CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, May 30, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 5


13. மலையங்குளத்து நினைவுகள். 

https://youtu.be/vO1wyFPrWh8

குரல்: கே.ஏ.ஸ்ரீனிவாசன், ஆர்.கிரிதரன்.
இசை: ஆர்.கிரிதரன்.
எழுத்து: ஜெ. ரகுநாதன்.
தயாரிப்பு: கீர்த்தி மாரியப்பன்.


லாக் டவுன் காலத்தில் பல்வேறு நாடக கலைஞர்கள் யூ-ட்யூப் நாடகங்களை அளித்து வரும்போது தியேட்டர் மெரினா வித்யாசமான முயற்சியில் இறங்கியுள்ளது. நடிகர்கள் யாரும் கேமராவிற்கு முன்பு தோன்றாமல் 'ஒலி நாடகம்' ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஸ்ரீனிவாசன் மற்றும் கிரிதரன் என இரண்டே குரல்கள்.

மலையங்குளம் எனும் ஊரை சேர்ந்த இரு நபர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்து உரையாடுகிறார்கள். பழைய நினைவுகளில் மூழ்கி அப்போதைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் மாந்தர்களை பற்றி விசாரிப்புகளும், பதில்களும் அடுத்தடுத்து வந்து செல்கின்றன. ஆரம்பம் முதல் இறுதி வரை நம் கிராமத்து வாழ்வினையும் மீட்டெடுக்கிறது ரகுநாதனின் அருமையான வட்டார வழக்கு வசனங்களும், அதற்கேற்ப கச்சிதமாக பேசும் ஸ்ரீனிவாசன் மற்றும் கிரிதரனின் குரல் வளமும். குறிப்பாக இறுதி சில நொடிகள் சிரிப்பிற்கும், ஆச்சர்யத்திற்கும் உத்திரவாதம்.

ஒலி நாடகத்தின் வெற்றி என்பது நல்ல குரல் வளம் - ஏற்ற இறக்கம் என்பது மட்டுமல்ல. உரையாடல்களை கேட்கும் ரசிகர்கள் அந்த கதாபாத்திரங்கள் இருக்கும் சூழல் மற்றும் மனவோட்டத்துடன் தாமே இருப்பது போன்று உணர்வை தர வேண்டும். அதை இவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

கிராமம் சார்ந்த நாடகங்களை காண/கேட்க கிடைப்பதே அரிது என்றாகி விட்ட காலத்தில் புத்துணர்வு தரும் தென்றலாக நம்மை வருடிச்செல்கிறது இந்நாடகம். மேடையில் குறுநாடகமாக அரங்கேறினாலும் நிச்சயம் வரவேற்பை பெறும். தியேட்டர் மெரினா குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துகள். 

14. காலை எழுந்தவுடன் கொலை.


நடிகர்கள்: சூரஜ் ராஜா, ஸ்வேதா ஸ்ரீனிவாசன் மற்றும் சிலர்.
இசை: குகப்ரசாத்.
ஒலி, இசைக்கோர்வை: விஸ்வஜெய்.
எடிட்டிங்: ம்ரித்யுஞ்ஜெய்.
நாடகமாக்கம், இயக்கம்: தாரிணி கோமல்.
கதை: சுஜாதா.1990 ஆம் ஆண்டு எழுத்தாளர் சுஜாதா எழுதிய சிறுகதை தற்போது நாடக வடிவில் வந்துள்ளது. 

பூங்காவில் நடைப்பயிற்சிக்கு செல்லும் இளைஞர்.. அங்கே ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதன் தொடர்ச்சியாக வந்து சேரும் தொல்லைகள் என்ன?

சுஜாதாவின் எழுத்தில் இருக்கும் விறுவிறுப்பை அப்படியே நாடகமாக்கம் செய்து ஒன்றை வைத்து விடுகிறார் தாரிணி கோமல். கதைக்கேற்ப சூரஜ் மற்றும் ஸ்வேதாவின் நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. நல்லதோர் சஸ்பென்ஸ் த்ரில்லர்.

15. நிசப்தம். 


நடிப்பு: எஸ்.எல்.நானு.
இசை, ஒளிப்பதிவு: கௌஷிக் வெங்கடேசன்.
எழுத்து, இயக்கம்: எஸ்.எல்.நானு.
தயாரிப்பு: மீனாட்சி லட்சுமிநாராயணன்.
  


மொத்த நீளம் ஆறு நிமிடங்கள். நானு எனும் ஒற்றை நடிகர். வசனம் எதுவுமில்லை. ஆனாலும் முற்றிலுமாக ஒன்றி விட முடிகிறது. சுற்றி நடக்கும் அசைவுகள் அனைத்திற்கும் மனமே முக்கிய காரணம் என்பதை உணர்த்தும் குறுநாடகம்.

வீட்டின் அறையில் அமர்ந்தபடி கணினியில் வேலை பார்க்கிறார் எழுத்தாளர் மௌனதாசன். அமைதியாக இருந்தால் மௌனதாசன், வழக்கறிஞர் என்றால் சட்டநாதன், வைத்தியர் என்றால் வைத்தீஸ்வரன். இன்னும் எத்தனை யுகங்களுக்கு இதுபோன்ற பெயர்களை வைத்து நம்மை கொல்வார்கள்? இந்த கொசுக்கடிக்கு மருந்தே இல்லையா?

இறுதியில் இரைச்சல், நிசப்தம் பற்றிய குறிப்பு ஒன்று எழுத்து வடிவில் வருகிறது. அது இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும் இந்நாடகம். 

இவ்விரு குறைகள் தவிர்த்து பார்த்தால் ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான படைப்பை நானு தந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். வாழ்த்துகள்.   
   

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...