CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, June 15, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12


30. சிட்னி காலிங் - பாகம் 1

லிங்க்: https://youtu.be/nr_5is7iSQw

நடிப்பு: கவிதா சுரேஷ், பாலாஜி, சுசீலா, ஜோதி, பாலசந்தர், ஹரி மற்றும் சிலர்.
எழுத்து, இயக்கம்: பம்பாய் சாணக்யா.

   
வீட்டடங்கு காலத்தில் ஆஸ்திரேலிய குடும்பம் ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளை சொல்கிறது முதல் பாகம். செய்தி சேனலில் பணியாற்றும் ஸ்வேதா கூறும் அறிமுக படலங்களுடன் ஆரம்பிக்கிறது பயணம்.  

'பெற்றோர்களை ஏன் பார்க்க வருவதில்லை?' என தாயார் வருத்தப்படுகிறார். அதை போக்கும் விதமாக வீட்டிற்கு வந்து சேர்கிறார்கள். நிகழ்ச்சிகள் ரத்தானதால் வருத்தத்துடன் இருக்கும் இசைக்கலைஞர் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை.

கேமரா கோணங்கள், பின்னணி ஒலியமைப்பு உள்ளிட்டவை ஒரு கதைக்கு வலு சேர்க்கும் காரணிகளாக இருக்க வேண்டுமே தவிர தேவைக்கதிமான ஆதிக்கத்தை செலுத்தினால் ரசிகர்களுக்கு கவனச்சிதறல் மற்றும் எரிச்சலை மட்டுமே உண்டாக்கும். இங்கு நடந்திருப்பதும் அதுதான்.

வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அதிகப்படியான காட்சி மாற்றங்கள் மற்றும் விடாமல் ஒலிக்கும் பின்னணி இம்சை. ஆனாலும் இவ்வளவு ஆர்வம் ஆகாது இயக்குனர் சாணக்யா அவர்களே.

மனரீதியாக சோர்ந்து போனவர்களுக்கு தெம்பளிக்கும் விதமாக ஒரு ஆக்கத்தை தர முயன்றுள்ளார் இயக்குனர். ஆனால் சொன்ன விதம் மற்றும் தீர்வு ஆகியவை தட்டையான டெம்ப்ளேட்டை கொண்டிருப்பதுதான் இதன் பின்னடைவு. 

ஒருவேளை சிறுவர்களை ஊக்கப்படுத்த எடுத்திருந்தால் பள்ளி ஆண்டுவிழாவில் விருதினை வென்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் பெரியோர்களுக்கு ஊக்கம் தர எடுக்கப்பட்டுள்ள இக்கதைக்கு ஊட்டம் மிகக்குறைவு.    


31. கான்ஃபரன்ஸ் கால்

லிங்க்: https://youtu.be/JiiOlh2x4f8

நடிப்பு: ரமணன், ஸ்ரீராமன்.
ஒளிப்பதிவு: அருண்.
ஒலியமைப்பு, படத்தொகுப்பு: ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
எழுத்து, இயக்கம்: டி.வி. ராதாகிருஷ்ணன்.  

கொரோனா ஆக்ரமிப்பால் பிறரைப்போல இக்கதையில் வரும் இளைஞருக்கும் ஒரு இழப்பு ஏற்படுகிறது. இதனால் மனம் நொந்து போகிறார் தந்தை. இச்சூழலை வைத்து ஒரு படைப்பை தந்துள்ளார் டி.வி.ராதாகிருஷ்ணன். 

கதையமைப்பிற்கு போதுமான வாய்ப்பின்றி நான்கு நிமிடத்திற்குள் முடிந்து விடுகிறது. பெரிதாய் ஈர்க்கவில்லை.  
  
  
32. பொண்ணுங்க மனசு 

லிங்க்: https://youtu.be/agj_dBQZ60w 

நடிப்பு: ஆனந்த் ஸ்ரீனிவாசன், சுகாசினி.
எழுத்து: டி.வி.ராதாகிருஷ்ணன்.
ஒலியமைப்பு, படத்தொகுப்பு, இயக்கம்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்.


தந்தைக்கு போன் செய்து புலம்புகிறாள் மகள். என்ன காரணம்? 

