CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, April 27, 2019

கோடை நாடக விழா 2019 - வைரஸ்கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவின் ஐந்தாவது நாடகம் வைரஸ். எழுத்து, இயக்கம் - முத்துக்குமரன். தயாரிப்பு: PMG மயூரப்ரியா.    


கதைச்சுருக்கம்:

மகனால் ஏமாற்றப்படும் தாய், அமெரிக்க வாழ்வை அட்ஜஸ்ட் செய்துகொள்ள தடுமாறும் தமிழாசிரியர், இந்திய கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாத பெண்மணி. இவர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய திருப்பங்கள் என்ன? அதற்கு காரணமானவர்கள் யார்?

நடிப்பு:

தமிழாசிரியர் சதாசிவமாக முத்துக்குமரன். முதன் முறையாக அமெரிக்கா சென்று அங்கே மகன் வீட்டில் இவர் படும் பாடுகள் ரசனை. பேரனிடம் அன்பை செலுத்த துடிப்பது, தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவது, மைலாப்பூர் வாசத்தை நினைவு கூர்வது என நிறைவான நடிப்பு.   

அப்போட் என்கிற ஆபத்சகாயமாக கணபதி சங்கர். அமெரிக்காவில் உள்ள கலாச்சார மையத்தின் தலைவர். இப்படி ஒரு கேரக்டர் வடிவமைப்பு இதற்கு முன்பு வந்ததாக தெரியவில்லை. சிறந்த குரல்வளமும் பக்க பலமாக இருக்க..இந்நாடகத்தின் 'அசல்' ஆபத்சகாயமாக வலம் வந்திருக்கிறார்.

சதாசிவத்தின் மகன் ஹரிசங்கர் எனும் ஹாரிஸாக பரமேஸ்வர். அதிகப்படியான நடிப்பு, வசனம் பேசாமல் இயல்பாக நடித்து பலம் சேர்க்கிறார். 

எவ்வளவுதான் எடுத்துச்சொன்னாலும் தன் குணத்தை லேசில் மாற்றிக்கொள்ளாத மேற்கத்திய குணவதியாக அனு சுரேஷ் நன்றாக நடித்துள்ளார்.  

சதாசிவத்தின் பேரனாக மாஸ்டர் ஹிதேஷ். உடல் மீது கைவைத்தால் கோவப்படும் அக்மார்க் அமெரிக்க வார்ப்பு. சுறுசுறு நடிப்பு. ஆங்கிலம், பாரதியின் தமிழ்ப்பேச்சு என இரண்டிலும் நல்ல மதிப்பெண்ணை பெறும் இந்த சுட்டி மேலும் பல நாடகங்களில் நடிக்கும் திறமை கொண்டவர்.

முரளி பட்டராக ஹிந்து பாலாவின் வேடம் கனப்பொருத்தம்.

பணத்திற்காக மகனால் ஏமாற்றப்படும் ரேவதி மாமியாக கௌரி சுரேஷ். நாடகத்தின் முதல் காட்சியில் தோன்றியவரும் இவர்தான். மைக்கை பார்த்து சத்தமாக பேச வேண்டும், அதே நேரத்தில் எதிரில் நடிப்பவரையும் பார்க்க வேண்டும் என பலமுறை மிலிட்டரி ட்ரைனிங் எடுத்திருப்பார்கள் போல.

ரோபோவைப்போல ரசிகர்கள் இருக்கும் திசையையும், அருகில் உள்ள நடிகர்களையும் மாற்றி மாற்றி பார்த்து நடித்திருப்பதால் முற்றிலும் செயற்கையாக உள்ளது. இரண்டு இடங்களில் அழ வேண்டிய சந்தர்ப்பத்தில் நடிப்பு வராமல் எம்.ஜி.ஆரைப்போல முகத்தை கைகளால் மூடிக்கொண்டு நேக்காக தப்பி விடுகிறார்.

இவரது நடிப்பை யதார்த்தமாக ஆக்க தீவிர பயிற்சி அளிக்க வேண்டும் அல்லது வேறொருவை நடிக்க வைக்க வேண்டும். அதற்கு இயக்குனர் முத்துகுமரனும், மயிலை கற்பகாம்பாளும்தான் வழி வகுக்க வேண்டும்.

