CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, May 2, 2019

கோடை நாடக விழா 2019: கதிர்வேலன் கணக்கு
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் பத்தாவது நாடகம் - கதிர்வேலன் கணக்கு. எழுத்து, இயக்கம்: கார்த்திக் கௌரிசங்கர். தயாரிப்பு : குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி 95.   

கதைச்சுருக்கம்:

அலைபேசி விற்பனையகம் நடத்தி வரும் கதிரை ஊருக்கு வரச்சொல்லி ஒரு அவசர அழைப்பு வருகிறது. இரவு நேரத்தில் அடுத்த பேருந்திற்காக காத்திருக்கும் அவன் ஒரு நபரை சந்திக்கிறான். இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது?

நடிகர்கள்:

நாடகத்தின் ஆரம்பத்தில் பலத்த மௌனம் சாதித்துவிட்டு, பிறகு தனது கதையை சொல்லும் வேலனாக சூரஜ். பேருந்து நிலையத்தில் ஓரிடத்தில் நின்றபடி இவர் பேசும் நீண்ட வசனம் சத்தமின்றி ஒரு பேரிடியை நம்முள் இறக்கி வைத்து விடுகிறது. 

ஏன் இவர் அமைதியாகவே இருக்கிறார் எனும் கோபம் கதிரைப்போல நமக்கும் முதலில் வரத்தான் செய்கிறது. ஆனால் கடந்த கால வாழ்க்கையை சூரஜ் விவரித்துக்கொண்டு இருக்கையில் ஒரு பலத்த மௌனத்திற்கு நம்மை ஆட்படுத்தி விடுகிறார். வாழ்வின் இருண்ட அத்யாயத்தை கூச்சம், பயம், குழப்பம், கோபம், அழுகை என பல விதங்களில் வெளிப்படுத்தி அசர வைத்திருக்கும் இவரது நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிப்பு கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இந்த ஒற்றைக்காட்சியை பார்த்தால் போதுமான பாடம் கிடைக்கும். அபாரம்!!  

வாத்தியாராக கார்த்திக் கௌரி சங்கர் மற்றும் மாணவன் கதிராக அரவிந்த் மற்றும் சபரீஷ். சங்கரனாக வி.பி.எஸ்.ஸ்ரீராம். அனைவரின் நடிப்பும் கச்சிதம். 

பின்னரங்கம்:

அரங்க அமைப்பு (சைதை குமார் & சண்முகம்), ஒப்பனை (பெரம்பூர் குமார்), ஒளி உள்ளிட்டவற்றை மிக எளிமையாக அமைத்துள்ளனர். இரவு நேர பூச்சிகளின் சப்தம் மற்றும் நெகிழ்வான சமயங்களில் வரும் சன்னமான ஒலியென பொருத்தமானவற்றை தேர்வு செய்திருக்கிறார் கலைவாணர் கிச்சா. ஆனால் இவற்றையே மீண்டும் ரிப்பீட் செய்யாமல் சில மாறுபட்ட ஒலிகளையும் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எழுத்து:

வழமையான சபா நாடக கதாசிரியர்கள் தொட மறக்கும், மறுக்கும், அஞ்சும் கதைக்களம். அதனை தனது முதல் நாடகத்திலேயே தொட்டிருக்கிறார் கார்த்திக். 

எடுத்த எடுப்பில் அவசர கதியில் கதையை ஓட விடவில்லை. செயற்கையான சென்டிமென்ட், நகைச்சுவை என எவ்வித பாதுகாப்பு வளையத்தையும் அமைத்துக்கொள்ளவில்லை. குடி குடியை கெடுக்கும் என்று நாடகம் துவங்கும் முன்பு ஒரு எச்சரிக்கை விடப்படுகிறது. பிற்பாடு மாணவரை கண்டித்து ஆசிரியர் பேசுகிறார். இனி கதை எப்படி நகரும் என ஒரு யூகத்தை செய்தால்...அதனை உடைத்து மாற்றுப்பாதையில் நகர்த்தி கதையின் ஆசிரியராக முதல் வெற்றியைப்பெறுகிறார் கார்த்திக்.

