CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, April 26, 2019

சபா(பதி) கேன்டீன்

'என்ன... தெனாலி.. கோடை நாடக விழா எப்படி போய்க்கிட்டு இருக்கு?'

'வணக்கம் சபாபதி. எப்பவும் போல சிறப்பா நடந்துட்டு இருக்கு. இது 30-வது வருஷமாம். தமிழ் நாடகத்தின் நம்பர் 1 விழா என்றால் அது கோடை நாடக விழாதான் என்பது உலகறிந்த விஷயம். கார்த்திக் ராஜகோபால் அவர்களின் சீரிய முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு அவரது புதல்வர் சேகர் ராஜகோபால் அவர்களால் இந்த அருமையான விழா 30 வருடங்களை தொட்டிருப்பது மகத்தானது'

'அதுல என்ன சந்தேகம்? நித்தம் ஒரு நாடகம். எல்லாமே ஹவுஸ் ஃபுல். எனக்கும் வியாபாரம் சிறப்பா இருக்கு'

'சந்தோசம். ஆமா அங்க என்ன லேசா புகையற வாசனை வருது?'

'இல்லையே.. அடுப்பை எல்லாம் அணைச்சிட்டனே..'

'நல்லா செக் பண்ணிப்பாரு'

'செக் பண்ணிட்டேன். நீங்க எந்த புகையை... ஓஹோ அதை சொல்றீங்களா?'

'இப்பவாச்சும் புரிஞ்சதே..'

'ஆமா. நானும் கேள்விப்பட்டேன். கோடை நாடக விழா நடக்கும்போது யாரும் விமர்சனம் எழுதக்கூடாது. அதுக்கு தடை விதிக்கனும். இது சம்மந்தமாக நிர்வாகிகள் கிட்ட பேசிட்டேன்னு ஒருசில இடத்துல இருந்து வந்த புகைச்சல்தானே?'

'ஆமா ஓய்'

'இதுக்கு உங்க கருத்து என்ன?'

'கருத்து அப்பறம் இருக்கட்டும். ஆனா இது சம்மந்தமா நிறைய கேள்விகள் இருக்கு'

'அப்படியா? பொறுமையா சொல்லும். இந்தாரும் சூடான மைசூர் போண்டா'

'ரேட் எவ்வளவு?'

'ஜஸ்ட் 40 ரூபாதான்'

'ஜஸ்ட்டா?  போன வாரம்தான 30 ரூபாயா இருந்தது. இப்ப என்ன இப்படி ஒரு ஏத்தம்?'

'போண்டா செய்யற பொருளுக்கான விலையெல்லாம் ஏறுனா இப்படித்தான்'

'விலை ஏறுனா பரவாயில்ல. சைஸை ஏன் ஓய் கோலிக்குண்டு அளவுக்கு சிறுசாக்கிட்டீரு?'

'நிறைய போண்டா சாப்புட்டா உடம்புக்கு ஆகாது. அதான்'

அடேங்கப்பா... என்ன ஒரு கரிசனம்'

'சரி விஷயத்துக்கு வாரும்'

'வந்துட்டேன். என்னோட கேள்விகள் இதுதான்.

1) இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சவுதி அரேபியாவோ, வட கொரியாவோ இல்லை. ஒரு படைப்பை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. 

2) கோடை நாடக விழா நடக்கும்போது விமர்சனம் எழுதி அதனை அனுப்பினால் பரிசு உண்டு என்பதை ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வருவது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் மரபு. ஒரு நாடகம் முடிந்ததும் உடனே அதனை நினைவில் வைத்து எழுதினால்தான் அவ்விமர்சனம் வீரியமுள்ளதாக இருக்கும். 12 நாடகங்களும் முடிந்ததும் எழுதுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

3) நாடகவிழா நடுவர்களின் முடிவுகளில் இதுபோன்ற விமர்சனங்கள்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வது அர்த்தமற்ற வாதம். ஒவ்வொரு ஆண்டும் தகுதியான மூன்று நடுவர்களை தேர்வு செய்துதான் நியமிக்கிறார்கள். அவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்து அதற்கான மதிப்பெண்களையும் உடனுக்குடன் அங்கேயே பதிவு செய்கிறார்கள். ஆனால் விமர்சனங்கள் எல்லாம் இந்த மதிப்பீடுகள் முடிந்த பிறகுதான் வருகின்றன. மறுநாளோ அல்லது சில நாட்கள் கழித்தோ வரும் விமர்சனங்கள் எப்படி நடுவர்களின் தீர்ப்பில் தாக்கத்தை உண்டாக்கும்? ஒரு சதவீதம் கூட லாஜிக் இல்லையே?

