CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, February 20, 2019

மகளிர் காவல் நிலையம் - நாடக விமர்சனம்


கலா மந்திரின் 'மகளிர் காவல் நிலையம்' 19/02/2019 அன்று மைலாப்பூர்  ஃபைன் ஆர்ட்ஸில் மீண்டும் மேடையேறியது. எண்ணம், எழுத்து, இயக்கம்: பம்பாய் சாணக்யா.

ஆளவந்தான் எனும் டான் ஏகப்பட்ட குற்றங்களை செய்கிறான். ஆனால் அவனை கைது செய்ய தயங்குகிறது காவல்துறை. அப்போது நேர்மையான அதிகாரியாக இருக்கும் சூர்ய பிரகாஷ் அவனை பிடித்து உள்ளே தள்ள சூளுரைக்கிறார். அதனை ஆளவந்தான் எப்படி எதிர்கொள்கிறான்? அவரது சபதம் நிறைவேறியதா என்பதே கதைக்கரு.

சூர்ய பிரகாஷ் மகளாக நாராயணி. சில வருடங்களுக்கு முன்பு போலீஸ் வேடமொன்றில் சிறப்பாக நடித்திருந்தார். இம்முறை காவல் நிலையத்தை மையமாக கொண்ட கதையில் நீதி கேட்டு போராடும் கதாபாத்திரம். யதார்த்தமான நடிப்பு. 

மேடை நாடக வரலாற்றில் 'வாழ்நாள் மிகை நடிப்பாளர்கள் (Lifetime Achievement Award for Over acting)' எனும் விருதிற்கு மிகப்பொருத்தமனாவர்கள் கதையின் நாயகி சூர்யகாந்தியாக வரும் கவிதா சுரேஷும், சூர்ய பிரகாஷாக வரும் பாம்பே குமாரும். வழக்கம்போல இதிலும் இவர்களின் மிகை நடிப்பு ததும்பி வழிகிறது. கூச்சல், தற்பெருமை பஞ்ச் என தூள் பறக்கிறது. உதாரணம்: 'நான் சூர்யகாந்தி. நெருப்பு'. 

காவல் நிலையத்தில் புகுந்து தன் மீது பெட்ரோல் ஊத்தும் ஆளவந்தானின் அடியாளை தடுக்க தன் இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை கூட தூக்காமல் மிரண்டு விழுகிறார் மாவீரர் சூர்ய பிரகாஷ். சமயோசிதமோ, வீரமோ இல்லை. ஆனால் அடிக்கடி ஸ்டேஷன் டேபிளை மட்டும் ஓங்கி அடித்து வசனம் பேசுகிறார். உண்மையில் வித்யாசமான போலீஸ்தான். நல்லவேளை சில காட்சிகளோடு இவரின் தரிசனம் முடிந்து விடுவதால் தப்பி விடுகிறோம்.

ஆனால் இவருக்கும் சேர்த்து அனல் பறக்க வைக்கிறார் சூர்யகாந்தி. 'புதுசா வரப்போற மேடம் யாரு தெரியுமா?' என்று சக பெண் காவலர்கள் தரும் பில்ட் அப்பில் ஆரம்பித்து, பிறகு தன்னையே பில்ட் அப் செய்து அசர வைக்கிறார் சூர்ய காந்தி...அல்ல... சூர்ய காந்'தீ'. 

நேர்மையான அதிகாரிகள் என்றாலே நம் காது கிழிய கத்த வேண்டுமா?

வில்லன் என்றாலே அவனுக்கு பெயர் ஆளவந்தான், ஆண்டவர், கோட்டை பெருமாள் என்றுதான் வைக்க வேண்டுமென எந்த மகான் எழுதி வைத்தார்  என்று தெரியவில்லை. இங்கே வரும் டானின் பெயர் ஆளவந்தான்!!

காவல் நிலையத்தினுள் சூர்ய பிரகாஷ் ஆளவந்தானைப்பற்றி பேசும்போதெல்லாம் சரியாக உள்ளே நுழைகிறார் ஆளவந்தான். அதுபோல சூர்ய காந்தியைப்பற்றி ஆளவந்தான் மற்றும் அவனது மகன் இளவரசன் தங்கள் வீட்டில் பேசும்போது சரியாக உள்ளே வருகிறார் சூர்ய காந்தி. அடேங்கப்பா... என்ன ஒரு செயற்கைத்தனமான டைமிங். 

