தனது
வலைப்பக்க (Blog) சினிமா விமர்சனங்கள் மூலம் நன்கு அறியப்பட்ட கேபிள்
சங்கர் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் 'தொட்டால் தொடரும்'. பல்வேறு
படங்களுக்கு வெளிப்படையாக விமர்சனம் வைத்தவர் எடுத்த படைப்பு எப்படி
இருக்கப்போகிறது என்பதை அறிய திரைத்துறை மற்றும் இவரது வாசகர்கள் மத்தியில்
எதிர்பார்ப்பு இருந்து வந்தது என சொல்லலாம். அப்படி ஒரு எதிர்பார்ப்பை
கிளப்பி இருக்கும் தொட்டால் தொடரும் எப்படி இருக்கிறது என்பதை இனி
பார்க்கலாம்.
தனியார்
நிறுவன கால் சென்டர் பிரிவில் வேலை செய்பவள் கதையின் நாயகி மது. வீட்டில்
சில முக்கியமான பிரச்னைகள் வாட்டி எடுத்தாலும் சிவாவுடன் பூக்கும் காதல்
அதனை மறக்கடிக்க செய்கிறது. ஆனால் அந்த பட்டாம்பூச்சி தருணங்கள் சில
நாட்களே நீடிக்கின்றன. எதிர்பாராத இக்கட்டில் சிக்கிகொள்ளும் மது
அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறாள். ஆபத்தில் இருந்து அவளை மீட்க
சிவா எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைந்ததா என்பதுதான் கதை.
'ரொமாண்டிக்
த்ரில்லர்' வகையிலான கதையை தேர்ந்து எடுத்திருக்கிறார் கேபிள் சங்கர். இது
உண்மை சம்பவத்தின் தழுவல் என ரிலீசுக்கு முந்தைய பேட்டிகளில்
சொல்லப்பட்டிருந்தாலும் 'இப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே'
என டைட்டிலில் வருவது ஏனென்று புரியவில்லை.
ஒரு
சில படங்களில் மட்டுமே நடித்த அனுபவம் கொண்ட அருந்ததி மற்றும் தமன் குமார்
இருவரும்தான் இப்படத்தின் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். கதை முழுக்க
அருந்ததியை மையமாக வைத்தே நகர்கிறது. பார்க்க அம்சமாய் இருக்கிறார். காதல்,
சோகம் என உணர்ச்சிகள் இயல்பாய் வருகின்றன. போனில் தொந்தரவு செய்யும்
தமனிடம் எரிந்து விழும்போது ஆந்திரா காரம். க்ளோஸ் அப் காட்சிகளில் மட்டும்
முதிர்ச்சி தெரிகிறது. HR அதிகாரி கேரக்டருக்கு சிறப்பாய்
பொருந்திப்போகிறார் தமன். சராசரி கதாநாயகனுக்கான துள்ளல், அதிரடி என
எதுவுமில்லாமல் நாயகிக்கு அடுத்தபடியாக வரும் கேரக்டரில் நடிக்க
ஒப்புக்கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆபீஸை விட்டு வெளியே
இருக்கும் தருணங்களில் கார்ப்பரேட் நிறுவன பாணியில் வசனங்களை
உச்சரிப்பதும் காதல் பொங்கும் போது கூட பக்கா
ஃபார்மலான நபராக இருப்பதும் செயற்கையாய் இருக்கிறது.
வில்லனாக
வின்சன்ட் அசோகன். இடைவேளைக்கு பிறகுதான் என்ட்ரி தருகிறார். ஒற்றை வரி
வசனம் கூட பேசாமல் இளஞ்ஜோடிகளை விரட்டி மிரள வைத்திருக்கிறார். அருந்ததி,
தமன் மற்றும் வின்சன்ட் மூவருக்கும் இப்படம் முக்கிய அடையாளமாக இருக்கும்.
காமடி
என்கிற பெயரில் பாலாஜி பேசுபவை எதுவும் சிரிப்பை வரவழைக்கவில்லை.
பெண்களுக்கு ரூட் விடும் சின்னி ஜெயந்த் கால டெக்னிக்கை வைத்துக்கொண்டு
சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார் பாவம். 'தொட்டால் தொடரும்' படத்தின்
முக்கிய பலவீனமாக இருப்பது துணை நடிகர்கள் தேர்வு. காவலதிகாரிகளாக வரும்
துரைராஜ் ரஞ்சன் அருந்ததியின் பெற்றோர்கள் மற்றும் சில உபரி வில்லன்கள்
ஆகியோரின் நடிப்பு மிக சுமாராய் இருக்கிறது. கதை/திரைக்கதை ஜிவ்வென
இருப்பதற்கு இந்த கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும்
அதற்கான நடிப்பு வெளிப்படாமல் போய்விட்டது. சில நிமிடங்களே வந்தாலும்
பிரமிட் நடராஜன் மற்றும் நாடக நடிகர் பாரதிமணி இருவரும் மனதில்
நிற்கிறார்கள்.
'சாகறதுக்கு
எடுத்த ரிஸ்க்கை விட வாழறதுக்கு எடுத்த ரிஸ்க்கை நினைச்சாதான் பயமா
இருக்கு' 'சினிமா விமர்சனம் எழுதுனா கூடவா கொலை பண்ணுவாங்க' போன்ற
வசனங்களில் கேபிள் சங்கரின் எழுத்து மிளிர்கிறது. துருத்தல்கள் இல்லாமல்
இயல்பாய் பயணிக்கும் வசனங்கள் ப்ளஸ்.
