CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, January 14, 2015


விக்ரம் - வசூலில் அடாது சோதனைகள் வந்தாலும் விடாது போராடும் கலைஞன். பீமா, ராவணன், கந்தசாமி, ராஜபாட்டை, தாண்டவம் போன்றவற்றில் முன்னணி இயக்குனர்கள் இருந்தும் காரியம் ஆகவில்லை. இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் பேனர் வேறு. இந்த முறையாவது 'ஐ'டியாக்கள் வொர்க் அவுட் ஆகினவா?

மிஸ்டர் தமிழ்நாடு வசமான பிறகு மிஸ்டர் இந்தியா பட்டம் வெல்வதை குறிக்கோளாக கொண்டிருக்கிறான் பாடி பில்டர் லிங்கேசன். விளம்பர மாடல் தியா என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். தியாவுடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் வர மகிழ்ச்சியில் திளைக்கிறான். அதற்காக மிஸ்டர் இந்தியா கனவை கூட தியாகம் செய்யும் லிங்கேசனுக்கு பரிசாய் கிடைப்பது 'ஐ'எனும் Influenza வைரஸ் கிருமிதான். அது அவனுடைய உருவத்தையே அகோரமாக்கி விட பின்னணியில் இருந்தவர்களை எப்படி பழிதீர்க்கிறான்?

காதலுக்கு ஒன்று, சமூக பிரச்னைகளுக்கு ஒன்று என இரண்டே ஐட்டங்கள்தான் ஷங்கரின் மெனுவில் எப்போதும் இருக்கும். இப்போது காதலை கரம்பிடித்து இருக்கிறார். ஷங்கரின் வழக்கமான காதல் கதைகளில் இருந்து 'ஐ' எந்த அளவு மாறுபட்டு இருக்கும் எனும் சிந்தனையை தியேட்டர் வாசலில் இருக்கும் முயல் பொம்மையின் வயிற்றில் போட்டுவிட்டு உள்ளே செல்வதுதான் உத்தமம். அந்நியனில் சுட்ட பரோட்டாவை குளிர்பதன கிடங்கில் இருந்தெடுத்து சூடு பண்ணி தந்திருக்கிறார்கள். தட்ஸ் ஆல். 'டி.டி.ஆர்....' என நீங்கள் கதறினாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

மிரட்டல் ஜிம் பாடி, பக்கா மாடல் கெட்டப், வைரஸ் குதறிய உடல் என விக்ரமின் உழைப்பு எப்போதும் போல அபாரம். நடிப்பதை விட மாறுவேஷம் கட்டுவதில் கமலுக்கு தம்பியாக இருந்தாலும் அவை பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீராய் போகையில் வருத்தம்தான். சென்னை லோக்கல் தமிழில் தடுமாறுகிறார். முதல் பாதி முழுக்க 'மோடம்' என்ற வார்த்தையை வைத்தே சமாளிக்க நினைத்திருப்பது ஏனோ? காஸ்ட்யூம்கள் அனைத்தும் சிக்கென பொருந்துகிறது ஏமி ஜாக்சனுக்கு. நீச்சல் உடையில் இவர் நடந்து வரும்போது நாமும் 'ஏரிக்கரை' லிங்கேசனாவது உறுதி. காதல்தான் பிரதானம் என்றாகிவிட்ட பிறகு இருவருக்குமான கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லாதபோது எரிச்சல்தான் மிஞ்சுகிறது.

கொஞ்சமே வந்தாலும் பவர் ஸ்டார் ராக்ஸ். 'நாலு பேரை போட்டுருக்கியா?' சந்தானம் காமடி சிக்கன் டிக்கா. மற்றபடி ஸ்பெஷலாய் ஒன்றுமில்லை. க்ளைமாக்ஸில் உடலால் ரணமானவர்களை கண்டு சந்தானம் கிண்டல் செய்யுமிடம் கசப்பின் உச்சம். இதை காமடி என்று சொல்வது அபத்தம். அதுபோல திருநங்கை கேரக்டரை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டிகள், சீனர் ஒருவரை 'சப்பை' என்று விக்ரம் சொல்வது போன்றவையெல்லாம் சகிக்கவில்லை. என்ன கொடும ஷங்கர் இது? உங்களை அண்ணாந்து பார்ப்பது தவறு என்று சொல்ல வருகிறீர்களா? 


