CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, April 26, 2019

கோடை நாடக விழா 2019 - வலைக்குள் சிக்கிய மீன்
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவின் நான்காவது நாடகம் வலைக்குள் சிக்கிய மீன். 26/04/2019 அன்று நாரத கான சபாவில் அரங்கேறியது. எழுத்து, இயக்கம்: டி.வி.ராதாகிருஷ்ணன். தயாரிப்பு: சௌம்யா தியேட்டர். இக்குழு ஆரம்பித்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களின் 29 வது படைப்பிது.

கதைச்சுருக்கம்:

தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வனஜாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். எந்நேரமும் மொபைல் போனை நோண்டுவதில் ஆர்வம் உள்ளவர்கள். நடுத்தர குடும்பம். எதிர்பாராமல் நடக்கும் சம்பவம் ஒன்று இந்த சிறு குடும்பத்தை நிலைகுலைய செய்கிறது. 

நடிப்பு:

வனஜாவாக ஃபாத்திமா பாபு. தற்கால தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளம் பற்றி நிறைய தெரிந்திருக்காத கதாபாத்திரம். அந்த அறியாமை, மகள் மீது காட்டும் கோபம், தான் செய்த தவறை நினைத்து அடையும் விரக்தி, பிறகு நிதர்சனத்தை உணர்ந்து சாந்தமடைதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி பிரமாதமாய் நடித்திருக்கிறார். நல்ல குரல்வளம் கூடுதல் ப்ளஸ்.

அரிதாக மேடை நாடகங்களில் தலைகாட்டும் ஃபாத்திமா போன்ற பிரமாதமான நடிகைகள் அவ்வப்போது வந்து சென்றால் நாடக கலைக்கு நன்றாக இருக்கும். சென்டிமென்ட் மற்றும் விரக்தியில் இவர் வெளிப்படுத்தும் நடிப்பு மிக இயல்பாய் இருப்பதால் காண்போரின் மனதை நெகிழ வைக்கிறது.  

இவருக்கும், மகள் ப்ரியாவாக வரும் ஹேமமாலினிக்கும் இடையே நடக்கும் போராட்டம் வெகு யதார்த்தம். நீண்ட நாட்கள் கழித்து தாய் மற்றும் மகளுக்கு இடையே ஏற்படும் கோபதாபம் மற்றும் அன்பினை இந்நாடகத்தின் மூலம் காண முடிந்தது. சில இடங்களில் உண்மையாகவே மகளை மொத்தி எடுக்கிறார் ஃபாத்திமா. மேலும் சில காட்சிகளில் இதை நீட்டித்து இருந்தால் வனஜாவால் சக்கையாக அடித்து துவைக்கப்பட்டிருப்பாரோ என்று நினைக்கிற அளவிற்கு தத்ரூபமாக அமைந்திருந்தது. மகளாக தனது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருந்தார் ஹேமா.

டி.வி. ராதாகிருஷ்ணனின் நாடகங்களில் நல்ல குணச்சித்திர நடிகராக வரும் பி.டி.ரமேஷ் இதில் வனஜாவின் அண்ணனாக நடித்துள்ளார். மகன் ரமேஷாக கோபாலகிருஷ்ணன் ராகவன். துணை நடிகர்களாக தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்.

சைபர் க்ரைம் அதிகாரியாக கிரீஷ் வெங்கட் சாலப்பொருத்தம். அறிமுக நடிகராக பாஸ்கர் எனும் வேடத்தில் ஆதித்யா. ஆதித்யாவின் கன்னத்தில் கிரீஷ் உண்மையிலேயே அறைவது...ஆஹா!!

ஒலி மற்றும் ஒளியமைப்பு: 

எளிய பட்ஜெட்டில் அமைந்திருக்கும் நாடகத்திற்கு போதுமான ஒலி, ஒளியமைப்பை சரியாக செய்திருக்கிறார் கலைவாணர் கிச்சா.  

சைதை குமார் மற்றும் சண்முகத்தின் அரங்க அமைப்பு, பெரம்பூர் குமாரின் ஒப்பனை போன்றவையும் இதேபோன்றுதான். 

கதை:

முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்களும், தற்போதைய தலைமுறையும் நவீன தொழிநுட்பத்தின் சாதக பாதகங்களை உணர்ந்து எப்படி செயல்பட வேண்டும் எனும் கதையை கையாண்டிருக்கிறார் டி.வி.ராதாகிருஷ்ணன். இதுபோன்ற கதைகள் மேடை நாடகத்தில் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த குறிப்பிட்ட படைப்பு மற்றவற்றில் இருந்து எப்படி தனித்து நிற்கிறது என்பது பின்வரும் வரிகளில்...   

திரைக்கதை:

வலைக்குள் சிக்கிய மீன் தனித்து நிற்பதற்கான காரணம்... இப்படைப்பு இளம் தலைமுறையை மட்டுமே குற்றம் சாட்டி இறுதியில் ஒரு நீண்ட அறிவுரையுடன் முடிந்து விடவில்லை. மொபைல் மற்றும் சமூக வலைத்தள நுட்பங்களை அடிப்படையான அளவிற்காவது தெரிந்து கொள்ளாமல் இருக்கும் முந்தையை தலைமுறைக்கும் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறது.

