CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, December 30, 2015

திரை விரு(ந்)து 2015 - தமிழ்ப்படங்கள்

 
தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் அளவிற்கான எண்ணிக்கையில் இவ்வருடம் படங்கள் வெளியாகவில்லை. ஹாரர், மலையாளம் டு தமிழ் ரீமேக் மற்றும் சத்தற்ற வணிகப்படங்கள் என சக்சஸ் விகிதம் கலந்துகட்டி இருந்தது.  தரமான கமர்சியல் மற்றும் உலக சினிமாத்தரம் கொண்ட ரிலீஸ்கள் சொற்பமே. ஆறு குறும்படங்களை சேர்த்து கார்த்திக் சுப்பராஜ் அளித்த பெஞ்ச் டாக்கீஸ், சேரனின் D2H நிறுவனம் மூலம் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, முழுக்க சயின்ஸ் ஃபிக்சனை மையமாக கொண்ட இன்று நேற்று நாளை என புதிய முயற்சிகள் அரங்கேறின. கமர்சியல், கலைப்படம் என தனித்தனியே இயங்காமல் கமர்சியலில் கொஞ்சம் கலையம்சமும், கலையில் கொஞ்சம் கமர்சியல் அம்சமும் இருத்தல் வேண்டுமென தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. மெகா ஸ்டார்களின் படைப்புகள் பெருமளவு மண்ணை கவ்வ ஆரம்பித்து இருப்பதும், தரமான படம் என போற்றப்படும் படைப்புகள் தியேட்டர்களில் குறைந்தபட்ச வரவேற்பை பெறக்கூட தடுமாறிக்கொண்டு இருப்பதும்தான் தற்போதைய நிலை. 

பெரிய ஸ்டார்களின் கால்ஷீட்டை மட்டும் வைத்துக்கொண்டு சரக்கில்லாத குப்பைகளை கொட்டும் கூட்டம் தரமான படங்கள் மக்களிடையே ஆதரவை பெறுவதை நிச்சயம் விரும்பாது. ஒரே ஒரு களியாட்ட படைப்பு போதும் ஆட்டத்தை கலைக்க. அது சகலகலா வல்லவனோ அல்லது த்ரிஷா அல்லது நயன்தாராவோ. 

இனி 2015 ஆண்டு வெளிவந்த படங்களில் நான் பார்த்ததில் எனக்குப்பிடித்த கலைஞர்கள் மற்றும் படங்களின் லிஸ்ட் உங்கள் பார்வைக்கு:


நகைச்சுவை நடிகர்(கள்): பாலசரவணன் & கருணாஸ் (டார்லிங்)


டி.வி. சீரியலில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு திரைக்கு வந்த இளம் நகைச்சுவை நடிகர் பால சரவணன். பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்கள் ஓரளவு பெயரை வாங்கித்தந்தன. ஆனால் டார்லிங் மூலம் கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையான வாய்ப்பு. ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த கருணாஸுக்கும் சரியான கம்பேக். பேய்க்கு பயந்து இருவரும் அலற சிரிப்பு சப்தத்தில் அரங்கம் அதிர்ந்தது. 

நெக்ஸ்ட் பெஸ்ட்: ராஜதந்திரத்தில் அறிமுகமான தர்புகா சிவா,  காக்கா முட்டை ரமேஷ் திலக் - யோகிபாபு இணை, நானும் ரவுடிதானில் ராகுல் தாத்தாவாக நடித்த உதயபானு.


பாடகி: லலிதா விஜயகுமார்.  பாடல்: 'வாடி ராசாத்தி' (36 வயதினிலே) 


இசைப்பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற லலிதாவிற்கு இதுதான் முதல் திரைப்பாடல் என்பது ஆச்சர்யம். இசை பயிற்றுவித்தலை மட்டுமே பிரதான பணியாக செய்து வந்தவருக்கு பாடகர் ஆகும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் ஊர்க்காரரான சந்தோஷ் நாராயணுக்கு இவரது குரல் வளத்தின் மீது நம்பிக்கை அதிகம். 'வாங்கம்மா ராசாத்தி' என ஆரத்தி எடுத்து ரெக்கார்டிங் தளத்திற்கு அழைத்து வந்துவிட்டார். பதிலுக்கு ஜோதிகாவை 'வாடி ராசாத்தி' என வாழ்த்தி கௌரவித்தார் லலிதா. 

நெக்ஸ்ட் பெஸ்ட்: சின்மயி. பாடல்: 'இதயத்தை ஏதோ ஒன்று' (என்னை அறிந்தால்).


பாடகர்: பென்னி தயாள்.  பாடல்: 'உனக்கென்ன வேணும்' (என்னை அறிந்தால்)


பெண்ணை பெற்ற தகப்பன்கள் எல்லாம் தங்க மீன்கள் படத்தின் 'ஆனந்த யாழை' பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பார்கள். இவ்வருடம் 'உனக்கென்ன வேணும் சொல்லு' மூலம் அந்த மேஜிக் ரிப்பீட் ஆகியிருக்கிறது. பென்னி தயாளின் வசீகரிக்கும் குரல், தாமரையின் அழகிய வார்த்தை தேர்வுகள் மற்றும் சிறப்பாய் காட்சியாக்கப்பட்ட விதம் என அனைத்தும் க்ளாஸ்.