மேற்சொன்ன அனைத்தையும் பார்க்கிறபோது நாம் நாடகம் பார்க்கிறோம் என்பதை மறந்து தெலுங்கு மசாலாப்படம் காண்கிற உணர்வை நாடி நரம்பில் ஏற்றுகிறது.

இதுபோக அனாதை இல்லம், மூளை ரத்த அழுத்தம், மறுஜென்மம் என புளித்துப்போன விஷயங்கள் வேறு ஆக்ரமித்து அறுக்கின்றன.

ஆளவந்தானின் வீட்டினுள் சூர்ய காந்தி நுழைந்து எரிமலை போல வசனங்களை கக்கும் நேரத்தில் ஒரு அல்லக்கை கூட உள்ளே வந்து தடுக்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு வேலைக்காரனாவது இருந்திருக்கலாம். பாவம்... வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் டான் போல!!
         
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு அதிரடியான பெண் போலீஸ் கதையை காணச்சென்றால் முழுநீள நகைச்சுவை மட்டுமே மிஞ்சுகிறது.

மகளிர் காவல் நிலையம் பற்றி ஒரு பிரத்யேக நாடகம் போட வேண்டும் என நினைத்த பம்பாய் சாணக்யாவின் எண்ணம் பாராட்டத்தக்கது. ஆனால் அதனை உருப்படியாக எழுத்திலும், இயக்கத்திலும் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

மகளிர் காவல் நிலையம் - லாக்கப் சித்ரவதை.    

---------------------------------------

விமர்சனம்: சிவகுமார்.   

    

Saturday, February 2, 2019

இதோ எந்தன் தெய்வம் - நாடக விமர்சனம்மாலி'ஸ் ஸ்டேஜ் தயாரிப்பில் 30/01/2019 அன்று அரங்கேறிய நாடகம் 'இதோ எந்தன் தெய்வம்'. 

01/02/2019 அன்று மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் மீண்டும் மேடையேறியது. எழுத்து - இயக்கம்: குடந்தை மாலி. தயாரிப்பு: மீனா மகாலிங்கம்.  

படிப்பு மற்றும் தனித்திறன்களில் சிறந்த விளங்கும் சிறுமி ஸ்ருதி. தந்தைக்கு  அமெரிக்காவில் வேலை. தாத்தா மற்றும் தாயின் அரவணைப்பில் வளர்கிறாள். ஒருநாள் பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுகிறாள். அரிய நோய் ஒன்று தாக்கியிருப்பதாக கூறுகிறார் மருத்துவர். இதை எப்படி எதிர்கொள்கிறது ஸ்ருதியின் குடும்பம் என்பதை சொல்கிறது கதை.     

ஸ்ருதியாக வர்ஷா. தெளிவான உச்சரிப்பு, மேடை பதற்றம் இல்லாத நடிப்பு. கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டு அருமையாக நடித்துள்ளார். பல்வேறு நாடகங்களில் இதுபோன்ற சிறார்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை போதுமான அளவு திறமையை வெளிக்கொண்டு வருவதில்லை. ஆனால் வர்ஷாவிற்கு வலுவான கதாபாத்திரம். நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி மனதை கவர்கிறார். மேடை நாடகத்திற்கு இன்னொரு சிறந்த வரவு.

டெல்லியில் இருந்து ஸ்ருதிக்கு சிறப்பு மருத்துவம் பார்க்க வரும் டாக்டர் அசோக் எனும் கதாபாத்திரத்தில் கணேஷ். நாடகத்தின் மையம் இவர்தான். மனிதாபிமானமும், நியாயமான கண்டிப்பும் கலந்தவராக சிறந்த நடிப்பினை தந்திருக்கிறார். இந்நாடகத்தின் வெற்றிக்கு கணேஷின் பங்கு மிக முக்கியமானது.

ஸ்ருதியின் தாத்தாவாக சண்டிகர் ரமணி மற்றும் தாயாக சௌம்யா  ஆகியோரின் உணர்வுபூர்வ நடிப்பு பாஸ்மார்க்கை பெறுகிறது. தந்தையாக  உமாசங்கரும் ஓகே.  ஆனால் கண் கலங்குவது போல நடிப்பதில் இன்னும் யதார்த்தம் தேவை.