இதனை ஒரு குறும்படைப்பாக தந்துள்ளனர் டி.வி.ராதாகிருஷ்ணனும், ஆனந்த் ஸ்ரீனிவாசனும்.

சீரியஸ் கேரக்டரில் நகைச்சுவையாகவும், நகைச்சுவை கேரக்டரில் சீரியஸாகவும் நடித்து மிரள வைக்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். இங்கும் அப்படியே. எப்படியோ நமக்கு என்டர்டைன்மைன்ட் உறுதி!!

டைட்டில் கார்டை கழித்து விட்டு பார்த்தால் இரண்டு நிமிட நீளம் கூட இல்லை. இந்த மிகக்குறுகிய நேரத்தில் நம்மை சிரிக்க வைக்க எதையோ முயன்று பார்த்துள்ளனர். ஒன்றும் நடக்கவில்லை. 

குறும்படம்/குறுநாடகம் என்கிற பெயரில் வருபவை எல்லாம் பத்து நிமிடத்தில் இருந்து ஐந்து, மூன்று, இரண்டு என மொட்டை மாடி வத்தல் போல சுருங்கிக்கொண்டே போகின்றன. இதில் எப்படி ஒரு கதாசிரியர் மற்றும் இயக்குனரின் திறமையை கண்டறிவது?

போகிற போக்கை பார்த்தால் 'ஹலோ வணக்கம். ஸ்டே ஹோம். ஸ்டே சேஃப்' என்று ஒரே ஒரு நடிகர்.. இரண்டு நொடிகள் மட்டும் நடித்து விட்டு... மன்னிக்க... பேசிவிட்டு போய் விடுவார் போல.    
  

Sunday, June 14, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 1127. குட் மார்னிங்

லிங்க்: https://youtu.be/XtAVnOJxKZ4

நடிப்பு: காத்தாடி ராமமூர்த்தி, கீதா, எஸ்.எல்.நானு, மகேஷ்வர், ஸ்ரீனிவாஸ், சந்துரு.

எடிட்டிங்: நந்தினி. இசை: கௌஷிக் வெங்கடேசன்.
எழுத்து, இயக்கம்: எஸ்.எல்.நானு.
தயாரிப்பு: ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்.


நித்தம் காலை மற்றும் இரவில் நட்பில் உள்ளோருக்கு அலைபேசி வாயிலாக குட்மார்னிங், குட்நைட் சொல்வது சிவராமனின் வழக்கம். அத்தோடு நின்றால் பரவாயில்லை. பேசும் நேரமும் நீண்டு கொண்டே போகும். இதனால் குடும்ப விஷயங்களை தந்தையிடம் பேச இயலவில்லையே என  மகன் சீனுவிற்கு எரிச்சல். 

வாட்ஸ் அப் மூலமே அல்லது நேரிலோ இப்படி காலை மற்றும் மாலை வணக்கம் சொல்வது ஒருதரப்பினரின் வழக்கம். இன்னொரு தரப்பிற்கோ இது ஒவ்வாத விஷயம். மெசேஜை பார்த்த மாத்திரத்தில் நீக்கி விடுவார்கள். ஆனால் சிவராமன் போன்ற சிலர் வணக்கம் போடுவதற்கு பின்னே அர்த்தம் உண்டு.

தரமான நகைச்சுவைக்கு காத்தாடி - ஸ்ரீனிவாஸ் காம்போ. கீதா, எஸ்.எல்.நானு, மகேஷ்வர், ஸ்ரீனிவாஸ், சந்துரு உள்ளிட்ட சக கலைஞர்களும் நடித்துள்ளனர். 

கருத்தும், நகைச்சுவையும் கலந்த விஷயத்தை யார் சொல்கிறார்கள், எப்படி சொல்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அதன் பலம் அமையும். இங்கே காத்தாடி ராமமூர்த்தி இருப்பது மிகப்பொருத்தம். 

இந்நாடகத்தை பார்த்த பிறகு குட்மார்னிங், குட்நைட் செல்வோரின் எண்ணிக்கை கூடும் என நிச்சயம் நம்பலாம். 

எஸ்.எல்.நானுவிடம் இருந்து இன்னொரு 'குட்' படைப்பு. 


