CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, May 29, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 4


10. ஜில் ஜில்லும் கொரோனாவும்.

https://youtu.be/VOoyFqwh9ac 

நடிப்பு: லாவண்யா வேணுகோபால், மகேஷ்வர்.
மூல வசனம்: ஏ.பி.நாகராஜன், திரைப்பட இயக்குனர்.
நாடகமாக்கம், வசனம்: சுப்பு.
படத்தொகுப்பு: அனிருத்.
ஒளிப்பதிவு: ஐஸ்வர்யா ரவிசங்கர், அனிருத்.


க்ளாஸ்ஸிக் படங்கள் மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் கேரக்டர்களை  மீட்டுருவாக்கம் செய்வது அக்னி பரீட்சைக்கு சமம். தமிழ் சினிமா என்று எடுத்துக்கொண்டால் சாவித்ரி, மனோரமா, சிவாஜி, நாகேஷ் ஆகிய ஜாம்பவான்களை போல நடிக்க நினைப்பது எரிமலைக்குள் வாக்கிங் போவதற்கு சமம். 

இதுபோன்ற முயற்சிகளை செய்து மண்ணை கவ்வியவர்கள் ஏராளம். மிகச்சிலர் மட்டுமே அந்த ஜாம்பவான்களின் புகழுக்கு களங்கம் இன்றி நடித்து பெயர் வாங்கி இருக்கிறார்கள். அப்படியான ஒரு முயற்சிதான் இது. 'தில்லானா மோகனாம்பாள்' ஜில்ஜில் ரமாமணி மனோரமாவாக லாவண்யாவும், 'மைனர் நாகலிங்கமாக  மகேஷ்வரும் நடித்துள்ளனர்.  

ஊரே முடங்கிப்போய் இருக்கும் சமயத்தில் கச்சிதமாக ஆடை மற்றும் ஒப்பனை பொருட்களை எங்கிருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்லை. நல்லவேளை மதன்பூர் மகாராஜா நம்பியாரின் கேரக்டரை தொடாமல்.. மைனர் நாகலிங்கத்தை தேர்வு செய்துள்ளார் மகேஷ்வர்.

ரமாமணியாக லாவண்யா. 'மனோரமா பேசிய வட்டார வழக்கு மற்றும் அவரது பிரமாதமான நடிப்பை எப்படி இவர் பிரதிபலிப்பார்? அதற்கான வாய்ப்பு மிகக்குறைவு' என உறுதியாக நம்பி நாடகத்தை பார்க்க துவங்கினால்.. நடந்தது வேறு.

முகபாவம், வசன உச்சரிப்பு என துல்லியமாக நடித்து மனோரமாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் லாவண்யா. கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் 'எதற்கு இந்த விபரீத முயற்சி?' என பலராலும் பகடிக்கு உள்ளாகி இருப்பார். ஆனால் ஜில் ஜில் ரமாமணியின் கேரக்டரை ஆழமாக உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக பிரதிபலித்து இருப்பது ஆச்சர்யம். வாழ்த்துகள். 


11. வாடகை வீடு.    


நடிப்பு: போத்திலிங்கம், சித்தார்த் வெங்கட்ராமன்.
இசை: குகப்ரசாத்.
ஒலி, இசைக்கோர்வை: விஸ்வஜெய்.
படத்தொகுப்பு: ம்ரித்யுஞ்ஜெய்.
கதை, வசனம், இயக்கம்: தாரிணி கோமல்.

    
முக்கியமான மீட்டிங் ஒன்றில் கலந்துகொள்ள செல்லும் இளைஞரின் கார் ஒன்று பஞ்ச்சர் ஆகிவிடுகிறது. அதனை சரி செய்ய காத்திருக்கும் வேளையில் ஊர் பெரியவர் ஒருவருடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கிறது.  பூமியின் வளத்தை வளர்ச்சி என்கிற பெயரில் நாசம் செய்வது பற்றி அந்த இளைஞனுக்கு எடுத்துரைக்கிறார்.

நிலப்பரப்பை மனிதகுலம் எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பது பற்றி கருத்துள்ள வசனங்கள் மூலம் அழகாக முன்வைக்கிறார் தாரிணி கோமல். ஊர் பெரியவராக போத்திலிங்கம் மற்றும் இளைஞராக சித்தார்த். இயல்பான நடிப்பு. இறுதிக்காட்சியில் சித்தார்த் எடுக்கும் முடிவு செயற்கை.

குகப்ரசாத்தின் இதமான இசை கிராமத்து சூழலுடன் ஒன்றிப்போகிறது.

இயற்கை வளத்தை பாதுகாத்தல் என்கிற விழிப்புணர்விற்கு இதனை பார்க்கலாம். மற்றபடி ஒரு நாடகமாக பூரணத்துவம் பெறுவதற்கு கதை மற்றும் இயக்கத்தில் ஆர்கானிக் சத்து போதவில்லை. 


12. வெள்ளை மனம்.


நடிப்பு: மாதவ பூவராகமூர்த்தி மற்றும் பலர்.
இசை: குகப்ரசாத்.
ஒலி, இசைக்கோர்வை: விஸ்வஜெய்.
படத்தொகுப்பு: ம்ரித்யுஞ்ஜெய்.
கதை, வசனம், இயக்கம்: தாரிணி கோமல்.
எழுத்து, இயக்கம்: தாரிணி கோமல்.


அபார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருக்கும் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் லாக்டவுன் பொழுதினை எப்படி கழிக்கிறார்கள் என்பதை சொல்கிறது இந்த படைப்பு.

யோகா, நடனம், செல்லப்பிராணி மீதான பாசம் என ஒவ்வொரு சிறுவர்க்கும் ஒவ்வொரு பயிற்சிகள் மற்றும் எண்ணங்கள். லாக் டவுன் முடிந்தபிறகு உடனே செய்ய நினைப்பது பற்றி பெரியவர்கள் பேசுகிறார்கள்.

செய்தி சேனல் ஒன்று அபார்ட்மெண்ட்வாசிகளை பேட்டி எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. ஒரு நாடக வடிவத்திற்கான கதை, இயக்கம் போன்றவற்றை 300 அடிக்கு ஆழ்துளை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை. 

செய்தி பார்க்க விரும்பும் ரசிகர்கள் பார்க்கலாம். நாடக பிரியர்கள் சமூக இடைவெளியில் இருப்பது நலம்.     

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...