CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, July 15, 2017

டு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்


'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது?' என லாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்ததன் பலனாய் பாஸ்கர் பாலசுப்ரமணியம் மற்றும் ப்ரியா  பாஸ்கர் தம்பதியரால் உருவானது ஷ்ரிஷ்டி ட்ரமாஸ். 2010 ஆம் வருடம் முதல் நாடகமாக அரங்கேறியது 'ஆஹா என்ன பொருத்தம்'. ஒரு சில காரணங்களுக்காக தொடர்ச்சியாக மேடையேற்ற இயலாமல் போனது. பிறகு 2014 இல் 'தெனாலி ராகவன்' எனும் நகைச்சுவை நாடகத்தை  இக்குழுவிற்காக 'அப்பா' ரமேஷ் இயக்கினார். மீண்டும் ஒரு இடைவெளி. தற்போது 'டு ஹெல் வித் எமா' மூலம் களமிறங்கி இருக்கிறது ஷ்ரிஷ்டி ட்ரமாஸ். அரங்கேறிய தினம்.  ஜூலை 7 ஆம் தேதி, 2017. இடம்: மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்.     

எமலோக ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை இந்திரன் தலைமையில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. எமனின் அனுமதியின்றி நடப்பதோடு, அவருக்கு அழைப்பும் வந்து சேரவில்லை. இதற்கு ஈசனும் ஒப்புதல் அளிக்க மனம் நொந்து போகிறார் எமன். பின்னணியில் இருக்கும் சூழ்ச்சி என்ன? அதனை எப்படி கையாள்கிறார் என்பதை சொல்லும் நாடகம்.

பிரதான வேடத்தை ஏற்று நடித்ததோடு வசனம் எழுதி, தயாரித்தும் இருக்கிறார் பாஸ்கர். சித்ரகுப்தனாக வரும் கார்த்திக் நாகராஜன்தான் இதன் கதாசிரியர். இயக்கம்: கிரேஸி மோகன் குழுவின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராக இருக்கும் 'அப்பா' ரமேஷ். 

ஸ்ரீராமர், வழக்கறிஞர் என மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று திறமையை நிரூபித்த பாஸ்கருக்கு இது நிச்சயம் சவாலான வேடம். முந்தைய நாடகங்களை போலன்றி ஒருவித தயக்க உணர்வுடன் நடித்தது எமனுக்கான முழு கம்பீரத்தை சில படி கீழிறக்கியது என்று சொல்லலாம். மற்றபடி 'ழ'கரம் உள்ளிட்ட  தமிழ் வார்த்தை உச்சரிப்புகளில் கவனம் செலுத்தி வசனங்களை பேசியது பாராட்டத்தக்கது.   

சித்ரகுப்தனாக கார்த்திக் நாகராஜன். தெளிவான வசனங்கள் மற்றும் நேர்த்தியான நடிப்பு. சென்னை சிறப்புத்தமிழ் பேசும் நண்பர்களாக கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ண பிரசாத். கிடைத்த சந்தர்ப்பத்தை இருவருமே கூடுமானவரை நன்றாக பயன்படுத்தி இருப்பினும் கார்த்திகேயன் தரும் ரியாக்சன்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பது நமக்கு எமதர்ம சங்கடம். குறிப்பாக பேயைக்கண்டு தொடர்ச்சியாக அலறிக்கொண்டே இருப்பது.

நகைச்சுவைக்காக என்றாலும் கூட கழுத்தில் கலர் கர்சீப்புடன்,  முகத்தில் கோடு போட்டுக்கொண்டு உலா வரும் கிருஷ்ண பிரசாத் போன்ற வஸ்தாதுகள் இன்னும் இருக்கிறார்கள் என்பது நம்பும்படி இல்லை. 

அரசியல்வாதியாக சஜீத் மற்றும் நாரதராக பாபு. சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் 'ஊருக்கு இளைத்தவன் கோபாலபுரம் ஆண்டி' என்பது போல சஜீத்திற்கு மஞ்சள் துண்டை அணிவித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சசிகலாவின் சமாதி அடி உட்பட இதர கட்சியினரையும் பகடி செய்திருப்பினும் பிரதானமாய் எள்ளலுக்கு உள்ளானவர் மஞ்சள் துண்டுக்காரர்தான். உமது 'மனைவிகள்' என அவரை கேலி பேசுவதாகவும் ஒரு வசனம் வருகிறது. இப்படி ஒரு வசனத்தை ஆளும் தரப்பில் இருக்கும்/இருந்த ஜெயலலிதா அல்லது மோடிக்கு எதிராக வைத்திருந்தால் நிச்சயம் அந்த துணிச்சலை பாராட்டி இருக்கலாம். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் திமுக எதிர்ப்பு மனப்பான்மையை 'மட்டும்' மேடை நாடகங்களில் காட்டப்போகிறார்கள் என்பது புலனாகவில்லை.

