CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, February 21, 2019

ஒரு சிலை. ஒரு கொலை - நாடக விமர்சனம்ஒரு சிலை. ஒரு கொலை. 1970-களில் ஆங்கிலத்திலும், தமிழில் 1984-ஆம் ஆண்டும் பம்பாயில் அரங்கேறியது. இது கலாமந்திரின் 39-வது படைப்பு. 20/02/2019 அன்று மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் மீண்டும் மேடையேறியது. எண்ணம், எழுத்து, இயக்கம்: பம்பாய் சாணக்யா.      

களம்: கொடூர கொலைகாரர்கள் சிலரின் சிலைகளை கொண்ட மியூசியம். சம்பவம்: இரவில் தங்கிய சிலர் இறந்து போகிறார்கள். துணிச்சலான ஒரு புலனாய்வு நிருபர் இங்கு ஓரிரவு தங்கி என்ன நடக்கிறது என்பதைக்காண முடிவு செய்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

புலனாய்வு நிருபர் பூர்விகாவாக கவிதா சுரேஷ். மனநல மருத்துவர் சிலையாக பாம்பே குமார்.  தங்கள் கேரக்டர்களை நன்கு உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளனர். அதிசயமாக இருவரும் தேவையற்ற நடிப்பை இம்முறை காட்டவில்லை என்பது உண்மையில் இன்ப அதிர்ச்சிதான்.  

மியூசியத்தில் 'சைக்கோ' மனநல மருத்துவரான பாம்பே குமாருக்கும், அச்சத்தில் இருக்கும் கவிதாவுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் பிரமாதம். இருவரும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசை மற்றும் ஒளியமைப்பு ஆகிய இரண்டும் கூடுதல் பலம் சேர்க்கின்றன. 

நாடகத்தின் நீளம் 70 நிமிடங்கள். இதில் பாம்பே குமார் உள்ளிட்ட ஐந்து பேரும் கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்கு சிலை போலவே நிற்பது... மிகவும் போற்றத்தக்க கலை அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு. இப்படி ஒரு புதுமையான முயற்சியை செய்திருக்கும் பம்பாய் சாணக்யாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். எந்த ஒரு செட்டும் இல்லாமல் உண்மையிலே ஒரு மியூசியத்தை பார்க்கும் உணர்வை நம்முள் ஏற்படுத்தி இருப்பது அருமை.    

சிசிடிவி கேமரா காட்சிகளை நாடக ரசிகர்களுக்கு காட்ட ஒரு டிவியை பயன்படுத்தாமல்... அதில் கவிதாவே நடிப்பது போன்று காட்சியை அமைத்திருப்பது இயக்குனரின் தனித்தன்மை.

அதே சமயத்தில் நெகட்டிவ் அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன.  

நாடகத்தின் முதல் காட்சியில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் இளம்பெண் 'நான் மொக்கை போடுவதாக நினைக்கிறீர்களா? மொக்கை போட மாட்டேன்' என்று அடிக்கடி சொல்வதே மொக்கையாக இருக்கிறது. 

சர்ச்சையில் இருக்கும் மியூசியத்தின் ஓனராக ஒருவர் வருகிறார். அவரிடம் 'இன்றிரவு அங்கே தங்கப்போகிறேன்' என்று சொல்கிறார் பூர்விகா. அதற்கு சம்மதம் தெரிவித்தாலும், எச்சரிக்கையும் விடுக்கிறார் அந்த நபர். இங்கே நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

மியூசியத்தில் இதற்கு முன்பு இறந்தவர்கள் வேடிக்கை பார்க்க வந்த மக்களா அல்லது அதனுள் வேலை பார்த்தவர்களா? பொதுமக்கள் என்றால் எந்த மியூசியத்தில் இரவு நேரத்தில் தங்க அனுமதிப்பார்கள்? 

ஒருவேளை மியூசிய நிர்வாகத்திற்கு தெரியாமல் அங்கே தங்கி இருக்க வாய்ப்புண்டு என்றே வைத்துக்கொள்வோம். அப்படியெனில் முதன்முறை ஒருவர் இறந்தபோதே பாதுகாப்பை பலப்படுத்தாமல் போனது ஏன்? அது சம்மந்தமாக இந்த மியூசிய ஓனர் என்ன செய்தார்?

