CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, May 4, 2019

கோடை நாடக விழா 2019: திருவடி சரணம்கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் 12 வது மற்றும் இறுதி நாடகம் - திருவடி சரணம். கதை, வசனம் பூவை மணி.  இயக்கம் சந்திர மோகன். 

கதைச்சுருக்கம்:

முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியாக இருப்பவர் வைதேகி. இவரிடம் வேலைக்கு சேர்கிறார் திவாகர் எனும் இளைஞர். திடீரென ஒருநாள் வேலையில் இருந்து நீக்கப்பட அதிர்ச்சி அடையும் திவாகர் விபரீத முடிவை எடுக்க நினைக்கிறார். அப்போது ஒரு பெரியவர் சொல்லும் அறிவுரைகள் இவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?

நடிகர்கள்:

திவாகராக ஆதித்யா, கறார் கார்ப்பரேட் முதலாளி வைதேகியாக கௌதமி, நம்பியாக கலா நிலையம் சந்துரு, வழக்கறிஞராக கிரிஷ் அய்யபத், சாரியாக ஜெயக்குமார், வைதேகியின் மகள் மீராவாக ஹேமமாலினி.

கௌதமி, சந்துரு மற்றும் கிரீஷின் அனுபவம் மிக்க நடிப்பு நாடகத்திற்கு பலம். தெளிவான மலையாள உச்சரிப்பில் அசத்துகிறார் கிரீஷ். 

பின்னரங்கம்:

பின்னணி இசை: குகப்ரசாத் - விஸ்வஜெய், ஒளி: சேட்டா ரவி, ஒப்பனை: பெரம்பூர் குமார், அரங்க அமைப்பு: பத்மா ஸ்டேஜ் கண்ணன். பின்னணி இசையமைப்பு சில இடங்களில் நன்றாகவும், ஓரிரு இடங்களில் இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றியது.

எழுத்து - இயக்கம்:

அழுகையும் தொழுகைதான்,  தேசத்தின் பாதுகாப்பு பற்றி பேசும் பிரதமரே புல்லட் ஃப்ரூப் கண்ணாடிக்கு பின்னிருந்ததுதான் உரையாற்ற வேண்டி உள்ளது போன்ற பூவை மணியின் வசனங்கள் நன்று. பெருவணிக நிறுவனங்களில் நடக்கும் உரையாடல்கள், சம்பவங்களை தொகுத்து கதையாக மாற்றி இருப்பதும் நல்ல முயற்சி.

Deadline - Deathline, Calling Bell - Caution Bell போன்ற அரதப்பழசான ஜோடிப்புறா வசனங்களை தவிர்த்து புதிதாய் சிந்தித்து இருக்கலாம். 

வேலையை விட்டு நீக்கப்படும்போதுதான் Bond எனும் மூன்றாண்டு ஒப்பந்தம்  பற்றி அறிந்து அதிர்ச்சி அடைகிறார் திவாகர். அதற்கு சொல்லப்படும் காரணம்... வேலையில் சேரும்போது அந்த ஒப்பந்தத்தை சரியாக படிக்காமல் கையெழுத்து போட்டு விட்டார் என்பதுதான். புத்திசாலி இளைஞராக இருக்கும் ஒருவர் Bond போன்ற முக்கிய விஷயத்தை படிக்காமல் வேலையில் சேர்ந்தார் என்பது நம்பும்படி இல்லை. 

பல்வேறு காட்சிகள் மற்றும் வசனங்கள் கதையோட்டத்துடன் யதார்த்தமாய் நகராமல் செயற்கையாய் இருந்தது. வைதேகி - திவாகர் மோதல், திட்டமிட்ட காதல், புதுமணத்தம்பதிகளை பிரிக்கும் வைதேகி என உதாரணங்களை சொல்லலாம். க்ளைமாக்ஸும் மிகச்சாதாரணமாகவே இருக்கிறது. 

