CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, May 1, 2019

கோடை நாடக விழா 2019: பட்டம்பி
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் ஒன்பதாவது நாடகம் பட்டம்பி. எழுத்து: ரத்னம் கூத்தபிரான். இயக்கம்: விக்னேஷ் ரத்னம். தயாரிப்பு: கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ்.

கதைச்சுருக்கம்:

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் பட்டம்பி. பெற்றோருக்கு ஒரே மகன். சொந்த வீடு. அங்கே குடித்தனம் இருக்கும்  வசந்திக்கு இவன் மீது காதல். ஒருநாள் பட்டம்பிக்கு வரும் அலைபேசி அழைப்பு வாழ்வையே புரட்டிப்போடுகிறது. யார் அந்த மர்ம நபர்?

நடிகர்கள்:

மீண்டும் ஒரு வித்யாசமான களத்தில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார் ரத்னம் கூத்தபிரான். வில்லத்தனமும், அப்பாவித்தனமும் நன்கு எடுபடுகிறது.

பட்டம்பியாக விக்னேஷ் ரத்னம். அவ்வப்போது பதட்டத்தை வெளிப்படுத்தும் கேரக்டர். அதை உணர்ந்து பல்வேறு இடங்களில் சரியாக ஸ்கோர் செய்கிறார். 

பெற்றோர்களாக ஸ்ரீராம், அனுராதா கண்ணன், காதலி வசந்தியாக ஸ்வாதி ஸ்ரீதர், வசந்தியின் தந்தையாக கணேசன் கூத்தபிரான், இன்ஸ்பெக்டராக ஆனந்த்ராம், கிராமத்து தாயாக சுஜாதா, பவித்ராவாக ஸ்வேதா.

பின்னரங்கம்:

சொப்பனக்குழந்தை போன்ற நாடகத்திற்கு பிறகு குகப்ரசாத்தின் பின்னணி இசையும், மயிலை பாபுவின் ஒளியமைப்பும் இணைந்து கதைக்கேற்ப ஜாலம் புரிந்து ரசிக்க வைக்கின்றன. 

பத்மா ஸ்டேஜ் கண்ணனின் அரங்க அமைப்பு, பெரம்பூர் குமாரின் ஒப்பனை.. குறிப்பாக ஸ்ரீராம் மற்றும் ரத்னம் ஆகியோருக்கான சிகையலங்காரம் போன்றவை நன்று.

எழுத்து - இயக்கம்:

முதல் சில நிமிடங்கள் சற்று நகைச்சுவையாக நகர்ந்து, உடனே கதையின் மையத்திற்குள் நுழைந்து விடுவது ஆறுதல். அந்த மர்ம நபர் யாரெனும் புதிரை நீட்டித்து அதற்கொரு பின்னணியையும் சொல்லி, இறுதியில் ஒரு மாறுபட்ட திருப்பத்தையும் வைத்திருக்கிறார் ரத்னம் கூத்தபிரான். 

இறுதியில் விக்னேஷ் ரத்னம் எடுக்கும் முடிவும், அதற்கு அவர் சொல்லும் வசனங்களும் கனம். 

கிராமத்து ஃப்ளாஷ்பேக் வருமிடங்களில் சில ஐயங்கள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

வீடு பார்த்து தந்ததற்கு கமிஷனாக பட்டம்பிக்கு 1,000 ரூபாய் தருகிறார் ஜெயராமன். 'இதே வேறொரு ப்ரோக்கராக இருந்திருந்தால் ஒருமாத வாடகை 5,000 ரூபாயை வாங்கி இருப்பார்' என்று பட்டம்பியிடம் சொல்கிறார்.
      
ஃப்ளாஷ்பேக் நடக்கும் காலகட்டம் சுமார் 20 முதல் 30 வருடங்களுக்கு பின்பாக இருந்திருக்க வேண்டும். அந்தக்காலத்தில் 5,000 ரூபாய்க்கு வாடகை வீடா? 

'மழைக்காலத்தில் மேலிருந்தும், வாசல் பக்கத்தில் இருந்தும் தண்ணீர் உள்ளே வரும்' என்கிறார் பட்டம்பி. ஆகவே அது ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் வசிக்கும் வீடு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அதற்கேன் அந்தக்காலத்தில் இவ்வளவு வாடகை? பணப்பசை அதிகம் உள்ள ஜெயராமன் இன்னும் வசதியான வீட்டில் தங்கியிருக்கலாமே? 

'அப்பாவியாக இருக்கும் பட்டம்பி ஒயிட் காலர் கிரிமினல் வேலைகளில் ஈடுபடும் அளவிற்கு எப்படி அதிபுத்திசாலியானான்?' என்பதற்கு நம்பத்தகுந்த காரணம் எதுவுமில்லை. மொபைல் போனை காட்டி 'இதன் மூலம் கற்றுக்கொண்டேன்' என்கிறார்.  

பல்வேறு சமூக குற்றங்களை இன்டர்நெட் மூலமாக கற்றுக்கொள்ள இயலும் என்பது உண்மைதான். ஆனால் உலக ஞானம் பெரிதாக இல்லாத கிராமத்து பட்டம்பி எப்படி இப்படி மாறினான் என்பதை ஒரு காட்சியிலாவது விவரித்து இருந்தால் நம்பும்படி இருந்திருக்கும்.

க்ளைமாக்சில் ஒரு அதிரடி முடிவை எடுக்கிறான் பட்டம்பி. ஆனால் தந்தை ஜெயராமனோ குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்கிறார். அழுதால் மட்டும் போதுமா? தவறே செய்யாத மகனை காப்பாற்ற உண்மையை சொல்லி இவரல்லவா தான் செய்த பழைய தவறுக்கு தண்டனையை ஏற்றிருக்க வேண்டும்? வாழ வேண்டிய வயதில் இருக்கும் மகனுக்கு இப்படி ஒரு சோதனை வரும்போது அழுவதால் மட்டும் என்ன பயன்? இன்ஸ்பெக்டரிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டாமா? 

தனது முதல் மேடை நாடக இயக்கத்தில் கூடுமானவரை ஒரு விறுவிறுப்பான நாடகத்தை தர முயன்றுள்ளார் விக்னேஷ் ரத்னம். ஆனால் அதை வெறும் பழிவாங்கல் படலமாக மட்டுமின்றி இன்னும் நம்பும்படியாக நாடகமாக்கம் செய்திருந்தால் தங்கக்கம்பியாக மாறியிருப்பான் இந்த பட்டம்பி.

பட்டம்பி - இன்னும் சமத்தாய் இருந்திருக்க வேண்டிய அம்பி. 

---------------------------

விமர்சனம்:  
சிவகுமார்.  


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...