CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, May 27, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம்கோடை நாடக விழா நடக்கவிருந்த நேரத்தில் லாக்டவுன் அறிவிப்பு எதிர்பாராதது. ஆனால் அதற்காக முடங்கி விடாமல் யூ ட்யூப் வழியே குறு நாடகங்களை வெளியிடும் நாடகக்குழுக்களின் ஆர்வத்தை பாராட்ட வேண்டும்.  ஏதேனும் ஒரு வடிவத்தில் தமிழ் நாடகங்கள் இயங்கிக்கொண்டே இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தபடியே நடிப்பது, அதற்கேற்ப வசனம் எழுதி இயக்குவது, அக்காட்சிகளை கோர்ப்பது என சவாலான விஷயங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே தொழில்நுட்ப குறைபாடுகள் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படுகிறது. அதேநேரத்தில்...நாடகத்தின் நீளம் சில நிமிடங்களே என்றாலும்.. அதிலும் நல்ல கதையம்சம், வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு உள்ளிட்டவை இருந்தால்தான் ரசிக்க இயலும். 

அதுபோன்ற தரத்தில் இந்த யூ ட்யூப் நாடகங்கள் இருந்தனவா? காண்போம் இனி... 


1. அப்பா - சௌம்யா தியேட்டர்ஸ்.  

https://youtu.be/941KDziLgso

நடிப்பு: ஆனந்த் ஸ்ரீனிவாசன், பி.டி.ரமேஷ், கௌஷிகா.
கதை, வசனம் - டி.வி.ராதாகிருஷ்ணன்.
எடிட்டிங், இசை மற்றும் இயக்கம்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்.


குணச்சித்திர/சோகமான அப்பா கேரக்டர் என்றால் பி.டி.ரமேஷுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஆனால் நமக்குதான் சற்று திகட்டும். இங்கும் அதே கேரக்டர். மகனாக ஆனந்த் ஸ்ரீனிவாசன். ஆங்காங்கே இவர் தரும் சீரியஸ் ரியாக்சன்கள் நல்ல நகைச்சுவை.

தந்தையின் நற்குணத்தை மகன் மதிக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் டி.வி.ராதாகிருஷ்ணன் எழுத, ஆனந்த் இயக்கியுள்ளார். இருவரும் நிறைய காம்ப்ளான் குடிக்க வேண்டும்.


2. என்னத்த சொல்ல - ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்.

https://youtu.be/QhfDASIFDa0

நடிப்பு: காத்தாடி ராமமூர்த்தி, லாவண்யா வேணுகோபால், மகேஷ்வர்,  கீதா நாராயணன், ஸ்ரீனிவாஸ்.
எடிட்டிங், இசை: கௌஷிக்.
கதை, வசனம், இயக்கம் - எஸ்.எல். நானு.


கணவர், மாமியார், மாமனார் ஆகியோரை பற்றிய அறிமுக படலத்தை செய்கிறார் இல்லத்தரசி நந்தினி. எடுத்த எடுப்பிலேயே ஜானகி பற்றி மாமனார் சிவராமன் சொல்லும் கலகலப்பான விஷயத்துடன் துவங்கும் நாடகம் கிட்டத்தட்ட பனிரெண்டரை நிமிடங்கள் தொய்வின்றி நகர்கிறது.

'ரெண்டு ஆனியன் ரவா ஊத்தப்பம், சீரியலை பார்ப்பது, மகனை கிண்டல் செய்வது என காத்தாடி ராமமூர்த்தியின், ஸ்ரீனிவாசன் கூட்டணி சிரிப்பில் ஆழ்த்துகிறது. 

இரு பெண்கள் பெயரைக்குறிப்பிட்டு வைக்கும் சஸ்பென்ஸ் சுவாரஸ்யம். வழக்கம்போல இறுதியில் ஒரு சமூக கருத்துடன் நிறைவாக முடிகிறது.

லாவண்யா, கீதா, மகேஷ்வர் உள்ளிட்டோரின் நடிப்பிலும்குறையில்லை.

நகைச்சுவை மற்றும் சமூக கருத்தினை கொண்ட குறுநாடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தெளிவுடன் அழகாக கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் நானு. நாடகத்தின் நீளம் சிறிதென்றாலும் முழு மேடை நாடகம் பார்த்த திருப்தி.  


3. காதலிக்க கத்துக்கடா - ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்.

https://youtu.be/S9pI4BYYyQU

நடிப்பு: காத்தாடி ராமமூர்த்தி, சுப்பு, லாவண்யா வேணுகோபால், வெங்கடேஷ்.
எடிட்டிங், இசை: கௌஷிக்.
கதை, வசனம், இயக்கம்: எஸ்.எல். நானு. தற்கொலை செய்யப்போகும் சுரேஷை பெரியவர் சிவராமன் எப்படி கையாள்கிறார் என்பதே கதை.

இதுபோன்ற கதையமைப்பு முன்பே வந்தவை என்பதால் நேரம் போகப்போக எதிர்பார்ப்பு குறைய ஆரம்பிக்கிறது. தம்பதியர்களுக்கு இடையே இருக்கும் முரணை தீர்க்க சிவராமன் தரும் ஐடியாவும், க்ளைமாக்ஸும் சுமாராகவே இருக்கிறது.  

காத்தாடி ராமமூர்த்தியின் ஒருசில நகைச்சுவை தவிர்த்து பெரிய ஈர்ப்பை தராமல் போகிறது. என்னத்த சொல்ல.. 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...