இந்நாடகத்தின் ஒருசில கேரக்டர்களோடு உணர்வுபூர்வ தொடர்பு நம்முள் இருந்திருந்தால் ரசித்திருக்க முடியும். உண்மையான நிகழ்வுகளை பார்க்கிறோம் என்பதை விட ஒரு நாடகத்தை வேடிக்கை பார்க்கிறோம் என்று மட்டுமே நினைக்கும் அளவிற்கான இடைவெளி இருந்ததால்... காட்சிகளில் பரபரப்பு இருந்தாலும் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

இம்மாதிரியான முக்கிய விஷயங்களில் கதை - வசனகர்த்தா பூவை மணியும், இயக்குனர் சந்திரமோகனும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த கார்ப்பரேட் ஆட்டம் நன்றாக இருந்திருக்கும். 

திருவடி சரணம் - ரசாயன விபூதி. 

----------------------

விமர்சனம்:
சிவகுமார்.  

Friday, May 3, 2019

கோடை நாடக விழா 2019: மனிதம். புனிதம்.கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் 11 வது நாடகம் - மனிதம் புனிதம். எழுத்து, இயக்கம்: கே.எஸ்.என்.சுந்தர். தயாரிப்பு: ஸ்ருதி.     

கதைச்சுருக்கம்:

சொந்த நிலத்தில் தொன்மையான கோவிலை பராமரித்து வருகிறார் ஆன்மீகப்பற்றுள்ள ஏகாம்பரம். அதன் இன்னொரு பக்கம் கல்லூரி நடத்தப்படுகிறது. கல்லூரியை நிர்வகிக்கும் அரசியல்வாதிக்கு கோவில் உள்ளிட்ட நிலத்தையும் வளைத்துப்போடும் எண்ணம் வருகிறது. அவரது முயற்சி பலித்ததா?

நடிகர்கள்:

பிச்சுமணி குருக்களாக கே.எஸ்.என்.சுந்தர், இவரது மகனாக சுரேஷ், ஏகாம்பரமாக சிவப்ரசாத், இவரது அண்ணன் மற்றும் கடவுள் மறுப்பாளராக பாலசுப்ரமணியன், அரசியல்வாதி சந்தானமாக ராஜேந்திரன், இவரது சொற்படி நடக்கும் ரகுபதியாக ஸ்ரீனிவாசன், பார்வையற்ற ராசப்பனாக ராஜ்மான் சிங்.

கவனத்தை ஈர்க்கும்படியாக இல்லாவிடினும் தங்களால் ஆன நடிப்பினை அனைவரும் தந்துள்ளனர்.

பின்னரங்கம்:

ஆர்.எஸ்.மனோகரின் கலைக்குழு சார்பாக ஒவ்வொரு காட்சிக்கும் பயன்படுத்தட்ட திரைச்சீலைகள் மேடையின் பின்னணியை நன்கு அலங்கரிக்கின்றன.

எழுத்து - இயக்கம்:

மனதில் பிரச்னை இருந்தால் அர்ச்சனை, கடவுளுக்கு கண் இல்லையா... கண் இல்லாதவரே கடவுள், ஆன்மீகம் பேசுபவரிடமும் பகுத்தறிவு உண்டு என தனது பாணியில் ஆங்காங்கே வசனங்கள் மூலம் ரசிக்க வைக்கிறார் சுந்தர்.

தனியே செல்லும் பிச்சுமணி குருக்கள் மீது அடியாட்களை ஏவி வன்முறை செய்கிறார் சந்தானம். பூணூல் அறுக்கப்படுகிறது. சில நாட்கள் கழித்து நிலத்தை ஆக்ரமிக்க வரும் சந்தானத்திடம் ஊர் மக்களை வைத்துக்கொண்டு 'முடிந்தால் இப்போது எனது பூணூலை அறுத்துப்பாருங்கள்' என சவால் விடுகிறார் பிச்சுமணியின் மகன் ராமு.    