4) விமர்சனங்கள் நாடகக்குழுக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. தங்கள் நாடகம் சிறப்பாக வந்திருக்கிறது எனும் தன்னம்பிக்கை உள்ள நாடகக்குழுவின் மீது வேறு நாடகம் பற்றிய விமர்சனம் எப்படி தாக்கத்தை உண்டாக்கும்? 

ஒருவேளை மற்றவர்களின் விமர்சனங்களை கண்டு அதன் தாக்கத்தால் நடுவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது? அப்படி இன்னொருவரின் விமர்சன தாக்கத்தை கொண்டு தமது தீர்ப்பை மாற்றும் அளவிற்கு பலவீனமாக நடுவர்களையா நியமிப்பார்கள்? அதற்கு வாய்ப்பே இல்லையே. தகுதி படைத்தவர்களைத்தானே நியமிக்கிறார்கள்.

நாடகம் முடிந்த உடனேயே தங்கள் மதிப்பீடுகளை நிர்வாகத்திடம் சமர்ப்பித்து விடுகிறது நடுவர் குழு. இதில் எப்படி இன்னொருவரின் விமர்சனம் தாக்கத்தை ஏற்படுத்த இயலும்? 

5) ஒருவேளை விழா முடியும் வரை விமர்சனங்களுக்கு தடை என்று அறிவிக்கப்பட்டால்.... அந்த தடை எந்த மாதிரியான விமர்சனங்களுக்கு எனும் அதி முக்கிய கேள்வியும் எழுகிறது.

6) நாளிதழ்களான தி ஹிந்து, தமிழ் ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ்,  டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர், மக்கள் குரல், அமுதசுரபி மற்றும் பல்வேறு வார - மாத இதழ்களும் நாடக விழா முடியும் வரை விமர்சிக்க கூடாதா?

7) பல்வேறு நாடக குழுக்களும், நாடக ரசிகர்களும் தங்களுக்கென தனித்தனி வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் க்ரூப்களை வைத்துள்ளனர். அதில் நாடகங்கள் பற்றி கருத்து சொல்லி விமர்சிக்கிறார்கள். கோடை நாடக விழா முடியும்வரை அதற்கும் தடை விதிக்க முடியுமா? அது நடைமுறையில் எப்படி சாத்தியம்?

8) விமர்சனம் என்பது குறைகளை சொல்வது மட்டுமல்ல. பாராட்டுவதும் கூடத்தான். அப்படியெனில் ஒவ்வொரு நாடகமும் முடிந்த பிறகு  வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்ளில் 'இந்த நாடகம் பிரமாதம். அமர்க்களம்' என்று நூற்றுக்கணக்கானோர் தங்கள் கமெண்ட்களை போடுகிறார்கள். அதுவும் ஒருவகை விமர்சனம்தானே? நாடக விழா முடிந்தபிறகு கமன்ட் போடுங்கள் என்று அவர்களுக்கும் தடை விதிக்க இயலுமா?

9) விமர்சனம் என்பது எழுத்து வடிவில் இருப்பது மட்டுமல்ல. நாடகம் நடந்து கொண்டிருக்கும்போதே அதன் நிறைகுறைகளை வாய் வழியாக சொல்லி ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். நாடகம் முடிந்ததும் மேடையில் இருக்கும் நாடக குழுவினரை சந்தித்து நிறை குறைகளை சொல்கிறார்கள். அதுவும் விமர்சனம்தானே? நாடக விழா முடியும் வரை இதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்று சொல்லி விட இயலுமா?

10) நாடகங்களில் கூடத்தான் நாட்டில் நடக்கும் பல்வேறு சம்பவங்களையும், மனிதர்களையும் விமர்சிப்பது போல வசனங்கள் வருகின்றன. அரசியல், சாதி, மதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை  விமர்சித்து கதாசிரியர் எழுதி, அதனை நடிகர்கள் பேசுகிறார்கள். அப்படி பேசக்கூடாது என்று விமர்சகர்களும், ரசிகர்களும் தடை போட உரிமை இல்லாதபோது ஒருவர் எப்போது, எங்கே, எப்படி ஒரு நாடகத்தை விமர்சிக்க வேண்டுமென சட்டம் போடுவது எப்படி ஏற்புடையதாகும்?  

