CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 28, 2019

கோடை நாடக விழா 2019: நன்றி. மீண்டும் வாங்க.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் ஆறாவது நாடகம் - நன்றி மீண்டும் வாங்க.  எழுத்து மற்றும் இயக்கம்: நானு. தயாரிப்பு: ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ் பாபி & ஜானி.     


கதைச்சுருக்கம்:

நம்ம வீடு என்கிற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் சிவராமன். முந்தைய தலைமுறையினர் ஆரம்பித்து வைத்த இவ்வுணவகம் வீட்டு சாப்பாட்டை போன்று தரமாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் பிரசித்தி பெறுகிறது. இதற்கென தனியே விளம்பரம் செய்வதில் உடன்பாடில்லாத சிவராமனை பேட்டியெடுக்க வருகிறார் ஒரு பெண். அப்புள்ளியில் இருந்து நடக்கும் மாற்றங்கள் என்ன?

நடிகர்கள்:

சிவராமனின் மகன் பாலாவாக மகேஸ்வர். கேரக்டரை நன்கு உள்வாங்கி பிரகாசித்துள்ளார். முந்தையை நாடகங்களை காட்டிலும் நடிப்பில் நல்ல முன்னேற்றம். நானுவின் பல்வேறு நாடகங்களில் காத்தாடி ராமமூர்த்தி மற்றும் லாவண்யாவிற்கு இணையான கேரக்டர்களில் நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாக பெயரெடுக்கிறார். 

தன் தந்தை நடத்தி வரும் 'நம்ம வீடு' உணவகம் மூலம்தான் தான் இந்த நிலைக்கு உயர்ந்தேன் என்பதை மறுக்காவிட்டாலும், இன்னும் எத்தனை நாள்தான் இந்த தொழிலை நடத்தி சிரமப்பட வேண்டும். இனியேனும் நிம்மதியாக தன்னுடன் நாட்களை கழிக்கலாமே எனும் ஆதங்கப்படும் ஒரு மகனின் மனக்குமுறலை சரியாக பிரதிபலித்துள்ளார். இதுபோன்று நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தால் மகேஸ்வரின் மேடை நாடகப்பயணம் மேலும் சிறப்படையும். வாழ்த்துகள்.   

சாதாரண காமடி வசனங்கள் கூட காத்தாடி ராமமூர்த்தி சொல்லும்போது சிரிப்பு மயமாகிவிடும். இங்கும் விதிவிலக்கல்ல. உணர்வுபூர்வ தந்தை சிவராமனாக நளபாகம் படைக்கிறார். மேடையில் தனியாதிக்கம் செலுத்தாமல் மகேஸ்வர், லாவண்யா போன்ற வயதில் சிறிய கலைஞர்களுடன் இணைந்து சற்றும் எனர்ஜி குறையாமல் அரங்கில் வலம் வருவது அசாத்தியம். 

டிவி நிருபராக சிவராமனிடம் அறிமுகமாகி, குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்த முயல்பவராக லாவண்யா வேணுகோபால்.... லைவ் வயர். அனைத்து காட்சிகளிலும் பளிச்சென பேசி, திறம்பட நடித்துள்ளார்.

துணை நடிகர்களாக நானு, கீதா நாராயணன், ஸ்ரீனிவாஸ், சுப்பு உள்ளிட்டோரும் தமக்கான வேடங்களை புரிந்து நடித்துள்ளனர்.     

ஒப்பனை பெரம்பூர் குமார். இசை சுப்பு & சரண், அரங்க அமைப்பு - சைதை குமார் & சண்முகம்.  ஒளியமைப்பு - மயிலை பாபு. 

எழுத்து - இயக்கம்:

பெற்றோருக்கும், மகனுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டை அடிப்படையாக வைத்து சுழல்கிறது நானுவின் இந்நாடகம். பாரம்பரிய வீட்டுச்சாப்பாடு அளிக்கும் உணவகத்தின் வரவேற்பறையில் பல்வேறு காட்சிகள் நகர்வதை காண்பது ஒரு மாறுபட்ட அனுபவம்.

ஒற்றை குடும்பத்தின் கதை, அதில் இருக்கும் பிரச்னை, இறுதியில் ஒரு தீர்வு என எளிமையான களத்தை தேர்வு செய்திருக்கிறார். ஷார்ஜா என்கிற வார்த்தையை கேட்டதுமே கசப்பாக உணர்கிறார்கள் சிவராமனும், அவரது மனைவியும். ஷார்ஜாவில் இருப்பது யாராக இருக்கக்கூடும் என நாம் யூகிக்கையில் அந்த யூகத்தை மாற்றியமைக்க வைத்திருப்பது நன்று.    

