கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவின் மூன்றாவது நாடகம் ரயில் சிநேகம். 24/04/2019 அன்று நாரத கான சபாவில் அரங்கேறியது. எழுத்து, இயக்கம்: விவேக் ஷங்கர். தயாரிப்பு: ப்ரயத்னா.
கதைச்சுருக்கம்:
வைகுண்டபுரம் எனும் சிற்றூர். அரவிந்த் மற்றும் சஞ்சனா பயணித்த வாகனம் கோளாறாகி விட.. இரவில் அங்கிருக்கும் ரயில் நிறுத்தத்தில் தங்க வேண்டிய நிலை. அப்போது சில உருவங்களின் நடமாட்டத்தை பார்க்கிறாள் அஞ்சனா. அது நிஜமா, அமானுஷ்யமா என்பது புலப்படவில்லை. யார் இவர்கள்? இங்கே நடமாட வேண்டிய காரணமென்ன?
நடிப்பு:
T.D. சுந்தரராஜன், விஸ்வநாதன் ரமேஷ், கிரிஷ் அய்யபத் ஆகிய தேர்ந்த நடிகர்கள் தங்கள் பங்கினை போதுமானவரை அளித்திருப்பினும் இவர்கள் ஏற்ற கதாபாத்திரங்கள் மீது ஈர்ப்பு வரவில்லை. அதற்குக்காரணம் என்னவென்பது இவ்விமர்சனத்தின் 'கதை-இயக்கம்' பகுதியில் கூறப்பட்டுள்ளது.
கோவில் பூசாரி மாரிதாஸாக சுப்புவும், சிறுமியாக அதிதியும் வரும் காட்சிகளில் சிரிப்பதற்கு பெரிதாய் எதுவும் இல்லையென்றாலும் ஓரளவு புன்முறுவல் பூக்க முடிகிறது.
நாடகம் பார்க்கையில் தூக்கம் கண்களை சொக்கிய சமயம் வேப்பிலை அடித்து எழுப்பியதுபோல் 'மாரியாத்தா' பாடலுக்கு சூரஜ் ஆடிய ஆட்டம் உற்சாகத்தை தந்தது. சில நிமிட வாய்ப்பென்றாலும் அதை சிறப்பாக செய்யும் நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
அரங்க அமைப்பு:
ஒரு கிராமத்து ரயில் நிறுத்தத்தை தத்ரூபமாக கண் முன் நிறுத்தி பிரமிக்க வைத்துள்ளார் கலை இயக்குனர் மோகன்பாபு. தண்டவாளம், அம்மன் கோவில், மரங்கள் இருக்கும் பின்னணி என நாம் உண்மையில் அந்த இடத்தில்தான் இருக்கிறோம் எனும் உணர்வை 100% தந்திருப்பது பிரமாதம்.
மோகன் பாபு எனும் கலைஞர் மேடை நாடகத்திற்கு கிடைத்த மாபெரும் வரம் என்பது மிகையல்ல. ஒவ்வொரு நாடகத்திலும் ஆச்சர்யங்களை தரும் அட்சயபாத்திரமாக தனது உன்னத கலை ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார். மனமார்ந்த வாழ்த்துகள்.
பின்னணி இசை:
'சாதகப்பறவைகள்' சங்கரின் இசையமைப்பு பெரும்பாலான இடங்களில் தரமாக இருக்கிறது. ஆனால் நாடகத்தின் ஆரம்ப கட்டத்தில் சில வசனங்களை கேட்க இயலாத வண்ணம் ஒலியின் ஆட்சி. கதையின் முதல் காட்சி முடிந்து பகல் நேரம் விடியும்போது பட்சிகள் கத்தும் சப்தம் நன்றாக இருந்தாலும் நீண்ட நேரம் அதை நீட்டித்திருக்க வேண்டியதில்லை.
உச்சி வெயில் வரை அவை கத்திக்கொண்டு இருக்கின்றனவே என்று நினைக்கத்தோன்றும் அளவிற்கு எரிச்சலை தருகிறது. வந்த கோபத்தில் அந்த பட்சிகளை சூப் வைத்து விடலாமா என்று கூட நினைக்கத்தோன்றியது. மற்றபடி வேறெந்த குறையுமில்லை.
மாரியாத்தா பாடலை பாடிய ஷ்ரவனின் குரல் கோடைக்கால நீர்மோராக இதம்.
ஒளியமைப்பு:
இரவு நேரம், நிலவொளி, விடியல் என ஒவ்வொன்றிற்கும் அருமையாக ஒளியை அமைத்திருக்கிறார் கோவிந்த் - மனோ லைட்டிங்ஸ்.
கதை - இயக்கம்:
வழக்கம்போல ஒரு வித்யாசமான கதையை தேர்வு செய்துள்ளார் விவேக் ஷங்கர். எழுத்து வடிவில் ஓரளவு வலுவாக இருக்கலாம். ஆனால் மேடை நாடகமாக மாறும்போது கதையோட்டத்தை சுவாரஸ்யப்படுத்தாமல் போயிருப்பது மைனஸ்.
தேவையற்ற சென்டிமென்ட், அவ்வப்போது வரும் அதிரடி திருப்பங்கள் என வேண்டுமென்றே ரசிகர்களை கட்டிப்போட வேண்டும் என்பது விவேக்கின் நாடகங்களில் பெரும்பாலும் இருக்காது. சற்று மெதுவாக காட்சிகள் நகர்ந்தாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். இயல்பான திருப்பங்கள் இருக்கும்.
