தீவிர
அரசியலில் தொபுக்கடீர் என விஜயகாந்த் குதித்த பிறகு படங்களில் நடிப்பதை
நிறுத்திக்கொண்டார். அந்த அகம்பாவத்தில் ஈராக்கின் ஐ.எஸ். போன்ற தீவிரவாத
அமைப்புகள் வாலாட்டி வருவதை வருத்தமாய்த்தான் பார்க்கிறது சர்வதேச சமூகம்.
குறிப்பாக கலையுலகில் ஏற்பட்ட இந்த பாலைவன வறட்சியை சற்றேனும் போக்க வைஸ்
கேப்டன் சண்முகபாண்டியன் களமிறங்கி இருக்கும் படம் 'சகாப்தம்'.
கதை:
தந்தை சொல் கேட்டு பொறுப்புடன் வாழும் இளைஞன் சகா. நல்ல வேலை தேடி மலேசியா
செல்கிறான். முறையான கம்பனியில் வேலை பார்க்க பர்மிட் இல்லாததால்
மலேசியாவில் கைதாகும் அவன் அதன் பிற்பாடு அந்நாட்டு போலீஸே மூக்கில் விரல்
வைக்கும் அளவிற்கு எப்படி சமூக விரோதிகளை ஒடுக்குகிறான்?
ரெண்டு
செட் நெய்ப்பொங்கல் சாப்பிட்டவர் போல பல சீன்களில் மந்தமாய் நடந்தவாறே
நடித்திருக்கிறார் சண்முகம். 'மன்னிப்பு கேக்குறது எங்க பரம்பரைக்கே
பிடிக்காது' என்று வைக்கும் பஞ்ச்...கடமை. நாயகி உதட்டோடு முத்தம்
தந்தபிறகு ஏதோ ஓமப்பொடியை தட்டிவிடுவது போல தனது உதட்டை ஓரங்கட்டும்
இடம்...கண்ணியம். கேப்டனுக்கு உரித்தான கத்திப்பேசும் வசனங்கள், நீள கோட்
போன்ற ட்ரேட் மார்க் அம்சங்களை இவர் தவிர்த்து இருப்பது...கட்டுப்பாடு.
ஆக்சன் காட்சிகளில் கூட அசமந்தமாய் இருந்துவிட்டு பிறகு போனால் போகிறதென்று
எதிரிகளை ஊமைக்குத்து குத்தும் ஸ்டைல் உலக சினிமாவிற்கு புதிதாகும்.
ஆரம்பம் முதல் இறுதிவரை காமடி என்கிற பெயரில் ஜெகன் எதையோ பேசிக்கொண்டு
இருக்கிறார். ஆனாலும் டயலாக் பேசுவதில் ஹீரோவுக்கு இவ்வளவு கூச்ச சுபாவம்
ஆகாது.
'மாமன்
பொண்ணு' நேஹா மற்றும் 'துப்பறியும் பெண் சிங்கம்' சுப்ரா ஆகியோரின்
உதட்டசைவிற்கு டப்பிங் தந்த அப்பாவி ஜீவன்கள் இன்னும் உடல் நலத்துடன்
இருக்கிறார்களா என்பது முக்கியமான கேள்வி? ரஞ்சித், தேவயானி, போஸ் வெங்கட்
மற்றும் கேப்டனுக்கு 'ஜே' போடும் சில துணை நடிகர்கள் வரும் காட்சிகள்
சீரியலுக்கு உரித்தானவை. சிங்கம்புலியின் காமடி எடுபடவில்லை. மலேசியா
மாமாவாக பவர் ஸ்டார் செய்யும் ரவுசு அவரது ரசிகர்களுக்கு மட்டுமே
பிடித்தமானவை.
'கேட்டாலும்
உதவி செய்யாதவங்களுக்கு மத்தியில கேட்காமல் உதவி செய்யற நீ... உங்க அப்பா
மாதிரி, 'இந்த (சிவந்து பொங்கும்) கண்ணை இதுக்கு முன்ன எங்கயோ பாத்த மாதிரி
இருக்கே' என புரட்சிக்கலைஞரின் பிரதாபங்கள் ஆங்காங்கே உண்டு.
இசை
கார்த்திக் ராஜா. ரேஸ் குர்ரம் தெலுங்கு படத்தில் வரும் 'சினிமா சூபிஸ்த
மாமா' பாடல் ஸ்டைலில் வரும் 'அடியே ரதியே' பாடல் துள்ளல்.
கண்ணைப்பறிக்கும் உடைகளை ஓரங்கட்டி பெரும்பாலும் கட்டம் போட்ட சட்டையுடன்
சண்முகத்தை நடமாட விட்டிருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் ப்ரேமலதா
விஜயகாந்த்.
ஹீரோ
மலேசிய போவதையே ஒரு பெரிய சம்பவமாக்கி அநியாயத்திற்கு நேரத்தை
கடத்தியுள்ளார் இயக்குனர் சுரேந்திரன். லாஜிக்கை தூக்கி கடாசிவிட்டு
மலேசியா காவல்துறைக்கு உற்ற நண்பனாய் சண்முகத்தை ஜெட் வேகத்தில் ஏற்றி
விட்டிருப்பது அநியாயம்.
க்ளைமாக்ஸில்
விஜயகாந்த் மற்றும் சண்முகம் எதிரிகளை பந்தாடும் நிமிடங்கள் கண்கொள்ளா
காட்சி. 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரிக்கு பிறகு தற்போதுதான்
விஜயகாந்த் திரையில் தோன்றி இருக்கிறார். முகத்தில் முதுமை
எட்டிப்பார்ப்பதால் முந்தைய கர்ஜனை மொத்தமாய் மிஸ்ஸிங். பிழைக்க வந்த
தேசத்தில் இருக்கும் இந்திய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லி தனது கௌரவ
பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிய கேப்டனுக்கு இதயம் நெகிழ்ந்த கும்பிடுகள்.
மொத்தத்தில்
சண்முக பாண்டியனை 'நம்ம வீட்டுப்பிள்ளை' என நினைக்கும் கேப்டன் ரசிகர்கள்
வேண்டுமானால் கொண்டாடலாம். மற்றபடி 'சகாப்தம்' உங்கள் பொறுமையை சக்கையாய்
பிழியும் படம் மட்டுமே.
written for tamil.jillmore.com
........................................................................................
1 comments:
உடல் நலத்துடன் இருக்க வேண்டுவோம்...!
Post a Comment