CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, April 29, 2019

கோடை நாடக விழா 2019: வானவில்லின் அம்பு.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் ஏழாவது நாடகம் - வானவில்லின் அம்பு.  எழுத்து, இயக்கம்: அகஸ்டோ. தயாரிப்பு:  அகஸ்டோ  க்ரியேஷன்ஸ்.    

கதைச்சுருக்கம்:


பிரபல வயலின் வித்வான் நாகர்கோவில் கிருஷ்ணன். கலைத்திறமை என்பது தலைமுறையாக ரத்தத்தில் ஊறியிருந்ததால் மட்டுமே வரும் என்பதை நம்புபவர். இவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வெள்ளையப்பன் என்கிற தையற்கலைஞரின் பேரன் கார்த்திக். கிருஷ்ணனின் இதயக்கிழிசலை  கார்த்திக்கின் திறமையெனும் நூல் எப்படி தைக்கிறது? 

நடிகர்கள்:

நாகர்கோவில் கிருஷ்ணனாக - போத்திலிங்கம், தையற்கலைஞர் வெள்ளையப்பன் - வெங்கட கிருஷ்ணன், இவரது மகள் சொர்ணா - உஷா நந்தினி, பேரன் கார்த்திக் - மாஸ்டர் ஆதித்யா, நந்தினியின் கணவர் பார்த்திபன் - ராஜா,  புல்லாங்குழல் ஆசிரியர் மாலா - உமா சங்கர், போலீஸ்காரராக கார்த்திகேயன். வானவில்லின் ஏழு நிறங்களாக ஒளிர்ந்துள்ளனர். 

பிடிவாதம், நல்லெண்ணம், குழப்பம் என வெவ்வேறு நிலைப்பாட்டில் சிக்கித்தவிக்கும் சிக்கலான கேரக்டரை இம்மி பிசகாமல் நடிப்பில் வெளிப்படுத்தி மனதை கவர்கிறார் போத்திலிங்கம். சந்தேகமின்றி மகா நடிகர்தான்!!

யார் இந்த ஆதித்யா? கார்த்திக் எனும் கேரக்டரில் மேடை பதட்டம் எதுவுமின்றி இப்படி வெளுத்து வாங்குகிறான். சில நேரங்களில் வயதில் பெரிய நடிகர்களை விட இதுபோன்ற சிறுசுகள் கச்சிதமாக நடித்து பட்டையை கிளப்புகிறார்கள். 

வானவில்லின் இதர நிறங்களும் துளி சாயம் கூட போகாமல் யதார்த்தமாய் நடித்துள்ளனர்.     

தீபக்காக மாஸ்டர் ஹரீஷ், தீபக்கின் தாய் அகிலாவாக அனுராதா, செக்யூரிட்டி வனராஜாவாக விஜய் பார்த்திபன் உள்ளிட்டோரும் பட்டியலில் உண்டு.

பின்னணி இசை:

இந்நாடகத்தின் அஸ்திவாரமே இசைதான். புல்லாங்குழல், வயலின் என குகப்ரசாத்தின் யானைப்பசிக்கு சரியான வேட்டைக்களம். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' என்று அகஸ்டோ இவரை கேட்காத குறைதான். கதையின் மூளை அகஸ்டோ என்றால், அதன் ஆன்மா குகப்ரசாத்.

கோவிலில் இருக்கும் கண்ணன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கார்த்திக் செல்லும்போது 'சின்னக்கண்ணன் அழைக்கிறான்' பாடலின் இசை வடிவமும், தன் கணவர் உண்மையில் எங்கிருக்கிறார் என்று தீபக்கின் தாய் சொல்லும்போது ஜெர்க் அடிக்கும் திகில் சப்தம் தராமல் சன்னமாக வந்து செல்லும் ஒலியும்... இனிமை. 

குகப்ரசாத்தின் இசைத்திறமைக்கு இப்படைப்பு இன்னொரு மணிமகுடம். 

ஒளி - அரங்கம் - ஒப்பனை:  

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேட்டா ரவியின் அழகான ஒளி ஜாலம் மீண்டும் மேடையில். மேடை நாடக ஒளியமைப்பில் பிரத்யேக இடத்தை பிடித்த திறமைசாலிகளில் சேட்டா ரவி முக்கியமானவர். இதேபோன்று பல்வேறு நாடகங்களில் நல்லொளியை பாய்ச்ச வாழ்த்துகள்.

பத்மா ஸ்டேஜ் கண்ணனின் அரங்க அமைப்பும், பெரம்பூர் குமாரின் ஒப்பனையும் நன்று.    

கதை - திரைக்கதை : 

வயலின் வித்வான், தையற்கலைஞர் என இரு குடும்பத்தின் சிக்கல்களை பிரதானமாக கையாண்டிருக்கிறார் அகஸ்டோ.