28. கடனாளிகள்

லிங்க்: https://youtu.be/SHgt7dq0bCk

நடிப்பு: முத்துக்குமரன், கணபதி சங்கர், பாலசுப்ரமணியம், வித்யா தீபக், ரேவதி, ஹிதேஷ், ஸ்ருதி மாதவன், தீபக், கிருஷ்ண ராம், நுதனா.
ஒளிப்பதிவு: பிரசாந்த் கணபதி சங்கர்.
எடிட்டிங்: விஸ்வஜெய்.
இசை: குகப்ரசாத்.  
எழுத்து, இயக்கம்: முத்துக்குமரன்.
தயாரிப்பு: கணபதி சங்கர் - PMG மயூரப்ரியா. 


நோய்த்தொற்று பரவலாகிப்போன இச்சமயத்தில் மருத்துவர்கள் எப்படி தன்னலமற்று பணியாற்றுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்கிறது இக்கதை. 

நடிகர்கள் அனைவரிடமும் நடிப்பில் எந்த பின்னடைவுமில்லை. தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் தினமும் மருத்துவர்கள் செய்யும் சேவை மற்றும் அவர்கள் படும் இன்னல்களை பார்த்து வருகிறோம். அதில் உள்ள சில முக்கிய விஷயங்களை எடுத்து கையாண்டுள்ளார் இயக்குனர் முத்துக்குமரன். நல்ல எண்ணம் என்பதில் ஐயமில்லை.

ஆனால் பொதுவான சென்டிமென்ட் டெம்ப்ளேட் மட்டுமே இக்குறும்படம்/குறுநாடகத்தில் மேலோங்கி இருப்பதால் 'டைரக்டர்ஸ் டச்' பெரிதாய் இல்லை. அதற்கு திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.     


29. தி கிஃப்ட் ஆஃப் கொரோனா 

லிங்க்: https://youtu.be/cRMUU07O3YM 

நடிப்பு: ரவிசங்கர், சாந்தி. 
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: ரவிசங்கர்.


லாக் டவுனில் வீட்டில் இருக்கும் கணவர் தனது மனைவியை நடிக்க வைத்து ஒரு படமெடுக்க நினைக்கிறார். இதுகுறித்து பேசப்போனால் வீட்டில் தான் படும் பாடுகளை பட்டியல் இடுகிறார் மனைவி.

இந்த சமூகத்திற்கு எதையோ சொல்ல நினைத்துள்ளார் இயக்குனர் ரவிசங்கர். ஆனால் ஒரு குறும்படைப்பிற்கு தேவையான அம்சங்கள் போதவில்லை என்பதால் பார்த்து முடித்ததும் நீராவியைப்போல மனதில் இருந்து மறைந்து விடுகிறது.   

அடுத்தமுறை உருப்படியான கதையுடன் வர வாழ்த்துகள். 


Sunday, June 7, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 10


23. என்ன ஆச்சு?

லிங்க்: https://youtu.be/fYAUj2Aqcac

நடிப்பு: எஸ்.எல்.நானு, கௌஷிக் வெங்கடேசன்.
கதை, வசனம், இயக்கம்: எஸ்.எல்.நானு.
தயாரிப்பு: மீனாட்சி லட்சுமிநாராயணன்.பிள்ளைகளை பிரிந்திருக்கும் தந்தை அவ்வப்போது அலைபேசி மூலம் அவர்களுடன் இணைகிறார். 'எதிர்பார்ப்பு' என்கிற ஒற்றை வார்த்தைதான் கதையின் ஆஸ்தானம்.  

ஐந்தரை நிமிடத்திற்குள் ஒரு நிதர்சனத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.எல்.நானு. நடிகர்களாக இவரும், கௌஷிக்கும். பிரமாதம் என்று சொல்ல இயலாவிட்டாலும் 'ஜஸ்ட் ஓகே' என சொல்ல வைக்கிறது இப்படைப்பு.   


24. மீனா 

லிங்க்: https://youtu.be/U5b3Wtccs0c

நடிப்பு: சிறுமி சௌம்யா, கிரிஷ் வெங்கட், சசிகலா.
எடிட்டிங்: சுரேஷ்.
எழுத்து இயக்கம்: பூவைமணி மற்றும் சந்திரமோகன்.

செவிலியர் வேலை பார்க்கும் இல்லத்தரசி. ஒருநாள் கணவரிடம் தங்கள் செல்ல மகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வேலைக்கு செல்கிறார். அதன்பிறகு நடப்பதென்ன?