'எல்லாமே இன்றைய ஸ்பெஷல்' என முதல் காட்சியில் வரும் அறிவிப்பு பலகையில் இருந்தே நகைச்சுவை துவங்கி விடுகிறது. பக்கத்து வீட்டு மோட்டாரை சரி செய்வது, பெரிய ஹோட்டல்களில் இருக்கும் உணவுகள் மற்றும் உணவு பழக்கங்கள், சமையல் குறிப்புகள் என ஆங்காங்கே சிரிப்புக்கு உத்திரவாதம் உறுதி.

ஆரம்ப காட்சியில் டிவி நிருபராக சிவராமனை பேட்டியெடுக்க கையில் மைக்குடன் வருகிறார் நந்தினி.  ஆனால் கேமராமேன் எங்கே? ஏதேனும் ஒரு நபரை கேமரா எடுப்பது போல சேர்த்திருந்தால் நம்பகத்தன்மை இருந்திருக்கும் அல்லது இப்பேட்டியை மொபைல் அல்லது குறிப்பேட்டில் பதிவு செய்யும் பத்திரிக்கை நிருபர் என்றாவது நந்தினியை காட்டி இருக்கலாம்.

'இங்கு சாப்பிட வருபவர்கள் வெறும் வாடிக்கையாளர்கள் அல்ல. தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம்' என்று சொல்கிறார் சிவராமனின் மனைவி லலிதா. மேலும் 'அவர்களில் சாப்பிட்டுவிட்டு பணம் தர இயலாமல் செல்பவர்களும் அடக்கம்' என்றும் குறிப்பிடுகிறார். ஓரிருவரை அவர்களின் ஏழ்மை நிலை கருதி பணம் தராமல் உண்ண அனுமதிக்கலாம். அதற்கு மேல் அனுமதித்தால் வியாபாரம் என்ன கதியாவது?

ஷார்ஜாவில் வேலை பார்க்கும் பாலாவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது என்றும், இறுதியில் அது தேசிகனால் சொல்லப்பட்ட பொய் என்றும் ஒரு வசனம் வருகிறது. இவ்வளவு படித்து பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் பாலா வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட நாள் முதல்... முடக்கப்படவில்லை என்று  சொல்லப்பட்ட நாள் வரை ஒருமுறை கூடவா வங்கியை தொடர்பு கொள்ளவில்லை? வங்கியிலும் பணம் இல்லை என்று நம்பும் இவர் இந்த இடைப்பட்ட நாட்களில் செலவிற்கு என்ன செய்தார்? பெற்றோரிடம் கோபம் கொண்டவர் என்பதால் அவர்களிடமும் பணம் வாங்க வாய்ப்பில்லையே!!  

க்ளைமாக்சில் பாலாவிற்கு ஏற்படும் மனமாற்றம் திடீரென ஏற்பட்டது போல இருந்தது. நந்தினியை பிரிய நினைக்காததால் வேறு வழியின்றி இப்படி மாறிவிட்டான் என்று காரணம் சொல்லப்படுகிறது. பல்வேறு தருணங்களில் பெற்றோர் மற்றும் நந்தினியிடம் வாக்குவாதம் செய்யும் பாலா இந்த முக்கிய மனமாற்றத்திற்கு எப்படி ஆளானான் என்பதையும் தனியொரு காட்சியாக பதிவு செய்திருந்தால் அழுத்தமாக இருந்திருக்கும்.

காத்தாடி & நானு காம்போவின் நாடகத்தில் நிறைய நகைச்சுவை மற்றும் கொஞ்சம் கருத்து இருந்தாலே ஓகே என்று நினைக்கும் ரசிகர்களுக்கு நகைச்சுவையை மட்டுமே நம்பாமல் கதைக்கும் போதுமான இடத்தை தந்திருக்கிறார் நானு. அதை இன்னும் வலுவாக கட்டமைத்து, மேற்சொன்ன சில குறைகளையும் நீக்கியிருந்தால் இந்நாடகம் ஒரு ஸ்பெஷல் விருந்தாக இருந்திருக்கும்.

நன்றி. மீண்டும் வாங்க - அளவு சாப்பாடு.  
  
------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.  

  

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...