CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, April 24, 2019

கோடை நாடக விழா 2019: சதி விதி மதி

 கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் இரண்டாவது நாடகம் 'சதி விதி மதி' 24/04/2019 அன்று நாரத கான சபாவில் அரங்கேறியது. லீகல்லி யுவர்ஸ் குழுவின் ஏழாவது படைப்பு. எழுத்து, இயக்கம்: சதீஷ் சந்திரசேகரன்.   

கதைச்சுருக்கம்: 

1519, 1919 மற்றும் 2019 என மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதை. கிராமத்தில் இருக்கும் மலைப்பகுதி. அதன் மேல் உள்ள மலையப்ப சாமிதான் அம்மக்களின் கடவுள். அங்கு அர்ச்சகராக இருக்கும் சக்ரபாணி மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது.  இதற்கும் மற்ற இரு கதைகளுக்கும் என்ன சம்மந்தம்? யார் இந்த மலையப்ப சுவாமியும், சக்ரபாணியும் என்பதை விவரிக்கிறது இந்நாடகம்.

நடிப்பு: 

மூன்று வேடங்கள் ஏற்று நடித்துள்ளார் சதீஷ். சக்ரபாணியாக ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வசனம் பேசி இருந்தாலும் நெகிழ்ச்சியான நடிப்பில் அசத்தி இருக்கிறார். உண்மையிலேயே கதறலும், அழுகையும் வெளிப்படுகிறது. அடுத்து மன்னராகவும் வந்து மனதை கவர்கிறார்.  

இதுபோன்ற இரு மாறுபட்ட கேரக்டர்களை அப்படியே பிரதிபலிக்க நிச்சயம் நல்ல நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். ஒப்பனைகளும், வசனங்களும் மட்டுமே காப்பாற்றி விடாது. சதீஷிற்கு சிறப்பாக நடிக்க தெரிந்திருப்பதால் இரண்டிலுமே பிரகாசித்துள்ளார். ஒரு நடிகராக இவருக்கு இந்நாடகம் பெரிய பெயரை பெற்றுத்தரும். 

அதேநேரத்தில் அல்லிராணியாக இவர் நடித்திருப்பது திருஷ்டி பரிகாரம். நாடகத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தால் இதுபோன்ற அட்வான்டேஜ்களை எடுத்துக்கொள்ள நினைப்பது பலரது வழக்கம். அதை சதீஷும் செய்திருப்பது துரதிர்ஷ்டம். ஒரு நாடகத்திற்கான இலக்கணத்துடன் இருந்த இப்படைப்பு காஞ்சனா படத்தில் திருநங்கையாக வரும் சரத்குமாரை நகல் எடுத்து சதீஷ் நடித்ததால் சினிமாவாக மாறிவிட்டது. திருநங்கைக்கான குரலிலும் இவர் பேசவில்லை. 

சக்ரபாணியின் மனைவியாக ஸ்வேதா வெங்கட் மற்றும் மகளாக தியா ரஞ்சித். 

முக்கியமான வசனங்களை பிழையின்றி பேசுவதில் பெரியவர்களை விட சிறியவர்கள் கெட்டிக்காரர்கள். சாட்சியாக, கஜினியின் வரலாறு சொல்பவராக, தந்தைக்காக ஆக்ரோஷம் கொள்பவராக  வெளுத்து வாங்கியிருக்கிறார் தியா. நல்ல கதை மற்றும் அதில் இவரின் திறமைக்கு தீனி போடும் கேரக்டர் இருந்தால் மட்டும் ஒப்புக்கொள்கிறாராம். நாடக இயக்குனர்கள் கேட்டுப்பார்க்கவும்.  ஒப்புதல் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்.  

விரக்தியை வெளிப்படுத்தி சபதமேற்கும் மனைவியாக சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்வேதா வெங்கட். 