11) ஒரு நாடகத்திற்காக தனது நேரம் மற்றும் பணத்தை செலவு செய்துதான் விமர்சகர்களும், ரசிகர்களும் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு பிடித்திருந்தால் பாராட்டுவார்கள் இல்லையென்றால் குறைகளை சுட்டிக்காட்டுவார்கள்.

12) குறைகளையே சொல்லக்கூடாது என்றால் நாடகத்தை தங்களுக்கு சாமரம் வீசும் அன்பர்களுக்கு மட்டுமே போட்டுக்காட்டி மகிழ்ந்து கொள்ளலாம். சபையேறிவிட்டால் அந்த படைப்பு மக்களுக்கானது. 

13) ஒரு நாடகத்திற்கான ஒத்திகை நடக்கும்போதும், மேடையில் நாடகம் நடந்துகொண்டிருக்கும்போதும் உள்ளே சென்று 'அது சரியில்லை இது சரியில்லை' என்று இடையூறு செய்ய எந்த விமர்சகருக்கும் உரிமையில்லை. 

அதுபோல ஒரு நாடகம் முடிந்ததும் 'நீ இப்படி விமர்சிக்க வேண்டும். அப்படி விமர்சிக்க வேண்டும்' என்று பாடமெடுக்கும் உரிமையும் எவருக்கும் இல்லை.

14) இத்தனை ஆண்டுகாலம் பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளித்து வரும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் உள்ளிட்ட சபாக்கள் அதே நிலைப்பாட்டை தொடரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

15) நல்ல நாடகங்களை பாராட்டுவதும், பிடிக்காத நாடகங்களில் இருக்கும் குறைகளை விமர்சிப்பதும் வழக்கம்போல தொடரும். குறையே சொல்லக்கூடாது என்று நினைக்கும் நாடக குழுக்கள் இனி பொது மக்களுக்காக நாடகம் போடுவதை தவிர்த்தல் நலம்.

16) விமர்சனம் என்பது தனிநபரால் எழுதப்படுவது. குறைகள் சொன்னால் அதை சரி செய்யலாம் அல்லது விட்டு விடலாம். அது நாடகக்குழுவின் விருப்பம். நன்றாக இல்லையென்று விமர்சிக்கப்பட்ட நாடகங்கள் பல மேடைகள் ஏறி வெற்றி கண்டதும் உண்டு. அருமையென்று பாராட்டப்பட்ட நாடகங்கள் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதும் உண்டு.

விமர்சனத்தை இன்னொரு ரசிகரின் பார்வையாக கருதி கடந்து சென்றால் நாடக உலகம் ஆரோக்யமாக இருக்கும். ஒரு சில ஜாம்பவான்கள் விமர்சனங்களுக்கு எப்படி தடை விதிக்கலாம் என்று சிந்தித்து தனது நேரத்தையும், மற்றவர்களின் நேரத்தையும் வீணடிப்பதை விட உருப்படியாக ஒரு நாடகம் போடுவதில் கவனம் செலுத்தினால் நலம்.   

17) முந்தைய ஆண்டுகளைப்போல இவ்வருடமும் கோடை நாடக விழா இனிதே நடந்தேற கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், நாரத கான சபா, நாடக குழுக்கள், பின்னரங்கில் வேலை பார்க்கும் தொழிலாளிகள், ரசிகர்கள், சக பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்'

'என்னய்யா அக்னி வெயிலுக்கு முன்னாடியே இவ்வளவு சூடா பொங்கி இருக்கீரு?'

'அது இருக்கட்டும். இங்க இருந்த ரெண்டு போண்டாவும் எங்க ஓய்?'

'இவ்வளவு பெருசா கதை சொன்னா.. நான் சும்மாவா இருப்பேன். ஒரு போண்டாவை தின்னுட்டேன் தெனாலியாரே'

'இன்னொன்னு?'

'அது ஏற்கனவே கோலிக்குண்டு சைஸுல இருக்குன்னு நீதானய்யா சொன்ன? இவ்வளவு நேரம் நீ விட்ட அனல் மூச்சுல அது உருகி உன் காலுக்கு கீழ விழுந்து கெடக்கு... பாரும். இந்தாரும் 40 ரூபா பில்'

'யோவ் சபாபதி... என்ன அநியாயம்யா இது?'

'எல்லாம் வியாபார தந்திரம்தான்'

------------------------------------------------------             

அன்புடன்,
சிவகுமார்.
    

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...