பெரியளவில் பட்ஜெட், நட்சத்திர பட்டாளம் இல்லாத எளிமையான படைப்பு.  பத்மா ஸ்டேஜ் கண்ணன் (அரங்க அமைப்பு), பெரம்பூர் குமார் (ஒப்பனை), கலைவாணர் கிச்சா (ஒலி மற்றும் ஒளியமைப்பு) ஆகியோர் தங்கள் பங்கினை நிறைவாக செய்துள்ளனர்.

பொதுவாக குடந்தை மாலியின் நாடகங்களில் சாதி மற்றும் மதம் சார்ந்த தர்க்கங்கள் இடம்பெறும். இருதரப்பு வாதங்களையும் கதைக்களமாக கொண்டு இறுதியில் 'தனக்கே' உரிய பாணியில் க்ளைமாக்ஸை முடிப்பார்.  

ஆனால் இந்நாடகம் அவற்றை விட சிறந்ததாக இருக்கிறது. அதற்குக்காரணம் தன்னுடைய கருத்தை திணிக்காமல் பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதுதான்.

என்னதான் கடவுள் இல்லையென்று நாத்திகர்களும், அறிவியல் சார்ந்த மேதைகளும் பொதுவில் சொன்னாலும் அவர்களில் பலரது மனதில் கடவுள் எனும் சக்தி உள்ளதை நம்புவதாகவே தெரிகிறது. இல்லாவிட்டால் ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட்டை ஏவும் முன்பு தேங்காய், பூ, ஆரத்தி எடுத்து வழிபட வேண்டிய அவசியமென்ன? 

ஒரு நோயாளிக்கு கூடுமானவரை மருத்துவம் பார்த்துவிட்டு கையறு நிலையில் இருக்கும் மருத்துவர்கள் 'எதற்கும் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்' என்று சொல்லத்தான் செய்கிறார்கள். அந்த மருத்துவர்களின் நெற்றியில் விபூதி - சந்தனம் - குங்குமமும், அவர்களின் வீடு/க்ளினிக்கில் இறைவனின் புகைப்படங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இதோ எந்தன் தெய்வத்தின் கதைக்கரு புதிதல்ல. ஆனால் அதனை தொய்வின்றி இறுதிவரை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றதில் மாலி ஜெயித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

கதை, வசனம், இயக்கம் என அனைத்திலும் இந்நாடகத்தை நல்ல முறையில் கட்டமைத்து நிறைவான படைப்பை தந்திருக்கும் மாலி அவர்களுக்கு இதயபூர்வ வாழ்த்துகள்.    

இதோ எந்தன் தெய்வம் - மாலியின் வெற்றிக்கொடி.

------------------------------

விமர்சனம்:
ஏ.ஜி.சிவகுமார்.      

Monday, January 14, 2019

கோமல் தியேட்டரின் ஐந்து குறுநாடகங்கள்

பிரபல எழுத்தாளர், நாடக படைப்பாளி கோமல் ஸ்வாமிநாதன் அவர்களால் 1971-ஆம் வருடம் துவக்கப்பட்ட நாடகக்கழுவின் பெயர் 'ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு 'கோமல் தியேட்டர்' எனும் பெயரில் அவரது புதல்வி தாரிணி அக்கலைப்பணியை தொடர ஆரம்பித்தார். 

தண்ணீர் தண்ணீர், இருட்டுல தேடாதீங்க போன்ற நாடகங்களை தொடர்ந்து கோமல் தியேட்டர் சார்பாக அக்டோபர் 11, 2018 அன்று கல்கி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சூடாமணி, தி.ஜானகிராமன் ஆகிய பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள் நாடக வடிவில் அரங்கேறின. 13/01/2019 அன்று 'முத்ரா'வின் மூலம் தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியின் இன்போசிஸ் அரங்கில் மீண்டும் மேடையேறின. அவற்றிற்கான விமர்சனங்கள்: 

கல்கியின் எஜமான விஸ்வாசம்:
நாடகமாக்கம், இயக்கம் - கௌரிசங்கர்.வேலையை விட்டு நீக்கப்படும் வீராசாமி தனது எஜமானருக்காக உதவ நினைத்து செய்யும் காரியம் எப்படி முடிகிறது என்பதே கதை. கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை ஒரு கதைசொல்லியாக மேடையில் நின்று விவரிக்கிறார் போத்திலிங்கம். 