ஏற்கனவே சர்ச்சையில் இருக்கும் மியூசியத்தில்.... என்னதான் புலனாய்வு நிருபர் தங்குகிறேன் என்று பிடிவாதம் பிடித்தாலும்... அவரை எச்சரிக்கை மட்டும் செய்ய வேண்டிய அவசியமென்ன? ஒருவேளை அவருக்கும் ஏதேனும் ஆகிவிட்டால் அது மேலும் பரபரப்பான செய்தியாகி விடாதா? அதுவும் ஒரு பெண் நிருபருக்கு ஆபத்து என்றால் மீடியா சும்மா இருக்குமா? இதனால் தனக்கு பெரிய நஷ்டமாகி, மியூசியத்தை மூடும் நிலை வரலாம் என்பதைக்கூட அறியாத அப்பாவியா அவர்? 

மியூசியம் என்றால் அதில் நடிகர்கள், அரசியல்வாதிகள், மன்னர்கள், சாதனையாளர்கள், விலங்குகள் என பலவகை சிலைகள் இருக்கும். ஆனால் இதில் சில வருடங்களுக்கு முன்பு கொடூர கொலை செய்தவர்களுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். இதை எப்படி அரசாங்கம் அனுமதிக்கும்? அப்படியே அனுமதி தந்தாலும் இதுபோன்ற கொலைகாரர்களை சிலையாக மக்கள் பார்க்க வேண்டிய அவசியமென்ன?

ஐந்து சிலைகளில் ஒன்று.. பட்டனை அழுத்தியதும் கையை அசைப்பதாக காட்டப்படுகிறது. அசையாமல் இருப்பதற்கு பெயர்தான் சிலை. இப்படி உடல் அங்கங்களை ஆட்டினால் அதற்குப்பெயர் பேட்டரி பொம்மை அல்லது ரோபோ. இது கூடவா இயக்குனருக்கு தெரியாது?

இன்னொன்று...கொடூர கொலைகாரரான மனநல மருத்துவரின் சிலை. 'நேற்றுதான் இவர் கைது செய்யப்பட்டார்' என்று பூர்விகாவிடம் சொல்கிறார் மியூசியம் ஓனர்.  

அடேங்கப்பா!! ஆறடி உயர பொம்மை செய்வதற்கே சில நாட்கள் ஆகும். ஆனால் இப்படி ஒரு சிலையை மறுநாளே செய்து வைத்து விட்டார்களாம். அப்பேர்ப்பட்ட எக்ஸ்பிரஸ் வேக சிற்பி யாரென்று தெரியவில்லை. அவரது பெயரை பம்பாய் சாணக்யா சொன்னால் ஏகப்பட்ட கோவில்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பயன்படும். 

பூர்விகாவை மிரட்டும் மனநல மருத்துவர்...கையில் ஒரு சிறுகத்தியை வைத்திருக்கிறார். 'இது என்ன தெரியுமா? நாவிதனின் கத்தி. Barber's Bracer' என்று விளக்கம் தருகிறார். இதே வார்த்தையை மியூசியத்தை நிர்வகிப்பவரும் ஒருமுறை பயன்படுத்துகிறார்.      

உடல் ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்றும், அரவாணிகளை திருநங்கைகள் என்றும் அழைப்பதை சமீபகாலமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். அரசாங்க அறிவிப்புகளும், மீடியா செய்திகளும் கூட  இப்படித்தான் அவர்களை குறிப்பிடுகின்றன.

அதுபோல 'பார்பர்' எனும் இழிவான சொல்லைக்கூறி அழைப்பதையும் இந்தியாவில் எப்போதோ கைவிட்டு விட்டார்கள். ஹேர் ஸ்டைலிஸ்ட், முடி திருத்துபவர், சிகை திருத்துபவர் என்று மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. 

மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'கத பறயும் போல்' படம்... ஒரு சினிமா நட்சத்திரத்திற்கும், முடி திருத்தும் நபருக்கும் இடையே உள்ள நட்பை விவரிக்கும் கதை. தமிழில் ரஜினி - பசுபதி நடிப்பில் 'குசேலன்' என்று ரீமேக் ஆனது.       

