CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, April 21, 2015

ஸ்பெஷல் மீல்ஸ் (21/04/15)காவலுக்கு கெட்டிக்காரர்:


தமிழக காவல்துறை என்றாலே இன்றளவும் பொதுவாக அதில் பணியாற்றுவோரை அச்சத்துடனும், சந்தேகத்துடனும் நோக்கும் மனப்பான்மை நமக்கு மாறவில்லை. ஆனால் வேகமாய் வளர்ந்து வரும் (கணினி)யுகம் அவ்வப்போது சில ஆச்சர்யங்களை தரத்தான் செய்கிறது. எனக்குப்பிடித்த பதிவுகளை முந்தைய ஸ்பெஷல் மீல்ஸ்களில் குறிப்பிட்டு வந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது ஃபேஸ்புக்கில் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நட்புகள் மற்றும் பதிவுகளையும் உங்களுக்கு பகிர முடிவு செய்திருக்கிறேன். அவ்வரிசையில் முதல் நபராக வருபவர் சென்னை கொரட்டூர் காவல் நிலைய அதிகாரியான ஆவடி சிவா.

'என்னது தமிழ்நாட்டு போலீஸ் ஒருத்தர் ஃபேஸ்புக்ல சகஜமா இயங்கறாரா?' எனும் ஆச்சர்யம் எனக்கும் முதல் தொற்றிக்கொண்டது. அதன்பிறகு அந்த போலீஸ் அதிகாரியை(யே) Follow செய்தேன். வெளிப்படையான கருத்துகள், ஆக்கப்பூர்வமான சிந்தனை, எளிதாக நட்பு பாராட்டுதல் என 'காவல்துறை உங்கள் நண்பன்' எனும் கூற்றுக்கு ஏற்ற நண்பராய் திகழ்கிறார். நான் படித்த வடசென்னை தியாகராயா கல்லூரியில்தான் இவரும் படித்தார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. காவலுக்கு கெட்டிக்காரரான நண்பர் ஆவடி சிவாவை (ஃபேஸ்புக்கில்) பின்தொடர....


...................................................................................


புறம்போக்கு என்கிற பொதுவுடமை:
பண பரிவர்த்தனை செய்ய வீட்டருகே இருந்த அரசு வங்கி கிளைக்கு சென்றிருந்தேன். இதற்கு முன்பாக அங்கு சென்று சில ஆண்டுகளாவது ஆகி இருக்கும். இப்போது நவீன வசதிகளுடன் ஜகஜோதியாக இருந்தது. வரவேற்பு பெண்மணி (ரிஷப்ஷனிஸ்ட்) அன்பாக அழைத்து அமர செய்தார். யாரை பார்க்க வந்தேனோ அந்த ஊழியரிடம் (வடக்கத்தி இளம்பெண்) என்னை 'கவனித்துக்கொள்ளுமாறு' கைகாட்டிவிட்டு 'அவங்க உங்களை கூப்பிடுவாங்க. வைட் பண்ணுங்க சார்' என்று பணிவுடன் கூறியபடி நகர்ந்தார். இருபது நிமிடங்கள் ஆகியும் ஒற்றை கஸ்டமருடன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் அந்த வடக்கத்தி. என்னதான் நவீன வசதிகள் வந்தாலும் இதுபோன்ற இழுவைகள் இருந்தால்தானே அரசு நிறுவனங்களுக்கு அழகு. 

சிறிது நேரம் கழித்து என்னருகில் வந்த ஒரு பெண்மணி 'நீங்கள் க்ரெடிட் கார்ட் வைத்திருக்கும் கம்பனியில் குறைந்தபட்ச தொகை எவ்வளவு வைத்திருக்க வேண்டும்?' என வினவ 'தெரியாது' என்றேன். அடுத்த கேள்வி 'இப்போது உங்கள் கணக்கில் எவ்வளவு இருக்கிறது?' பதில் 'அதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வேண்டும்?' என்ற பிறகுதான் 'நானும் இந்த பேங்க் ஸ்டாஃப்தான் சார். க்ரெடிட் கார்ட் வாங்குவீங்களான்னு கேக்கத்தான்..' என்று இழுத்தார். 'முதலில் நீங்கள் யாரென்று அறிமுகம் செய்துகொண்டிருந்தால் இந்த குழப்பமே வந்திருக்காதே?'  என நான் அம்மணிக்கு சொன்னபிறகுதான் உரைத்தது. அவரைச்சொல்லி குற்றமில்லை. அரசு வங்கி ட்ரைனிங் அப்படி. அடுத்து நீண்ட நேரமாக என்னருகே அமர்ந்திருந்த பெரியவரை பார்த்தேன். கையில் ஒரு நாவலை கிட்டத்தட்ட கீழே விழும் நிலையில் வைத்தவாறு தூங்கிக்கொண்டு இருந்தார். இன்னும் எனக்கான அழைப்பு வரவில்லை. விரைவில் இரண்டு பெரிய சைஸ் நாவல்களை வாங்கியாக வேண்டும். 
...............................................................................

