தியேட்டர் ஆஃப் மஹம் சார்பில் ஒய்.ஜி.எம்.மதுவந்தியின் தயாரிப்பில் 03/08/2018 அன்று பாரத் கலாச்சாரில் அரங்கேறிய நாடகம் கோச்சிக்காத மா. கதை வசனம்: ஜி. ராதாகிருஷ்ணன். நாடகமாக்கம், இயக்கம் - சுரேஷ்வர்.
தொட்டதற்கெல்லாம் கோபப்படும் மகளை வைத்துக்கொண்டு படாதபாடு படுகிறார் தந்தை. அதனை சரிப்படுத்த 'குக்கர் க்ளினிக்'கில் மன சிகிச்சைக்காக சேர்த்து விடுகிறார். அங்கு நடக்கும் கலாட்டாக்கள் என்னவென்பதுதான் கதை.
கோபக்கார பெண்ணாக மதுவந்தி. அடிப்படையில் இக்கதாபாத்திரத்திற்கு பொருந்தி விடுகிறார். முந்தைய நாடக அனுபவங்கள் தந்தையாக வரும் சாய்ராம் மற்றும் மருத்துவராக வரும் சுரேஷ்வருக்கு கைகொடுத்துள்ளது. தனம், சாய்ராம், ஸ்ரீநாத், நவநீத கிருஷ்ணன், ராஜாராமன், சுதர்சனன் உள்ளிட்ட சிலரும் இணைந்து நடித்துள்ளனர்.
கதையின் நாயகி மதுவந்திக்கு கோபம் வரும். அதனை அதிகரிக்கும் விதத்தில் எவராவது பேசினால் சட்னிதான். இந்த ஒற்றை வரிக்கதையை மேலும் விரிவுபடுத்தி ரசிக்க வைப்பதில் கதாசிரியர் ராதாகிருஷ்ணனுக்கு என்ன சிக்கலென்று தெரியவில்லை. செக்கிழுப்பது போல ஒரே இடத்தில் உழல்கிறது. நகைச்சுவை நாடகங்களுக்கு ஊறுகாய் அளவு கதை இருந்தால் போதும் என்று முன்னொரு காலத்தில் யாரோ ஒரு மகான் கண்டுபிடித்துள்ளார். இருந்து விட்டுப்போகட்டும். குறைந்தபட்சம் வசனங்களாவது நல்ல நகைச்சுவை செறிவுடன் இருந்திருக்கலாமே? ப்ரீ.கே.ஜி லெவலை தாண்டவில்லை.
அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட பிரபலங்களை நினைவுபடுத்தும் சில கேரக்டர்கள் வந்து சென்றாலும் ஈர்ப்பில்லை. சிவசம்போ, பெருமாளே, தில்லாலங்கடி மோகனாம்பாள் போன்ற நாடகங்கள் மூலம் சுமாராக சிரிக்க வைத்த மதுவந்தி, சுரேஷ்வர் காம்போ இ.வா.க எனும் அரசியல் நையாண்டி நாடகத்தில் மாபெரும் ஏமாற்றத்தை அளித்தது. அப்படியொரு நிலை இம்முறையும்.
சமீபகாலத்தில் இப்படி ஒரு அறுவையான நகைச்சுவை (?) நாடகத்தை நான் பார்த்ததே இல்லை. குழுவின் கேப்டனாக இருக்கும் இயக்குனர் சுரேஷ்வர் அடுத்த முறையேனும் குறைந்தபட்ச உத்திரவாத்தை தரும் நாடகத்தை உருவாக்குவார் என நம்புவோம்.
கோச்சிக்காத மா - கோபம் வர்ற மாதிரி நாடகம் போடாதீங்கம்மா!!
---------------------------------------------------
0 comments:
Post a Comment