நாடகத்தின் முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. பகுத்தறிவு முகமூடியுடன் நாத்திகம் பேசி வரும் கருப்புச்சட்டை மாவீரர்களுக்கு சரியான சவுக்கடி.

பொழுதுபோகாவிட்டால் ஐயர்/ஐயங்கார் சமூகத்தை எப்படி வம்பிற்கு இல்லாது என்று சிந்தித்து பூணூல் அறுக்க ஆட்களை ஏவி விடுவது இந்த போலி பகுத்தறிவுவாதிகளின் வேலை.

சில மாதங்களுக்கு முன்பு கூட திருவல்லிக்கேணி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவரின் பூணூலை அறுத்து அவரை கீழே தள்ளி பைக்கில் பறந்து சென்றனர் இந்த கருப்புச்சட்டை அடியாட்கள். இதன் மூலம் அவர்கள் சாதித்தது என்னவென்பது விளங்கவில்லை. இதனால் பகுத்தறிவு வளருமா அல்லது மூட நம்பிக்கைதான் ஒழியுமா?

உண்மையில் இவர்களுக்கு வீரமிருந்தால் பொதுமக்கள் நிறைந்திருக்கும் பகுதியில் ஒரு முன்னறிவிப்பை செய்துவிட்டு இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட தைரியம் உள்ளதா? நிச்சயம் இல்லை. இக்கோழைகளின் முகமூடியை கிழிக்கும் விதமாக இப்படியொரு காட்சியை வைத்திருக்கும் கே.எஸ்.என். சுந்தருக்கு வாழ்த்துகள்.    

சக்கரம், பூணூல், ஹெல்மட் என நீளமாக பேசி கதையின் நகர்விற்கு ஸ்பீட் ப்ரேக்கர் போடாமல் சுருக்கமாக பேசி இருக்கலாம் ராமு. 

'கடவுளுக்கு சேவை செய்யும் நாங்கள் Workers இல்லை. Worshippers' என்கிறார் ராமு. அப்படியெனில் இவரது தந்தை இத்தனை நாட்கள் கோவிலில் குறைந்தபட்ச ஊதியம் கூட வாங்காமல் சேவை மட்டும் செய்தாரா? அன்றாட பொருளாதார தேவைகளை எப்படி சமாளித்தார்?

ஏகாம்பரத்தின் அண்ணன் கார்த்திகேயன் கடவுள் மறுப்பாளர் மற்றும் வழக்கறிஞர். நிலம் உள்ளிட்ட சொத்துக்களிலும் இவருக்கு பங்குண்டு. கோவில் பராமரிப்பு போன்றவற்றில் விருப்பம் இல்லாதவர் என்பதால் அதனை இடிக்கும்போது கவலைப்படாமல் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால்.. கல்லூரியின் குத்தகை காலம் 40 ஆண்டுகளுக்கு மட்டுமே. ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பத்தாண்டுகள் அங்கே கல்லூரி நடத்துகிறார் சந்தானம். இதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தார் கார்த்திகேயன்? நாடகம் முடியும் நேரத்தில் வந்து '40 ஆண்டுகள் என்றுதான் குத்தகை ஒப்பந்தம். ஆனால் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதே' என்று கர்ஜிக்கிறார். வழக்கறிஞர் ஐயா... இதுதானா உங்க டக்கு?

நல்ல கருத்துக்களை சில இடங்களில் சொன்ன நாடகமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் முழுமையான படைப்பாக இருந்ததா என்று கேட்டால்.. இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். 

அதற்குக்காரணம்... கோவில் குருக்கள், ஆன்மீகம் vs பகுத்தறிவு, அரசியல்வாதி, ஆக்ரமிப்பு என பழகிய சாலையிலேயே மீண்டும் கே.எஸ்.என்.சுந்தர் வண்டியை ஓட்டியதுதான். சற்றேனும் புதுமையான கதைக்களம், வலுவான திரைக்கதை இருந்திருந்தால் பூரணத்துவம் கொண்ட நாடகமாக இருந்திருக்கும்.

