CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, December 30, 2015

திரை விரு(ந்)து 2015 - தமிழ்ப்படங்கள்

 
தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் அளவிற்கான எண்ணிக்கையில் இவ்வருடம் படங்கள் வெளியாகவில்லை. ஹாரர், மலையாளம் டு தமிழ் ரீமேக் மற்றும் சத்தற்ற வணிகப்படங்கள் என சக்சஸ் விகிதம் கலந்துகட்டி இருந்தது.  தரமான கமர்சியல் மற்றும் உலக சினிமாத்தரம் கொண்ட ரிலீஸ்கள் சொற்பமே. ஆறு குறும்படங்களை சேர்த்து கார்த்திக் சுப்பராஜ் அளித்த பெஞ்ச் டாக்கீஸ், சேரனின் D2H நிறுவனம் மூலம் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, முழுக்க சயின்ஸ் ஃபிக்சனை மையமாக கொண்ட இன்று நேற்று நாளை என புதிய முயற்சிகள் அரங்கேறின. கமர்சியல், கலைப்படம் என தனித்தனியே இயங்காமல் கமர்சியலில் கொஞ்சம் கலையம்சமும், கலையில் கொஞ்சம் கமர்சியல் அம்சமும் இருத்தல் வேண்டுமென தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. மெகா ஸ்டார்களின் படைப்புகள் பெருமளவு மண்ணை கவ்வ ஆரம்பித்து இருப்பதும், தரமான படம் என போற்றப்படும் படைப்புகள் தியேட்டர்களில் குறைந்தபட்ச வரவேற்பை பெறக்கூட தடுமாறிக்கொண்டு இருப்பதும்தான் தற்போதைய நிலை. 

பெரிய ஸ்டார்களின் கால்ஷீட்டை மட்டும் வைத்துக்கொண்டு சரக்கில்லாத குப்பைகளை கொட்டும் கூட்டம் தரமான படங்கள் மக்களிடையே ஆதரவை பெறுவதை நிச்சயம் விரும்பாது. ஒரே ஒரு களியாட்ட படைப்பு போதும் ஆட்டத்தை கலைக்க. அது சகலகலா வல்லவனோ அல்லது த்ரிஷா அல்லது நயன்தாராவோ. 

இனி 2015 ஆண்டு வெளிவந்த படங்களில் நான் பார்த்ததில் எனக்குப்பிடித்த கலைஞர்கள் மற்றும் படங்களின் லிஸ்ட் உங்கள் பார்வைக்கு:


நகைச்சுவை நடிகர்(கள்): பாலசரவணன் & கருணாஸ் (டார்லிங்)


டி.வி. சீரியலில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு திரைக்கு வந்த இளம் நகைச்சுவை நடிகர் பால சரவணன். பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்கள் ஓரளவு பெயரை வாங்கித்தந்தன. ஆனால் டார்லிங் மூலம் கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையான வாய்ப்பு. ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த கருணாஸுக்கும் சரியான கம்பேக். பேய்க்கு பயந்து இருவரும் அலற சிரிப்பு சப்தத்தில் அரங்கம் அதிர்ந்தது. 

நெக்ஸ்ட் பெஸ்ட்: ராஜதந்திரத்தில் அறிமுகமான தர்புகா சிவா,  காக்கா முட்டை ரமேஷ் திலக் - யோகிபாபு இணை, நானும் ரவுடிதானில் ராகுல் தாத்தாவாக நடித்த உதயபானு.


பாடகி: லலிதா விஜயகுமார்.  பாடல்: 'வாடி ராசாத்தி' (36 வயதினிலே) 


இசைப்பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற லலிதாவிற்கு இதுதான் முதல் திரைப்பாடல் என்பது ஆச்சர்யம். இசை பயிற்றுவித்தலை மட்டுமே பிரதான பணியாக செய்து வந்தவருக்கு பாடகர் ஆகும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் ஊர்க்காரரான சந்தோஷ் நாராயணுக்கு இவரது குரல் வளத்தின் மீது நம்பிக்கை அதிகம். 'வாங்கம்மா ராசாத்தி' என ஆரத்தி எடுத்து ரெக்கார்டிங் தளத்திற்கு அழைத்து வந்துவிட்டார். பதிலுக்கு ஜோதிகாவை 'வாடி ராசாத்தி' என வாழ்த்தி கௌரவித்தார் லலிதா. 

நெக்ஸ்ட் பெஸ்ட்: சின்மயி. பாடல்: 'இதயத்தை ஏதோ ஒன்று' (என்னை அறிந்தால்).


