஆனந்த் ஸ்ரீனிவாசன். எப்போதும் போல ஒருவித தடுமாற்றம். நிறைய பயிற்சி தேவை.
ரங்கராஜின் வீட்டில் இருக்கும் பெரியவராக சுரேஷ். குருவித்தலையில் பனங்காய் வைத்தாற்போல வயதை மீறிய கதாபாத்திரம். நகைச்சுவையில் தனித்தன்மை தேவை. அப்பட்டமாக நாகேஷை காப்பி அடித்தால் சரிப்படாது. திறமை மிகுந்த நடிகர். ஆனால் இங்கே எடுபடவில்லை.
இந்நாடகத்தின் முக்கிய பலமாக இருப்பது விஸ்வஜெய்யின் பின்னணி இசை. வசனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் தெள்ளிய நீரோடை போல ஒலிக்கின்றன. ஆங்காங்கே தொய்வினை ஏற்படுத்தும் காட்சிகளை தனது இசை மூலம் சீர் செய்து மெருகேற்றி இருப்பது சிறப்பு. மேடை நாடக உலகில் சிறந்த இசையமைப்பாளராக வருவதற்கான தகுதியை கொண்டிருக்கிறார் விஸ்வஜெய்.
பெரம்பூர் குமாரின் ஒப்பனை, மயிலை பாபுவின் ஒளியமைப்பு, சைதை குமாரின் அரங்க அமைப்புகள் நன்று.
நீதிமன்ற விசாரணைக்கு பிறகும், ரங்கராஜனின் டைரி ரகசியம் வெளியான பிறகும் ஏற்படும் திருப்பங்கள் ரசிக்கும்படி இருந்தன. மற்றபடி பெரிதாய் குறிப்பிடும்படியான அம்சங்கள் இல்லாதது இந்நாடகத்தின் பெருங்குறை.
வழக்கறிஞராக இருக்கும் பிரகாஷ் (ஆனந்த் ஸ்ரீனிவாசன்) இன்னொரு வழக்கறிஞரின் வீட்டில் இருக்கும் பெண்ணை தனது இச்சைக்கு பயன்படுத்த கங்காதரனுக்கு தரும் ஐடியாக்கள் எல்லாம் அரதப்பழசானவை. அதிலும் வீட்டினுள் புகுந்து அவளிடம் தவறாக நடக்கச்சொல்வது மொக்கையான லாஜிக்.
ரங்கராஜ் எனும் பிரபல வழக்கறிஞர், போலீஸ் அதிகாரியாக இருக்கும் அவரது தம்பி ரமேஷ் உள்ளிட்டோர் இருக்கும் வீட்டில் நுழைந்து ஒரு பெண்ணிடம் தவறாக நடந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி கொஞ்சமும் அறியாத மங்குனியாகவா இருப்பார் வழக்கறிஞர் பிரகாஷ்? கங்காதரன் பிடிபட்டால் பிரகாஷை மாட்டிவிடுவான் என்பது கூட தெரியாமல் எதற்கு இந்த நகைச்சுவையான வீர சாகசம்?
நாடகம் ஆரம்பித்தது முதல் பல காட்சிகளில் காமடி என்கிற பெயரில் அறுத்து தள்ளியவர் ரங்கராஜின் மாமாவாக வரும் சுரேஷ். அவரிடம் மாட்டிக்கொள்ளும் பிற நடிகர்கள் 'ஏன் இப்படி கடிக்கறீங்க? மொக்கையா இருக்கு' என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள். இது நமக்கும் பொருந்தும்.
ஓரளவேனும் ரசிக்க வைக்கும் கதையம்சம் கொண்ட நாடகத்தை இதுபோன்ற ஒற்றை நடிகர் மூலமும், அவருக்கு எழுதிய கொடுமையான காமடி வசனங்கள் மூலமும் காலி செய்த புண்ணியம் வசனகர்த்தா டி.வி. ராதாகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் பி.டி. ரமேஷையே சாரும்.
வசனங்களை சரிவர பேசாமல் சிலர் ஆங்காங்கே தடுமாறியுள்ளனர்.
கிறித்துவராக வரும் வழக்கறிஞர் பிரகாஷ் 'நாங்கள் மதத்தை பரப்புவது போல உங்கள் மதத்தை நீங்கள் பரப்பவில்லை. இந்துவாக பிறக்கவில்லையே என வருத்தப்படுகிறேன். அதில்தான் எத்தனை இதிகாசங்கள், புராணங்கள்!!' என புல்லரித்துப்போகிறார்.
புத்தகக்கடையில் கேட்டால் அனைத்து இதிகாச புராணங்களும் கிடைக்கும். போதாக்குறைக்கு இன்டர்நெட், டிவி உள்ளிட்டவற்றில் இவையெல்லாம் கொட்டிக்கிடக்கின்றன. இதற்கு ஏன் ஒரு கிறித்துவர் இந்துவாக பிறக்க வேண்டும்?
தமிழ் மேடை நாடகங்களில் கடந்த சில ஆண்டுகளாக.. கதை மற்றும் கதாபாத்திரங்களுக்கு சம்மந்தமே இல்லாவிட்டாலும் இதுபோன்ற இந்து மதம் சார்ந்த வசனங்கள் திணிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து மதத்தினரும் பார்க்கும்படியான குடும்ப நாடகங்களை தருபவர் எனும் பெயர்பெற்ற டி.வி. ராதாகிருஷ்ணனின் நாடகமும் இப்படி ஆகியிருப்பது துரதிர்ஷ்டம்.
பி.டி.ரமேஷ் எனும் நல்ல குணச்சித்திர நடிகர் துக்ளக் தர்பார் நாடகத்திற்கு பிறகு 'சோ' ரமேஷாக மாறிய பிறகு.. இம்மாதிரியான வசனத்திணிப்புகள் வருவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
உண்மை உறங்காது - 25% விழிப்பு. 75% தூக்கம்.
-----------------------------------------------------------------