CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, July 28, 2018

தண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்சாய்ராம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதிவாசன் கதை, வசனம் எழுதி இயக்கிய நாடகம் 'தண்ணீரில் மீன் அழுதால்'. 27/07/2018 அன்று மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் அரங்கேறியது. 

விவாகரத்து பெற்று தந்தையின் இல்லத்தில் வாழும் பெண்மணி, விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படும் ஆசிரியர், சொந்த நிறுவனம் தொடங்க முயற்சிக்கும் இளைஞர். இவர்களைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை எனும் மீன் தொட்டிதான் நாடகத்தின் கதை.        

கிட்டத்தட்ட ஒரு டஜன் நடிகர்கள். இதில் மனதில் நிற்பது கதையின் நாயகி  ராஜஸ்ரீ (உமா), ஜெயசூர்யா (உமாவின் தந்தை) மற்றும் விக்னேஷ் செல்லப்பன் (ஆசிரியர்). சீரியசான கதைக்கு தங்களால் ஆன வேலையை நிறைவாக செய்துள்ளனர்.

சோகக்காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை தந்திருக்கலாம் ராஜஸ்ரீ. பெரும்பாலான காட்சிகள் இவரைச்சுற்றியே வலம் வருவதால் நடிப்புச்சுமை அதிகம். இவரது நாடகப்பயணத்தில் இது ஒரு முக்கியமான இடத்தைப்பெறும் எனலாம்.      

தந்தை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பு என்றாலும் சோகக்காட்சிகளில் ஜெயசூர்யாவின் முகம் நிறைய மெனக்கெடும் அளவிற்கு கண்களில் அந்த உணர்வு எட்டிப்பார்க்க மறுக்கிறது. மேலும் பயிற்சி வேண்டும்.

செந்திலாக அருண்குமார் மற்றும் தேவகியாக அஞ்சலி. இருவரும் மேடை நாடகத்திற்கு புதிது போல. இவர்கள் அழும்போது நம்மால் சிரிப்பை அடக்க இயலவில்லை. அடுத்த நாடகங்களில் 'உண்மையாக' அழுது நடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.     

மாமாவுடன் நகைச்சுவை, காவல் நிலையத்தில் ரௌத்திரம், உமா மற்றும் அவரது குடும்பத்தாருடன் நெகிழ்ச்சி என நிறைவாக நடித்துள்ளார் விக்னேஷ் செல்லப்பன்.

ராகவாச்சாரி எனும் கல்யாணத்தரகர் வேடத்தில் ஆடிட்டர் நரசிம்மன். வழக்கம் போல வளவள கொழகொழவென்று பேசி பொறுமையை சோதிக்கிறார். இந்த கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் நாடகத்திற்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. நல்லவேளை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இவர் வந்து சென்றதால் நாம் தப்பினோம். 

இம்மீன்களுக்கு அவ்வப்போது டிஸ்யூ பேப்பர் தந்து கண்ணீரை துடைத்திருக்கிறது குகப்ரசாத்தின் மென்சோக பின்னணி இசை. பெரம்பூர் குமாரின் ஒப்பனை நன்று. கிச்சாவின் ஸ்பாட் லைட் ஒலியமைப்பு மேலும் வெளிச்சத்தை தந்திருக்கலாம். அரங்க அமைப்பு சைதை குமார். மிகக்குறுகிய பட்ஜெட் என்பதால் பெரும்பாலும் திரைச்சீலைகளை வைத்தே ஒப்பேற்றியுள்ளனர்.     

உடல் உறுப்பு தானம் எனும் நல்லதோர் கருத்தை கையில் எடுத்து அதனை குடும்பக்கதையுடன் கலந்திருக்கும் இயக்குனர் பாரதிவாசனை பாராட்ட வேண்டும். ஆனால் பந்தியில் தலைவாழை இலையை மட்டும் பரிமாறினால் போதுமா?