பாடகர்: பென்னி தயாள்.  பாடல்: 'உனக்கென்ன வேணும்' (என்னை அறிந்தால்)


பெண்ணை பெற்ற தகப்பன்கள் எல்லாம் தங்க மீன்கள் படத்தின் 'ஆனந்த யாழை' பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பார்கள். இவ்வருடம் 'உனக்கென்ன வேணும் சொல்லு' மூலம் அந்த மேஜிக் ரிப்பீட் ஆகியிருக்கிறது. பென்னி தயாளின் வசீகரிக்கும் குரல், தாமரையின் அழகிய வார்த்தை தேர்வுகள் மற்றும் சிறப்பாய் காட்சியாக்கப்பட்ட விதம் என அனைத்தும் க்ளாஸ்.

நெக்ஸ்ட் பெஸ்ட்: குற்றம் கடிதலுக்காக 'காலை நிலா' பாடலை பாடிய மது பாலகிருஷ்ணன்.


பாடலாசிரியர்:  ஜெரால்ட் திரவ். பாடல்: 'காலை நிலா' (குற்றம் கடிதல்)குறும்பட எடிட்டிங், இயக்கம் என இயக்குனர் பிரம்மாவோடு பயணித்து வந்தவர் ஜெரால்ட். குற்றம் கடிதல் இயக்குனர் டீமில் முக்கிய நபர். 'காலை நிலா காலை நிலா கடல் தாண்டி வழிந்தோடுதே' எனும் பாடலில் யதார்த்தமும், கவித்துவமும் வழிந்தோடியது. விடியலில் பள்ளிக்கும், வேலைக்கும் பரபரப்பாக கிளம்பு சமூகம் எப்படி நிரந்தரத்தன்மையின்றி அந்நாளை கடக்கிறது என்பதை சொல்லும் அற்புதமான வரிகள். 'முன்பனி மேலே பிம்பங்கள் விரிய..திசைகள் எங்கும் நாடகம் தொடரும்' என ஒவ்வொரு வரியிலும் நிதர்சனத்தின் ஆக்ரமிப்பு. அசத்தல் ஜெரால்ட்!! 

நெக்ஸ்ட் பெஸ்ட்: தொட்டால் தொடரும் படத்திற்காக இயக்குனர் கேபிள் சங்கர் மற்றும் கார்க்கிபவா இணைந்து எழுதிய 'யாருக்கும் ஈவுமில்ல பாஸு பாஸு'. சாமான்யனின் அறச்சீற்றம், அறமிழந்த ஊடகங்கள் என நடப்பு நியாய, அநியாயங்களை நச்சென்று சுட்டிக்காட்டியது. கானா வகை பாடலுக்கு சற்று மாறுபட்ட டச்சை தந்து இருந்தது சிறப்பம்சம். வில்லன்: அரவிந்த் சாமி (தனி ஒருவன்)


'செகப்பான வில்லன் கதைக்கு ஆக மாட்டான்' என ரசிகர்கள் நொந்துபோகும் அளவிற்கு மும்பை, ஹாலிவுட் என வேலைக்காகாத வில்லன்களை இறக்குமதி செய்து கையை சுட்டுக்கொண்டது கோலிவுட். அந்த நிலையை தலைகீழாக மாற்றியது சித்தார்த் அபிமன்யுவின் வரவு. காது கிழிக்க கத்துவது, ரத்தம் தெறிக்க அடிப்பதென உளுத்துப்போன வில்லன் பார்முலாவை எட்ட வைத்து விட்டு வசீகர சிரிப்பின் மூலம் ஹீரோவுடனான மோதலை க்ளைமாக்ஸ் வரை கெத்தாக தொடர்ந்தார் அரவிந்த் சாமி.  

நெக்ஸ்ட் பெஸ்ட்: நானும் ரவுடிதான் படத்தில் கிள்ளிவளவனாக வந்த நக்கல் நாயகன் பார்த்திபன். நகைச்சுவை கலந்த வில்லன் கேரக்டர் என்றால் இவருக்கு கேக் வாக். கில்லி அடி அடித்ததில் ஆச்சர்யமில்லை.  


துணை நடிகை: ஆஷா சரத் (பாபநாசம்)


த்ரிஷ்யத்தில் செய்திருந்த அதே கதாபாத்திரம். மகன் காணாமல் போனதற்கு சுயம்புலிங்கம் குடும்பத்தார்தான் காரணமாய் இருக்க வேண்டும் எனும் சந்தேகம் வலுக்க அவர்களை கடும் டார்ச்சர் செய்யும் காவல்துறை உயரதிகாரியாகவும், உண்மை தெரிந்த பிறகு மனம் வருந்தும் தாயாகவும் சிறப்பாய் ஸ்கோர் செய்திருந்தார் ஆஷா. 