ஹிந்தியில் ஷாருக்கான் - இர்ஃபான் கான் நடித்திருந்தனர். இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் 'பில்லு பார்பர்'. இந்தியாவில் இருந்த முடி திருத்தும் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் பார்பர் எனும் வார்த்தை நீக்கப்பட்டு  'பில்லு' என்று ரிலீஸ் ஆனது.

தனது பல்வேறு நாடகங்களில் பாலச்சந்தர் பாணியில் முற்போக்கு, புரட்சி, அதிரடிக்காட்சி மற்றும் வசனங்கள் வைக்கும் பம்பாய் சாணக்யா.... இந்த சீரியஸான விஷயத்தை மறந்தது ஏன்? 'பார்பர்' எனும் வார்த்தை முடி திருத்துவோரின் மனதை எவ்வளவு புண்படுத்தும் என்பதை யோசிக்கவில்லையா அல்லது 'பார்பர்' எனும் வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்கிற செய்தியை படித்தது கூட இல்லையா?

ஒரு சிலை. ஒரு கொலை - கூர் மழுங்கிய கத்தி.  
           
------------------------------------------------------------

விமர்சனம் - சிவகுமார்.   

Wednesday, February 20, 2019

மகளிர் காவல் நிலையம் - நாடக விமர்சனம்


கலா மந்திரின் 'மகளிர் காவல் நிலையம்' 19/02/2019 அன்று மைலாப்பூர்  ஃபைன் ஆர்ட்ஸில் மீண்டும் மேடையேறியது. எண்ணம், எழுத்து, இயக்கம்: பம்பாய் சாணக்யா.

ஆளவந்தான் எனும் டான் ஏகப்பட்ட குற்றங்களை செய்கிறான். ஆனால் அவனை கைது செய்ய தயங்குகிறது காவல்துறை. அப்போது நேர்மையான அதிகாரியாக இருக்கும் சூர்ய பிரகாஷ் அவனை பிடித்து உள்ளே தள்ள சூளுரைக்கிறார். அதனை ஆளவந்தான் எப்படி எதிர்கொள்கிறான்? அவரது சபதம் நிறைவேறியதா என்பதே கதைக்கரு.

சூர்ய பிரகாஷ் மகளாக நாராயணி. சில வருடங்களுக்கு முன்பு போலீஸ் வேடமொன்றில் சிறப்பாக நடித்திருந்தார். இம்முறை காவல் நிலையத்தை மையமாக கொண்ட கதையில் நீதி கேட்டு போராடும் கதாபாத்திரம். யதார்த்தமான நடிப்பு. 

மேடை நாடக வரலாற்றில் 'வாழ்நாள் மிகை நடிப்பாளர்கள் (Lifetime Achievement Award for Over acting)' எனும் விருதிற்கு மிகப்பொருத்தமனாவர்கள் கதையின் நாயகி சூர்யகாந்தியாக வரும் கவிதா சுரேஷும், சூர்ய பிரகாஷாக வரும் பாம்பே குமாரும். வழக்கம்போல இதிலும் இவர்களின் மிகை நடிப்பு ததும்பி வழிகிறது. கூச்சல், தற்பெருமை பஞ்ச் என தூள் பறக்கிறது. உதாரணம்: 'நான் சூர்யகாந்தி. நெருப்பு'. 

காவல் நிலையத்தில் புகுந்து தன் மீது பெட்ரோல் ஊத்தும் ஆளவந்தானின் அடியாளை தடுக்க தன் இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை கூட தூக்காமல் மிரண்டு விழுகிறார் மாவீரர் சூர்ய பிரகாஷ். சமயோசிதமோ, வீரமோ இல்லை. ஆனால் அடிக்கடி ஸ்டேஷன் டேபிளை மட்டும் ஓங்கி அடித்து வசனம் பேசுகிறார். உண்மையில் வித்யாசமான போலீஸ்தான். நல்லவேளை சில காட்சிகளோடு இவரின் தரிசனம் முடிந்து விடுவதால் தப்பி விடுகிறோம்.

