தமிழில் வந்த அரசியல் நையாண்டி படங்களில் 1971 ஆம் ஆண்டு சோ. ராமசாமியின் எழுத்து, இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'முகமது பின் துக்ளக்' முக்கியமானது. தனித்துவமானது.
சோவின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' எனும் நாடகத்தை மீண்டும் மேடைக்கு கொண்டு வந்தார் டி.வி.வரதராஜன். தற்போது துக்ளக்கையும் அழைத்து வந்திருக்கிறார். 21/03/2019 அன்று நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகத்திற்கு கதை, வசனம்: 'துக்ளக்' சத்யா. நாடகமாக்கம், இயக்கம்: டி.வி.வரதராஜன். தயாரிப்பு: உஷா வரதராஜன், யுனைடட் விஷுவல்ஸ்.
2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் சமகால அரசியலை கையில் எடுத்து இருக்கிறார்கள். விண்ணுலகில் இருக்கும் 'சோ'வை சந்திக்கிறார் துக்ளக். நாற்பது நல்ல வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்பதால் பூவுலகிற்கு வருகிறார் துக்ளக். இங்கே அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னவென்பதை சொல்கிறது கதை.
இந்நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று பொறுப்பை துறந்தாலும்...யாரை, எதை சொல்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.
சோ ஏற்று நடித்த துக்ளக் வேடத்தில் வரதராஜன். கடினமான சவால் என்றாலும் அதனை தனது பாணியில் நன்றாக செய்திருக்கிறார். சமயத்தில் புத்திசாலியாகவும், மற்ற நேரங்களில் ஏடாகூடமாக முடிவு எடுப்பவராகவும் சித்தரிக்கப்பட்டவர் துக்ளக். துள்ளல், நையாண்டி என வெளுத்து வாங்கியிருப்பார் சோ. அது வரதராஜனிடம் இன்னும் இருந்திருக்கலாம்.
ஒரு கால கட்டத்திற்கு பிறகு பச்சை உடைக்கு மாறினார் சோ. பல்வேறு (அரசியல்) மேடைகளில் இதுதான் அவரது சீருடை. இவரது நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் P.T. ரமேஷ். பல நாடகங்களில் நல்ல குணச்சித்திர நடிகராக மிளிர்ந்தவர். இது முற்றிலும் மாறுபட்ட களம். ஆனால் மேடையில் நாம் 'சோ'வைத்தான் பார்க்கிறோம் என்று நினைக்கும் அளவிற்கு தத்ரூபமான நடிப்பு. 'சோ'வை 100% உள்வாங்கி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பிரமாதம், அமர்க்களம்... என எத்தனை வார்த்தைகளால் ரமேஷை புகழ்ந்தாலும் தகும்.
கமல்ஹாசனாக கிரிஷ் வெங்கட். தோற்றத்தில் மட்டுமல்ல. பேச்சிலும் கமலை பிரதிபலித்து அனைவரையும் நகைச்சுவையில் ஆழ்த்தி விடுகிறார். சமூக, புராண, வரலாற்று நாடகங்களில் முத்திரை பதித்து வரும் இளம் நடிகர்களில் கிரிஷ் வெங்கட் குறிப்பிடத்தக்கவர். ஓவர் ஆக்டிங் செய்யாமல் யதார்த்த நடிப்பால் பெயரை வாங்கி விடுவார். இங்கேயும் அப்படித்தான். தனக்கு கிடைத்த வாய்ப்பு சிறப்பாக பயன்படுத்தி சிக்ஸர் அடித்திருக்கிறார். கிரிஷ் எனும் திறமையான நடிகரை மேடை நாடக குழுக்கள் மேலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழுடன் தெலுங்கு கலந்து பேசும் ஜெயலலிதா - சசிகலா - வைகோ ஆகிய மூவரின் கலவையாக வழக்கம்போல நன்றாய் நடித்துள்ளார் லக்ஷ்மி. எடப்பாடியாக ஸ்வயம் ப்ரகாஷ் கனப்பொருத்தம்.
'பதூதா' சங்கர் குமார், 'டிவி நிருபர்' ராமானுஜம் ஆகிய இருவரும் அவ்வப்போது நகைச்சுவைக்கு துணை நிற்கிறார்கள்.
பத்மா ஸ்டேஜ் கண்ணனின் அரங்க அமைப்பு மற்றும் சங்கர சேகரனின் ஒப்பனையில் எந்தக்குறையும் இல்லை. ஆடை வடிவமைப்பும் குறிப்பிடும்படி நன்றாய் இருக்கிறது. பின்னணி ஒலியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
துக்ளக் சத்யா:
ஒரு சில கதாபாத்திரங்களை எளிதில் கண்டுபிடித்து விடும்படியாகவும், மற்றவற்றை சற்று யோசித்து உணரும்படியுமாக கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார். உதாரணத்திற்கு மேற்குறிப்பிட்ட லக்ஷ்மியின் அரசியல்வாதி வேடம்.
'கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே' என்று கூறிவிட்டு அதில் நடிக்கும் சோ, துக்ளக், பதூதா, நாரதர் ஆகியோரின் பெயர்களை வெளிப்படையாக சொல்லி இருப்பது நகைமுரண்.
கூட்டணி சேர பணம் வாங்குதல் - பெறுதல், கூவத்தூர் கூத்து, மெரினா சமாதி தியானம் என பல்வேறு சமகால அரசியல் நிலவரங்களை அரசியல் நையாண்டி செய்து சோவின் பாணியில் ரசிக்க வைக்கிறது சத்யாவின் எழுத்து.
'சபா நாடகம்' என்றாலே பாஜக மற்றும் மோடியை கிண்டல் செய்யாமல் இருப்பதுதான் 2014 முதல் பின்பற்றப்பட்டு வரும் மரபு. இதுவும் அப்படித்தான் இருக்கும். அதிலும் துக்ளக் பத்திரிக்கையை சேர்ந்தவர் வசனம் எழுதினால் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று முன் முடிவோடுதான் நாடகம் பார்க்க அமர்கிறோம்.
கபர்தார் சிங் (அமித் ஷா) கேரக்டர், 30 தொகுதிகளில் நின்றால் மூன்றில் கூட ஜெயிக்க மாட்டோம், கூட்டணிக்கு அதிகப்பணம் தரும் காவிக்கட்சியை மாட்டி விடும் துக்ளக் என சத்யாவின் எழுத்துகள் பாஜகவையும் பகடி செய்திருப்பது அதிசயம். அதே சமயம் இது போதுமானதா என்றால்... இல்லையென்றே சொல்ல வேண்டும்.
துக்ளக் சத்யாவின் மனதில் இருக்கும் காவிச்சார்பு இங்கே அதிகம் கோலோச்சி இருப்பதால் கட்சி சார்பற்ற ரசிகர்களுக்கான நாடகமாகவும், துணிச்சலான அரசியல் நாடகமாகவும் இல்லாமல் போயிருப்பது இதன் பெரிய குறை. அதை சற்று விரிவாக பார்க்கலாம்.
துணிச்சலின்மை:
சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த பிரிட்டிஷ் ராஜ்யம், அதற்கு பின்பான இந்திய அரசு, தமிழக அரசு, கடவுள் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகள் என அனைத்திற்கும் எதிராக நாடகங்களை போட்டு துணிச்சல் மிக்க கலைஞராக பிரகாசித்தவர் எம்.ஆர்.ராதா.
அதுபோல திமுக ஆட்சி நடந்த 1971 ஆம் ஆண்டில் அவர்களை நையாண்டி செய்து 'முகம்மது பின் துக்ளக்'கை திரைக்கு கொண்டு வந்து பெரும் வரவேற்பை பெற்றவர் சோ. அதுபோக பல்வேறு அரசியல் நாடகங்களையும் அஞ்சாமல் மேடையேற்றிய துணிச்சல்காரர்.
ஆனால் துக்ளக் சத்யா உள்ளிட்ட பல்வேறு சபா நாடகத்தை சேர்ந்த கதை, வசனகர்த்தாக்களின் பேனாக்களுக்கு ஆளும் மத்திய மற்றும் மாநில அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்த சமரசமும் இன்றி எழுதும் துணிச்சல் இல்லை என்பதே அப்பட்டமான நிதர்சனம். அதற்கு துக்ளக் தர்பார் ஒரு உதாரணம். எப்படி என்று கேட்கிறீர்களா? இப்படித்தான்...
1. கமலஹாசனை ஒரு குழப்பவாதி என்று நான்கைந்து காட்சிகளில் அழுத்தமாக பதிய வைப்பதில் காட்டும் ஆர்வத்தை அரசியலுக்கே வராத ரஜினி மீது காட்டாமல் ஒரே ஒரு வசனத்துடன் சத்யாவின் எழுத்து எளிதில் கடப்பது. அதற்கு ஒரே காரணம்....ரஜினி ஒரு பாஜக ஆதரவாளர், ஆன்மீக அரசியல்வாதி என்பது மட்டுமே.
2. எடப்பாடி, சசிகலா, அமித் ஷா போன்றோரை கூடத்தான் நையாண்டி செய்துள்ளோம். அவர்களும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்தானே என்று கூறலாம். இறந்துபோன கருணாநிதி, ஜெயலலிதா, பொம்மலாட்ட கதாபாத்திரம் போல இருக்கும் எடப்பாடி, சிறையில் இருக்கும் சசிகலா, இரண்டாம் இடத்தில் இருக்கும் அமித் ஷா... இவர்களை நையாண்டி செய்வதா துணிச்சல்?
கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழ்நாட்டை ஆண்டபோது அவர்களை நேரடியாக குறிப்பிட்டு துக்ளக் சத்யா உள்ளிட்ட சபா நாடக எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் எத்தனை நாடகங்களை போட்டிருக்கிறார்கள்? மோடியின் ஆட்சியில் ஆயிரம் நன்மைகள் இருக்கலாம். குறைந்தபட்சம் பத்து குறைகள் கூடவா தென்படவில்லை? அதை தைரியமாக பகடி செய்வதற்கு பெயர்தானே துணிச்சல்? பணமதிப்பு நீக்கம் போன்ற ஒரு சில மயிலிறகு தடவப்பட்ட வசனங்கள் மட்டுமே போதுமானதா?
இப்போது புரிகிறதா... எம்.ஆர்.ராதா மற்றும் 'சோ'விற்கு பிறகு ஆளும் கட்சி மற்றும் அதன் தலைவரின் தவறான கொள்கை, திட்டங்கள் மற்றும் ஆட்சி செய்யும் முறை பற்றி ஒருவராலும் முழுநீள அரசியல் நாடகம் போட இயலாதது ஏன் என்று?
உங்களுக்கு பாஜக மற்றும் மோடி மீது பற்று இருக்கலாம் திரு. சத்யா அவர்களே. ஆனால் அதை கட்சி சார்பற்று நாடகம் பார்க்கும் ரசிகர்கள் மீது திணிப்பது ரசிக்கும்படியில்லை. அரசியல் கதையை தொடக்கூடாது. தொட்டால் அனைவரையும் விளாச வேண்டும். அவர்தான் நேர்மையான எழுத்தாளர். ஒருவேளை இதை நீங்கள் 'பாஜகவிற்கான பிரச்சார நாடகம்' என்று நாளிதழ்கள் மற்றும் மேடையில் அறிவித்து இருந்தால் இந்த விமர்சனத்திற்கே வேலையில்லை.
வரதராஜன்:
உங்களது பல்வேறு சமூக நாடகங்கள்... கருத்து மற்றும் நகைச்சுவை கலந்து ரசிகர்களுக்கு குறைந்தபட்ச உத்திரவாதத்தை அளித்து வருபவை. 'ஸ்ரீ தியாகராஜர்' நாடகம் உங்களுக்கு ஒரு மைல் கல்.
சோவின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' நாடகத்தின் கதை, வசனத்தில் ஒரு மாற்றமும் செய்யாமல் மீண்டும் அரங்கேற்றியது உங்கள் நேர்மைக்கான சான்று.
ஆனால் துக்ளக் தர்பார் மூலம் நீங்களும் காவிச்சார்பு நிலைப்பாட்டை விரும்பி ஏற்றுக்கொண்டு இருப்பது வருத்தம் கலந்த ஆச்சர்யம். தனிமனிதராக உங்களுக்கான அரசியல் நிலைப்பாடு எப்படி இருந்தாலும் அதை கேள்வி எழுப்ப அவசியமில்லை. ஆனால் ஒரு நல்ல நாடக கலைஞரான நீங்கள் இப்படி மாறியிருப்பதுதான் ஆச்சர்யம்.
நீங்கள் அனைத்து ரசிகர்களுக்குமான நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அரசியல் நையாண்டி நாடகங்களை செய்வது உங்கள் கருத்து சுதந்திரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது ஒரு கட்சி சார்பாக இருப்பது சரியா என்பதை மட்டும் சுய ஆய்வு செய்து பாருங்கள்.
பொதுவான ரசிகர்களுக்கான கலைஞராக நீங்கள் மீண்டு(ம்) எப்போது வருவீர்கள்?
மேற்சொன்ன குறைகளை தாண்டி துக்ளக் தர்பார் ஒருமுறை கண்டு ரசிக்கும்படியான அரசியல் நாடகமாக இருக்கிறது. நாள்தோறும் இந்நாட்டில் பல அரசியல் கூத்துகள் நடக்கும்போது.. அதுபற்றி பேச அரசியல் நாடகங்கள் இல்லாத வறட்சியை துக்ளக் தர்பார் போக்கியுள்ளது என்பது உண்மை.
ஆனால் எந்த படைப்பாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் மிக முக்கியம். அதை பாஜக மற்றும் மோடிக்காக வாக்களிக்க சொல்லும் பிரச்சார மேடையாக்கி இருப்பது துக்ளக் தர்பாரின் பெரிய பின்னடைவு.
அடுத்த முறை உண்மையான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நாடகம் போடுவீர்களா என்பதை காலம்தான் முடிவு செய்யும். காத்திருக்கிறோம்.
துக்ளக் தர்பார் - பாஜக மற்றும் மோடி ரசிகர்களுக்கு மட்டும்.
-----------------------------------
விமர்சனம்:
சிவகுமார்.
0 comments:
Post a Comment