எமதர்ம சங்கடம், சீனாக்காரர்கள் என ரசிக்க வைக்கும் வசனங்களை பாஸ்கர் எழுதி இருக்கிறார். அடுத்து என்ன எனும் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாய் அமைந்திருக்கும் கார்த்திக்கின் கதைக்களமும் நன்று. எனினும் வேகத்திற்கு தடை போடுவது கிருஷ்ணா மற்றும் கார்த்திக் தோன்றும் இரு நீளமான காட்சிகள்தான். சில தேவ நிமிடங்களுக்குள் தனது வேலையை முடித்துக்கொள்ள எமன் செய்யும் கடின முயற்சிகளை இன்னும் சுவாரஸ்யத்துடன் கூறி இருக்கலாம்.

சிவபெருமானாக கண்ணன். அடுத்த முறை இந்நாடகம் மேடையேறுகையில் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பில் நிறைய முன்னேற்றம் தேவை அல்லது வேறொரு சிவனை நியமித்தால் நன்று.

எமன், கிங்கரன், நாரதர் என அனைவருக்கும் பொருத்தமான ஒப்பனையை செய்து அசத்தியிருக்கும் பெரம்பூர் குமாருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற ஆடைகளை கச்சிதமாய் தேர்வு செய்திருக்கும் ப்ரியா பாஸ்கருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.       

தேவர்கள் மற்றும் பூலோக மனிதர்களால் சிக்கலுக்கு உள்ளாகும் எமதர்மன், உடனிருந்து தன் சுயரூபத்தை காட்டும் சித்ரகுப்தன் என மேடை நாடகத்திற்கு தேவையான கதையை தேர்வு செய்திருக்கிறார் கார்த்திக். பெரிதாய் கொட்டாவி வர வைக்காமல் வசனம் மற்றும் பிரதான வேடம் என பாஸ்கரின் பங்களிப்பு ஒருபுறம் என்றால், மறுபுறம் இளைஞர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் இயக்குனர் அப்பா ரமேஷ். 

நாடகம் துவங்குவதற்கு முன்பு அப்பா ரமேஷ் பேசிய முன்னுரையில் 100% ஆங்கிலம். ஆங்கிலக்கலப்பை தவிர்க்க இயலாது என்பதை புரிந்துகொள்ள இயல்கிறது. அதற்காக முற்றிலும் ஆங்கிலம் என்பது எதற்காக? யாருக்காக?

பெரும்பாலான நாடகங்களில் கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை ஒருவரே செய்வது வழக்கம். சில சமயங்களில் இருவரின் பங்களிப்பு இருக்கும். ஆனால் இந்நாடகத்தில் ஆளுக்கொரு பொறுப்பை எடுத்துக்கொண்டு இருப்பது வித்யாசம். கார்த்திக், பாஸ்கர் போன்ற இளைஞர்களுடன் அப்பா ரமேஷ் போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞர் இணைந்து ஒரு படைப்பினை உருவாக்குவது வரவேற்கத்தக்கது.

முந்தைய நாடகமான தெனாலி ராகவனை விட மேலும் சில படிகள் முன்னோக்கி நகர்ந்திருக்கிறது டு ஹெல் வித் எமா. எனினும் பூரண திருப்தியை தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். விரைவில் அந்த இலக்கை நோக்கி ஷ்ரிஷ்டி ட்ரமாஸ் கவனத்துடன் பயணிக்க வேண்டும். 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஷ்ரிஷ்டி ட்ரமாஸ் மேலும் முன்னேறட்டும்... வலைப்பக்கம் உங்கள் பார்வையும் தொடரட்டும்...

skii said...

நன்றி சிவகுமார்

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் பகிர்வு. நாடகங்கள் இன்னமும் நடக்கிறது என்பதே மகிழ்ச்சி தருகிறது.

வலைப்பக்கம் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. முகநூலில் மூழ்கி விட்டீர்களே....

Ramesh DGI said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி

tnkesaven said...

அக்கு வேறு ஆணிவேறு என்று அமர்க்களமான விமர்சனம்
பாராட்டுக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...