நெக்ஸ்ட் பெஸ்ட்: காக்கா முட்டையில் பாட்டியாக நடித்த சரோமி தைரியம். சினிமாவிற்காக சாந்திமணி என பெயர் மாற்றியவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வெளிச்சத்திற்கு வராமல் இருந்தவருக்கு பெரியளவில் பெயரை வாங்கித்தந்தது காக்கா முட்டை. 


துணை நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (உத்தம வில்லன்) 
 

சமகால தமிழ் திரையுலகின் முன்னணி துணை நடிகர்களில் ஒருவர். பாஸ்கரின் திறமையை படைப்பாளிகள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறு வட்டார வழக்குகள் பேசுவதில் இவரை அடித்துக்கொள்ள இப்போதைக்கு ஆளில்லை. நகைச்சுவை நடிகராக சினிமா பயணத்தை துவக்கிய இவரை மொழி உள்ளிட்ட சில படங்கள் நல்ல குணச்சித்திர நடிகராகவும் அடையாளம் காட்டின. மனோரஞ்சனின் (கமல்)  வலதுகரம் சொக்கு செட்டியாராக உத்தம வில்லனில் வெளுத்து வாங்கினார். 'இத்தனை ஆண்டுகளாக கடிதத்தை ஏன் மறைத்து வைத்தாய்?' என கமல் அதிர்ச்சி கலந்த கோபத்துடன் கேட்கும்போது கண்ணில் நீர் பொங்க விளக்கம் தருகையில் 'எனக்கும் சுயமரியாதை உண்டு' என்று பதிலடி கொடுப்பார். என்னா நடிப்பு சொக்கு செட்டியாரே!!

நெக்ஸ்ட் பெஸ்ட்:  தண்டிக்கப்பட்ட குற்றவாளியை தூக்கில் போடும் ஊழியர் எமலிங்கமாக 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'யில் நடித்த விஜய சேதுபதி. குற்ற உணர்ச்சியில் துடிக்கும் நபராக கவனிக்கத்தக்க நடிப்பை தந்திருந்தார். 


நடிகை: ஐஸ்வர்யா (காக்கா முட்டை)

 
சினிமா பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் ஐஸ்வர்யா. அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் மூலம் சற்று பரிச்சயமானார். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மட்டுமின்றி சென்னையின் சிறப்பு தமிழ் பேசுபவராகவும் இருக்க வேண்டும். வேறு நாயகிகள் என்றால் 'எனது கலையுலக பயணம் என்னாவது?' என்று கும்பிடு போட்டிருப்பார்கள். ஆனால் சவாலை ஏற்று நடித்தார் ஐஸ்வர்யா. கணவன் சிறையில் இருக்க வழக்கு மற்றும் குடும்பம் நடத்துவதற்கான செலவுகளை சமாளிக்க போராடும் அடித்தட்டுவாழ் இல்லத்தரசி கேரக்டரில் மிளிர்ந்தார். மகன்களை அடிக்க மனம் வராமல் கண்களால் மட்டுமே கண்டிப்பை காட்டும் பாசம் அழகு. அழுகை, ஆர்ப்பாட்டம் என வழக்கமான செயற்கை பூச்சுகளை அண்டவிடாமல் வெகு இயல்பாய் நடித்திருந்தார்.
s
நெக்ஸ்ட் பெஸ்ட்:  காது கேளாத பெண்ணாக நானும் ரவுடிதானில் கலக்கிய நயன்தாரா. தந்தைக்கு நேர்ந்த நிலையை அறிந்த பிறகு தெருவில் அழுதபடியே நடந்து செல்லும் காட்சி.. சென்டிமென்ட் கனமழை.

நடிகர்: மாஸ்டர் ரமேஷ் (காக்கா முட்டை)  
s

பெரிய நடிகர்களை விட சிறியவர்கள் சிறப்பாய் நடித்திருந்தாலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் எனும் வட்டத்திற்குள் அடைத்து விடுவது வாடிக்கை. கமல், ஜெயம் ரவி மற்றும் 'ஆரஞ்சு மிட்டாய்' விஜய் சேதுபதி என பிடித்த நடிகர்கள் வரிசையில் சிலர் இருந்தாலும் சின்ன காக்கா முட்டையாக அசால்ட் செய்த மாஸ்டர் ரமேஷ்தான் எனது ஃபேவரிட் நடிகர் 2015. பொருளை எடைக்கு போட்டதும் கிடைக்கும் காசை கண்டு மகிழ்வது, பீட்ஸா கடையை மிரட்சியுடன் பார்ப்பது, பலநாள் காத்திருப்பிற்கு பிறகு பீட்ஸா சாப்பிடும் ஆசை நிறைவேறும்போது 'ஆயா சுட்ட தோசையே பரவா இல்லல?' என முகம் சுழிப்பது என ஒவ்வொன்றுமே அளந்தெடுத்த க்யூட் ரியாக்சன்கள்.   