பின்னணி இசை:

வசனங்களை தொந்தரவு செய்யாமல் தெளிந்த நீரோட்டமாக வந்து செல்கிறது குகப்ரசாத்தின் பின்னணி இசை. 

அரங்க பின்னணி:

அரங்க அமைப்பு சைதை குமார் & சண்முகம். தனித்து குறிப்பிடும்படி பெரிதாய் எதுவுமில்லை. அதே சமயம் அமெரிக்க இல்லம், கலாச்சார மாயம், கோவில் போன்றவற்றின் புகைப்படங்களை கணினி மூலம் தேர்வு செய்து அவற்றை ப்ரொஜக்ஷன் மூலம் அரங்கின் பின்னணியாக அமைத்திருக்கிறார் விஸ்வ ஜெய். மேடை நாடகத்தில் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அதே சமயம் இதுபோன்ற ப்ரொஜக்ஷன், ஃப்ளெக்ஸ் பேனர்  போன்று தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பது ஒரு அரங்க அமைப்பாளருக்கான முழுமையான க்ரெடிட் ஆகி விடாது என்பதை இனி வரும் காலங்களில் மனதில் கொள்ள வேண்டும். 

பின்னணி அரங்கம் என்றால் அதனை அமைப்பவரின் உண்மையான கலை வேலைப்பாடு தெரிய வேண்டும். குறிப்பாக மேடை நாடகங்களில். 

பெரம்பூர் குமாரின் ஒப்பனை, மயிலை பாபுவின் ஒளியமைப்பு போன்றவை போதுமான அளவு இருக்கிறது. 

கதை:

மகன் மற்றும் பேரனை நேரில் சந்தித்து மகிழ நினைக்கும் தந்தை சதாசிவம், மேற்கத்திய கலாச்சார மோகத்தில் இந்திய கலாச்சாரத்தை மறக்கும் குணவதி. இவர்களுக்கு உதவ நினைக்கும் ஆபத்சகாயம். தெளிவான கதைக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது.

பணத்தை பறிகொடுக்கும் ரேவதி மாமி, ஹரிசங்கரின் மகள் பற்றிய ஃப்ளாஷ்பேக் போன்றவை இந்த மைய கதைக்கு பெரிதாய் உதவவில்லை. இவ்விரண்டையும் ஒதுக்கி விட்டு சதாசிவம் - குணவதி - ஆபத்சகாயம் ஆகியோரை மட்டும் மையமாக கொண்டு கதை நகர்ந்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும். 

திரைக்கதை:

ரேவதி மாமியின் மகன் தனது தாயையே ஏமாற்றி விடுகிறார் என்பது ஆரம்ப காட்சிகளிலேயே பதிவாகி விடுகிறது. கணவனை இழந்தவர். ஒற்றை மகன். வேறெந்த சொந்தமும் இல்லை. அப்படியிருக்க தனது பணத்தேவைக்காக தாயிடம் அன்பாக பேசி இருக்கலாம். மறுத்தால் சற்று அதட்டலாகவும் பேசி இருக்கலாம். அதுவும் சரிப்படாவிட்டால் பிறகு பணத்தை கவ்விக்கொண்டு மாயமாகி இருக்கலாம். இப்படி எதுவும் செய்யாமல் தாய்க்கு காசி அல்வா தந்துவிட்டு எக்ஸ்பிரஸ் வேகத்தில் கொள்ளையடிக்க வேண்டிய அவசியமில்லையே? 

ஆரம்பக்காட்சியில் 'எல்லாமே உனக்குத்தானேடா' என்று மகனிடம் அன்பாக பேசியவர்தான் ரேவதி மாமி. அன்பாக பேசி ஏமாற்றினாலே எளிதில் ஏமாந்து விடுவார் என்பது போல்தான் இருக்கிறார். பிறகு எதற்கு இந்த மலைக்கள்ளன் போன்ற சாகசம்?   