மனிதம். புனிதம் - தூர்தர்ஷனின் அந்தக்கால செவ்வாய்க்கிழமை நாடக ரசிகர்களுக்கு மட்டும்.

-------------------------------------------------  
   
விமர்சனம்:
சிவகுமார்.  
  

Thursday, May 2, 2019

கோடை நாடக விழா 2019: கதிர்வேலன் கணக்கு
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் பத்தாவது நாடகம் - கதிர்வேலன் கணக்கு. எழுத்து, இயக்கம்: கார்த்திக் கௌரிசங்கர். தயாரிப்பு : குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி 95.   

கதைச்சுருக்கம்:

அலைபேசி விற்பனையகம் நடத்தி வரும் கதிரை ஊருக்கு வரச்சொல்லி ஒரு அவசர அழைப்பு வருகிறது. இரவு நேரத்தில் அடுத்த பேருந்திற்காக காத்திருக்கும் அவன் ஒரு நபரை சந்திக்கிறான். இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது?

நடிகர்கள்:

நாடகத்தின் ஆரம்பத்தில் பலத்த மௌனம் சாதித்துவிட்டு, பிறகு தனது கதையை சொல்லும் வேலனாக சூரஜ். பேருந்து நிலையத்தில் ஓரிடத்தில் நின்றபடி இவர் பேசும் நீண்ட வசனம் சத்தமின்றி ஒரு பேரிடியை நம்முள் இறக்கி வைத்து விடுகிறது. 

ஏன் இவர் அமைதியாகவே இருக்கிறார் எனும் கோபம் கதிரைப்போல நமக்கும் முதலில் வரத்தான் செய்கிறது. ஆனால் கடந்த கால வாழ்க்கையை சூரஜ் விவரித்துக்கொண்டு இருக்கையில் ஒரு பலத்த மௌனத்திற்கு நம்மை ஆட்படுத்தி விடுகிறார். வாழ்வின் இருண்ட அத்யாயத்தை கூச்சம், பயம், குழப்பம், கோபம், அழுகை என பல விதங்களில் வெளிப்படுத்தி அசர வைத்திருக்கும் இவரது நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிப்பு கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இந்த ஒற்றைக்காட்சியை பார்த்தால் போதுமான பாடம் கிடைக்கும். அபாரம்!!  

வாத்தியாராக கார்த்திக் கௌரி சங்கர் மற்றும் மாணவன் கதிராக அரவிந்த் மற்றும் சபரீஷ். சங்கரனாக வி.பி.எஸ்.ஸ்ரீராம். அனைவரின் நடிப்பும் கச்சிதம். 

பின்னரங்கம்:

அரங்க அமைப்பு (சைதை குமார் & சண்முகம்), ஒப்பனை (பெரம்பூர் குமார்), ஒளி உள்ளிட்டவற்றை மிக எளிமையாக அமைத்துள்ளனர். இரவு நேர பூச்சிகளின் சப்தம் மற்றும் நெகிழ்வான சமயங்களில் வரும் சன்னமான ஒலியென பொருத்தமானவற்றை தேர்வு செய்திருக்கிறார் கலைவாணர் கிச்சா. ஆனால் இவற்றையே மீண்டும் ரிப்பீட் செய்யாமல் சில மாறுபட்ட ஒலிகளையும் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எழுத்து:

வழமையான சபா நாடக கதாசிரியர்கள் தொட மறக்கும், மறுக்கும், அஞ்சும் கதைக்களம். அதனை தனது முதல் நாடகத்திலேயே தொட்டிருக்கிறார் கார்த்திக். 

