CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, March 18, 2019

திரு அரங்கண் - சிறப்பு பார்வை
2015-ஆம் ஆண்டு 'அன்டூ(Undo)' நாடகத்தின் மூலம் பிரவேசம் செய்தது தியேட்டர் மெரீனா. 

நான்கு குறுநாடகங்கள், அபயரங்க திலகா, திரு அரங்கன், வேதாளம், நேற்று இன்று - 2 நாளை என அடுத்தடுத்து நாடகங்களை மேடையேற்றி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனிக்கத்தக்க நாடகக்குழுவாக வளர்ச்சி அடைந்துள்ளது. 

2018 ஆம் ஆண்டு துவக்கத்தில் அரங்கேறிய 'திரு அரங்கண்' இவ்வருடம் மார்ச் 16 அன்று வாணி மஹாலில் மீண்டும் மேடையேறியது. எழுத்து: ரகுநாதன். இயக்கம்: கிரிதரன். தயாரிப்பு: கீர்த்தி மாரியப்பன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கம்பெனிக்காரர்கள் என்று சொல்லப்பட்ட அயல்நாட்டினரின் ஆதிக்கத்தில் இருந்த திருவரங்கம், கேத்ரீன் கோலோச்சிய ரஷ்யா மற்றும் 2019-ஆம் ஆண்டில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் என மூன்று தளங்களில் பயணிக்கிறது இந்நாடகம். 


திருவரங்கம் பெரிய கோவிலின் அருகே வாழ்ந்து வருபவர் கோதண்டம். கோவில் வேலை மற்றும் ஊராருக்கு சிறு பணிகளை செய்து அதன் மூலம் சொற்ப வருமானம் ஈட்டும் குடும்பஸ்தர்.  

கோதண்டமாக கிரிதரன். கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது, தனக்காக கதாபாத்திரம் கச்சிதமாக அமைந்து விடுவது என இருவகைப்படும். இதில் இவருக்கு அமைந்திருப்பது எதுவென்று சொல்வதே கடினம். அந்தளவு தத்ரூபம்.

இவர் மைய கதாபாத்திரம் ஏற்று நடித்த 'வினோதய சித்தம்' போன்ற நாடகங்கள் சிறப்பாய் அமைந்திருக்கும். ஆனால் 'திரு அரங்கண்' ஒருபடி மேலாக..கிரிதரனுக்கு மணிமகுடமாய் அமைந்து விட்டது. வசனங்களை அமைதியாக பேசி, வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி ஈர்க்கிறார். சிறப்பு!!

கோதண்டத்தின் மனைவி அலராக அபர்ணா. கணவன் ஈட்டும் மிகக்குறைந்த காசுகளை வைத்துக்கொண்டு அனுசரித்து வாழ்தல், நியாயமான விஷயத்திற்கு கோபத்தை வெளிப்படுத்துதல் என அரங்கை அதிர வைக்கும் நடிப்பு.

ஃப்ரெஞ்ச் சிப்பாய் - கிஷோர், ஆர்லோவ் - அஸ்வின், கேதரீன் - தீப்தி, தூதரக அதிகாரிகள் ராம் - சதீஷ், ஸ்ரீனிவாசன் - ஜம்மி, காரியதரிசி மோனிகா -  தீப்தா, ரஷ்ய அதிபர் -  ஸ்ரீனிவாசன், பாட்டாச்சாரி - பாலசுப்ரமணியம், சீடர் - ப்ரசன்னா, வேதா பாட்டி - பத்மா கணபதி, கோதை - அக்னிதா, கோவிந்தன் - ஹரிநாத் என ஒவ்வொருவரும் தங்களுக்கான வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள். இவ்வளவு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும்படியாக கதையை எழுதி இருக்கும் ரகுநாதன் மற்றும் இயக்குனர் கிரிதரனின் பணி மெச்சத்தக்கது.

இவர்கள் போல மேலும் பலரும் நடித்துள்ளனர். இத்தனை பேருக்கும் அருமையாக ஒப்பனை செய்திருக்கிறார் பெரம்பூர் குமார். மன்னராட்சியாக இருந்திருந்தால் ஆயிரம் பொற்காசுகளை பரிசளித்து இருக்கலாம். தமிழ் நாடகங்களில் ஒப்பனை போடுவதில் மன்னர் என்றால் பெரம்பூர் குமார்தான். இது மிகையல்ல. தவிர்க்க முடியாத உண்மை. அதற்கு இந்நாடகம் இன்னொரு முக்கிய சான்று.

வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதைகள் ஒருபக்கம் என்றால்.. ஒரு மேடையை மூன்றாக பிரித்து அரங்க அமைப்பு செய்து அசத்தியிருக்கிறார் மோகன்பாபு. இருபக்கமும் வீடுகள். நடுவில் கிணறு, அதனருகே இருக்கும் மரத்தடி, அசலான பூக்கள், ரஷ்ய மாளிகை, தூதரகம் என கதையின் நம்பகத்தன்மைக்கு பக்கபலமாய் இருக்கிறது இவரது பணி. 'கலை இயக்கம்' என்பதற்கான அசல் அர்த்தத்தை நன்கு உணர்ந்தவரால் மட்டுமே இதுபோன்று தனித்தன்மையுடன் அரங்கம் அமைக்க இயலும்.

இயக்குனர் மற்றும் நடிகராக மட்டுமின்றி இசையும் அமைத்துள்ளார் கிரிதரன். சிப்பாய்கள் குதிரையில் வரும் சப்தத்தை சரவுண்ட் முறையில் கேட்கும் வகையில் அமைத்திருப்பது ஒரு சோறு பதம். வசனங்களுக்கு இடையூறு செய்யாத தரமான இசை.

ஆடை மற்றும் அரங்கப்பொருட்கள்  - பத்மா கணபதி, ஒளியமைப்பு - மனோ (கோவிந்த்) என நன்கு செயல்பட்டிருக்கும் பலருக்கும் வாழ்த்துகள்.   

ஏசப்பா, பேசாத. பதிலை மட்டும் சொல்லு, இலங்கை இனவாதம், ஆர்லோவ் வரலாறு, தூதரக பனிப்போர், திருவரங்க மக்களின் பேச்சு வழக்கு என கதை மற்றும் வசனம் மூலம் இப்படி ஒரு கடினமான கதையம்சம் கொண்ட நாடகத்தை தனது எழுத்தால் இலகுவாக்கி இலக்கை அடைந்திருக்கும் ரகுநாதனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பல்வேறு கதாபாத்திரங்கள், வெவ்வேறு காலகட்டங்கள், கதையின் இறுதிப்பகுதி எதை நோக்கி நகரும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கான எதிர்பார்ப்பு, நடிப்பு - இசையுடன் சேர்த்து இயக்கம் என திருவரங்கத்தின் பெரிய தேரை இழுப்பதற்கு அதீத ஆராய்ச்சி, திறமை மற்றும் அர்ப்பணிப்பு வேண்டும். அதை நிறைவாக செய்திருக்கிறார் கிரிதரன். 

ஆர்லோவ் என்று கேத்ரீன் அடிக்கடி அழைப்பது, கோவிந்தனின் வீட்டார் கோதண்டத்திற்கு காசு தராமல் அனுப்பும்போது ஒரே மாதிரியான வார்த்தை பிரயோகம் செய்வது செயற்கை. ரசிகர்களுக்கு புரிய வேண்டுமென்பதால் வெளிநாட்டு கதாபாத்திரங்கள் தமிழில் பேசுவது போல வசனம் எழுதியுள்ளோம் என்று மைக்கில் அறிவிக்கிறார்கள். அப்படியெனில் இந்திய  தூதரக அதிகாரிகள் மட்டும் எதற்காக இவ்வளவு ஆங்கிலம் பேச வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறது. 

இதுபோன்ற சிறு திருத்தங்கள் தவிர்த்து எந்த ஒரு லாஜிக் ஓட்டையும் இல்லாமல் நாடகத்தை உருவாக்கி இருப்பது ஆகச்சிறந்த ப்ளஸ். கூட்டு முயற்சி என்பது பெரும்பாலும் சொல் வடிவில் மட்டுமே இருக்கும். மேடையென்று வந்துவிட்டால் குழுவில் இருக்கும் பிரபல நடிகர் கோலோச்சுவார் அல்லது நடிக்கத்தெரியாத இயக்குனர் ஒருவர் மைய கேரக்டரை ஏற்று ஆட்டத்தை கலைத்து விடுவார்.

இப்படியான பீதியை கிளப்பாமல் உண்மையிலேயே பாராட்டத்தக்க கூட்டு முயற்சியால் வாகை சூடியுள்ளது தியேட்டர் மெரினா. 

தமிழரின் நெற்களஞ்சியமான தஞ்சையில் 'யானை வளர்த்து சோறு போடுவது போல' என்று சொல்வது போல.. இத்தனை நடிகர்கள் மற்றும் நாட்டியக்கலைஞர்களை திரட்டி சுவாரஸ்யமான நாடகத்தை தயாரித்துள்ள கீர்த்தி மாரியப்பன், கதாசிரியர் ரகுநாதன் மற்றும் இயக்குனர் கிரிதரனின் தியேட்டர் மெரினா குழுவிடம் ஆர்லோவ் வைரத்தை ஒப்படைப்பதே சரி.

திரு அரங்கண் - செல்வி, செல்வன், திரு மற்றும் திருமதிகள் என அனைவரும் அரங்கில் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு .

விமர்சனம்:
சிவகுமார்.
-----------------------------------------------------

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...