இந்த ஏமாற்றுக்காரன் எப்படி பிடிபட்டான் என்பதற்கு இன்னும் நம்பத்தகுந்த காட்சிகளை வைத்திருக்கலாம். 'எப்படியும் பிடிபடுவான்' என்று அந்த தாய்க்கு ஆபத்சகாயம் நம்பிக்கை அளிக்கிறார். சரி ஏதோ ஒரு புத்திசாலித்தனமான வலையை விரித்து அவனை வீழ்த்தப்போகிறார் என்று எதிர்பார்த்தால் தனக்கு இருக்கும் நெட்வொர்க்கை வைத்து அவனை பிடித்ததாக ஒற்றை வசனம் மூலம் சொல்லி அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டது ஏமாற்றம்.

மூன்று பேரின் வாழ்விற்கு ஆபத்சகாயம் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நாம் உறுதியாக கணிக்கும்போது குணவதி எனும் பெண் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக திருந்துவார் என்று ஆபத்சகாயம் சொல்வது வெகு யதார்த்தம். உண்மையில் நாம் எதிர்பார்க்காத திருப்பம். நல்ல திரைக்கதை திருப்பம். வாழ்த்துகள் முத்துக்குமரன்.

மாறுவேடப்போட்டியில் பேரன் போடப்போகும் வேடம் சஸ்பென்ஸ் என்று சொல்கிறார் சதாசிவம். இதுவரை எந்த பள்ளிச்சிறுவனும் போடாத வேடமாக இருக்குமோ என்று எதிர்பார்த்தால்... நாம் பலமுறை பள்ளிகளில் பார்த்த அதே வேடம்தான். அது என்னவென்பதை மேடையில் காண்க. 

வசனம்: 

குளியலறையில் இருந்து ஓடிவந்து படுத்தபடியே குளிப்பது சரிப்படாது, ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு உள்ளிட்ட நகைச்சுவை வசனங்கள் அருமை.

இந்தியாவை விட்டு அமெரிக்காவில் இருக்கும் மகனைப்பற்றி சதாசிவம் ஆதங்கப்படும்போது 'இதே இளம் வயதில் ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து தந்தையை தவிக்க விட்டவர்தானே நீங்கள்?' என்று ஆபத்சகாயம் கேள்வி எழுப்புமிடம் சிறப்பு. தன் பிள்ளைகளை குறை சொல்லும் முன்பு அவனுடைய வயதில் நாம் எப்படி இருந்தோம் என்பதை சிந்தித்து பார்த்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.  நாடகத்தின் மிக முக்கியமான வசனம் இது.

கடவுள் மீது பற்றில்லாத குணவதிக்கு தனது கலாச்சார மையத்தில் போதனை செய்கிறார் ஆபத் சகாயம். 

இந்து மதத்தின் பெருமையை இவர் ஒருபக்கம் சொல்ல, இன்னொரு பக்கம் 'இந்து என்பது மதமல்ல. அது ஒரு வாழ்வியல் முறை (Way of Life) என்று சொல்கிறார் முரளி பட்டர். எதற்கு இந்த முரண்பாடு? 'இந்து' என்பது மதமா அல்லது வாழ்வியல் முறையா?  நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் வசிக்கும் பெரியவர்களான இவர்களே இப்படி இரு கருத்துக்களை சொன்னால் குணவதியின் கதியென்ன?

சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை மதிப்பது அமெரிக்காவில் பின்பற்றப்படும் நல்ல நடைமுறைகளில் ஒன்று என்று ஆபத்சகாயம் கூறுகிறார். இன்னொரு பக்கம் 'சபரிமலைக்கு பெண்கள் வரலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்து விட்டார்களே' என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி பயங்கரமாக கொந்தளிக்கிறார். அமெரிக்காவில் சட்டத்தை மதித்தால் நல்லது, இந்தியாவில் சட்டத்தின்படி அளிக்கப்படும் தீர்ப்பை ஏற்க முடியாதா? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? 

உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லையென்பது குணவதியின் நிலைப்பாடு. ஆனால் இந்துக்கள் பின்பற்றும் உருவ வழிபாட்டின் உன்னதத்தை விளக்க ஆபத் சகாயம் செய்யும் விஷயம்... நகைச்சுவையின் உச்சம்.

அருகில் இருக்கும் குணவதியின் கணவரிடம் 'உங்கள் மொபைலில் இருக்கும் மனைவியின் போட்டோவை பார்த்து துப்புங்கள்' என்கிறார். உடனே 'பர்சனல் அட்டாக் செய்யாதீர்கள். இது நாகரீகமல்ல' என்று குணவதி கோவப்பட 'இது உன் நிழல் படம்தானே. அதற்கு ஏன் கோவப்படுகிறாய்?' என்று மடக்குகிறார் ஆபத் ஐயா. அடேங்கப்பா!!

உருவ வழிபாட்டின் மகிமையை உணர்த்த ஒருவரின் புகைப்படத்தை பார்த்து துப்புவது எந்த வகை நாகரீகம்? இஸ்லாமியர்களுக்கோ, குணவதிக்கோ உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லை. ஆனால் அவர்கள் மாற்று மதத்தை சார்ந்த கடவுளின் படத்தை வைத்து நித்தம் துப்பிக்கொண்டா இருக்கிறார்கள்? அவரவர் நம்பிக்கை அவர்களோடு. அதற்கு ஏன் இவ்வளவு ஆவேசம்? 

கடவுள் என்பது இயற்கை. அது கண்ணிற்கு புலப்படாத சக்தி. அவர் எங்கள் மனதில் இருந்தால் மட்டுமே போதும். கடவுள் உருவம் அற்றவர் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்கிறது?

இந்து, கிறுத்துவ மதக்கடவுள்களின் 'உண்மையான' போட்டோ ஆதாரம் யாரிடமும் இல்லை. பக்தியின் அடிப்படையில் கற்பனையை சேர்த்து வெவ்வேறு கடவுள்களின் உருவங்களை வரைந்தோ, சிற்பமாக்கியோ வணங்குகிறோம். அவ்வளவுதான். 

எப்படி ஒரு புகைப்படத்தின் மீது உமிழ்ந்தால் அது அசலை பாதிக்காதோ அதுபோலத்தான் வரையப்பட்ட படம் அல்லது சிற்பத்தில் இருக்கும் கடவுளை நிந்தித்தால் 'உண்மையான' கடவுள் பாதிக்கப்படப்போவதே இல்லை. இப்படி ஒரு தெளிவு இருக்கும் நபராக ஆபத்சகாயம் இருந்திருந்தால்... இப்படி கோவப்பட்டிருக்கவே தேவையில்லையே?   

இந்து மதம் சார்ந்த அதிரடி வசனங்களை பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்க வைக்கப்பட்ட வசனங்களாக மட்டுமே தெரிகிறது. கதையோடு சரியாக பொருந்தவில்லை. இந்து மதத்தின் பெருமைகளை புராணம், இதிகாசம், பகவத் கீதை உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களுடன் சொல்லும் ஆபத் சகாயம் இறுதிக்காட்சியில் 'உலகில் பேதங்கள் இல்லை'  என்று ஒரு வசனம் பேசுகிறார்.

பேதங்களே இல்லை என்றால் சபரிமலைக்கு பெண்கள் சென்றால் இவருக்கென்ன?  சிவன் - பார்வதி சமமாக இணைந்திருப்பதுதான் அர்த்தநாரி என்று இந்து மதம்தானே சொல்கிறது?

பேதங்களே இல்லையென்றால் உருவ வழிபாடு செய்யாதவர்கள் மீது ஏன் இப்படி ஒரு ஆக்ரோஷம்? அது அவர்களின் நிலைப்பாடு என்று விட்டு விட வேண்டியதுதானே?

ABCD என்பதற்கு American Born Confused Desi என்று ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. இது முத்துக்குமரனின் ஒரிஜினல் வசனம் என்று நினைத்தால்... இல்லை. 2013 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடித்த மலையாளப்பட டைட்டில்தான்   American Born Confused Desi.