வசனகர்த்தா: மணிகண்டன் (காக்கா முட்டை)


சென்னையின் சிறப்பு பேச்சு வழக்கை கதாபாத்திர தன்மையுடன் முற்றிலும் ஒன்றவைத்து வசனங்களை தீட்டியிருந்தார் மணிகண்டன். எங்கும் துருத்தல்கள் இல்லை. 'திருடறமா?' 'இல்ல எடுக்கறோம்', 'ஏன் சிம்பு இந்த ரசம் சாதமெல்லாம் சாப்புட மாட்டானா?' என உதாரணங்கள் ஏராளம்.


இயக்குனர்(கள்): பிரம்மா மற்றும் மணிகண்டன்.

திரைப்படங்கள்: குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை.


மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மூடி மறைக்க முற்படும் பள்ளி நிர்வாகம், குற்ற உணர்ச்சி மனதை உலுக்க மன்னிப்பு கேட்க போராடும் ஆசிரியை, பாலியல் கல்வியின் அவசியம். இம்மூன்றையும் பிரதானமாக வைத்து சுழன்றது குற்றம் கடிதல். அடிப்படையில் பிரம்மா ஒரு நாடகக்கலைஞர் என்பதால் அதன் தாக்கம் படத்தின் சில முக்கிய கட்டங்களில் இருந்தது தொய்வு. மற்றபடி தமிழகத்தில் மட்டுமல்ல. சர்வதேச அங்கீகாரத்திற்கும் முழுத்தகுதி பெற்ற படைப்பை தனது முதல் முயற்சியிலேயே தந்தவர்  பிரம்மா. இப்படி ஒரு உயர்ந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த கிறிஸ்டி சிலுவப்பன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் இருவருக்கும் ஹாட்ஸ் ஆஃப்!!

  

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை படம் பிடித்தால் விருதுகளை நெருங்கி விடலாம். வறுமையின் கோரப்படியில் தவிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள், நெஞ்சை இறுக்கும் பின்னணி இசை, விரக்தி, அழுகை இத்யாதிகளை வைத்துக்கொண்டு பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட்டை பின்பற்றிய படங்களுக்கு மத்தியில் மணிகண்டனின் அணுகுமுறை மாறுபட்டு இருந்தது. கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களையும் நேர்மைத்தனம் கொண்டவையாக உருவாக்கினார். 'ஒரு கீரைக்கட்டு விக்க வெயில்ல காஞ்சி சாகறோம். எங்க கிட்ட பேரம் பேசற. ஆனா ஒடம்ப கெடுக்கற பீட்ஸாவையும், கோக்கையும் வாங்க நூத்துக்கணக்குல செலவு பண்ற' டைப் பொங்கல்கள் இல்லை. ஆனால் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்களை காட்சிகள் மூலமே அழகாய் உணர்த்தி அமைதியாய் சிரித்தது மணிகண்டனின் முதல் பொற்குஞ்சு.   

சர்வதேச விருதுகளை வென்றாலும் காக்கா முட்டை வெகுஜனங்களுக்கும் பிடித்த படமாக மாறியது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீட்ஸா. அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல. (கீழ்) நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் பெரிதும் பரிச்சயமில்லாத வஸ்து பீட்ஸா. செய்தித்தாள் உள்ளே வைக்கப்படும் நோட்டீஸ்கள் மற்றும் தெருவோர விளம்பரங்களில் வியாபித்து இருக்கும் பீட்ஸாவை ஒருமுறையாவது ருசித்தாக வேண்டும் எனும் எண்ணம் இல்லாத சாமான்யர்கள் குறைவுதான். அந்த பல்ஸை நச்சென பிடித்து கதையை உருவாக்கினார். டாப்பிங்காக நகைச்சுவையும் கலந்து தந்ததால் ரசிகர்களை எளிதில் கவர முடிந்தது. பிரமாதமான நடிகர்கள் தேர்வு, வசனங்கள், ஒளிப்பதிவு என அனைத்திலும் டிஸ்டிங்சன். ஸ்டார்கள் முக்கியமல்ல. சரியான முறையில் ப்ரசன்ட் செய்தால் வெற்றி நிச்சயம் என நம்பி தயாரித்த தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...