தவமாய் தவமிருந்து:
சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்கள் ரஜினி, கமல் போன்ற முக்கியஸ்தர்கள் பேசும் க்ளிப்பை ஒவ்வொரு இடைவேளைக்கு முன்பும் போட்டு 'அடுத்து வருவது' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதனை நம்பி முழு நிகழ்ச்சியையும் பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் 'கடைசியில்தான் இதனை போடப்போகிறார்கள்'  உஷாராகினர். அதற்கும் ஒரு மாற்றுவழியை கண்டுபிடித்து இருக்கிறார்கள் தற்போது. சன் டி.வி.யில் சென்ற வாரம் SICA திரை விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.  கமல் பேசும் க்ளிப்பை 'அடுத்து வருவது' எனக்காட்டியே இரவு 10 மணிக்கு மேல் வரை இழுத்துவிட்டு 'அடுத்த வாரம்' என்று அல்வா தந்து விட்டார்கள். என்ன ஒரு யாவார யுக்தி!!
.................................................................................

புதுப்பேட்டை: 


பெரிதாக பரிச்சயம் இல்லாத புதுப்பேட்டை ஏரியாவிற்கு செல்லும் சந்தர்ப்பம் சில மாதங்களுக்கு முன்பு அமைந்தது. தொழில் ரீதியாக வந்திருந்த நண்பர்களுடன் நாள் முழுக்க ஏரியாவை ரவுண்ட் அடித்தேன். வெளியூரில் இருந்து அங்கு வருவோருக்கு கடைகளின் பெயர்ப்பலகை முகவரிகள் முந்தைய கிர்ரடிக்க வைக்கும். முந்தைய ஹாரிஸ் ரோடு ஆதித்தனார் சாலையாக மாறி இருப்பினும்  கடைக்கு கடை தங்களுக்கு பிடித்த பெயர்களை வைத்திருந்தனர்: ஹாரிஸ் ரோடு, ஹரீஷ் ரோடு, ஆதித்தனார் சாலை. சிலர் இரண்டில் ஒன்றை அடைப்புக்குறிக்குள் எழுதி வைத்திருந்தனர். புதுப்பேட்டையின் முந்தைய பெயர் கோமளீஸ்வரன் பேட்(டை) எனும் தகவலும் மேலிருக்கும் கடை முகவரி மூலம் எனக்கு கிட்டியது.
.................................................................................

சென்னை எக்ஸ்ப்ரஸ்:
ஒவ்வொரு பதிவருக்கும் பெயர் சொல்லும்படி தனித்தன்மை கொண்ட அம்சங்கள் இருத்தல் சிறப்பு. ரயில்வே துறையில் பணியாற்றும் நண்பர் ஆரூர் முனாவுடன் ஒரு முறை பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது 'நீங்கள் ஏன் ரயில்வே சம்மந்தப்பட்ட ஒரு தொடரை எழுதக்கூடாது?' எனக்கேட்டிருந்தேன். அதற்கான காலம் தற்போதுதான் கனிந்திருக்கிறது. 'ஆரூர் முனா எக்ஸ்ப்ரஸ்' எனும் தலைப்பில் இதுவரை ஏழு பதிவுகளை எழுதி இருக்கிறார். வாசிக்க... 
 

...................................................................................

மெல்லத்திறந்தது கதவு:
புட்போர்ட் அடிப்பவர்களையும், நிறுத்தம் அல்லாத இடங்களில் ஏறி இறங்குவோரையும் கட்டுப்படுத்த ஓட்டுனர் துணையுடன் மூடி திறக்கும் தானியங்கி (!!) கதவு கொண்ட பேருந்துகளை சில ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளில் ஓடவிட்டது சென்னை மாநகர போக்குவரத்து கழகம். விபத்துகளை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு என்றாலும் பாதங்களுக்கும் பஞ்சமில்லை. தற்போது பெரும்பாலான கதவுகள் சரியாக இயங்காமல் இருக்கின்றன. எப்போது மூடிக்கொள்ளுமோ எனும் அச்சத்துடனே இறங்க வேண்டி இருக்கிறது. இயங்காத கதவுகளை சரி செய்யலாம் அல்லது பிடுங்கி போடலாம். 

