CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, March 25, 2019

ஹோம் மேக்கர் - நாடக விமர்சனம்  
1971 ஆம் ஆண்டு வெளியான Fiddler on the Roof எனும் ஹாலிவுட் மியூசிகல் நகைச்சுவை படத்தை தழுவி/இன்ஸ்பயர் ஆகி வந்திருக்கும் நாடகம் ஹோம் மேக்கர். எழுத்து: ஆனந்த் ராகவ். இயக்கம்: T.D. சுந்தரராஜன்.

ஓயாது வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசியை வீட்டில் இருப்போரே புரிந்து கொள்ளாமல் போக.. அவர் எப்படி தன் வாழ்வை மாற்றியமைக்கிறார் என்பதை சொல்லும் கதை.

கதையின் நாயகியாக சுசித்ரா ரவி, கணவராக ஸ்ரீ அருண்குமார், மாமனாராக விஸ்வநாதன் ரமேஷ், மகனாக கார்த்திக் பட், மகளாக வைஷ்ணவி, தனியார் நிறுவன மேலாளராக கணபதி சங்கர் என அனைவரின் நடிப்பும் நிறைவு.

குடும்பத்தாருக்கு பணிவிடை செய்து ஏளனத்தை சன்மானமாக பெறும் பெண்மணியாக அளவான ரியாக்சன்கள் தந்து நல்ல நடிப்பை தந்திருக்கிறார் சுசித்ரா. அதிகம் உணர்ச்சி வசப்படாமல் ஒரு குடும்பப்பெண் படும் இன்னலை ரசிகர்களுக்கு யதார்த்தமாய் கடத்தி இருப்பது சிறப்பு.

மாமனாராக விஸ்வநாதன் ரமேஷ். இந்நாடகத்தில் நடித்திருந்தார் என்று சொல்வது அபத்தம். வாழ்ந்திருக்கிறார். உயரத்திற்கேற்ற உன்னத நடிப்பு. வெண் பொங்கலின் பெருமையை பேசும்போது நமக்குள் பசியை கிளறி விடுகிறார். சமயத்தில் கோபமாகவும், அன்பாகவும்... தமிழ் நாடகத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களில் ஒருவர். மிளகளவு கூட சந்தேகமில்லை.

கண்டிப்பு, பரிதவிப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகளை அசால்ட்டாக வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார் ஸ்ரீ அருண்குமார். 

அரங்க அமைப்பு, ஒளி, ஒலியென அனைத்தும் தேவையான தேக்கரண்டி அளவு.. நன்று.

சமையல், துணி துவைத்தல், முதலுதவி செய்தல் என இந்தியப்பெண்கள் வீட்டிற்கு உழைத்து தேய்வதை வார்த்தையில் சொல்ல இயலாது. ஆனால் அவர்களை நாம் எந்திரமாக மட்டுமே பார்த்து விட்டு வருடங்களை, யுகங்களை தாண்டி வருகிறோம். அவர்களின் தேவைகளை, ஆசைகளை முழுமையாக கேட்டறியும் குடும்பத்தார் மிகச்சொற்பம். இதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. வார்த்தைகளால் சுடுவது பெருங்கொடுமை.

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல பலரும் அறிந்த விஷயத்தை தேய்வழக்காக (க்ளிஷே) மேடையில் ஏற்றாமல் நகைச்சுவை கலந்து தந்திருப்பது நல்ல மாற்றம். வாழ்த்துகள் ஆனந்த் ராகவ் மற்றும் சுந்தரராஜன்.

சிங்கம் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மேடை நாடகங்களின் நீளம் தற்போது 90 நிமிடங்களுக்குள் சுருங்க ஆரம்பித்துள்ளது. இந்த நாடகம் 70 நிமிடங்கள்தான். சற்று ஆசுவாசமாக கதை சொல்லி, காட்சிகளை அமைத்து இருந்தால் இன்னும் ஆழமாக மனதில் நின்றிருக்கும்.

திருமணத்திற்கு பின்பு ஜோதிகா நடித்த மகளிர் சுய முன்னேற்ற படைப்புகளில் வருவது போல இக்கதை நாயகியின் முகநூல் பதிவுகள் ஒரே நாளில் பெரிய ஹிட் ஆவது, தனியார் நிறுவனம் துவங்குவது, 100 மில்லியன் முதலீடு, 500 மில்லியன் மதிப்பு என.. மேகி நூடுல்ஸ் போல இவ்வளவு துரிதமாகவா?

மேடை நாடகத்திற்கு 'மிகவும்' தேவைப்பட்டால் மட்டுமே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்கி விடலாம். அதுதான் இந்த கலைக்கு அழகு.   

ஆனால் இங்கே திடீரென ஒரு வெண்திரையில் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பிரபலங்கள் பேசும் வீடியோக்களை ஒளிபரப்பி கவனச்சிதறலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 

இதுபோக மேலும் சில அரசியல் வசனங்கள். கதைக்கு அவசியமெனில் அரசியல் இருக்கலாம். ஆனால் தனக்குத்தெரிந்த அரசியலை பேச கதையை பயன்படுத்தினால்? வசனகர்த்தா அதைத்தான் செய்திருக்கிறார். 

இதுபோன்ற சில குறைகளைத்தாண்டி நிச்சயம் பார்க்க வேண்டிய படைப்பாகவே இருக்கிறது இது. மாறுபட்ட முயற்சிகளை செய்வதில் ஸ்ரத்தா தயாரிப்பு குழு மீண்டும் முத்திரை பதித்திருக்கிறது என்றே சொல்லலாம். அவ்வகையில் இயக்குனர் சுந்தரராஜன், கதை - வசனகர்த்தா ஆனந்த் ராகவ் உள்ளிட்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்.

ஹோம் மேக்கர் - சற்று ஆறியிருந்தாலும் சுவையான வெண் பொங்கல்!! 

----------------------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.   

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...