ஒருவேளை இது நேரடி நாடகமாவே இருந்திருந்தால் ஓரளவு சுவாரஸ்யத்தை உண்டாகியிருக்கும். ஆனால் பொருட்செலவு அதிகரிக்கும் என்பதால் கதைசொல்லியாக போத்திலிங்கத்தை நிறுத்தியதாக  எண்ணத்தோன்றியது.

போத்திலிங்கம் ஒரு நல்ல நடிகர் என்பதில் சந்தேகமில்லை. இங்கும் தனது பணியை நன்றாகவே செய்திருந்தார். ஆனால் நாடகம் பெரிதாய் மனதில் நிற்கவில்லை. 

ஜெயகாந்தனின் லவ் பண்ணுங்கோ சார்:
நாடகமாக்கம், இயக்கம் - இளங்கோ குமணன்.டீக்கடை ஒன்றிற்கு ... மன்னிக்க காப்பிக்கடை ஒன்றிற்கு அவ்வப்போது வந்து செல்கிறார் ஒரு இளைஞர். ஒருதலைக்காதல். வழியில் செல்லும்/நிற்கும் அப்பெண்ணைக்காண காப்பிக்கடை பக்கம் அடிக்கடி ஒதுங்குபவர். இதனை நீண்ட நாட்களாக பார்த்து வரும் கடை முதலாளி அந்த இளைஞரை அமர வைத்து காதல் என்னவெல்லாம் செய்யும் என்பதை உணர்த்துவதே கதை.

இந்நாடகத்தின் ஒரே ப்ளஸ் இளங்கோ குமணனின் நடிப்புதான். நீண்ட வசனங்களை அழகாய் பேசி மனதை கவர்கிறார். ஆனால் ஜெயகாந்தனின் எழுத்து? தனது இல்லத்தில் ஒரு தவறு நடந்ததாக கருதும் கடையின் முதலாளி அது அந்த இளைஞனுக்கும் நிகழ வாய்ப்புண்டு என எச்சரிக்கும் வகையில் நகர்கிறது கதை.

மகாகவி பாரதி காதலை கொண்டாடினான். சாதி பேதங்களை ஒழிக்க காதல் ஒரு நல்ல தீர்வு என்றான். ஆனால் ஞானபீடம் வாங்கிய இலக்கிய சிங்கம் ஜெயகாந்தன் இப்படி ஒரு பிற்போக்குத்தனமான கதையை எழுதி வைத்திருக்கிறார். பெரிதாய் ஈர்க்காத நாடகம். ஒருவேளை இக்கதையை எழுதும் முன்பு தனது முறுக்கு மீசையை ட்ரிம் செய்து விட்டார் போல. 

கல்கியின் எஜமான விஸ்வாசத்திலாவது இறுதித்திருப்பம் சற்று எடுபடுகிறது. ஆனால் ஜெயகாந்தனின் சிறுகதையில் அது கூட இல்லாமல் போவது பெருத்த ஏமாற்றம். தட்டையான கதைக்களம். 

எஜமான விஸ்வாசத்தை நாடகமாக்கம் செய்திருப்பது கௌரி சங்கர். லவ் பண்ணுங்கோ சாரை நாடகமாக்கம் செய்திருப்பது இளங்கோ குமணன். 

பல சமயங்களில் நல்ல சிறுகதைகள் அல்லது அப்படியாக கருதப்படுபவை அப்படியே இருந்து விட்டுப்போவதே நலம். அதனை மேடை நாடகம் என்கிற பெயரில் மறு ஆக்கம் செய்ய நினைப்பது நல்ல முயற்சி. ஆனால் ஆங்கிலத்தில் சொல்வது போல execution மிக முக்கியம் அல்லவா? அதில்தான் இவை தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகின்றன. எய்தோரை (கல்கி, ஜெயகாந்தன்) விட்டுவிட்டு அம்புகளை நோவானேன் என்று நினைக்கத்தோன்றினாலும்.... நம் மீது பாய்ந்த வலிக்கு அம்புகளும் காரணம் என்பதால்... வலியைச்சொல்ல வேறு வழியில்லை!!      