ஆனால் இவருக்கும் சேர்த்து அனல் பறக்க வைக்கிறார் சூர்யகாந்தி. 'புதுசா வரப்போற மேடம் யாரு தெரியுமா?' என்று சக பெண் காவலர்கள் தரும் பில்ட் அப்பில் ஆரம்பித்து, பிறகு தன்னையே பில்ட் அப் செய்து அசர வைக்கிறார் சூர்ய காந்தி...அல்ல... சூர்ய காந்'தீ'. 

நேர்மையான அதிகாரிகள் என்றாலே நம் காது கிழிய கத்த வேண்டுமா?

வில்லன் என்றாலே அவனுக்கு பெயர் ஆளவந்தான், ஆண்டவர், கோட்டை பெருமாள் என்றுதான் வைக்க வேண்டுமென எந்த மகான் எழுதி வைத்தார்  என்று தெரியவில்லை. இங்கே வரும் டானின் பெயர் ஆளவந்தான்!!

காவல் நிலையத்தினுள் சூர்ய பிரகாஷ் ஆளவந்தானைப்பற்றி பேசும்போதெல்லாம் சரியாக உள்ளே நுழைகிறார் ஆளவந்தான். அதுபோல சூர்ய காந்தியைப்பற்றி ஆளவந்தான் மற்றும் அவனது மகன் இளவரசன் தங்கள் வீட்டில் பேசும்போது சரியாக உள்ளே வருகிறார் சூர்ய காந்தி. அடேங்கப்பா... என்ன ஒரு செயற்கைத்தனமான டைமிங். 

மேற்சொன்ன அனைத்தையும் பார்க்கிறபோது நாம் நாடகம் பார்க்கிறோம் என்பதை மறந்து தெலுங்கு மசாலாப்படம் காண்கிற உணர்வை நாடி நரம்பில் ஏற்றுகிறது.

இதுபோக அனாதை இல்லம், மூளை ரத்த அழுத்தம், மறுஜென்மம் என புளித்துப்போன விஷயங்கள் வேறு ஆக்ரமித்து அறுக்கின்றன.

ஆளவந்தானின் வீட்டினுள் சூர்ய காந்தி நுழைந்து எரிமலை போல வசனங்களை கக்கும் நேரத்தில் ஒரு அல்லக்கை கூட உள்ளே வந்து தடுக்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு வேலைக்காரனாவது இருந்திருக்கலாம். பாவம்... வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் டான் போல!!
         
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு அதிரடியான பெண் போலீஸ் கதையை காணச்சென்றால் முழுநீள நகைச்சுவை மட்டுமே மிஞ்சுகிறது.

மகளிர் காவல் நிலையம் பற்றி ஒரு பிரத்யேக நாடகம் போட வேண்டும் என நினைத்த பம்பாய் சாணக்யாவின் எண்ணம் பாராட்டத்தக்கது. ஆனால் அதனை உருப்படியாக எழுத்திலும், இயக்கத்திலும் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

மகளிர் காவல் நிலையம் - லாக்கப் சித்ரவதை.    

---------------------------------------

விமர்சனம்: சிவகுமார்.   

    

Saturday, February 2, 2019

இதோ எந்தன் தெய்வம் - நாடக விமர்சனம்மாலி'ஸ் ஸ்டேஜ் தயாரிப்பில் 30/01/2019 அன்று அரங்கேறிய நாடகம் 'இதோ எந்தன் தெய்வம்'. 

01/02/2019 அன்று மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் மீண்டும் மேடையேறியது. எழுத்து - இயக்கம்: குடந்தை மாலி. தயாரிப்பு: மீனா மகாலிங்கம்.  

படிப்பு மற்றும் தனித்திறன்களில் சிறந்த விளங்கும் சிறுமி ஸ்ருதி. தந்தைக்கு  அமெரிக்காவில் வேலை. தாத்தா மற்றும் தாயின் அரவணைப்பில் வளர்கிறாள். ஒருநாள் பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுகிறாள். அரிய நோய் ஒன்று தாக்கியிருப்பதாக கூறுகிறார் மருத்துவர். இதை எப்படி எதிர்கொள்கிறது ஸ்ருதியின் குடும்பம் என்பதை சொல்கிறது கதை.     