எடுத்த எடுப்பில் அவசர கதியில் கதையை ஓட விடவில்லை. செயற்கையான சென்டிமென்ட், நகைச்சுவை என எவ்வித பாதுகாப்பு வளையத்தையும் அமைத்துக்கொள்ளவில்லை. குடி குடியை கெடுக்கும் என்று நாடகம் துவங்கும் முன்பு ஒரு எச்சரிக்கை விடப்படுகிறது. பிற்பாடு மாணவரை கண்டித்து ஆசிரியர் பேசுகிறார். இனி கதை எப்படி நகரும் என ஒரு யூகத்தை செய்தால்...அதனை உடைத்து மாற்றுப்பாதையில் நகர்த்தி கதையின் ஆசிரியராக முதல் வெற்றியைப்பெறுகிறார் கார்த்திக்.

சிறிய சதவீதத்தில் நடைபெறும் குற்றம் என்றாலும் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை திறம்பட விவரித்திருக்கிறார். இப்படியான ஒரு நாடகத்திற்கு கார்த்திக் கதை மற்றும் வசனங்களை அமைத்திருப்பதை பார்க்கையில் தரமான இலக்கிய வாசிப்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சாத்தியம் என்று தெரிகிறது. 

நாடகத்தில் வரும் திருப்பங்கள் எதுவுமே அதிரடியாகவோ, நம்பத்தகாத முறையிலோ இல்லை. வெகு யதார்த்தமாய், கூர்மையாய் மனதை கீறிவிட்டு செல்கின்றன. 

இயக்கம்:

ஆசிரியர் - மாணவன் உறவு, கணக்கு தீர்ப்பு, குற்ற உணர்வு என பயணிக்கும் இந்நாடகத்தின் இறுதிவரை கதை மாந்தர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டங்களை கச்சிதமாக உருவாக்கியுள்ளார் கார்த்திக். இதில் கதாநாயகன் என்று எவருமில்லை. ஆசிரியர் துரை, கதிரேசன், சங்கரன், வேலன் என கதையின் நாயகர்கள் மட்டுமே.

சமூகத்திலும், இல்லத்திலும் நடக்கும் ஒடுக்குமுறைகள் அனைத்துமே விவாதிக்கப்பட வேண்டியவைதான். 18 வயதை தாண்டிய நபர்களுக்கு முன்பாகத்தான் நாடகம் மேடையேறுகிறது. விரசம், ஆபாசம் என்று இதில் எதுவுமில்லை. மெச்சூரிட்டி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு முதிர்ந்த உரையாடலை நம்முன் வைத்திருக்கிறது இப்படைப்பு. பிரச்சார பாணியை கையாளாமல் முற்றிலும் கதையின் ஊடாகவே மையக்கரு பயணித்திருப்பது பெரிய பலம்.

'ஐயோ... விரசம்.. கலாச்சாரம் கெட்டு விட்டது' என்று உரக்க கத்தி இதுபோன்ற சிறந்த முன்னெடுப்புகளை கண்டு போலியாக அலறாமல் இருத்தல் நலம்.

'போட்டி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு சிக்ஸர், பவுண்டரி கூட இல்லையே' என்று குதிகாலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு பொறுமை இழக்கும் T20 ரசிகர்களுக்கான நாடகமில்லை இது. சற்று நிதானத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நாள் ஆட்டம். சமூகத்தின் ஒரு ஓரத்தில் நடக்கும் இன்னலை எவ்வித ரசாயன பூச்சுமின்றி அசலாக நம் கண் முன் நிறுத்தும் தேர்ந்த ஆட்டம்.   
  
இயக்குனராக கார்த்திக்கின் முதல் நாடகமிது என்பதை நம்ப முடியவில்லை. குறைந்தது 20 நாடகங்களாவது போட்ட பிறகு வரும் அனுபவத்தை முதல் நாடகத்திலேயே வெளிப்படுத்தி சிக்ஸர் அடித்திருக்கிறார். 

இதுபோன்ற முயற்சிகளோடு தனது படைப்பினை கொண்டு வரும் இளம் சமூகத்தினரை ஊக்கப்படுத்தி களம் அமைத்து தரவேண்டியது சபாக்களின் பொறுப்பும், கடமையும். அதனை கார்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் செய்திருப்பது பாராட்டத்தக்கது. 