சில சிறுகதைகள் எழுத்து வடிவிலேயே இருந்து விட்டுப்போகட்டும். அதை எழுதிய எழுத்தாளர்கள் மீது உங்களுக்கிருக்கும் வாசக விஸ்வாத்தில் நாடகமாக்காமல்... அப்படியே விட்டுடுங்கோ சார். 

புதுமைப்பித்தனின் கட்டில் பேசுகிறது:
நாடகமாக்கம், இயக்கம் - கார்த்திக் கௌரிசங்கர்.மருத்துவமனையில் இருக்கும் நோயாளி ஒருவர் படும் பாட்டை நகைச்சுவை கலந்து சொல்லும் கதை. 

நோயாளி, மருத்துவர், செவியிலர் மற்றும் கட்டில் என நான்கு கதாபாத்திரங்கள். இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. ஓரளவு சிரிக்க வைத்தாலும் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நோயாளியாக வந்த/சென்ற ஸ்ரீனிவாசன் நடிப்பு நன்று. 

வேறொரு நல்ல சிறுகதையை தேர்வு செய்து இயக்கி இருக்கலாம் கார்த்திக் கௌரி சங்கர்.  இல்லாவிடில் கட்டில் பேசியது போல நாடக இருக்கைகளும் புலம்பிப்பேசும்.    


ஆர். சூடாமணியின் பிம்பம்:
நாடகமாக்கம், இயக்கம் - தாரிணி கோமல்.ஜான்சி ராணி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜோன் ஆஃப் ஆர்க் போன்ற மகளிரை முன்னுதாரணமாக கொண்டு வாழ்வில் மிளிர நினைக்கிறாள் மீனாட்சி. ஆனால் திடீரென மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொள்ள நிர்பந்தம் செய்கிறார் தந்தை. அதனை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதை.

தாரிணி மற்றும் கௌரி சங்கர் பெற்றோர்களாகவும், மீனாட்சியாக லாவண்யா வேணுகோபாலும் நடித்துள்ளனர். இந்த சிறுகதை... நாடகமாக்கத்திற்கு பொருந்தும் என நம்பியதோடு மட்டுமன்றி அதனை ரசிக்கும்படி சிறப்பாக  இயக்கியும் உள்ளார் தாரிணி கோமல்.

பெண்கள் முன்னேற்றம் குறித்து எழுத்து, நாடகம், திரைப்படம் என பல்வேறு தளங்களில் ஆயிரக்கணக்கான படைப்புகளை டைனோசர் வாழ்ந்த காலத்தில் இருந்தே பார்த்து வருகிறோம். அவற்றுள் பெரும்பாலானவை புல்லரிப்புகளாக மட்டுமே இருக்கும். ஆனால் சூடாமணியின் பிம்பம் இவற்றின் பிம்பங்களாக இல்லாமல் தகிக்கும் சூரியனாய் வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.

ஆரம்பம் முதல் இறுதிவரை ஒவ்வொரு வரியும் மிகச்சிறந்த சிறுகதைக்கான அம்சங்களை கொண்டிருக்கின்றன. தனது கண்டிப்பை மனைவி மூலம் மகளுக்கு கடத்தும் தந்தை, லட்சியமா - தந்தையா என முடிவெடுக்க இயலாமல் தவிக்கும் மகள், தனது திறமைகளை சமையலறை விறகாக காவு குடுத்து விட்டு வாழும் தாய் என அற்புதமான முக்கோணம்.

பெண்ணுரிமை என்று உரக்கக்கத்தி, எழுதி மட்டுமே சாதித்து விட இயலாது. இப்படி திடமான மன உறுதியுடன் முடிவை எடுத்தால் நிரந்தர தீர்வைப்பெறலாம் என்பதை மெச்சும்படி சொல்லியிருக்கிறார் சூடாமணி.   'நீ யார்?' என்பதற்கு இறுதியில் மீனாட்சி சொல்லும் பதில்... சூடாமணியின் எழுத்திற்கு சூடப்பட வேண்டிய கிரீடம். 

காத்தாடி ராமமூர்த்தி பிரதான வேடமேற்று நடிக்கும் நாடகங்கள் உட்பட வெவ்வேறு நாடகங்களில் நடித்து வரும் லாவண்யா வேணுகோபால் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரத்தை சொதப்பாமல் நடிப்பவர் எனும் நற்பெயரை பெற்றிருப்பவர். 

அதேசமயம் பெண்களுக்கென்று பிரத்யேக கதையம்சம் கொண்ட நாடகங்களில் மட்டுமே இவர்களைப்போன்றோரின் முழுத்திறமை வெளிப்படும். அவ்வகையில் 'பிம்பம்' நாடகத்தின் மீனாட்சி கதாபாத்திரம் லாவண்யாவிற்கு ஒரு இமாலய வெற்றி. 

அருமையான சிறுகதையை எழுதிய சூடாமணி, அதை திறம்பட நாடகமாக்கம் செய்திருக்கும் தாரிணி கோமல் மற்றும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய லாவண்யா உள்ளிட்ட மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

தி. ஜானகிராமனின் விளையாட்டு பொம்மை:
நாடகமாக்கம், இயக்கம் - இளங்கோ குமணன்.நீதித்துறையில் பணியாற்றிய பெரியவருக்கு எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஞாபக சக்தியை இழக்கும் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னவென்பதை சொல்லும் கதை.

சூடாமணியின் பிம்பத்தை போன்று இன்னொரு தரமான சிறுகதையை தேடிப்பிடித்து சிறப்பாக நாடகமாக்கியிருக்கிறார் இளங்கோ குமணன். உணர்வுகளை சொல்லும் நெகிழ்வான படைப்பு.

நல்ல நகைச்சுவை நடிகர் என்றே பலரால் அறியப்பட்ட காத்தாடி ராமமூர்த்தி இந்த வயதிலும் (என்று சொன்னால் கோபித்துக்கொள்வார். ஆனால் வேறு வழியில்லை) ஒரு அருமையான குணச்சித்திர நடிப்பில் நம்மை கட்டிப்போடுகிறார். ஞாபக சக்தியின்மையால் நெருங்கிய உறவுகளை அடையாளம் காண தடுமாறுவதும், பகடிக்கு ஆளாகி ரியாக்ட் செய்வதிலும்.... பிரமாதமான நடிப்பு. தமிழ் மேடை நாடகம் தன்னகத்தே கொண்டிருக்கும் பொக்கிஷங்களில் ஒருவர் காத்தாடி என்பதை இந்நாடகம் மீண்டும் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது. மாலதி சம்பத், லாவண்யா வேணுகோபால், சூரஜ் உள்ளிட்டோரின் துணை நடிப்பும் நிறைவு.

காத்தாடி ராமமூர்த்தி பேசும் இறுதி வசனத்தில் தி.ஜானகிராமன் தன்னை எப்படிப்பட்ட சிறுகதையாளர் என்பதை நன்றாய் உணர்த்தியிருக்கிறார். அதில் மட்டுமல்ல. மொத்த சிறுகதையுமே மனதைத்தொடுகிறது. 

நாடகமாக்கம் செய்திருக்கும் இளங்கோ குமணனுக்கு நெகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகள்.

இதுபோன்ற குறுநாடக முயற்சிகள் அவ்வப்போது வருவது நாடகக்கலையின் ஆரோக்யத்திற்கு முக்கியமானது. அதில் தனது பங்கை செலுத்தியிருக்கும் தாரிணி மற்றும் கோமல் தியேட்டர் குழுவினர் மற்றும் காட்சிகளுக்கு ஏற்ப நல்ல பின்னணி இசையை அமைத்திருக்கும் குகப்பிரசாத் ஆகியோருக்கு  வாழ்த்துகள்.

அதேசமயம்... முக்கியமான ஒன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.      

சிறந்த எழுத்தாளர்கள் அல்லது அப்படி கருதப்படுபவர்கள் எழுதும் அனைத்துமே சிறந்த சிறுகதைகள் இல்லை. அந்த படைப்பாளிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.  சிறந்த சிறுகதைகள் அனைத்துமே நாடகமாக்கத்திற்கு பொருந்துபவையும் அல்ல.  ஆகவே அதற்கு ஏற்றவாறு கதைகளை தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.

கோமல் தியேட்டர் தொடர்ந்து வெற்றிநடை போடட்டும். நன்றி. 

------------------------------------------------------

விமர்சனம்:
A.G. சிவகுமார்.
      
Related Posts Plugin for WordPress, Blogger...