சிறிய சதவீதத்தில் நடைபெறும் குற்றம் என்றாலும் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை திறம்பட விவரித்திருக்கிறார். இப்படியான ஒரு நாடகத்திற்கு கார்த்திக் கதை மற்றும் வசனங்களை அமைத்திருப்பதை பார்க்கையில் தரமான இலக்கிய வாசிப்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சாத்தியம் என்று தெரிகிறது. 

நாடகத்தில் வரும் திருப்பங்கள் எதுவுமே அதிரடியாகவோ, நம்பத்தகாத முறையிலோ இல்லை. வெகு யதார்த்தமாய், கூர்மையாய் மனதை கீறிவிட்டு செல்கின்றன. 

இயக்கம்:

ஆசிரியர் - மாணவன் உறவு, கணக்கு தீர்ப்பு, குற்ற உணர்வு என பயணிக்கும் இந்நாடகத்தின் இறுதிவரை கதை மாந்தர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டங்களை கச்சிதமாக உருவாக்கியுள்ளார் கார்த்திக். இதில் கதாநாயகன் என்று எவருமில்லை. ஆசிரியர் துரை, கதிரேசன், சங்கரன், வேலன் என கதையின் நாயகர்கள் மட்டுமே.

சமூகத்திலும், இல்லத்திலும் நடக்கும் ஒடுக்குமுறைகள் அனைத்துமே விவாதிக்கப்பட வேண்டியவைதான். 18 வயதை தாண்டிய நபர்களுக்கு முன்பாகத்தான் நாடகம் மேடையேறுகிறது. விரசம், ஆபாசம் என்று இதில் எதுவுமில்லை. மெச்சூரிட்டி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு முதிர்ந்த உரையாடலை நம்முன் வைத்திருக்கிறது இப்படைப்பு. பிரச்சார பாணியை கையாளாமல் முற்றிலும் கதையின் ஊடாகவே மையக்கரு பயணித்திருப்பது பெரிய பலம்.

'ஐயோ... விரசம்.. கலாச்சாரம் கெட்டு விட்டது' என்று உரக்க கத்தி இதுபோன்ற சிறந்த முன்னெடுப்புகளை கண்டு போலியாக அலறாமல் இருத்தல் நலம்.

'போட்டி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு சிக்ஸர், பவுண்டரி கூட இல்லையே' என்று குதிகாலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு பொறுமை இழக்கும் T20 ரசிகர்களுக்கான நாடகமில்லை இது. சற்று நிதானத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நாள் ஆட்டம். சமூகத்தின் ஒரு ஓரத்தில் நடக்கும் இன்னலை எவ்வித ரசாயன பூச்சுமின்றி அசலாக நம் கண் முன் நிறுத்தும் தேர்ந்த ஆட்டம்.   
  
இயக்குனராக கார்த்திக்கின் முதல் நாடகமிது என்பதை நம்ப முடியவில்லை. குறைந்தது 20 நாடகங்களாவது போட்ட பிறகு வரும் அனுபவத்தை முதல் நாடகத்திலேயே வெளிப்படுத்தி சிக்ஸர் அடித்திருக்கிறார். 

இதுபோன்ற முயற்சிகளோடு தனது படைப்பினை கொண்டு வரும் இளம் சமூகத்தினரை ஊக்கப்படுத்தி களம் அமைத்து தரவேண்டியது சபாக்களின் பொறுப்பும், கடமையும். அதனை கார்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் செய்திருப்பது பாராட்டத்தக்கது. 

மாதவ பூவராக மூர்த்தி, விஸ்வநாதன் ரமேஷ், கௌரி சங்கர், மாலதி ஸ்ரீனிவாசன் என குருகுலம் குழுவின் பிரதான கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் இம்முறை இளைய சமூகத்திடம் அப்பொறுப்பை தந்திருக்கிறார்கள். இவர்களின் முந்தைய நாடக சாயல்கள் எதுவுமின்றி கார்த்திக் & கோ இந்நாடகத்தை அரங்கேற்றி இருப்பதன் மூலம் 'குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் 2019' எனும் அடையாளத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். 

மேம்பட்ட சிந்தனையும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்கள் அவசியம் காண வேண்டிய படைப்பிது. 

கதிர்வேலன் கணக்கு - கார்த்திக் எடுத்த மதிப்பெண்.... நூற்றுக்கு நூறு.       

---------------------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.    


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...