CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, May 28, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 3


7. தபஸ்.

https://youtu.be/8qStbXAcZm0

நடிப்பு: கௌரி சுரேஷ், அனு சந்தோஷ், ரவி ஆதித்யா, சுரேஷ், சாந்தி ரவிசங்கர் ரவிசங்கர், ஸ்ரீனிவாசன்.

இசை: விஸ்வஜெய். எடிட்டிங்: ம்ரித்யுஞ்ஜெய். வாய்ஸ் ஓவர்: குகப்ரசதாத்.
கதை வசனம் இயக்கம்: முத்துக்குமரன்.
தயாரிப்பு: கணபதி சங்கர்.


லாக் டவுன் என்பதால் மகனும், தந்தையும் வீட்டில் இருக்க.. ஓயாமல் வேலை பார்க்கும் இல்லத்தரசியின் நிலையை சொல்லும் கதை. 

விடிந்ததும் காலை உணவிற்கு ஆளுக்கொரு மெனுவை தருவது, இரவு வீட்டிற்கு வந்ததும் மீண்டும் சாப்பிட்டுவிட்டு உறங்குவது என பெரும்பாலான ஆண்களின் வருடங்கள் வேகமாக உருண்டோடி விடுகின்றன. பல்வேறு வீட்டு வேலைகளை தனியாளாக சுமக்கும் தாய்/மனைவிக்கு துணையாக அந்த பாரத்தை பகிரும் எண்ணம் லேசில் வராது. 

இந்த யதார்த்தத்தை நம் மனதில் தைக்கும்படி நகைச்சுவை கலந்து படைத்துள்ளார் இயக்குனர் முத்துக்குமரன். நல்ல வசனங்கள் மற்றும் நடிப்பு. 

இரு குடும்பங்களின் கதை ஒன்றில் மாமியாராக வரும் கௌரி சுரேஷ்... பதட்டத்துடன் பார்வையாளர் பக்கம் பாப்பது, வசனத்தை மட்டும் ஒப்பிப்பது என மிக அமெச்சூர்தனமாக நடித்துள்ளார். இதற்கு முன்பாக இவர் நடித்த  மேடை நாடகங்களிலும் இதே நிலைதான். 

ஒன்று இவரது நடிப்பை மெருகேற்ற வேண்டும் அல்லது வேறொருவரை நடிக்க வைக்க வேண்டும். எந்த மாற்றமும் செய்யாமல் இருப்பதால்  தலைவலிதான் மிச்சம். விரைவில் ஆவன செய்து தலைவலியை போக்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒரு மைனஸை தவிர்த்து பார்த்தால் நல்லதோர் குடும்ப நாடகத்தை தந்துள்ள மயூரப்ரியா குழுவினருக்கு பாராட்டுகள். நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள சொல்லும் நாடகங்கள் பல வந்தாலும் ஒருசில மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வகையில் தபஸை பார்க்கும் ஆண்கள் நிச்சயம் மாறுவார்கள் என நம்பலாம்.

8. ஹாப்பி கொரோனாஷ்வளி.

https://youtu.be/-PpIdJK97wY

நடிப்பு: ப்ரேமா சதாசிவம், லாவண்யா வேணுகோபால், மகேஷ்வர், சுப்பு.
எடிட்டிங்: அனிருத்.
கதை வசனம் இயக்கம்: லாவண்யா வேணுகோபால்.


2040 ஆம் ஆண்டு கொரோனா சம்மந்தப்பட்ட விஷயங்கள் எப்படி இருக்கும் எனும் கற்பனையுடன் உருவாக்கி இருக்கிறார்கள். ஓரிரு வசனங்கள் மட்டும் புன்முறுவலை வரவழைக்கிறது. மற்றபடி சொல்வதற்கு எதுவுமில்லை. இயக்குனர் லாவண்யாவின் கற்பனை குதிரைக்கு ஒரு பெரிய பக்கெட்டில் கபசுர குடிநீரை தந்து தெம்பாக ஓடவிட்டிருந்தால் ரசிக்கும்படி இருந்திருக்குமோ என்னவோ...


9. மனித உறவுகள்.

https://youtu.be/O99FiP1veek

நடிப்பு: வி.பி.ஸ்ரீராம், அனுராதா, ரமேஷ் சீனு, ஆனந்த் ராம்.
எழுத்து: கோமல் ஸ்வாமிநாதன்.
இசை: குகப்ரசாத்.
ஒலி & இசைக்கோர்வை: விஸ்வஜெய்.
படத்தொகுப்பு: ம்ரித்யுஞ்ஜெய்.
நாடகமாக்கம், இயக்கம்: தாரிணி கோமல்.


1984 ஆம் வருடம் விகடனில் வெளியான சிறுகதை இது. 'இலக்கிய சிந்தனை' சார்பாக சிறந்த சிறுகதைக்கான விருதை வென்றார் கோமல் ஸ்வாமிநாதன். 

அமெரிக்காவில் இருக்கும் மகனை பல ஆண்டுகளாக நேரில் காண இயலாமல் இருக்கும் பெற்றோர்கள். அவர்களுக்கு உதவியாக ஒரு வேலையாள் வந்து சேர்கிறார். சில காலம் கழித்து இந்தியாவிற்கு வருவதாக மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவனது வருகை இந்த பெற்றோர்கள் மனதில் எவ்வித மாற்றத்தை உண்டாக்குகிறது?

பெற்றோர்களாக வி.பி.ஸ்ரீராம் மற்றும் அனுராதா. கதாபாத்திரத்திற்கு சாலப்பொருத்தம். 1980 களின் காலகட்டத்தை மனதில் வைத்துப்பார்த்தால் இன்னும் அழுத்தமாக பதியும். நெகிழ்வான இறுதிக்காட்சி.    

கோமல் ஸ்வாமிநாதனின் சிறுகதைக்கு எவ்வித சேதாரமும் இன்றி நன்றாக நாடகமாக்கம் மற்றும் இயக்கத்தினை செய்துள்ளார் தாரிணி கோமல். 
   

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...