கலைத்திறன் என்பது பரம்பரை ரத்தத்தில் ஊறியதா அல்லது திறமையால் மட்டுமே வருவதா என்பதற்கான ஒரு ஆரோக்யமான விவாதப்பொருளை கொண்டு முன்னோக்கி நகர்கிறது கதை.

வயலினும், புல்லாங்குழலும் கதை மற்றும் திரைக்கதையோட்டத்தின் குறியீடுகளாக இருக்கின்றன என்பதற்கு தெளிந்த நீரோடை போல சீராக நகர்ந்து செல்லும் காட்சிகளே சாட்சி. அதிரடி மிருதங்க அல்லது ட்ரம்ஸ் சப்தங்களுக்கு இங்கே இடமில்லை. 

அகந்தையால் பழுப்பேறி இருக்கும் நாகர்கோவில் கிருஷ்ணனின் வெளிப்பூச்சை கங்கை நீரால் இந்த நல்லோர் சூழ் உலகு எப்படி தூய்மைப்படுத்துகிறது என்பதை நாடகத்தின் ஒவ்வொரு நகர்விலும் பிரமாதமாக உணர்த்தியுள்ளார்.

வசனம்: 

'சொல்லிட்டாளே என்று நினைக்கிறாயா?' என்று மாலா கேட்கும்போது சொர்ணா தரும் பதில் 'சொல்லிட்டாங்களே என்று நினைத்தேன்'. 

பிறர் மீது வைத்திருக்கும் மரியாதையை இதை விட சிறப்பாக காட்ட இயலாது. 

'மகாகவி பாரதியையும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையும் வாழும்போதே இச்சமூகம் கொண்டாடி இருக்கலாம்' என்கிற வசனமும், தன் மீது செங்கல்லை எறிந்த நாகர் கோவில் கிருஷ்ணனுக்கு பூங்கொத்தை பரிசாகத்தரும் மாலாவின் நற்பண்பும் இதயத்தை தொடுகின்றன.

மேடை நாடகத்திற்கென்றே ரெடிமேடாக தைத்து வைத்திருக்கும் வசனங்களை ஒதுக்கிவிட்டு தனது தனி பாணியில் இவ்வளவு நேர்த்தியாக வசனங்களை ஒரு படைப்பாளி கோர்க்க இயலுமா எனும் ஆச்சர்யத்துடன் நம் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறார் அகஸ்டோ.  

பல மாணவர்கள் பங்கேற்கும் போட்டியொன்றில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஆளுக்கு பத்து நிமிட வாய்ப்பு தரப்படுகிறது. அதில் அமைச்சர் ஒருவர் சிறப்பு விருந்தினராக வருகிறார். கார்த்திக்கின் குழல் வாசிப்பில் மெய் மறந்து போகிறார். ஆகவே அவனை அரைமணிநேரம் அவர் வாசிக்க சொன்னதாக ஒரு வசனம் வருகிறது.

முக்கியமான போட்டி ஒன்றில் யார் எவ்வளவு நேரம் வாசிக்க வேண்டும் என்று ஒரு விதியை வகுத்த பிறகு அதனை ஒரு அமைச்சர் எப்படி மாற்றலாம்? பிற மாணவர்களுக்கு செய்யும் அநீதி இல்லையா இது? கார்த்திக் தனியே பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலும் இந்த நேர நீட்டிப்பின் அர்த்தத்தை ஏற்றுக்கொள்ளலாம். போட்டியில் எப்படி? ஒருவேளை ஆளுங்கட்சியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பொழுது போகாமல் இந்நிகழ்ச்சி பார்க்க வந்த அமைச்சரோ எனும் சந்தேகம் எழுகிறது.    
  
இயக்கம்:

பலமான ஸ்க்ரிப்ட், சிறந்த நடிகர்கள், நல்ல பின்னணி இசையென ஒவ்வொன்றிலும் தனிக்கவனம் செலுத்தியிருக்கிறார் அகஸ்டோ. அதிரடிகளுக்கும், ஆர்ப்பரிப்புகளுக்கும் இடமளிக்காமல் தெளிவான, ஆழமான கதையை சொல்லி நம்மை கட்டிப்போடும் யுக்தியை இவர் எங்கிருந்து வரமாக பெற்றார் என்பது தெரியவில்லை. 

மனதில் சஞ்சலம் இருக்கும்போது இசை மட்டுமே மருந்தாக அமைய வேண்டும் என்றில்லை. அந்த இசையை பின்னணியாக வைத்து மேடைக்கு வரும் இதுபோன்ற உன்னத நாடகமும் அருமருந்தாக அமையும்.

வானவில்லின் அம்பு - அகஸ்டோவின் பிரம்மாஸ்திரம்.  

------------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.   


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...