கதையின் நாயகி சிறுமி சௌம்யா, கிரிஷ் வெங்கட் மற்றும் சசிகலா ஆகியோரின் நடிப்பு இயல்பு. 

நீளம் ஐந்தரை நிமிடம். இச்சிறு இடைவெளியில் சிறுமியின் மூலம் ஒரு நல்லெண்ணத்தை நம்மிடம் விதைக்க முயன்றுள்ளனர். ஓகே என சொல்லும்படி இருந்தாலும்.. இறுதியில் திரைப்பட பாடல் மூலம் நிறைவு பெறுகிறது.

இரண்டு இயக்குனர்கள் இருந்தும்.. ஒரு படைப்பின் முக்கியமான இறுதி தருணத்தில் தங்களது வசனம் மற்றும் இயக்கத்தின் மூலம் இன்னும் அழுத்தமான முத்திரையை பதித்திருக்கலாம். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்த ஒரு திரைப்பட பாடலையா துணைக்கு அழைக்க வேண்டும்? 

25. இருமனம் 

லிங்க்: https://youtu.be/R6QnoISmHio

நடிப்பு: சங்கர் குமார்.
எழுத்து: சங்கர் குமார்.
இயக்கம்: நிதிஷ் சங்கர்.
தயாரிப்பு: ப்ரேம் குமார்.மகனுக்கு பெண் பார்க்கும் படலம் பற்றிய பேச்சை எடுக்கிறார் தந்தை. இருவருக்குமான உரையாடலாக நகர்கிறது கதை. 

இரு கேரக்டர்களிலும் சங்கர்குமார் நடித்துள்ளார். டி.வி. வரதராஜனின் நாடகங்களில் பரிச்சயமானவர் இவர்.

தந்தையாக வித்யாசம் காட்ட குரலில் செய்திருக்கும் மாற்றம்... விக்ஸ் கவர் தொண்டையில் சிக்கியது போல செயற்கையாக உள்ளது. இன்னும் யதார்த்தமாக முயற்சித்திருக்கலாம். 

கதை, வசனம், இயக்கத்தில் போதுமான அழுத்தமும், சுவாரஸ்யமும் இல்லாததால் சிலாகிக்க இயலவில்லை. அடுத்து ஒரு நல்ல ஆக்கத்தை எடுக்க வாழ்த்துகள்.

26. இல்லத்தரசன் 

லிங்க்: https://youtu.be/Yk5OJLMsnnYநடிப்பு: சங்கர் குமார்.
எழுத்து: சங்கர் குமார்.
இயக்கம்: நிதிஷ் சங்கர்.
தயாரிப்பு: ப்ரேம் குமார்.

நீளம் நாலரை நிமிடம். முதல் காட்சியில் கத்தியுடன் நிற்கிறார் சங்கர். அடுத்து ரசிகர்களுக்கு ஒரு திருப்பத்தை தரப்போகிறோம் என இயக்குனர் நிதிஷ் நினைத்திருப்பினும்.. அது என்னவாக இருக்கும் என்பதை எளிதில் யூகித்து விட முடிகிறது.

க்ளைமாக்ஸும் பலமுறை பார்த்த திருப்பங்களில் ஒன்றாகவே ஆகிப்போகிறது. இயக்குனராக அடியெடுத்து வைத்திருக்கும் நிதிஷ் சங்கர் இன்னும் மேம்பட்டு யோசிக்க வேண்டும். 

ஐந்து நிமிடங்களுக்குள் எடுக்கப்படும் குறுநாடகம்/குறும்படம் என்பது ஒருவகையில் இயக்குனர்களுக்கு அனுகூலமான விஷயம் என்றாலும்.. அதில் கூட நேர்த்தியான கதை, வசனம் மற்றும் இயக்கத்தினை தந்தாக வேண்டிய கட்டாயமும் இருப்பதை தவிர்க்கவே இயலாது. 

Friday, June 5, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 9


22. வந்தவன்.