மாதவ பூவராக மூர்த்தி, விஸ்வநாதன் ரமேஷ், கௌரி சங்கர், மாலதி ஸ்ரீனிவாசன் என குருகுலம் குழுவின் பிரதான கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் இம்முறை இளைய சமூகத்திடம் அப்பொறுப்பை தந்திருக்கிறார்கள். இவர்களின் முந்தைய நாடக சாயல்கள் எதுவுமின்றி கார்த்திக் & கோ இந்நாடகத்தை அரங்கேற்றி இருப்பதன் மூலம் 'குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் 2019' எனும் அடையாளத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். 

மேம்பட்ட சிந்தனையும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்கள் அவசியம் காண வேண்டிய படைப்பிது. 

கதிர்வேலன் கணக்கு - கார்த்திக் எடுத்த மதிப்பெண்.... நூற்றுக்கு நூறு.       

---------------------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.    


Wednesday, May 1, 2019

கோடை நாடக விழா 2019: பட்டம்பி
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் ஒன்பதாவது நாடகம் பட்டம்பி. எழுத்து: ரத்னம் கூத்தபிரான். இயக்கம்: விக்னேஷ் ரத்னம். தயாரிப்பு: கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ்.

கதைச்சுருக்கம்:

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் பட்டம்பி. பெற்றோருக்கு ஒரே மகன். சொந்த வீடு. அங்கே குடித்தனம் இருக்கும்  வசந்திக்கு இவன் மீது காதல். ஒருநாள் பட்டம்பிக்கு வரும் அலைபேசி அழைப்பு வாழ்வையே புரட்டிப்போடுகிறது. யார் அந்த மர்ம நபர்?

நடிகர்கள்:

மீண்டும் ஒரு வித்யாசமான களத்தில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார் ரத்னம் கூத்தபிரான். வில்லத்தனமும், அப்பாவித்தனமும் நன்கு எடுபடுகிறது.

பட்டம்பியாக விக்னேஷ் ரத்னம். அவ்வப்போது பதட்டத்தை வெளிப்படுத்தும் கேரக்டர். அதை உணர்ந்து பல்வேறு இடங்களில் சரியாக ஸ்கோர் செய்கிறார். 

பெற்றோர்களாக ஸ்ரீராம், அனுராதா கண்ணன், காதலி வசந்தியாக ஸ்வாதி ஸ்ரீதர், வசந்தியின் தந்தையாக கணேசன் கூத்தபிரான், இன்ஸ்பெக்டராக ஆனந்த்ராம், கிராமத்து தாயாக சுஜாதா, பவித்ராவாக ஸ்வேதா.

பின்னரங்கம்:

சொப்பனக்குழந்தை போன்ற நாடகத்திற்கு பிறகு குகப்ரசாத்தின் பின்னணி இசையும், மயிலை பாபுவின் ஒளியமைப்பும் இணைந்து கதைக்கேற்ப ஜாலம் புரிந்து ரசிக்க வைக்கின்றன. 

பத்மா ஸ்டேஜ் கண்ணனின் அரங்க அமைப்பு, பெரம்பூர் குமாரின் ஒப்பனை.. குறிப்பாக ஸ்ரீராம் மற்றும் ரத்னம் ஆகியோருக்கான சிகையலங்காரம் போன்றவை நன்று.

எழுத்து - இயக்கம்:

முதல் சில நிமிடங்கள் சற்று நகைச்சுவையாக நகர்ந்து, உடனே கதையின் மையத்திற்குள் நுழைந்து விடுவது ஆறுதல். அந்த மர்ம நபர் யாரெனும் புதிரை நீட்டித்து அதற்கொரு பின்னணியையும் சொல்லி, இறுதியில் ஒரு மாறுபட்ட திருப்பத்தையும் வைத்திருக்கிறார் ரத்னம் கூத்தபிரான். 