2019 ஆம் ஆண்டு நடைபெறும் விசாரணையில் வரும் பெண் நீதிபதியாக லதா வெங்கட். உண்மையில் ஒரு நீதிபதியைத்தான் பார்க்கிறோம் என்று சொல்லும்படியான நல்ல நடிப்பு.

சவுக்கித்தாராக வரும் நாகராஜன் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருகிறார். அரசியல் நையாண்டி வசனங்களை சிரிக்கும்படி எழுதியதும் இவர்தான். 

வழக்கறிஞர்கள் கமல்நாத், ரஞ்சித் மற்றும் இரு நீதிபதிகள் பெஞ்சில் இருக்கும் நாகராஜன் (சவுக்கித்தார்), பத்மநாபன் ஆகியோரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. 

இன்னும் ஏகப்பட்ட பேர் நடித்திருக்கிறார்கள். யாரும் சோடை போகவில்லை. 

வெவ்வேறு காலகட்டங்களில் வரும் கதையில் ஒன்றிற்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்து நாடகத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள். ஒரே மேடையில் மூன்று கதைகளுக்கான அரங்கம். அதில் ஒரு காலகட்ட கதை நடந்து கொண்டிருக்கையில் மற்ற இரண்டு இடங்களிலும் மேடை வெளிச்சம் இல்லை. அந்த நேரத்திலும் பாவனைகள் மூலம் நடித்துக்கொண்டே இருப்பது நன்று. 

அரங்க அமைப்பு: 

கலை இயக்குனராக மோகன் பாபுவிற்கு இது இன்னொரு உச்சம். கீழ் தளத்தில் இரண்டு நீதிமன்ற விசாரணை இடங்கள், மேல் தளத்தில் மலையப்ப சுவாமி கோவில் என கச்சிதமாக அரங்க அமைப்பு செய்து பிரமிக்க வைத்திருக்கிறார். 'ஒரு மேடை நாடகத்திற்கு இவ்வளவு சிரமங்களை ஏற்று இப்படி ஒரு அரங்கை அமைக்க வேண்டுமா?' என்கிற கேள்வி இதர அரங்க அமைப்பாளர்களுக்கு எழும். சிலர் இயலாது என்பார்கள். மற்றவர்கள் முயற்சி செய்தாலும் முழுமைத்தன்மை இருக்காது. ஆனால் மோகன் பாபு அதை நிகழ்த்திக்காட்டி இருக்கிறார். 'சதி விதி மதி' எனும் மலையப்ப சுவாமியை காத்திருக்கும் 'தளபதி' மோகன் பாபு என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இப்படைப்பின் முதுகெலும்பாக இருக்கிறது அரங்க அமைப்பு. இதன் மூலம் சிறந்த அரங்க அமைப்பாளராக மேலும் பல படிகளை தாண்டியிருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை.

ஒரிஜினல் பின்னணி இசையை திறம்பட அமைத்துள்ளார் தக்ஷின். காட்சிகளின் சூழலுக்கு பொருத்தமாய் அமைந்துள்ளது.

ஒப்பனையாளர் சிங்கமுத்து, ஆடை வடிவமைப்பாளர் அஷ்வினி, மனோ லைட்ஸின் ஒளியமைப்பு என அனைத்தும் நிறைவு.

தொழில்நுட்பம், நடிப்பு போன்றவை ஒரு நாடகத்திற்கான தூண்கள். ஆனால் அவற்றை விட முக்கியமானவை கதை. திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம். இதற்கு பொறுப்பேற்றுள்ள சதீஷ் தன் பணியை எப்படி செய்துள்ளார்?  

கதை:

மூன்று வகையான கதை. அவற்றுக்கான தொடர்பு. ஒவ்வொரு காலத்திலும் அதில் வாழும் மாந்தர்கள் எப்படி இன்னொருவராக மாறுகிறார்கள்? அதற்கான பின்னணி என்ன? எதை நோக்கி விசாரணை நகர்கிறது? தீர்ப்பு எப்படி இருக்கும்? அதை சொல்ல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் கையாளும் முறையென்ன?

