கலா மந்திரின் 'மகளிர் காவல் நிலையம்' 19/02/2019 அன்று மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் மீண்டும் மேடையேறியது. எண்ணம், எழுத்து, இயக்கம்: பம்பாய் சாணக்யா.
ஆளவந்தான் எனும் டான் ஏகப்பட்ட குற்றங்களை செய்கிறான். ஆனால் அவனை கைது செய்ய தயங்குகிறது காவல்துறை. அப்போது நேர்மையான அதிகாரியாக இருக்கும் சூர்ய பிரகாஷ் அவனை பிடித்து உள்ளே தள்ள சூளுரைக்கிறார். அதனை ஆளவந்தான் எப்படி எதிர்கொள்கிறான்? அவரது சபதம் நிறைவேறியதா என்பதே கதைக்கரு.
சூர்ய பிரகாஷ் மகளாக நாராயணி. சில வருடங்களுக்கு முன்பு போலீஸ் வேடமொன்றில் சிறப்பாக நடித்திருந்தார். இம்முறை காவல் நிலையத்தை மையமாக கொண்ட கதையில் நீதி கேட்டு போராடும் கதாபாத்திரம். யதார்த்தமான நடிப்பு.
மேடை நாடக வரலாற்றில் 'வாழ்நாள் மிகை நடிப்பாளர்கள் (Lifetime Achievement Award for Over acting)' எனும் விருதிற்கு மிகப்பொருத்தமனாவர்கள் கதையின் நாயகி சூர்யகாந்தியாக வரும் கவிதா சுரேஷும், சூர்ய பிரகாஷாக வரும் பாம்பே குமாரும். வழக்கம்போல இதிலும் இவர்களின் மிகை நடிப்பு ததும்பி வழிகிறது. கூச்சல், தற்பெருமை பஞ்ச் என தூள் பறக்கிறது. உதாரணம்: 'நான் சூர்யகாந்தி. நெருப்பு'.
காவல் நிலையத்தில் புகுந்து தன் மீது பெட்ரோல் ஊத்தும் ஆளவந்தானின் அடியாளை தடுக்க தன் இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை கூட தூக்காமல் மிரண்டு விழுகிறார் மாவீரர் சூர்ய பிரகாஷ். சமயோசிதமோ, வீரமோ இல்லை. ஆனால் அடிக்கடி ஸ்டேஷன் டேபிளை மட்டும் ஓங்கி அடித்து வசனம் பேசுகிறார். உண்மையில் வித்யாசமான போலீஸ்தான். நல்லவேளை சில காட்சிகளோடு இவரின் தரிசனம் முடிந்து விடுவதால் தப்பி விடுகிறோம்.
ஆனால் இவருக்கும் சேர்த்து அனல் பறக்க வைக்கிறார் சூர்யகாந்தி. 'புதுசா வரப்போற மேடம் யாரு தெரியுமா?' என்று சக பெண் காவலர்கள் தரும் பில்ட் அப்பில் ஆரம்பித்து, பிறகு தன்னையே பில்ட் அப் செய்து அசர வைக்கிறார் சூர்ய காந்தி...அல்ல... சூர்ய காந்'தீ'.
நேர்மையான அதிகாரிகள் என்றாலே நம் காது கிழிய கத்த வேண்டுமா?
வில்லன் என்றாலே அவனுக்கு பெயர் ஆளவந்தான், ஆண்டவர், கோட்டை பெருமாள் என்றுதான் வைக்க வேண்டுமென எந்த மகான் எழுதி வைத்தார் என்று தெரியவில்லை. இங்கே வரும் டானின் பெயர் ஆளவந்தான்!!
காவல் நிலையத்தினுள் சூர்ய பிரகாஷ் ஆளவந்தானைப்பற்றி பேசும்போதெல்லாம் சரியாக உள்ளே நுழைகிறார் ஆளவந்தான். அதுபோல சூர்ய காந்தியைப்பற்றி ஆளவந்தான் மற்றும் அவனது மகன் இளவரசன் தங்கள் வீட்டில் பேசும்போது சரியாக உள்ளே வருகிறார் சூர்ய காந்தி. அடேங்கப்பா... என்ன ஒரு செயற்கைத்தனமான டைமிங்.
மேற்சொன்ன அனைத்தையும் பார்க்கிறபோது நாம் நாடகம் பார்க்கிறோம் என்பதை மறந்து தெலுங்கு மசாலாப்படம் காண்கிற உணர்வை நாடி நரம்பில் ஏற்றுகிறது.
இதுபோக அனாதை இல்லம், மூளை ரத்த அழுத்தம், மறுஜென்மம் என புளித்துப்போன விஷயங்கள் வேறு ஆக்ரமித்து அறுக்கின்றன.
ஆளவந்தானின் வீட்டினுள் சூர்ய காந்தி நுழைந்து எரிமலை போல வசனங்களை கக்கும் நேரத்தில் ஒரு அல்லக்கை கூட உள்ளே வந்து தடுக்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு வேலைக்காரனாவது இருந்திருக்கலாம். பாவம்... வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் டான் போல!!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு அதிரடியான பெண் போலீஸ் கதையை காணச்சென்றால் முழுநீள நகைச்சுவை மட்டுமே மிஞ்சுகிறது.
மகளிர் காவல் நிலையம் பற்றி ஒரு பிரத்யேக நாடகம் போட வேண்டும் என நினைத்த பம்பாய் சாணக்யாவின் எண்ணம் பாராட்டத்தக்கது. ஆனால் அதனை உருப்படியாக எழுத்திலும், இயக்கத்திலும் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மகளிர் காவல் நிலையம் - லாக்கப் சித்ரவதை.
---------------------------------------
விமர்சனம்: சிவகுமார்.
0 comments:
Post a Comment