லிங்க்: https://youtu.be/TlVuA1SfLZk

நடிப்பு: மாதவ பூவராக மூர்த்தி, மகேஷ் வெங்கடேஷ், சாவித்திரி ரகுராமன்.
இசை: ராதிகா வெங்கடேஷ், ஸானிகா வெங்கடேஷ்.
எடிட்டிங்: மகேஷ் வெங்கடேஷ்.
எழுத்து: சுஜாதா.
திரைவடிவம், இயக்கம்: மாதவ பூவராக மூர்த்தி, மகேஷ் வெங்கடேஷ்.
தயாரிப்பு: பூர்ணம் நியூ தியேட்டர் நண்பர்கள்.


எழுத்தாளர் சுஜாதாவின் ஏழு பக்க சிறுகதையாக நூல் வடிவில் 'வந்தவன்' தற்போது யூ ட்யூப் திரைக்கு வந்திருக்கிறான்.

வருடம் 1970. மெஸ் என்று சொல்லப்படும் ஒரு சிறு உணவு விடுதி. இரவு டிபன் வியாபாரம் முடிந்துவிட்ட நேரத்தில் ஒரு இளைஞர் 'சாப்பிட ஏதேனும் கிடைக்குமா?' எனக்கேட்டு உள்ளே வருகிறார். அவருக்கும், மெஸ் ஓனர் (மணி) ஐயருக்குமான  உரையாடல்தான் கதை.

14 நிமிடம் முழுக்க சுஜாதாவின் வெகு யதார்த்தமான Black காமடி ரசிக்க வைக்கிறது. மிகச்சுமாரான வருவாயில் இயங்கும் மெஸ் மற்றும் அதன் முதலாளிகளின் நிலையை  நமக்கு விளங்க வைத்திருக்கிறார்.

கதையின் தன்மைக்கேற்ப மெஸ் ஓனராக மாதவ பூவராக மூர்த்தியின் நடிப்பு மிகச்சிறப்பு. மனதில் பட்டதை பேசும் வெகுளியான மனிதராக நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். அருமை!!  

இளைஞராக வரும் மகேஷ் வெங்கடேஷ் மற்றும் (மணி) ஐயரின் மனைவியாக நடித்துள்ள சாவித்திரி ரகுராமனும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

சுவாரஸ்யமான இறுதிக்காட்சி.   

தரமான சிறுகதையை திரையில் பார்த்த முழு திருப்தியை தந்த மாதவ பூவராக மூர்த்தி மற்றும் மகேஷ் வெங்கடேஷ் இணைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.     

வந்தவன்...மனதை வென்றவன். 

Monday, June 1, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 8

20. டோன்ட் மிஸ்.


https://youtu.be/jG00BAc1vCo

நடிப்பு: கிரிஷ் அய்யபத், அபர்ணா, அஸ்வின் கிருஷ்ணா.
எடிட்டிங்: அருண் கே.
வசனம்: சாய்ராம், சுஜாதா கோபால்.
எழுத்து, இயக்கம்: சாய்ராம்.


மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. மகனும், மகளும் வெளிநாடுகளில். தனி ஒருவராக மனைவியை கவனிக்க கடுமையாக போராடுகிறார் கணவர். பிள்ளைகளுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து இக்கடின சூழல் பற்றி சொல்கிறார். 'எதிர்பார்த்த' பதிலைத்தவிர அனைத்தும் வருகிறது. இதனை எப்படி கடக்கிறார்?

இந்த ஆக்கத்தின் நீளம் பதின்மூன்றரை நிமிடங்கள். அதில் குறைந்தபட்சம் பாதிநேரம் உணர்வுபூர்வ நடிப்பில் கட்டிப்போட முழு அர்ப்பணிப்பும், நடிப்பாற்றலும் வேண்டும். அதை சற்றும் சிந்தாமல் சிதறாமல் தான் தோன்றும் முதல் நொடியில் இருந்து இறுதிவரை தந்திருக்கிறார் தந்தையாக நடித்துள்ள கிரிஷ் அய்யபத். 

கிரிஷ் அய்யபத்.. தமிழ் நடிப்புக்கலைக்கு கிடைத்த ஆகச்சிறந்த வரம்!!  

பாராட்ட மேலும் வார்த்தைகள் இல்லை. பார்ப்போரின் கண்களில் தவழும் வெம்மையான நீர்த்திவலைகளே அதனை பூர்த்தி செய்யும். 