ஸ்ருதியாக வர்ஷா. தெளிவான உச்சரிப்பு, மேடை பதற்றம் இல்லாத நடிப்பு. கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டு அருமையாக நடித்துள்ளார். பல்வேறு நாடகங்களில் இதுபோன்ற சிறார்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை போதுமான அளவு திறமையை வெளிக்கொண்டு வருவதில்லை. ஆனால் வர்ஷாவிற்கு வலுவான கதாபாத்திரம். நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி மனதை கவர்கிறார். மேடை நாடகத்திற்கு இன்னொரு சிறந்த வரவு.

டெல்லியில் இருந்து ஸ்ருதிக்கு சிறப்பு மருத்துவம் பார்க்க வரும் டாக்டர் அசோக் எனும் கதாபாத்திரத்தில் கணேஷ். நாடகத்தின் மையம் இவர்தான். மனிதாபிமானமும், நியாயமான கண்டிப்பும் கலந்தவராக சிறந்த நடிப்பினை தந்திருக்கிறார். இந்நாடகத்தின் வெற்றிக்கு கணேஷின் பங்கு மிக முக்கியமானது.

ஸ்ருதியின் தாத்தாவாக சண்டிகர் ரமணி மற்றும் தாயாக சௌம்யா  ஆகியோரின் உணர்வுபூர்வ நடிப்பு பாஸ்மார்க்கை பெறுகிறது. தந்தையாக  உமாசங்கரும் ஓகே.  ஆனால் கண் கலங்குவது போல நடிப்பதில் இன்னும் யதார்த்தம் தேவை.

பெரியளவில் பட்ஜெட், நட்சத்திர பட்டாளம் இல்லாத எளிமையான படைப்பு.  பத்மா ஸ்டேஜ் கண்ணன் (அரங்க அமைப்பு), பெரம்பூர் குமார் (ஒப்பனை), கலைவாணர் கிச்சா (ஒலி மற்றும் ஒளியமைப்பு) ஆகியோர் தங்கள் பங்கினை நிறைவாக செய்துள்ளனர்.

பொதுவாக குடந்தை மாலியின் நாடகங்களில் சாதி மற்றும் மதம் சார்ந்த தர்க்கங்கள் இடம்பெறும். இருதரப்பு வாதங்களையும் கதைக்களமாக கொண்டு இறுதியில் 'தனக்கே' உரிய பாணியில் க்ளைமாக்ஸை முடிப்பார்.  

ஆனால் இந்நாடகம் அவற்றை விட சிறந்ததாக இருக்கிறது. அதற்குக்காரணம் தன்னுடைய கருத்தை திணிக்காமல் பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதுதான்.

என்னதான் கடவுள் இல்லையென்று நாத்திகர்களும், அறிவியல் சார்ந்த மேதைகளும் பொதுவில் சொன்னாலும் அவர்களில் பலரது மனதில் கடவுள் எனும் சக்தி உள்ளதை நம்புவதாகவே தெரிகிறது. இல்லாவிட்டால் ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட்டை ஏவும் முன்பு தேங்காய், பூ, ஆரத்தி எடுத்து வழிபட வேண்டிய அவசியமென்ன? 

ஒரு நோயாளிக்கு கூடுமானவரை மருத்துவம் பார்த்துவிட்டு கையறு நிலையில் இருக்கும் மருத்துவர்கள் 'எதற்கும் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்' என்று சொல்லத்தான் செய்கிறார்கள். அந்த மருத்துவர்களின் நெற்றியில் விபூதி - சந்தனம் - குங்குமமும், அவர்களின் வீடு/க்ளினிக்கில் இறைவனின் புகைப்படங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இதோ எந்தன் தெய்வத்தின் கதைக்கரு புதிதல்ல. ஆனால் அதனை தொய்வின்றி இறுதிவரை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றதில் மாலி ஜெயித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

கதை, வசனம், இயக்கம் என அனைத்திலும் இந்நாடகத்தை நல்ல முறையில் கட்டமைத்து நிறைவான படைப்பை தந்திருக்கும் மாலி அவர்களுக்கு இதயபூர்வ வாழ்த்துகள்.    

இதோ எந்தன் தெய்வம் - மாலியின் வெற்றிக்கொடி.

------------------------------

விமர்சனம்:
ஏ.ஜி.சிவகுமார்.      

Related Posts Plugin for WordPress, Blogger...