ஆனால் ரயில் சிநேகம் எல்லைமீறி பொறுமையை சோதித்து விட்டது. நாடகத்தின் நீளம் கிட்டத்தட்ட 1 மணி 50 நிமிடங்கள். 'இவ்வளவு நேரம் நாடகம் இருக்கலாமா?' என்றால் நிச்சயம் இருக்கலாம். அது கதையை பொறுத்தது. ஆனால் இந்த நாடகத்திற்கு இவ்வளவு நீளம் மிக அதீதம்.
ஸ்டேஷன் மாஸ்டர் வாஞ்சிநாதனாக கிரீஷ். தன்னால் இயன்றவரை நடிப்பினை தர, அதற்கு துணையாக T.D. சுந்தரராஜன் மற்றும் விஸ்வநாதன் ரமேஷும் நடித்திருந்தனர். ஆனால் கதையில் ஏற்பட்ட தொய்வு இவர்களின் நடிப்பை முந்திக்கொண்டது.
'தமிழ், மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களை இங்கிருப்பவர்கள் சொன்னால் கட்டாயப்படுத்தியது என்று சொல்வார்கள்' என்பதாக ஒரு வசனம். அது யாருக்கு சொல்லப்பட்டு என்பதில் தெளிவில்லை. இங்கிருப்பவர்கள் ஒன்று தமிழை எதிர்ப்பார்கள் அல்லது சமஸ்கிருதத்தை எதிர்ப்பார்கள். இரண்டையும் சேர்த்து எதிர்ப்பவர்கள் யாரென்று புரியவில்லை. கைத்தட்டலுக்காக வைக்கப்பட்டது போலவே இருந்தது.
நாடகம் துவங்கிய ஒருமணிநேரம் வரை வைகுண்டபுரம் ஊரில் இருக்கும் கதாபாத்திரங்கள் யார்? அவர்களின் பின்னணி என்னவென்பதை விளக்குகிறார்கள். விளக்குகிறார்கள். விளக்குகிறார்கள். விளக்குகிறார்கள். விளக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரு சோகமான ஃப்ளாஷ் பேக். நாமும் சோர்வாகி ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கி விடலாம் என்று நினைக்க வேண்டி இருந்தது. ஒருவேளை இக்கதையின் ஆரம்பத்தில் ரயில் நிலையத்தில் உறங்கும் நபர்தான் இதற்கான குறியீடோ?
மத்திய ரயில்துறை அமைச்சர் பேட்டி அளிப்பதோடு நாடகம் முடியும் என நினைத்தால் அதன் பிறகு மேலும் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் வந்து சோதிக்கின்றன.
கார்ப்பரேட் தாக்கம் இன்றி தன்னிறைவு அடையும் தங்கள் ரயில் வசதி வேண்டாம் என்று ஊர் பெரியவர்கள் சொல்வது அர்த்தமற்றதாக உள்ளது. பல கிலோ மீட்டர் தூரம் சென்று ரயிலேறும் மக்களின் சிரமங்களுக்கு ஒரு விடிவு வந்தால் அதை உடனே ஏற்பவர்கள்தானே நல்ல மனம் கொண்டவர்களாக இருக்க முடியும்?
ரயில் வந்து விட்டால் கார்ப்பரேட் வர்த்தகம் நுழைந்து விடும் என்கிற அச்சம் எதற்கு? இவ்வளவு ஒற்றுமையாக இருக்கும் கிராமத்தார் ஒருவேளை ரயில் வசதியை பயன்படுத்தி கார்ப்பரேட் வணிகம் ஊருக்குள் வந்தாலும் அந்த சந்தைக்கு ஆதரவு தராமல் ஒன்றாக நின்று ஜெயிப்பதுதானே அந்த ஊருக்கே பெருமை? அப்படித்தானே இதற்கு முன்பு பாடுபட்டு இதனை ஒரு மாதிரி கிராமமாக மாற்றினார்கள்?
தங்கள் நிலத்தை ஆக்ரமிக்கும் விமானம் நிலையம், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆற்றை மாசுபடுத்தும் குளிர்பான நிறுவனங்கள் ஊருக்குள் வந்தால் அதை தடுக்க நினைப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால் முன்பே இருக்கும் தண்டவாளத்தில் இரண்டு நிமிடம் மட்டும் ரயில் நின்று சென்றால் தங்கள் ஊரை கார்ப்பரேட் தின்று விடும் என்று நினைப்பது அநியாய பயம் மற்றும் கற்பனையாகவே படுகிறது.
ஒரு வித்யாசமான முயற்சியை மட்டும் காண நினைப்பவர்கள் அபாய சங்கிலியை இழுத்து வைகுண்டபுரம் ஸ்டேஷனில் இறங்கி கொள்ளலாம். ஆனால் திருப்தியான நாடகம்தான் வேண்டும் என்றால் வைகுண்டபுரம் மாரியம்மனுக்கு வணக்கம் வைத்தபடி இன்னொரு ஸ்டேஷனை நோக்கி நகரலாம்.
ரயில் சிநேகம் - என்ஜின் கோளாறு.
---------------------------------
விமர்சனம்:
சிவகுமார்.
0 comments:
Post a Comment