சுமார் ஒருமணிநேரம் நாற்பத்தியைந்து நிமிடங்கள் நடக்கும் இந்நாடகத்தில் பெரும்பாலான காட்சிகள் மந்த நிலையிலேயே இருந்தன. சென்டிமென்ட் ரசத்தை அதிகம் ஊற்றியதில் தவறில்லை. ஆனால் அதனை சிறப்பாக செய்திருக்கலாம். நாடகம் நெடுக வெண் பொங்கல் சாப்பிட்டுவிட்டு அரை மயக்கத்தில் இருந்தது போல பார்வையாளர் இருக்கையில் அமர வேண்டி இருந்தது. மனதை மயக்கும் நாடகம் போட்டால் ரசிக்கலாம். இப்படி தாலாட்டி தூங்க வைக்கும் அளவிற்கு மயக்கினால்..?

கதை, வசனம், இயக்கம் போன்ற இலாக்காக்களில் பழமைத்தன்மை ஊறிக்கிடப்பதை பாரதிவாசன் சுய ஆய்வு செய்து உடனடியாக மராமத்து செய்ய வேண்டும். உணர்வுபூர்வமான குடும்ப நாடகங்களை எடுப்பதில் தவறில்லை. ஆனால் ரசிகர்களுக்கு எப்படி படைக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது. அதனை பாரதிவாசன் சீக்கிரம் உணர்ந்தால் மகிழ்ச்சி.


தண்ணீரில் மீன்(கள்) அழுதால்.... மட்டும் போதாது. அதனைக்கண்டு நாடகம் பார்ப்போரும் அழ வேண்டும். அதாவது இப்படி ஒரு உருக்கமான படைப்பை பார்க்கிறோமோ என்று அழ வேண்டுமே தவிர... இப்படி வசமாக சிக்கிக்கொண்டோமே என்று அழக்கூடாது.     

--------------------------------------------------------------


Sunday, July 22, 2018

கனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்டம்மிஸ் ட்ராமா துவங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.   நாடக உலகில் பிரசித்தி பெற்ற கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் - 2018 கோடை நாடக விழாவில் இக்குழுவினர் அரங்கேற்றிய படைப்பு 'கனவு மெய்ப்பட'. 21/07/2018 அன்று வாணி மஹாலில் மீண்டும் மேடையேறியது. எழுத்து, இயக்கம் - ஸ்ரீவத்சன்.

கிராமத்து சிவன் கோவில் ஒன்றில் குருக்களாக இருப்பவரின் கனவில் இறைவன் தோன்றுகிறார். பல்லாண்டுகளாக உரிய பராமரிப்பின்றி இருக்கும் கோவிலுக்கு கோபுரம் எழுப்பி சிவனுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்பது குருக்களின் ஆசை, லட்சியம். ஆகவே தர்மகர்த்தாவிடம் தனது எண்ணத்தை சொல்கிறார். தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இது சாத்தியமா எனும் ஐயம் தர்மகர்த்தாவின் மனதில் எழுந்தாலும் இன்னொரு பக்கம் அதற்கான முயற்சிக்கும் ஒத்துழைக்கிறார். கோபுரம் கட்டப்பட்டதா?

'வசதியாக உள்ளதா?' 'நிம்மதியாக உள்ளது', 'பாதி ராஜகோபுரம் என் பொறுப்பு' 'வெற்றிலை தோட்டம் என் பொறுப்பு' என ஸ்ரீவத்சனின் வசனங்கள் கருத்தும், சிரிப்பும் கலந்து ரசிக்க வைக்கின்றன.

நடித்தவர்கள் அனைவரும் தமது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக தர்மகர்த்தாவாக வரும் பூ(வராஹ்) திருமலை. கிராமத்து வட்டார வழக்கை இயல்பாக கையாண்டு நன்றாக நடித்துள்ளார். இப்படியான பேச்சு வழக்குடன் நடிப்பவர்கள் மேடை நாடகத்தில் அருகி வரும் காலத்தில் பூ திருமலை போன்றவர்களின் இதுபோன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கது.

நுணுக்கமான விஷயங்களை நேர்த்தியாக செய்வதில் டம்மிஸ் குழு ஒருபடி முன்னே நின்று வருகிறது. இங்கும் அதுபோல ஒரு காட்சி.  பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகள் குருக்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் மேடையின் இடதுபுறம் பூ விற்கும் பெண்மணியாக சுசித்ரா ரவி அமர்ந்திருக்கிறார்.