பலமுறை அடித்து துவைக்கப்பட்ட கதையென்றாலும்... 'சரியான' நடிப்பு மற்றும் வசனம், இயக்கம் மூலம் ரசிகர்களுக்கு தரும்போது அவை மீண்டும் போற்றப்படத்தான் செய்யும். அவ்வகையில் சுஜாதா மற்றும் சாய்ராம் இருவரின் எழுத்தும், நெறியாள்கையும் அருமை. 

டோன்ட் மிஸ். 


21. தொற்று.

https://www.youtube.com/watch?v=cnHl3ZXmirQ

நடிப்பு:
வர்ஷா ஜெயராமன், ஆதித்யா பரத்வாஜ், சுமதி ஜெயராமன்,  முத்துக்குமரன்,
ஜெயராமன், மீனாட்சி முத்துக்குமரன், கோபிநாதன், ரவிச்சந்திரன்.

ஒளிப்பதிவு: பிரசாந்த் கணபதி சங்கர்.
எடிட்டிங்: ம்ரித்யுஞ்ஜெய்.
இசை: விஸ்வஜெய்.
கதை, வசனம், இயக்கம்: முத்துக்குமரன்.
தயாரிப்பு: கணபதி சங்கர் (பி.எம்.ஜி  மயூரப்ரியா).


சென்னை ஊரடங்கால் வீட்டினுள் இருக்கும் மூன்று தலைமுறை குடும்பத்தினர். வீட்டின் செல்ல மகள் சிறுமி தான்யா. குறும்பும், திறமையும் ஒருசேர கொண்டிருப்பவள் செய்யும் ஒரு முக்கிய செயல் என்னவென்பதை சொல்லும் கதை.

குழந்தை நட்சத்திரங்களை மையமாக வைத்து சமூகப்பார்வையுடன் எடுக்கப்படும் பல்வேறு நாடகங்களை விமர்சிப்பதில் ஒரு பெரும் பிரச்னை உண்டு. எப்படி அம்மா சென்டிமென்ட் மற்றும் கடவுள் பக்தி கொண்ட நாடகத்தை எதிர்மறை விமர்சனம் செய்தால் பெரும் கலவர சூழல் ஏற்படுமோ அதை விட அதிக எதிர்ப்பு இதுபோன்ற குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கும் நாடகங்களை குறை சொல்லும்போது வந்து சேரும். 

'கதை, வசனம், இயக்கம் எல்லாம் எப்படி இருந்தா என்ன? பாவம். அந்தக்குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்துள்ளது. அதை பாராட்ட மனம் இல்லையா?' என்று நமது மண்டையை பூரிக்கட்டை, கர்லாக்கட்டைகளால் தாக்கி விடுவார்கள். 

ஆனால் இந்த தொல்லை எதுவுமின்றி நல்ல நடிப்பு மற்றும் இயக்கத்துடன் ஒருசில படைப்புகள் சுவாரஸ்யமாக இருப்பதுண்டு. அதில் ஒன்றுதான் இது.

தான்யா மட்டுமல்ல. தாய் சுமதி ஜெயராமன், தந்தை ஜெயராமன், அண்ணன்  ஆதித்யா பரத்வாஜ் என ஆளாளுக்கு செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் அனைத்தும் மத்தாப்பு சிரிப்பிற்கு உத்திரவாதம். குறிப்பாக அந்த ரசம்... பட்டாசு!!

ஆட்டோ ஓட்டுனர் கோபிநாதன், தாத்தா பாட்டியாக முத்துக்குமரன் மற்றும் மீனாட்சி முத்துக்குமரன், வங்கி மேலாளர் ரவிச்சந்திரன் போன்றோர் துணை நடிகர்களாக பங்காற்றியுள்ளனர்.

வெகுஜனங்களை ஈர்க்கும் வண்ணம் நல்லதோர் நாடகத்தை தந்திருக்கும் இயக்குனர் முத்துக்குமரனுக்கு வாழ்த்துகள். 
   
2020 சிறந்த குழந்தை நட்சத்திர விருதுப்பிரிவிற்கான பந்தயத்தில் தற்போதைக்கு தான்யா முன்னிலை வகிக்கிறார். திருஷ்டி படாமல் இருக்க சுற்றிப்போட வேண்டியது பெற்றோர்களின் உடனடிக்கடமை!!  

Related Posts Plugin for WordPress, Blogger...