CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, March 9, 2015

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை


 
தற்போது தமிழ் திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் சேரனின் சினிமா 2 ஹோம். புதிய திரைப்படங்களை டி.வி.டி., சாட்டிலைட் சேனல் உள்ளிட்ட வடிவங்களில் மக்களிடம் சுடச்சுட  டெலிவரி செய்யும் சிஸ்டம். இப்படி ஒரு திட்டத்தை சேரன் முன்னெடுக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர் தயாரித்து இயக்கிய ஜே.கே  எனும் நண்பனின் வாழ்க்கை படம்தான்.

கடுமையாக போராடியும் இப்படத்தை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் தவித்துப்போனார். அந்த குமுறலை தீர்க்க தன்னைப்போன்று கஷ்டப்படும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்காக C2H எனும் நிறுவனத்தை தோற்றுவித்து இருக்கிறார்.  இப்புதிய முயற்சியின் மூலம் வெளிவந்திருக்கும் முதல் படைப்பு ஜே. கே. எனும் நண்பனின் வாழ்க்கை. திரைக்கு வர இந்த அளவு தடுமாறிய ஜே.கே. எப்படி இருக்கிறது?

ஃபேஸ்புக், பார்ட்டி என நினைத்தபடி வாழ்க்கையை கடத்தி வரும் மாடர்ன் இளைஞன் ஜெயகுமார் (ஜே.கே.). எதிர்பாராமல் நடக்கும் விபத்தொன்று அவனது வேகத்திற்கு தடை போடுகிறது. அதன் பிறகு சீராக தனது வாழ்க்கைப்பாதையை அமைத்துக்கொள்கிறான். வெற்றி வசமானாலும் சோதனைகளும் ஒருபுறம் துரத்துகின்றன. அவற்றை எப்படி எதிர்கொள்கிறான் இந்த ஜே.கே?

நவநாகரீக இளைஞனாக சர்வானந்தை காட்டுவதில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து ஃப்ரேம்களிலும் மெட்ரோ செழிப்பு பளிச்சிடுகிறது. முதல் சில காட்சிகளை பார்க்கும்போது 'சிட்டியில் சேரனின் வெற்றிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்போல இருக்கே' என ஆச்சர்யப்படுவதோடு சரி. அதன்பிறகு இயக்குனருக்குள் இருக்கும் விக்ரமன் விஸ்வரூபமெடுத்து நம்மை உலுக்கிப்போடுகிறார். நல்லவேளை எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைக்கவில்லை. செவி தப்பியது செந்தூர் முருகன் புண்ணியம்!!

இடைவேளைக்கு பிறகு விக்ரமனின் இடத்தை சென்டிமென்ட் சேரன் ஆக்ரமிக்க நமக்கான உதறல் உச்சக்கட்டத்தை எட்டுகிறது. உற்ற நண்பனின் குடும்பத்தாரில் ஒற்றை தங்கை இருந்தால் அது பாமரத்தனமான படைப்பு. இது சேர ராஜ்ஜியம் என்பதால் மூன்று தங்கைகள்...சோகம்..நெகிழ்ச்சி..விரக்தி என சென்டிமென்ட் ரசம் குற்றால அருவியாய் தலையில் கொட்டி பித்தத்தை வெகுவாக அதிகரிக்கும் பாங்கை என்னவென்று சொல்ல?

இதுபோக படம் நெடுக பஞ்சமின்றி கொட்டிக்கிடக்கின்றன கருத்துக்குவியல்கள். அவற்றுள் சில:

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு, உடல் தானம் செய்வீர். ஊர் போற்ற வாழ்வீர், நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே கடுக்கணை கழற்றுவதாம் நட்பு, தானத்தில் சிறந்த தானம் நிதானம், சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்.

'இந்த நகரத்துக்கு என்னதான் ஆச்சு? சாம்பல் மேடுகளும்' பிரச்சார படத்தை சில நொடிகள் பார்க்கவே பொறுக்காமல் அலும்பும் இளசுகளை 'அது வெறும் ட்ரெய்லர். இனிமேதான் உங்களுக்கு இருக்கு தீபாவளி' என கிண்டி கிழங்கெடுத்துள்ளார் இயக்குனர்.


'எங்கேயும் எப்போதும்' மூலம் நகரத்து இளைஞனை யதார்த்தமாய் பிரதிபலித்த சர்வானந்த் மட்டுமே ஜே.கே.வின் ஒரு ஆறுதல். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவராலும் சேரனின் இழுப்பிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை பாவம். நித்யா மேனனை ஓகே கண்மணி என்று மட்டுமே சொல்லத்தோன்றுகிறது. பிரகாஷ் ராஜே சிரிக்கும் அளவிற்கு அவருக்கு ஒரு சோதா வில்லன் கதாபாத்திரம். 'சரக்கு அடிச்ச பையனும், முறுக்கு சாப்புடற பொண்ணும்' ரீதியில் சந்தானம் ஸ்பாட் ஜோக்குகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். கொஞ்சமே வந்தாலும் மனதை தொடுகிறது மனோபாலாவின் நடிப்பு. கிட்டி, ஜெயப்ரகாஷ் ஆகியோரும் இருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் 'ஃபேஸ்புக் லாகின்' மற்றும் 'உடலுறுப்பு தானம்' பற்றிய பாடல்கள் கேட்கத்தூண்டுகின்றன. எடிட்டராக ராமாராவின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை வெகுவாக புரிந்து கொள்ளமுடிகிறது.

இயக்குனர் சேரனுக்கும், தற்கால சினிமா ஆர்வலர்களின் ரசனைக்குமான 'தலைமுறை' இடைவெளி எவ்வளவு நீளமானது என்பதை எடுத்துச்சொல்ல இதைவிட 'சிறந்த' படத்தை மேற்கோள் காட்டிவிட இயலாது. ஒருவேளை இதில் சேரனும் நடித்திருந்தால்...அந்த திகிலை கற்பனை செய்யவே இதயம் பதை பதைக்கிறது. விழித்துக்கொள்ளுங்கள் சேரன். இது 2015. சமகால ரசனை எனும் நாடித்துடிப்பை நீங்கள் சரிவர  பார்க்கும் காலம் கனியும் முன் அது இன்னும் பத்தாண்டுகள் உங்களை விட்டு முன்னே சென்று விடாமல் கற்பனைக்குதிரையை செலுத்துங்கள். உங்களால் முடியும் சார். தும்பிக்கையை விட பெரியது நம்பிக்கை எனும் தத்துவத்துடன்  எமது சாஷ்டாங்க நமஸ்காரங்கள். வணக்கம்.

Written for tamil.jillmore.com
 

Related Posts Plugin for WordPress, Blogger...