சற்று நீளமான உரையாடல் என்பதால் சில நிமிடங்கள் இக்காட்சி நடைபெறுகிறது. அந்நேரம் முழுவதும் கூடையில் இருக்கும் மல்லிகையை நூலில் கோர்த்துக்கொண்டு இருக்கிறார் சுசித்ரா. நாடகம் பார்ப்பவர்கள் இதனை எங்கே கவனிக்க போகிறார்கள் என்று நினைக்காமல் உண்மையிலேயே பூக்களை கட்டுகின்றன அவரது விரல்கள். இந்நாடகத்திற்காக பூக்கள் கட்ட கற்றுக்கொண்டாரா அல்லது இயல்பிலேயே தெரிந்து வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. அத்தனை நேர்த்தி. புதிதாக நாடகத்தில் நடிக்க விரும்புபவர்கள் இதுபோன்ற நாடகக்கலை மீதான அர்ப்பணிப்பை கவனிக்க வேண்டியது அவசியம். 

பக்தி மணம் கமழும் இசையென்றால் கிரிதரனின் பங்களிப்பு தூக்கலாகவே இருக்கும். இதிலும் பின்னணி இசையும். சிலவரிகளில் வரும் பாடல்களும்   மனதை மயக்குகிறது. கோபுரம் எழுப்பப்பட்ட கோவில் மற்றும் கூரைகள் என பத்மா ஸ்டேஜ் கண்ணனின் வேலைப்பாடு நன்று.

இப்படியாக ஆங்காங்கே நிறைவான அம்சங்கள் இருந்தாலும் சரிவுகளும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

எடுத்த எடுப்பிலேயே காஃபி ஜோக். இன்னும் எத்தனை யுகங்களுக்கு வலிந்து சிரிப்பது.. நமச்சிவாயா!! குருக்களை பார்த்து வரிக்கு ஒருமுறை 'ஐயரே..ஐயரே' என்று தர்மகர்த்தா அழைத்து அறுக்கிறார். 'கர்ப்பகிரகம் - கர்ப்பம்' என அவ்வப்போது டி.ராஜேந்தர் பாணி பஞ்ச்கள்... இம்சை.

நகைச்சுவை என்கிற பெயரில் வெற்றிலையை குதப்பிக்கொண்டு ஸ்ரீவத்சன் நடிப்பது..ஐயகோ.

துவக்கம் முதலே எந்த வித எதிர்பார்ப்பு அல்லது திருப்பமும் இன்றி தட்டையாக நகரும் திரைக்கதை இந்நாடகத்தின் முக்கிய பலவீனம். எப்படியும் குருக்கள் தனது லட்சியத்தை நிறைவேற்றி விடுவார் என்பதற்கான அறிகுறிகள் அடுத்தடுத்த காட்சிகளில் தெரிந்து விடுவதால் சுவாரஸ்யம் பெரிதாய் இல்லை.

பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோவில் நடப்பது போல வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர், பல ஆயிரம் சம்பளம் வாங்கும் இளம்பெண், பிள்ளைவரம் வேண்டி வரும் தம்பதியர் என ஆளாளுக்கு தியாகிகளாக மாறி நன்கொடை தருகிறார்கள். உச்சக்கட்டமாக கோவிலுக்கு பிரதமர் வருவதும், பிறகு மழை பொழிவதும்... அடேங்கப்பா!!

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் கட்டல், பின்னருள்ள தர்மங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி.

இவ்வளவு சிரமப்பட்டு கோவிலை கட்டுவதை விட அச்செலவில் பள்ளிக்கூடம் கட்டி நாடகத்தில் வரும் பூ வியாபாரி, பால்காரர் உள்ளிட்ட ஏழைகளின் பிள்ளைகளுக்கு இலவசக்கல்வி அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று மனதில் ஒரு சிறு ஆதங்கம் வராமல் இல்லை.


கனவு மெய்ப்பட - அடுத்த முறையாவது கதை மற்றும் இயக்கத்தில் ஸ்ரீவத்சன் மேலும் கவனம் செலுத்த வேண்டும். சொல்லடி சிவசக்தி. வல்லமை தாராயோ!!     

.........................................
              

                
Related Posts Plugin for WordPress, Blogger...