டம்மிஸ் ட்ராமா துவங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாடக உலகில் பிரசித்தி பெற்ற கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் - 2018 கோடை நாடக விழாவில் இக்குழுவினர் அரங்கேற்றிய படைப்பு 'கனவு மெய்ப்பட'. 21/07/2018 அன்று வாணி மஹாலில் மீண்டும் மேடையேறியது. எழுத்து, இயக்கம் - ஸ்ரீவத்சன்.
கிராமத்து சிவன் கோவில் ஒன்றில் குருக்களாக இருப்பவரின் கனவில் இறைவன் தோன்றுகிறார். பல்லாண்டுகளாக உரிய பராமரிப்பின்றி இருக்கும் கோவிலுக்கு கோபுரம் எழுப்பி சிவனுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்பது குருக்களின் ஆசை, லட்சியம். ஆகவே தர்மகர்த்தாவிடம் தனது எண்ணத்தை சொல்கிறார். தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இது சாத்தியமா எனும் ஐயம் தர்மகர்த்தாவின் மனதில் எழுந்தாலும் இன்னொரு பக்கம் அதற்கான முயற்சிக்கும் ஒத்துழைக்கிறார். கோபுரம் கட்டப்பட்டதா?
'வசதியாக உள்ளதா?' 'நிம்மதியாக உள்ளது', 'பாதி ராஜகோபுரம் என் பொறுப்பு' 'வெற்றிலை தோட்டம் என் பொறுப்பு' என ஸ்ரீவத்சனின் வசனங்கள் கருத்தும், சிரிப்பும் கலந்து ரசிக்க வைக்கின்றன.
நடித்தவர்கள் அனைவரும் தமது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக தர்மகர்த்தாவாக வரும் பூ(வராஹ்) திருமலை. கிராமத்து வட்டார வழக்கை இயல்பாக கையாண்டு நன்றாக நடித்துள்ளார். இப்படியான பேச்சு வழக்குடன் நடிப்பவர்கள் மேடை நாடகத்தில் அருகி வரும் காலத்தில் பூ திருமலை போன்றவர்களின் இதுபோன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கது.
நுணுக்கமான விஷயங்களை நேர்த்தியாக செய்வதில் டம்மிஸ் குழு ஒருபடி முன்னே நின்று வருகிறது. இங்கும் அதுபோல ஒரு காட்சி. பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகள் குருக்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் மேடையின் இடதுபுறம் பூ விற்கும் பெண்மணியாக சுசித்ரா ரவி அமர்ந்திருக்கிறார்.
சற்று நீளமான உரையாடல் என்பதால் சில நிமிடங்கள் இக்காட்சி நடைபெறுகிறது. அந்நேரம் முழுவதும் கூடையில் இருக்கும் மல்லிகையை நூலில் கோர்த்துக்கொண்டு இருக்கிறார் சுசித்ரா. நாடகம் பார்ப்பவர்கள் இதனை எங்கே கவனிக்க போகிறார்கள் என்று நினைக்காமல் உண்மையிலேயே பூக்களை கட்டுகின்றன அவரது விரல்கள். இந்நாடகத்திற்காக பூக்கள் கட்ட கற்றுக்கொண்டாரா அல்லது இயல்பிலேயே தெரிந்து வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. அத்தனை நேர்த்தி. புதிதாக நாடகத்தில் நடிக்க விரும்புபவர்கள் இதுபோன்ற நாடகக்கலை மீதான அர்ப்பணிப்பை கவனிக்க வேண்டியது அவசியம்.
பக்தி மணம் கமழும் இசையென்றால் கிரிதரனின் பங்களிப்பு தூக்கலாகவே இருக்கும். இதிலும் பின்னணி இசையும். சிலவரிகளில் வரும் பாடல்களும் மனதை மயக்குகிறது. கோபுரம் எழுப்பப்பட்ட கோவில் மற்றும் கூரைகள் என பத்மா ஸ்டேஜ் கண்ணனின் வேலைப்பாடு நன்று.
இப்படியாக ஆங்காங்கே நிறைவான அம்சங்கள் இருந்தாலும் சரிவுகளும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
எடுத்த எடுப்பிலேயே காஃபி ஜோக். இன்னும் எத்தனை யுகங்களுக்கு வலிந்து சிரிப்பது.. நமச்சிவாயா!! குருக்களை பார்த்து வரிக்கு ஒருமுறை 'ஐயரே..ஐயரே' என்று தர்மகர்த்தா அழைத்து அறுக்கிறார். 'கர்ப்பகிரகம் - கர்ப்பம்' என அவ்வப்போது டி.ராஜேந்தர் பாணி பஞ்ச்கள்... இம்சை.
நகைச்சுவை என்கிற பெயரில் வெற்றிலையை குதப்பிக்கொண்டு ஸ்ரீவத்சன் நடிப்பது..ஐயகோ.
துவக்கம் முதலே எந்த வித எதிர்பார்ப்பு அல்லது திருப்பமும் இன்றி தட்டையாக நகரும் திரைக்கதை இந்நாடகத்தின் முக்கிய பலவீனம். எப்படியும் குருக்கள் தனது லட்சியத்தை நிறைவேற்றி விடுவார் என்பதற்கான அறிகுறிகள் அடுத்தடுத்த காட்சிகளில் தெரிந்து விடுவதால் சுவாரஸ்யம் பெரிதாய் இல்லை.
பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோவில் நடப்பது போல வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர், பல ஆயிரம் சம்பளம் வாங்கும் இளம்பெண், பிள்ளைவரம் வேண்டி வரும் தம்பதியர் என ஆளாளுக்கு தியாகிகளாக மாறி நன்கொடை தருகிறார்கள். உச்சக்கட்டமாக கோவிலுக்கு பிரதமர் வருவதும், பிறகு மழை பொழிவதும்... அடேங்கப்பா!!
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் கட்டல், பின்னருள்ள தர்மங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி.
இவ்வளவு சிரமப்பட்டு கோவிலை கட்டுவதை விட அச்செலவில் பள்ளிக்கூடம் கட்டி நாடகத்தில் வரும் பூ வியாபாரி, பால்காரர் உள்ளிட்ட ஏழைகளின் பிள்ளைகளுக்கு இலவசக்கல்வி அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று மனதில் ஒரு சிறு ஆதங்கம் வராமல் இல்லை.
கனவு மெய்ப்பட - அடுத்த முறையாவது கதை மற்றும் இயக்கத்தில் ஸ்ரீவத்சன் மேலும் கவனம் செலுத்த வேண்டும். சொல்லடி சிவசக்தி. வல்லமை தாராயோ!!
.........................................