30. சிட்னி காலிங் - பாகம் 1
லிங்க்: https://youtu.be/nr_5is7iSQw
நடிப்பு: கவிதா சுரேஷ், பாலாஜி, சுசீலா, ஜோதி, பாலசந்தர், ஹரி மற்றும் சிலர்.
எழுத்து, இயக்கம்: பம்பாய் சாணக்யா.
வீட்டடங்கு காலத்தில் ஆஸ்திரேலிய குடும்பம் ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளை சொல்கிறது முதல் பாகம். செய்தி சேனலில் பணியாற்றும் ஸ்வேதா கூறும் அறிமுக படலங்களுடன் ஆரம்பிக்கிறது பயணம்.
'பெற்றோர்களை ஏன் பார்க்க வருவதில்லை?' என தாயார் வருத்தப்படுகிறார். அதை போக்கும் விதமாக வீட்டிற்கு வந்து சேர்கிறார்கள். நிகழ்ச்சிகள் ரத்தானதால் வருத்தத்துடன் இருக்கும் இசைக்கலைஞர் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை.
கேமரா கோணங்கள், பின்னணி ஒலியமைப்பு உள்ளிட்டவை ஒரு கதைக்கு வலு சேர்க்கும் காரணிகளாக இருக்க வேண்டுமே தவிர தேவைக்கதிமான ஆதிக்கத்தை செலுத்தினால் ரசிகர்களுக்கு கவனச்சிதறல் மற்றும் எரிச்சலை மட்டுமே உண்டாக்கும். இங்கு நடந்திருப்பதும் அதுதான்.
வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அதிகப்படியான காட்சி மாற்றங்கள் மற்றும் விடாமல் ஒலிக்கும் பின்னணி இம்சை. ஆனாலும் இவ்வளவு ஆர்வம் ஆகாது இயக்குனர் சாணக்யா அவர்களே.
மனரீதியாக சோர்ந்து போனவர்களுக்கு தெம்பளிக்கும் விதமாக ஒரு ஆக்கத்தை தர முயன்றுள்ளார் இயக்குனர். ஆனால் சொன்ன விதம் மற்றும் தீர்வு ஆகியவை தட்டையான டெம்ப்ளேட்டை கொண்டிருப்பதுதான் இதன் பின்னடைவு.
ஒருவேளை சிறுவர்களை ஊக்கப்படுத்த எடுத்திருந்தால் பள்ளி ஆண்டுவிழாவில் விருதினை வென்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் பெரியோர்களுக்கு ஊக்கம் தர எடுக்கப்பட்டுள்ள இக்கதைக்கு ஊட்டம் மிகக்குறைவு.
31. கான்ஃபரன்ஸ் கால்
லிங்க்: https://youtu.be/JiiOlh2x4f8
நடிப்பு: ரமணன், ஸ்ரீராமன்.
ஒளிப்பதிவு: அருண்.
ஒலியமைப்பு, படத்தொகுப்பு: ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
எழுத்து, இயக்கம்: டி.வி. ராதாகிருஷ்ணன்.
கொரோனா ஆக்ரமிப்பால் பிறரைப்போல இக்கதையில் வரும் இளைஞருக்கும் ஒரு இழப்பு ஏற்படுகிறது. இதனால் மனம் நொந்து போகிறார் தந்தை. இச்சூழலை வைத்து ஒரு படைப்பை தந்துள்ளார் டி.வி.ராதாகிருஷ்ணன்.
கதையமைப்பிற்கு போதுமான வாய்ப்பின்றி நான்கு நிமிடத்திற்குள் முடிந்து விடுகிறது. பெரிதாய் ஈர்க்கவில்லை.
32. பொண்ணுங்க மனசு
லிங்க்: https://youtu.be/agj_dBQZ60w
நடிப்பு: ஆனந்த் ஸ்ரீனிவாசன், சுகாசினி.
எழுத்து: டி.வி.ராதாகிருஷ்ணன்.
ஒலியமைப்பு, படத்தொகுப்பு, இயக்கம்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
லிங்க்: https://youtu.be/agj_dBQZ60w
நடிப்பு: ஆனந்த் ஸ்ரீனிவாசன், சுகாசினி.
எழுத்து: டி.வி.ராதாகிருஷ்ணன்.
ஒலியமைப்பு, படத்தொகுப்பு, இயக்கம்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
தந்தைக்கு போன் செய்து புலம்புகிறாள் மகள். என்ன காரணம்?
இதனை ஒரு குறும்படைப்பாக தந்துள்ளனர் டி.வி.ராதாகிருஷ்ணனும், ஆனந்த் ஸ்ரீனிவாசனும்.
சீரியஸ் கேரக்டரில் நகைச்சுவையாகவும், நகைச்சுவை கேரக்டரில் சீரியஸாகவும் நடித்து மிரள வைக்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். இங்கும் அப்படியே. எப்படியோ நமக்கு என்டர்டைன்மைன்ட் உறுதி!!
டைட்டில் கார்டை கழித்து விட்டு பார்த்தால் இரண்டு நிமிட நீளம் கூட இல்லை. இந்த மிகக்குறுகிய நேரத்தில் நம்மை சிரிக்க வைக்க எதையோ முயன்று பார்த்துள்ளனர். ஒன்றும் நடக்கவில்லை.
குறும்படம்/குறுநாடகம் என்கிற பெயரில் வருபவை எல்லாம் பத்து நிமிடத்தில் இருந்து ஐந்து, மூன்று, இரண்டு என மொட்டை மாடி வத்தல் போல சுருங்கிக்கொண்டே போகின்றன. இதில் எப்படி ஒரு கதாசிரியர் மற்றும் இயக்குனரின் திறமையை கண்டறிவது?
போகிற போக்கை பார்த்தால் 'ஹலோ வணக்கம். ஸ்டே ஹோம். ஸ்டே சேஃப்' என்று ஒரே ஒரு நடிகர்.. இரண்டு நொடிகள் மட்டும் நடித்து விட்டு... மன்னிக்க... பேசிவிட்டு போய் விடுவார் போல.