பி.சி.சிவனின்
'பாஸு பாஸு' 'பெண்ணே பெண்ணே' பாடல்கள் சிறப்பு. 'யாருடா மச்சான்'
ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது. சக்தி செல்லத்தின் 'காதலென்ன
தாய்ப்பாலா..அழுதவுடனே கிடைக்க' வரிகள் வாவ். சமூக அவலங்களை சொல்லும் 'பாஸு
பாஸு' பாடல் வரிகள் இயக்குனர் மற்றும் கார்க்கி பவா இருவராலும் கச்சிதமாய்
செதுக்கப்பட்டு இருக்கின்றன. சேஸிங் காட்சிகளில் பரபரக்க வைக்கும் பின்னணி
இசை மற்ற இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
சிற்சில
குறைகள் இருந்தாலும் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு நன்று.
சண்டைக்காட்சிகள் எதுவும் இல்லாவிடினும் 'த்ரில்ஸ்' என்று சொல்லப்படும்
வாகன துரத்தல்கள் போன்ற தருணங்களில் 'நாக்கவுட்' நந்தாவின் பங்கு
குறிப்பிடத்தக்கது. குறுகிய பட்ஜெட் படத்தில் ஒற்றை லாரி மற்றும் காரை
வைத்துக்கொண்டு போதுமான பரபரப்பை கிளப்பி இருப்பதற்கு சபாஷ்
போடலாம். உடைத்தேர்வுகளில் நன்றாய் கவனம் செலுத்தி இருப்பது இன்னொரு
பாஸிடிவ் விஷயம்.
முதல்
பாதியில் 'காலமெல்லாம் காதல் வாழ்க' முரளி - கவுசல்யாவை நினைவுபடுத்தும்
ஃபோன் காதல் இயல்பாய் இருந்தாலும் நீளம் அதிகம். மற்றபடி நம்மை
தொடர்ச்சியாக கொட்டாவி விட வைக்காமல் கதையை நகர்த்திய விதத்தில் தடம்
பதித்துள்ளார் இயக்குனர். முன்பு குறிப்பிட்டது போல கவனத்தை ஈர்க்காத துணை
நடிகர்கள், சில நாடக பாணிக்காட்சிகள், பாலாஜியின் காமடி, விறுவிறுப்பை
கிளப்பாத விசாரணை காட்சிகள் போன்ற அம்சங்களை நன்றாய் மெருகேற்றி இருந்தால்
செமத்தியான த்ரில்லராய் இருந்திருக்கும்.
நாயகர்களை
கொண்டாடும் தமிழ் சினிமாவில் படம் நெடுக நாயகிக்கு முக்கியத்துவம் தரும்
கதையை தேர்வு செய்திருக்கும் கேபிள் சங்கருக்கு பாராட்டுகள். முகம் சுளிக்க
வைக்கும் வசனங்கள்/காட்சிகள் இல்லாததால் குடும்பத்துடன் பார்க்க
விரும்புபவர்கள் தயங்க வேண்டியதில்லை.
ஆகமொத்தத்தில்
புதுமுக இயக்குனர், பெரியளவில் பரிச்சயமாகாத நடிகர்கள் மற்றும்
தொழில்நுட்ப கலைஞர்களிடம் இருந்து வந்திருக்கும் ஓகே படைப்பு இந்த 'தொட்டால் தொடரும்'.
Written for tamil.jillmore.com
.............................................................................
10 comments:
கேபிள் சங்கர் எப்படி இந்த படத்தை எடுத்திருப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
உங்கள் விமர்சனம் அருமை. படத்தை நானும் பார்த்து விடுகிறேன் .
நல்ல விமர்சனம் சிவா....
நண்பரின் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! சிறப்பான விமர்சனம்! நன்றி!
அருமை.
வழக்கமான விமர்சனமாக கார சாரம் ,நக்கல் நையாண்டி எல்லாம் இல்லாமல், நன்றாகவே பூசி மொழுகியிருக்கின்றீர்கள் சிவா.
@சொக்கன்
வருகைக்கு நன்றி
@வெங்கட் நாகராஜ்
நன்றி சார்
@சுரேஷ் & காதர்
நன்றி நண்பர்களே
@ஜீவன் சுப்பு
நீங்கள் படம் பார்த்துவிட்டீர்களா என்று தெரியவில்லை. எனது சில நண்பர்கள் படத்தை பார்க்காமலே உங்களைப்போன்று என் முந்தைய விமர்சனத்திற்கு கமண்ட் போட்டது காமடியாக இருந்தது. மொக்கையாகவும் இல்லாமல் சூப்பராகவும் இல்லாத படத்தை கலவையாகத்தான் விமர்சிக்க முடியும். அதுபோக கடந்த ஆண்டு துவக்கம் முதல் எனது விமர்சனங்கள் அனைத்தையும் ஜில்மோர் தளத்தில்தான் எழுதி வருகிறேன். அதை இங்கே பகிர்கிறேன்.
தனிநபர் வலைப்பூவில் எழுதும் வார்த்தைகளை அப்படியே பிரத்யேக சினிமா தளத்தில் எழுதி விட முடியாது நண்பரே. தங்கள் வருகைக்கு நன்றி.
அருமை.
Post a Comment