Cheque - Check, Cereal - Serial போன்ற டி.ராஜேந்தர் பாணி வசனங்கள் சில இடங்களில் தவிர்க்கப்பட்டிருக்காலம். 

இயக்கம்:

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் என்றாலே பெற்றோர்களை மதிக்க மாட்டார்கள், நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்று மட்டுமே கேரக்டர்களை அமைக்காமல் சரியான முறையில் பேலன்ஸ் செய்திருக்கிறார் முத்துக்குமரன்.

தன்னை மதிக்கும் மகன், மருமகள், வெளிநாட்டில் இருந்தாலும் இந்திய பண்பாட்டை மதிக்கும் குணவதியின் கணவர், இந்திய கலாச்சார பண்பாட்டை வளர்க்கும் ஆபத் சகாயம் போன்றோர் என ஒருதரப்பும், தாத்தாவை தொடக்கூட அனுமதிக்காத பேரன், சொகுசான வாழ்க்கையை விரும்பும் குணவதி மற்றும் ரேவதி மாமியின் மகன் என வேறுசில கேரக்டர்களும் சம எண்ணிக்கையில் இருக்கின்றன.

ஒரு இயக்குனராக எந்த வசனத்தை யாரை பேச வைக்க வேண்டுமென்பதில் சில முக்கிய காட்சிகளில் முத்துக்குமரன் கவனம் செலுத்தவில்லையோ என்று எண்ண வேண்டியுள்ளது. அதற்கு முக்கிய உதாரணங்கள்.

1. அனைவருக்கும் நல்லது செய்பவர், தமிழர் பண்பாடு - கலாச்சாரத்தை தாங்கிப்பிடிப்பவர் என்று சித்தரிக்கப்படும் ஆபத் சகாயம் உருவ வழிபாடு, சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு என இந்துத்வாவிற்கு ஓவராக தம் கட்ட வேண்டிய அவசியமில்லையே. இறைவனுக்கு பணி செய்வதை மட்டுமே முழுநேரத்தொழிலாக செய்யும் முரளி பட்டர் இதுபோன்று பேசி இருந்தால் அதில் ஓரளவு நியாயம் இருக்கும்.

2. 'எதையும் விடாமல் பிடிப்பது மேற்கத்திய கலாச்சாரம். அனைத்தையும் விட்டு விடுவது இந்து/இந்திய கலாச்சாரம்' என்கிற ரீதியில் சதாசிவத்தின் அமெரிக்க மருமகள் குணவதிக்கு போதனை செய்கிறார். இதை தமிழ்நாட்டிலேயே வாழும் நல்ல தமிழாசிரியரான சதாசிவம் சொன்னால் அதில் ஒரு நியாயம் உள்ளது.

குடும்பத்துடன் ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவில் வசித்துக்கொண்டு இருக்கும் ஒரு பெண்மணி இதை சொல்லும்போது நெருடுகிறது. அனைத்தையும் விட்டு விட்டு பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு இந்தியாவில் படிக்கும் மகளை அருகில் இருந்து கவனிக்கும் தாயாக இருந்து இப்படி பேசியிருந்தாலும் பரவாயில்லை.

முன்பு சொன்னது போல சதாசிவம் மற்றும் குணவதியின் குடும்பத்தின் பிரச்னைகளை மட்டும் நேர்க்கோட்டில் சொல்லி இருக்கலாம். அல்லது கூடுதலாக சொல்லப்பட்ட ரேவதி மாமியின் பிரச்னையை அழுத்தமாக சொல்லி, அதில் நடித்த கௌரி சுரேஷிடம் நல்ல நடிப்பை வாங்கி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் பாஸ்மார்க் வாங்கியிருக்கும் 'வைரஸ்'.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல இந்நாடகத்தில் எங்கெங்கே பின்னடைவுகள் இருந்தன என்பதை மயிலை காளத்திக்கடை ரோஸ்மில்க்கை அருந்தி சூட்டை தணித்து முத்துக்குமரன் சிந்திப்பார் என்று நம்புவோம்.

வைரஸ் - America Based Confusing Drama.  
-------------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.   


   

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...