16. கரங்கள்.
லிங்க்: https://youtu.be/ohB9ygg_Wsc
நடிப்பு: இளங்கோ குமணன், சூரஜ் ராஜா, ரேமண்ட்.
ஒளிப்பதிவு, எடிட்டிங்: டெரி டிரேஸ்.
இசை: தக்ஷின்.
கதை: ராஜேஷ் பாலமுருகன்.
எழுத்து, இயக்கம்: இளங்கோ குமணன்.
தயாரிப்பு: K ட்ரீம் வோர்ல்ட்.
ஒயிட் காலர் வேலை பார்க்கும் பீட்டருக்கு ப்ளூ காலர் வேலை பார்த்து ஓய்ந்த தந்தை மீது ஒருவித ஒவ்வாமை. அவரை மீண்டும் அழைத்து கடிந்து கொள்கிறான். பிறகு பாதிரியார் ஒருவரை சந்தித்து அளவளாவுகிறான். தெளிந்த நீரோடை போல அவர் சொல்லும் விஷயத்தால் பீட்டரின் ஒயிட் காலரில் கறை மேலும் படிந்ததா அல்லது நீங்கியதா?
சின்னஞ்சிறு கதையம்சம். சுமார் எட்டரை நிமிட நீளம். ஆனால் ஒவ்வொரு வசனத்தையும் திறம்பட செதுக்கி இருக்கிறார் இளங்கோ குமணன். நடிப்பிலும் இதையே பிரதிபலிக்கிறார். இணையான கேரக்டரில் நன்றாக ஸ்கோர் செய்கிறார் சூரஜ்.
இதே கதையை உணர்ச்சி பொங்க சிந்தித்து எளிதில் சொதப்பலாம். ஆனால் இளங்கோ குமணனுக்கு நேர்த்தி தெரிந்திருப்பதால் இப்படியொரு ஆக்கப்பூர்வ படைப்பு சாத்தியமாகி இருக்கிறது.
வெற்றிக்'கரங்கள்'.
லிங்க்: https://youtu.be/np8y0oqltQ4
நடிப்பு: பின்னி ராமச்சந்திரன், லட்சுமி, ஸ்வயம் பிரகாஷ் மற்றும் மிகப்பலர்.
இசை: கிரிதரன்.
கருத்து: திருமலை ராமானுஜம்.
எழுத்து, படத்தொகுப்பு, இயக்கம்: டிவி வரதராஜன்.
தயாரிப்பு: யுனைடட் விஷுவல்ஸ்.
கொரோனா சமயத்தில் வயது முதிர்ந்த தந்தை நீண்ட நேரம் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்கிறார் அவரது மகன். எங்கே போனார் என்பது புரியாமல் குழப்பம் அதிகரிக்க இறுதியில் என்ன நடந்தது என்பதை சொல்லும் கதை.
நீளம் சுமார் 18 நிமிடங்கள். தெரிந்தவர்களுக்கு போன் செய்து விசாரிக்கிறார் மகன். நாலைந்து பேர் என்றால் பரவாயில்லை. யுனைடெட் விஷுவல் குழுவில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு தர எண்ணியதால்.. அனைவரிடமும் போன் போட்டு விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரிக்கிறார். விசாரித்துக்கொண்டு இருக்கிறார்.
'அப்பா எங்கே வேண்டுமானாலும் போகட்டும். தயவு செய்து க்ளைமாக்ஸுக்கு வாங்க சாமி' என கும்பிடத்தோன்றும் அளவுக்கு ஜவ்வாக இழுக்கிறது. ஒருவழியாக க்ளைமாக்ஸ் வந்தாலும் அது பெரும்பாலும் யூகிக்க முடிந்ததாகவே இருக்கிறது. மகன்தான் மறதிக்காரர்... மருமகளுக்கு கூடவா இந்த 'எளிதான' தேடலுக்கான யோசனை இல்லை?
பல்வேறு நடிகர்களை வைத்து ஒரு நகைச்சுவை படைப்பை உண்டாக்க நினைத்திருந்தாலும், அதற்கேற்ப திருமலை ராமானுஜம் மற்றும் வரதராஜன் இணையிடம் செழுமையான கருத்து, எழுத்து மற்றும் இயக்கத்தை காணோம்!!
18. பூமராங்.
லிங்க்: shorturl.at/jxBFN
நடிப்பு: சபரீஷ், மாலதி சம்பத், பூர்வஜா மூர்த்தி, மாதவ பூவராக மூர்த்தி, விஸ்வநாதன் ரமேஷ், வி.பி.ஸ்ரீராம், வெங்கட், அனுராதா, ரமேஷ்.
கதை, வசனம்: கௌரிசங்கர்.
எடிட்டிங், இயக்கம்: கார்த்திக் கௌரிசங்கர்.
தயாரிப்பு: தி ஒரிஜினல் குருகுலம் பாய்ஸ் கம்பெனி '95.
இளைஞன் ஒருவனுக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கும் படலம். ஸ்வேதா எனும் பெண்ணுடன் பேசியதில் கருத்து முரண்பாடு வர.. அடுத்த படலம் ஆரம்பம்.
அப்பாவி இளைஞனாக சபரீஷும், நறுக்கென்று பேசும் பெண்ணாக பூர்வஜாவும் கேரக்டருக்கு பாந்தமாய் பொருந்துகிறார்கள். மேற்குறிப்பிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களும் சேர்வதால் நடிப்பில் பின்னடைவு ஏதுமில்லை.
ஆனால் கதை மற்றும் இயக்கம் போதுமான சுவாரஸ்யத்தை தராததால் மிக சுமாரான நாடகமாய் போய் விடுகிறது. இதுபோக இசையின் இரைச்சலும் ஓயாமல் ஒலித்து செவிக்கு இடையூறு செய்கிறது. அடுத்தமுறை கார்த்திக் மற்றும் கௌரிசங்கர் இருவரும் பூமராங்கிற்கு பதில் கூர்மையான அம்பினை எய்வார்கள் என காத்திருப்போம்.
0 comments:
Post a Comment