பொதுவாக ஷங்கரின் படங்களில் துணை நடிகர்கள் தேர்வு சிறப்பாய் இருக்கும். ஆனால் இம்முறை அனைவருமே சொதப்பி இருப்பதற்கு  இயக்குனரின் தேர்வைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். சுரேஷ் கோபி, ராம்குமார், உபேன் படேல் என ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு சுரத்தையற்ற பெர்பாமன்ஸை தந்திருப்பது பெரிய மைனஸ். 

'மெர்சலாயிட்டேன்' செவிக்கினிமை. 'ஆய்லா ஆய்லா' தொழில்நுட்ப அதிரடி. 'என்னோடு நீயிருந்தால்' அந்தோ பரிதாபம்.  ஷங்கர், மணிரத்னம், ரஜினி படங்களில் மட்டுமே கொஞ்சம் தம் கட்டி வாசித்து வந்தார் ரஹ்மான். இப்போதெல்லாம் அந்த ரிஸ்க்கையும் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட ஆரம்பித்து விட்டார். விக்ரம் குல்பி ஐஸ் வண்டியை தள்ளும்போது மட்டும் பின்னணி இசை முன்னணியில்.

உடற்பயிற்சிக்கூடம், புகைவண்டி சண்டைகளில் விஷுவல் எபெக்ட்டுகள் கைகொடுத்து இருப்பதால் அனல் அரசுவை பெரிதாய் காக்காமல் போகிறது அவரது அடைமொழி. கூரைக்கு மேல் போடும் சைக்கிள் சண்டையை பீட்டர் மிங் நன்றாய் செய்திருக்கிறார். எனினும் 'அயன்' ஆப்ரிக்க சேஸ் அளவிற்கு பரபரப்பு இல்லாமல் போனது ஏமாற்றம்.

'எனக்கு இப்படி ஆகி இருந்தா நீ விட்டிருப்பியா'  வசனம், ஜில்லட் ப்ளேட் விளம்பரம், சைனா லொக்கேஷன் என சில இடங்களில் மட்டும் ஷங்கரின் டச் தெரிகிறது. செயற்கைக்காதல், அதிகமாய் அப்பி இருக்கும் அந்நியன் சாயல், டப்பா டான்ஸ் ஆடும் திரைக்கதை, அமெச்சூர்தனமான துணை நடிகர்கள் என சலிக்க வைக்கும் சமாச்சாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. படத்தின் நீளம் வேறு மூன்று மணிநேரம் ஒன்பது நிமிடங்கள். இப்படி நாம் சோதனைச்சாலை எலியாவோம் என முன்பே தெரிந்திருந்தால் கருட புராண தண்டனைகளில் ஒன்றை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கலாமே என பிரார்த்திக்க வைக்கும் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.

ஷங்கர் இயக்கியவற்றில் பாய்ஸ், சிவாஜி போன்றவைதான் முடியல சாமி லிஸ்டில் இருந்தன. அப்போதாவது ரஹ்மானும், மொட்டை பாஸ் ரஜினியும் முறையே பாய்ஸ் மற்றும் சிவாஜிக்கு முட்டு தந்தார்கள். இம்முறை 'எங்க... உங்கள நீங்களே தூக்கிக்காட்டுங்க' எனும் சவால் இருப்பதால் 'மிஸ்டர் தமிழ்நாடு' ஆகவே ஷங்கர் படாதபாடு பட வேண்டி இருக்கும். 'மிஸ்டர் இந்தியா' கனவை நிறைவேற்ற கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்கு 'ஐ' நிச்சயம் ஒரு Eye ஓப்பனர் என்பதில் ஐயமில்லை.


Written for tamil.jillmore.com   
....................................................................... 

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம் சிவா...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

yathavan64@gmail.com said...

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

Yoga.S. said...

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் தைத் திரு நாள் வாழ்த்துக்கள்!///:நல்ல விமர்சனம்!

பல்பு பலவேசம் said...

ஒரு வேண்டுகோள் நீங்கள் சென்னையில் நடக்கும் நாடகங்கள் பலவற்றுக்கும் செல்கிறீர்கள்.அதை ஆடியோ வடிவில் ரெகார்ட் செய்து இங்கே அப்லோட் செய்தால் அந்த நாடகங்களை காண வாய்ப்பில்லாத என் போன்றோருக்கு பயனாக இருக்கும்.

Unknown said...

உங்களுக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மலர்

Related Posts Plugin for WordPress, Blogger...