சினிமாவில்தான் எங்கு திரும்பினாலும் திகில் காமடி படங்கள் வருகின்றன. போதாக்குறைக்கு இது வேறா?
.................................................................................

வெவரமான ஆளு: 
பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள இனாமாக தரும் ராய்த்தா, கத்தரிக்கா கொஸ்துக்களை கூட காம்போ லிஸ்டில் சேர்த்து வரும் மேட்டுக்குடி உணவகங்கள் ஒருபக்கமென்றால் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருக்கும் சில சிறு உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டிக்கடைகள் செய்யும் ஜகஜ்ஜால வேலைகள் தனிரகம். 'இரண்டு இட்லிக்கு குறைவாக ஆர்டர் செய்யக்கூடாது' என்கிற நிலை வேகமாக மலையேறி வருகிறது. 'குறைந்தது நாலு இட்லி வாங்கிக்கொள்ளுங்கள்' என அன்புகலந்த மிரட்டலுடன் ஆர்டர் போட ஆரம்பித்து விட்டார்கள். பூரியும் விதிவிலக்கல்ல. மூன்று பூரிக்கு குறைவாக தருவதில்லை. விரைவில் இந்நிலை அனைத்து உணவகங்களிலும் பரவலாக்கப்படும் என தெரிகிறது. அதுபோல சமோசா, பஜ்ஜிகளும் குறைந்தபட்சம் இரண்டாக வாங்க வேண்டுமென ஆங்காங்கே ஆர்டர்கள் இருந்து வருகின்றன. உதாரணம்: ஸ்பென்சர் ப்ளாசா தரைத்தளத்தில் இருக்கும் சிற்றுண்டியகம்.
.....................................................................................

நெஞ்சில் துணிவிருந்தால்:
சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது அவ்வப்போது கடுப்பை காட்டி வருவது தமிழ் திரைத்துறையினரின் வழக்கம். மிஷ்கினை தொடர்ந்து தற்போது சுஹாசினி பேசிய பேச்சு பெரிய விவாதத்திற்கு ஆளாகி இருக்கிறது. இந்தியாவின் வேறெந்த திரைத்துறையிலும் இல்லாத அளவிற்கு சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் மக்கள் மீது கோடம்பாக்க கலைஞர்களுக்கு கோபம் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெப்ஸி தொழிலாளர் யூனியன், திருட்டி விசிடி ஒழிப்பு, கட்சிகள் சார்ந்து சாட்டிலைட் உரிமை விற்பதில் வரும் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு குடும்ப பிரச்னைகளை சீர் செய்தாலே தமிழ் சினிமா செழிப்பாக இருக்கும். அதை விடுத்து சொந்தப்பணம் போட்டு படம் பார்க்கும் ரசிகன் மீது மட்டுமே காட்டத்தை காட்டிக்கொண்டு இருந்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
.................................................................................

ரோஜாக்கூட்டம்:
பிரபல நாளேடுகள்/இதழ்கள் அளிக்கும் பொங்கல், தீபாவளி சிறப்பு மலர்களை தொடர்ந்து வாங்குவதில்லை நான். பாதி புத்தகத்திற்கு விளம்பர ஆக்ரமிப்பு, சத்தற்ற விஷயங்கள் அதிகம் இருப்பது என காரணங்கள் பல. அதற்கு விதிவிலக்காக வந்திருக்கிறது தமிழ் இந்துவின் சித்திரை மலர். இளம் சாதனையாளர்கள், ஆன்மிகம், ஊர் புராணம், பெண் கவிகள் பற்றிய சிறப்பு கட்டுரைகள், நூலகங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள், 1960 களில் தமிழ் சினிமா எனும் தலைப்பில் கருந்தேள் ராஜேஷ் உள்ளிட்டோர் எழுதி இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள், சிறுகதைகள், நேர்காணல்கள் என அசத்தலாக இருக்கிறது இந்த மலர். விளம்பரங்கள் குறைவு. தரமான அச்சு. விலை 120. ஐ லைக் இட்.
........................................................................................

மயக்கம் என்ன? 
தனியார் பேருந்து ஓட்டுனரின் கடமை உணர்ச்சியை இக்காணொளியில் காண்க:


.................................................................................  
   

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆரூர் முனா அவர்களுக்கு நல்ல யோசனை... + மகா தவமே (தியானம்) வேண்டாம்...!

வெங்கட் நாகராஜ் said...

சற்றே இடைவெளிக்குப் பிறகு ஸ்பெஷல் மீல்ஸ்.....

பகிர்ந்து கொண்ட அனைத்தையும் ரசித்தேன். நன்றி சிவா.

Geetha said...

புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...