இறுதியில் விக்னேஷ் ரத்னம் எடுக்கும் முடிவும், அதற்கு அவர் சொல்லும் வசனங்களும் கனம். 

கிராமத்து ஃப்ளாஷ்பேக் வருமிடங்களில் சில ஐயங்கள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

வீடு பார்த்து தந்ததற்கு கமிஷனாக பட்டம்பிக்கு 1,000 ரூபாய் தருகிறார் ஜெயராமன். 'இதே வேறொரு ப்ரோக்கராக இருந்திருந்தால் ஒருமாத வாடகை 5,000 ரூபாயை வாங்கி இருப்பார்' என்று பட்டம்பியிடம் சொல்கிறார்.
      
ஃப்ளாஷ்பேக் நடக்கும் காலகட்டம் சுமார் 20 முதல் 30 வருடங்களுக்கு பின்பாக இருந்திருக்க வேண்டும். அந்தக்காலத்தில் 5,000 ரூபாய்க்கு வாடகை வீடா? 

'மழைக்காலத்தில் மேலிருந்தும், வாசல் பக்கத்தில் இருந்தும் தண்ணீர் உள்ளே வரும்' என்கிறார் பட்டம்பி. ஆகவே அது ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் வசிக்கும் வீடு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அதற்கேன் அந்தக்காலத்தில் இவ்வளவு வாடகை? பணப்பசை அதிகம் உள்ள ஜெயராமன் இன்னும் வசதியான வீட்டில் தங்கியிருக்கலாமே? 

'அப்பாவியாக இருக்கும் பட்டம்பி ஒயிட் காலர் கிரிமினல் வேலைகளில் ஈடுபடும் அளவிற்கு எப்படி அதிபுத்திசாலியானான்?' என்பதற்கு நம்பத்தகுந்த காரணம் எதுவுமில்லை. மொபைல் போனை காட்டி 'இதன் மூலம் கற்றுக்கொண்டேன்' என்கிறார்.  

பல்வேறு சமூக குற்றங்களை இன்டர்நெட் மூலமாக கற்றுக்கொள்ள இயலும் என்பது உண்மைதான். ஆனால் உலக ஞானம் பெரிதாக இல்லாத கிராமத்து பட்டம்பி எப்படி இப்படி மாறினான் என்பதை ஒரு காட்சியிலாவது விவரித்து இருந்தால் நம்பும்படி இருந்திருக்கும்.

க்ளைமாக்சில் ஒரு அதிரடி முடிவை எடுக்கிறான் பட்டம்பி. ஆனால் தந்தை ஜெயராமனோ குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்கிறார். அழுதால் மட்டும் போதுமா? தவறே செய்யாத மகனை காப்பாற்ற உண்மையை சொல்லி இவரல்லவா தான் செய்த பழைய தவறுக்கு தண்டனையை ஏற்றிருக்க வேண்டும்? வாழ வேண்டிய வயதில் இருக்கும் மகனுக்கு இப்படி ஒரு சோதனை வரும்போது அழுவதால் மட்டும் என்ன பயன்? இன்ஸ்பெக்டரிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டாமா? 

தனது முதல் மேடை நாடக இயக்கத்தில் கூடுமானவரை ஒரு விறுவிறுப்பான நாடகத்தை தர முயன்றுள்ளார் விக்னேஷ் ரத்னம். ஆனால் அதை வெறும் பழிவாங்கல் படலமாக மட்டுமின்றி இன்னும் நம்பும்படியாக நாடகமாக்கம் செய்திருந்தால் தங்கக்கம்பியாக மாறியிருப்பான் இந்த பட்டம்பி.

பட்டம்பி - இன்னும் சமத்தாய் இருந்திருக்க வேண்டிய அம்பி. 

---------------------------

விமர்சனம்:  
சிவகுமார்.  


Related Posts Plugin for WordPress, Blogger...