4. உதவிக்கு வரலாமா?
https://youtu.be/i0cCtWi2bFc
நடிப்பு: ஒய்.ஜி.மகேந்திரன், சுதா, ரத்னம் கூத்தபிரான்.
இசை: அருண் கிருஷ்ணன். கதை, வசனம்: ரத்னம் கூத்தபிரான். இயக்கம்: விக்னேஷ் ரத்னம்.
பென்ஷன் தொகை கேட்டு நீண்ட நாட்களாக அல்லல்படும் நடராஜன் என்பவரை மையமாக கொண்ட கதை. நடராஜனாக ஒய்.ஜி.மகேந்திரன், அவரது இல்லத்தரசியாக நிஜ இல்லத்தரசி சுதா. இருவரின் நடிப்பும் நிறைவு.
பென்ஷன் - உயில் ஒப்பீடு, காஃபி சாப்புடறீங்களா வசனங்கள் நன்று. மற்றபடி நாடகத்திற்கான தன்மை இன்றி சாதாரண அரசாங்க பிரச்சாரப்படம் போல முடிகிறது. ஒரு இயக்குனராக விக்னேஷின் தனித்தன்மை இல்லாமல் போவது பெருங்குறை.
நடிப்பு: மாலதி சம்பத், கிரிஷ் அய்யபத், ஜெயகுமார்.
எழுத்து, இயக்கம்: பூவைமணி மற்றும் சந்திரமோகன்.
கேமரா: நரேன் பாலாஜி, சிபி, அசோக் குமார். எடிட்டிங்: கௌதம்.
தயாரிப்பு: கலைவாணி டிஜிட்டல் மீடியா, மதர் க்ரியேஷன்ஸ்.
காலையில் வீட்டின் அறை ஒன்றினை பூட்டியபடி இறைவழிபாட்டில் அமர்கிறார் கோமதி அம்மா. ஏன் என்பதற்கான காரணம் புரியாமல் தவிக்கிறார்கள் அவரை பாதுகாப்பவர்கள். ஆறரை நிமிடத்தில் எடுக்கப்பட்ட குறுநாடகம்.
எப்போதும்போல மனதைத்தொடும் அம்மாவாக நடிப்பில் மிளிர்கிறார் மாலதி. நாடகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக கிரிஷ் அய்யபத்தின் இருப்பும் சிறப்பு.
ஆனால் கதை, இயக்கம்? பிள்ளைகள் மீது நிபந்தனையற்ற பாசம் வைப்பதில் 'பெரும்பாலான' இந்திய/தமிழக தாய்மார்கள் எப்போதும் ஒரு படிமேல் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே இந்த நிதர்சனத்துடன் ஒருசில நுணுக்கமான காட்சி/வசன அமைப்பு கூட இன்றி தட்டையாக நகர்ந்தால் எப்படி?
வாசகர்கள்/பார்வையாளர்கள் மீது வைக்கப்படும் உச்சக்கட்ட எமோஷனல் ப்ளாக் மெயில் என்றால் அது அம்மா பாசம் மற்றும் கடவுள் பக்திதான். இவை இருந்தால் மட்டும் போதும். மற்ற குறைபாடுகளை கண்டுகொள்ள மாட்டார்கள் எனும் எண்ணம் எட்டிப்பார்க்கும் நேரத்தில் ஒரு வசனகர்த்தா/இயக்குனரின் 'படைப்பினை செதுக்கும் தன்மை' வலுவிழந்து போகும் என்பதற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.
அம்மா...அம்மம்மா!!
நடிப்பு: வி.பி.ஸ்ரீராம், கணபதி சங்கர், முத்துக்குமரன், பாலசுப்ரமணியன்.
இசை: குகபிரசாத், விஸ்வஜெய். எடிட்டிங்: ம்ரித்யுஞ்ஜய்.
கதை, வசனம், இயக்கம் - முத்துக்குமரன்.
தயாரிப்பு: கணபதி சங்கர்.
லாக்டவுன் நேரத்தில் ஒத்திகை பார்ப்பது சம்மந்தமாக நாடகக்குழுவினர் நடத்தும் உரையாடலை கொண்ட கதை. வி.பி.ஸ்ரீராம், கணபதி சங்கர், முத்துக்குமரன், பாலசுப்ரமணியன் ஆகியோரின் நடிப்பு யதார்த்தம்.
Saree Falls - False, தண்ணி அடிப்பது, நீ தைப்பது எனக்கு மனதை தைக்கிறது என ஹைதர் அலி காலத்து நகைச்சுவை பாணி 2020 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.. இதை கேட்பதற்கு பதில் மதிய நேர அக்னி வெயிலில் நிற்பது எவ்வளவோ மேல். 'தயவு செய்து வசனம் எழுதும் பாணியில் மாற்றங்களை கொண்டு வாருங்கள் முத்துக்குமரன்' என்று அவரது கால் சுண்டுவிரலை இழுத்துப்பிடித்து கெஞ்ச தோன்றுகிறது.
'நாடகத்திற்குள் நாடக ஒத்திகை' என்பது உண்மையாகவே நாடகம் பார்க்கிறோம் எனும் உணர்வை தர வேண்டும். ஆனால் சாதாரண உரையாடல்களைத்தாண்டி சுவாரஸ்யம் எதுவுமில்லை.
கதை, வசனம், இயக்கத்தில் நன்றாக ஒத்திகை பார்த்திருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment