யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ் குழுவினரின் 66-ஆம் ஆண்டில் 67-வது நாடகமாக வந்திருக்கிறது த்ரீ ஜி. எழுத்து: சித்ராலயா ஸ்ரீராம். நாடகமாக்கம், இயக்கம்: ஒய்.ஜி. மகேந்திரா.
இந்தியா அபார்ட்மென்ட்ஸ் எனும் குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்க்கிறார் தாமு. ஒருநாள் அங்கே தேர்தல் ஏற்பாடு நடக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் தாமுவும் இணைந்து தனக்கான சம்பள உயர்வை கேட்கிறார். ஆனால் அங்கே மீனாட்சி எனும் பெண்ணின் அதிகாரம் தூள் பறக்கிறது. தாமுவை அவர் எடுத்தெறிந்து பேச, இதே குடியிருப்பிற்கு உரிய கௌரவத்துடன் வருவேன் என்று சவால் விட்டு செல்கிறார். அதற்கு தாமு சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதுதான் கதை.
இந்தியா அபார்ட்மென்ட்ஸ் மற்றும் அதில் வலம் வரும் கதாபாத்திரங்கள் பாரத விலாஸ் திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றன. தாமுவாக ஒய்.ஜி.மகேந்திரன். நாடகத்தின் மைய கதாபாத்திரம். சரளமான வசன நடையுடன் கவனத்தை ஈர்க்கிறார். ஒரு காட்சியில் காந்தியை கிண்டலடித்து விட்டு இரு கால்களையும் மைக்கேல் ஜாக்சன் பாணியில் நகர்த்திக்கொண்டே செல்வது அபாரம். இறுதியில் சென்டிமென்ட்டாகவும் நடித்து மனதை கவர்கிறார்.
காந்தியாக பிரபல நாடக நடிகை ஆனந்தியின் புதல்வர் ராகவ். சிறு வயதில் கனமான கதாபாத்திரம். ஆனால் அதனை சிறப்பாக செய்து காந்தியின் பெயரை காப்பாற்றியுள்ளார். நேதாஜி வேடத்தில் ராமச்சந்திர ராவும் மிளிர்கிறார். மீனாட்சியாக கவுசிகா. மேடை நாடகத்திற்கு நல்வரவு. இயல்பாக நடித்திருப்பதற்கு பாராட்டுகள். நல்லதோர் எதிர்காலம் காத்திருக்கிறது.
காந்தி மற்றும் நேதாஜியின் வாயிலாக சித்ராலயா ஸ்ரீராம் எழுதியிருக்கும் 'சில' வசனங்கள் சிந்திக்க வைக்கிறது. அக்கால கட்டத்தில் தாங்கள் எவ்வித சிரமங்களை சந்தித்தோம், தற்காலம் எப்படி மாறிவிட்டது, கருத்து வேறுபாடுகள் இருந்தும் தேசத்தின் விடுதலைக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தது என காந்தியும், நேதாஜியும் பேசுமிடங்கள் நன்று. இவ்விரு கதாபாத்திரங்களுக்கு எஸ்.கே.ஆர். செய்திருக்கும் ஒப்பனையும், குடியிருப்பு பகுதிக்காக பத்மா ஸ்டேஜ் கண்ணன் அமைத்திருக்கும் அரங்க அமைப்பும் நிறைவு.
அகிம்சை, வீரம் என இருதுருவங்களாக இருக்கும் தேசத்தலைவர்கள் இக்காலத்தில் தோன்றினால் எப்படியிருக்கும் எனும் குறைந்தபட்ச சுவாரஸ்யத்தை கிளப்பி அதனை ஆங்காங்கே ரசிக்க வைத்திருப்பினும் பல்வேறு குறைகளால் மிகச்சுமாரான நாடகமாகிப்போகிறது.
இதுபோன்ற தேசபக்தி சார்ந்த கதையில் எதற்காக முதலிரவு போன்ற கொச்சையான வசனங்கள்? அது இந்த கதையின் நகர்விற்கு எந்த அளவிற்கு உதவுகிறது? எஸ்.வி.சேகரின் நாடகங்கள் அனைத்துமே நகைச்சுவையை மையமாக கொண்டவை. அதில் அவரது பாணியில் சில இரட்டை அர்த்தத்தை வசனங்களை பேசுவார். அது காலப்போக்கில் எடுபட்டு விட்டது. ஆனால் ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகங்கள் நல்ல கதையும், 'ஓரளவு' நகைச்சுவையும் இருக்கும் என்பதுதான் நாடக பிரியர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பு. ஆனால் இரண்டாம் ரகசியம் உள்ளிட்ட சில நாடகங்களில் திணிக்கப்பட்ட இரட்டை வசனங்கள் எரிச்சலை மட்டுமே தருகின்றன. சித்ராலயா ஸ்ரீராம் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் திறமையை இதுபோன்று வீணடிப்பது சரியா என்று அவரது மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளட்டும்.
அது மட்டுமல்ல. சக கதாபாத்திரங்களை பார்த்து ஒல்லிப்பீடை, சொட்டை என்று கிண்டல் செய்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா. இன்னொருவரின் உடலமைப்பை 'இந்தளவிற்கு' நையாண்டி செய்வதெல்லாம் அரதப்பழசான வசன முறை. அதை இன்றளவுமா பின்பற்ற வேண்டும்?
வெளிப்படையாக கூறாமல் வெவ்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை நையாண்டி செய்கிறார் தாமு. ஆனால் மறந்தும் குறிப்பிட்ட ஒரு கட்சியை பற்றி எவ்வித எதிர்க்கருத்தும் கூறாமல் தாவி விடுகிறார். அந்த சமயங்களில் மட்டும் ஸ்ரீராமின் எழுதுகோலில் மை தீர்ந்து விட்டது போல. அதிலும் காந்தியின் வாயாலேயே கோட்சேவிற்கு நல்லவன் என்கிற சாயம் பூசும் வசனம்.. அடடா. அற்புதம். இதல்லவா தேசபக்தி. காந்தியை சென்னைத்தமிழ் பேச வைப்பதெல்லாம் சகிக்க இயலாத காமடி.
'சொர்க்கத்தில் ஒய்.ஜி.பி எப்படி இருக்கிறார்?', அனிருத் என்கிற மாணவன், PSBB பள்ளியில் சீட் கிடைப்பது என சொந்த(ங்களின்) புராணம் கதைக்கு எதற்கு?
ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகங்களில் துருப்புச்சீட்டு சுப்புணி. கொஞ்ச நேரம் வந்தாலும் மொத்த அரங்கையும் கலகலப்பாக்கி விட்டு செல்லும் நல்ல நகைச்சுவை நடிகர். ஆனால் இம்முறை முருங்கைக்காய் பாணி வசனங்களுக்கு இரையாகி விட்டார். பாவம்.
இப்படியாக பல்வேறு தொய்வுகளால் நம்மை வறுத்தெடுத்துவிட்டு இறுதியில் நெகிழ்ச்சியான திருப்பம், தேசிய கீதம் மூலம் இதயத்தை தொட நினைத்துள்ளனர். அவ்வளவுதான்.
த்ரீ ஜி - நெட்வொர்க் அவுட்.
----------------------------------------------
0 comments:
Post a Comment