இவையனைத்தும் ஒரு சில வசனங்கள் மூலமோ அல்லது க்ளைமாக்ஸ் பிரச்சாரம் மூலமோ சொல்லாமல் கதையுடன் அழகாய் கோர்த்து சொல்லப்பட்டிருக்கிறது. குறைகளை கண்டுபிடிக்க இயலாதபடி ஒரு வலுவான திரைக்கதையை லாஜிக் இடறல்கள் இன்றி நேர்த்தியாக அமைத்திருப்பதால் ஒவ்வொரு நிமிடமும் நம்முள் எதிர்பார்ப்பை விதைக்கிறது. இது டி.வி.ராதாகிருஷ்ணனின் எழுத்திற்கு கிடைத்த முழுமையான வெற்றி.

வசனம்:

ஏமாற்றிய நபரை 'அவர்' என்று மகள் குறிப்பிடும்போது கோபப்படும் வனஜா, அனைவரின் பிறந்த நாளையும் தெரிந்து வைத்திருக்கும் மகள் தாயின் பிறந்த நாளை மறந்து போவது, சற்று அசந்தால் நம்முடைய மானத்தையும், பணத்தையும் ஒரே வாய்ப்பில் பறிக்க காத்திருக்கும் ஒயிட் காலர் கிரிமினல்களின் செயல்பாடு என பல்வேறு விஷயங்களை அருமையாக வசனங்கள் மூலம் கூறியிருக்கிறார் டி.வி. ராதாகிருஷ்ணன்.

இயக்கம்:

பெரும் பொருட்செலவில் பல்வேறு நடிகர்களை வைத்து எடுக்கப்படும் நாடகங்களை வரவேற்பது போல, இவை எதுவுமின்று மிக எளிமையான அரங்க அமைப்பு, ஐந்தாறு நடிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு வலுவான குடும்பக்கதையை சமூக விழிப்புணர்வுடன் எடுக்கும் படைப்புகளையும் வரவேற்க வேண்டும். 

பொதுவாக இதுபோன்ற ஃபேஸ்புக் - மொபைல் போன், புதிய - பழைய தலைமுறை முரண்கள்  அம்சங்கள் கொண்ட நாடகங்கள் ஏதேனும் ஒரு சில இடங்களிலோ அல்லது முழுமையாகவோ வறட்சியுடன் இருக்கும். 

உதாரணத்திற்கு நாடகத்தின் ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர் 'நாங்க எல்லாம் அந்த காலத்துல' என்று ஆரம்பிப்பார். க்ளைமாக்சில் 'இப்ப புரியுதா.. இயற்கையோடு சேர்ந்து வாழனும். எல்லாரும் வாக்கிங் போங்க. சுற்றத்தாருடன் கூடிப்பேசுங்க' என்று பல நிமிடங்கள் அறிவுரை சொல்வார். இதுபோல ஓரிரு நாடகங்கள் வந்தால் பரவாயில்லை. டஜன் கணக்கில் வந்து விழுந்தால் ரசிகனின் நிலை?

அதற்காக இப்படியான கருத்துக்களை சொல்லக்கூடாது என்பதல்ல. அது கதாசிரியர் மற்றும் இயக்குனரின் கருத்து சுதந்திரம். ஆனால் இதனை எப்படி ஒரு உருப்படியான நாடகமாக மாற்றுகிறார்கள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. அவ்வகையில் இதுபோன்ற வழமையான வலையில் சிக்காமல் திறம்பட நீச்சலடித்திருக்கிறது இந்த 'வலைக்குள் சிக்கிய மீன்'. 

இந்நாடகத்தின் இறுதியில் ஃபாத்திமா அல்லது பி.டி.ரமேஷ் இதுபோன்று ஒரு அறிவுரையை சொல்லி இருப்பதை விட ஒரு சைபர் க்ரைம் அதிகாரியாக இருக்கும் கிரீஷ் வெங்கட் சொல்லும்போது அது வெகு யதார்த்தமாய் பொருந்திப்போகிறது. இந்த கதாபாத்திரம் திடீரென க்ளைமாக்சில் வந்து குதிக்கவில்லை. வனஜா தரும் புகாரை விசாரித்து கதையுடனே பயணிக்கும் அதிகாரி என்பதால் அவர் தரும் விழிப்புணர்வு ஏற்கும்படி இருக்கிறது.

இந்நாடகத்தை பார்ப்போர் ஒருவேளை தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணர்வு கொண்டவர்களாவே இருந்தாலும்.. அவர்களுக்கும் தெரியாத சில முக்கியமான விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. அதற்கு தலைப்பே சாட்சி. மேலும் விளக்கம் தேவைப்பட்டால் க்ளைமாக்சில் சைபர் க்ரைம் அதிகாரி சொல்வதை கேட்டுப்பாருங்கள். 

சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் அவசியம் காண வேண்டிய சிறந்த நாடகம் இது. வீட்டிற்கு சென்றதும் இதில் கூறப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றையாவது நீங்கள் நிச்சயம் பின்பற்றுவீர்கள் என்பது உறுதி. அதுவே இதன் வெற்றி.    

முன்பு குறிப்பிட்டது போல மிகச்சில நடிகர்கள், எளிமையான பொருட்செலவு செய்திருந்தாலும் நல்ல கதை, வலுவான திரைக்கதை, இயல்பான வசனங்கள் மற்றும் இவற்றையெல்லாம் ஒருசேர இணைத்து பாராட்டும்படி இயக்கி இருக்கிறார் டி.வி.ஆர். அவசியம் அனைவரும் பாருங்கள்.

வலைக்குள் சிக்கிய மீன் - டி.வி.ராதாகிருஷ்ணனின் தங்க மீன்.    

--------------------------------------- 

விமர்சனம்:
சிவகுமார்.

         

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...