இவற்றையெல்லாம் துவக்கத்தில் யூகிக்க வைத்துவிட்டு நேரம் போகப்போக முடிச்சுகளை அவிழ்த்து தெளிவாக புரிய வைக்கும் சிறப்பான கதையம்சம். கதாசிரியராக அஸ்திவாரத்தை பலமாக போட்டிருக்கிறார் சதீஷ்.

திரைக்கதை:

கதைக்கான கட்டமைப்பு வலுவாக இருந்தாலும் அதனை கரைசேர்ப்பது சீராக நகரும் திரைக்கதைதான். அதிலும் இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் இருக்கும் கதைக்கு திரைக்கதையோட்டம் இதயத்துடிப்பு போன்றது. அதை போற்றும்படி செய்துள்ளார் சதீஷ்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையே நடக்கும் பனிப்போர், இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு இடையே நடக்கும் விசாரணை மோதல்கள், தர்மம் மற்றும் அதர்மத்தின் பக்கம் நிற்கும் நீதிபதிகள், சக்ரபாணி மற்றும் குடும்பத்தார், ஊர்த்தலைவர், இஸ்லாமிய ஆட்சியாளர்கள், அவர்களின் புதல்விகள் என அனைத்தையும் கதையுடன் சரியாக தொடர்புபடுத்தி, அதற்கான நியாயத்தை (Justification) செய்திருப்பது அட்டகாசம்!!

தமிழ் மேடை நாடக திரைக்கதை அமைப்புகளில் இந்நாடகம் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. இம்மாதிரியான சிக்கலான திரைக்கதை அம்சத்தை உருவாக்கி அதை எப்படி முன்னோக்கி நகர்த்துவது, எந்த மையப்புள்ளியில் கதையை முடிப்பது என்று பல கதாசிரியர்கள் குழம்பி ரசிகர்களையும் குழப்புவது உண்டு. ஆனால் கம்பி மேல் நடந்து தனது இலக்கை துல்லியமாக அடைந்திருக்கிறார் சதீஷ்.

வசனம்:

மதமாற்றம் எனும் சென்சிடிவான விஷயம் இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது. அதை நேர்த்தியாகவும், நம்பும்படியாகவும் கையாண்டிருக்கிறார் சதீஷ். மலையப்ப தேசத்தை பாரதமாகவும், இஸ்லாமிய எதிரிகளை பாகிஸ்தான் தேசத்தவர்களாகவும் சித்தரித்து பேசும் வசனங்கள், சக்ரபாணி மற்றும் குடும்பத்தாரின் குமுறல்கள்,  ஆரம்பம் முதல் இறுதிவரை லாஜிக் குறைபாடுகள் இன்றி விறுவிறுப்பாக நடைபெறும் நீதிமன்ற உரையாடல்கள் என நாடகம் முழுக்க சிறந்த வசனங்கள் கோலோச்சுகின்றன.

பாஜக தவிர்த்து மற்ற கட்சிகளை மட்டுமே கிண்டல் செய்து சுய மகிழ்ச்சி கொள்ளும் நாடக குழுக்களுக்கு மத்தியில் தாமரை மலராது, சவுக்கிதார் என நகைச்சுவை வசனங்களை தேவையான இடத்தில் வைத்து ரசிக்க வைத்துள்ளார். ஸ்டாலின், சசிகலா, அமமுக, வைகோ, சீமான் என அனைவரையும் பதம் பார்க்கும் மன்னரின் கத்தி காங்கிரசை மட்டும் கண்டுகொள்ளவில்லையோ? 

சதீஷ் உட்பட சிலர் ஆங்காங்கே வசனங்களை உச்சரிப்பதில் தடுமாறினர். மேலும் பயிற்சி வேண்டும்.  

இயக்கம்:

ஏகப்பட்ட நடிகர்கள், வலுவான பின்னரங்க (back stage) அணி, கதைக்கு தேவையான பிரம்மாண்ட தயாரிப்பு, தானும் முக்கிய வேடங்களில் நடிப்பது என பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து ஒரு வெற்றிகரமான இயக்குனராக சாதித்திருக்கிறார் சதீஷ்.

இன்னும் சற்று அதிகப்படியான வழக்காடல் நுட்பங்கள், இடியாப்ப சிக்கல் கொண்ட கதை, தேர்ச்சியற்ற நடிகர்கள், வலுவற்ற பின்னரங்க அணி என ஏதேனும் ஒன்று இருந்திருந்தால் விதிவசத்தால் இந்நாடகம் பின்னடைவை சந்தித்து இருக்கும். ஆனால் மதியூகம் கொண்ட கப்பல் மாலுமியால்தான் இந்த தடைகளை அகற்றி கரை சேர இயலும்.  கேப்டன் சதீஷ் அதனை நிரூபித்து காட்டியிருக்கிறார்.  

'நூற்றாண்டுகளுக்கு கடந்தும் விதி நம்மை துரத்துமா? நம்பும்படியாகவா இருக்கிறது?'...  

இந்நாடகம் பார்த்து முடிந்ததும் இந்த முக்கியக்கேள்வி எழும்.

ஆனால் இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் முடிவுகளை தீர்மானிப்பது 'விதிதான்' என்பது 2019 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட தரப்பிற்கு வாதாடும் வழக்கறிஞர், சக்ரபாணியின் மனைவி - மகள் உள்ளிட்ட சிலரின் நம்பிக்கை மட்டுமே. 

நீதிமன்ற சாட்சியம் மற்றும் ஆதாரம், வழக்காடும் தன்மை உள்ளிட்டவற்றை வைத்தே க்ளைமாக்ஸ் தீர்ப்பு வழங்கப்படுகிறது. 1919 பிரிட்டிஷ் கால தீர்ப்பில் சதியும், 2019 ஆம் ஆண்டு தீர்ப்பில் மதியும் வெல்கின்றன. அதை விதியென்று நம்புகிறோம். ஒரு அற்புதமான இயக்குனராக சதீஷை கொண்டாட வேண்டிய மையப்புள்ளி இதுதான். சிறப்பு..சிறப்பு!! 

ஒவ்வொரு காட்சியும், வசனமும் இக்கதையை சங்கிலிபோல இணைத்து இன்னொரு கட்டத்திற்கு நகர்த்துகிறது. ஆகவே கவனச்சிதறல் இன்றி அனைத்தையும் கண்டால் மட்டுமே ரசிகர்களுக்கு புரியும். இடையில் சில நிமிடங்களை கோட்டை விட்டு விட்டால் அதற்கு இந்நாடகக்குழு பொறுப்பாக இயலாது. 

மேடை நாடகங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கு மாறுபட்ட முயற்சிகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்க வேண்டும். ஆனால் அவை வெறும் முயற்சிகளாக இருந்தால் போதாது. ஒரு முழுமையான படைப்பாகவும் உருப்பெற்றால் மட்டுமே நாடகக்கலைக்கும், ரசிகர்களுக்கும்  பயனளிக்கும். 

அவ்வகையில் இது தமிழ் மேடை நாடக வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த நாடகமாக உயர்ந்து நிற்கிறது. லீகல்லி யுவர்ஸ் குழுவினர் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பிரசித்தி பெற்ற திருவாரூர் தேரை மக்களின் பார்வைக்கு இழுத்து வந்து மீண்டும் கவனமாக கோவிலருகே சேர்த்துள்ளீர்கள். மீண்டும் பல்வேறு இடங்களுக்கு வடம் பிடித்து இழுத்துச்செல்வீர்கள் என்பது உறுதி.  

சதி விதி மதி - சதீஷின் சிங்க கர்ஜனை. 

--------------------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.  


   

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...