நெக்ஸ்ட் பெஸ்ட்: குற்றம் கடிதலுக்காக 'காலை நிலா' பாடலை பாடிய மது பாலகிருஷ்ணன்.


பாடலாசிரியர்:  ஜெரால்ட் திரவ். பாடல்: 'காலை நிலா' (குற்றம் கடிதல்)குறும்பட எடிட்டிங், இயக்கம் என இயக்குனர் பிரம்மாவோடு பயணித்து வந்தவர் ஜெரால்ட். குற்றம் கடிதல் இயக்குனர் டீமில் முக்கிய நபர். 'காலை நிலா காலை நிலா கடல் தாண்டி வழிந்தோடுதே' எனும் பாடலில் யதார்த்தமும், கவித்துவமும் வழிந்தோடியது. விடியலில் பள்ளிக்கும், வேலைக்கும் பரபரப்பாக கிளம்பு சமூகம் எப்படி நிரந்தரத்தன்மையின்றி அந்நாளை கடக்கிறது என்பதை சொல்லும் அற்புதமான வரிகள். 'முன்பனி மேலே பிம்பங்கள் விரிய..திசைகள் எங்கும் நாடகம் தொடரும்' என ஒவ்வொரு வரியிலும் நிதர்சனத்தின் ஆக்ரமிப்பு. அசத்தல் ஜெரால்ட்!! 

நெக்ஸ்ட் பெஸ்ட்: தொட்டால் தொடரும் படத்திற்காக இயக்குனர் கேபிள் சங்கர் மற்றும் கார்க்கிபவா இணைந்து எழுதிய 'யாருக்கும் ஈவுமில்ல பாஸு பாஸு'. சாமான்யனின் அறச்சீற்றம், அறமிழந்த ஊடகங்கள் என நடப்பு நியாய, அநியாயங்களை நச்சென்று சுட்டிக்காட்டியது. கானா வகை பாடலுக்கு சற்று மாறுபட்ட டச்சை தந்து இருந்தது சிறப்பம்சம். வில்லன்: அரவிந்த் சாமி (தனி ஒருவன்)


'செகப்பான வில்லன் கதைக்கு ஆக மாட்டான்' என ரசிகர்கள் நொந்துபோகும் அளவிற்கு மும்பை, ஹாலிவுட் என வேலைக்காகாத வில்லன்களை இறக்குமதி செய்து கையை சுட்டுக்கொண்டது கோலிவுட். அந்த நிலையை தலைகீழாக மாற்றியது சித்தார்த் அபிமன்யுவின் வரவு. காது கிழிக்க கத்துவது, ரத்தம் தெறிக்க அடிப்பதென உளுத்துப்போன வில்லன் பார்முலாவை எட்ட வைத்து விட்டு வசீகர சிரிப்பின் மூலம் ஹீரோவுடனான மோதலை க்ளைமாக்ஸ் வரை கெத்தாக தொடர்ந்தார் அரவிந்த் சாமி.  

நெக்ஸ்ட் பெஸ்ட்: நானும் ரவுடிதான் படத்தில் கிள்ளிவளவனாக வந்த நக்கல் நாயகன் பார்த்திபன். நகைச்சுவை கலந்த வில்லன் கேரக்டர் என்றால் இவருக்கு கேக் வாக். கில்லி அடி அடித்ததில் ஆச்சர்யமில்லை.  


துணை நடிகை: ஆஷா சரத் (பாபநாசம்)


த்ரிஷ்யத்தில் செய்திருந்த அதே கதாபாத்திரம். மகன் காணாமல் போனதற்கு சுயம்புலிங்கம் குடும்பத்தார்தான் காரணமாய் இருக்க வேண்டும் எனும் சந்தேகம் வலுக்க அவர்களை கடும் டார்ச்சர் செய்யும் காவல்துறை உயரதிகாரியாகவும், உண்மை தெரிந்த பிறகு மனம் வருந்தும் தாயாகவும் சிறப்பாய் ஸ்கோர் செய்திருந்தார் ஆஷா. 

நெக்ஸ்ட் பெஸ்ட்: காக்கா முட்டையில் பாட்டியாக நடித்த சரோமி தைரியம். சினிமாவிற்காக சாந்திமணி என பெயர் மாற்றியவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வெளிச்சத்திற்கு வராமல் இருந்தவருக்கு பெரியளவில் பெயரை வாங்கித்தந்தது காக்கா முட்டை. 


துணை நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (உத்தம வில்லன்) 
 

சமகால தமிழ் திரையுலகின் முன்னணி துணை நடிகர்களில் ஒருவர். பாஸ்கரின் திறமையை படைப்பாளிகள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறு வட்டார வழக்குகள் பேசுவதில் இவரை அடித்துக்கொள்ள இப்போதைக்கு ஆளில்லை. நகைச்சுவை நடிகராக சினிமா பயணத்தை துவக்கிய இவரை மொழி உள்ளிட்ட சில படங்கள் நல்ல குணச்சித்திர நடிகராகவும் அடையாளம் காட்டின. மனோரஞ்சனின் (கமல்)  வலதுகரம் சொக்கு செட்டியாராக உத்தம வில்லனில் வெளுத்து வாங்கினார். 'இத்தனை ஆண்டுகளாக கடிதத்தை ஏன் மறைத்து வைத்தாய்?' என கமல் அதிர்ச்சி கலந்த கோபத்துடன் கேட்கும்போது கண்ணில் நீர் பொங்க விளக்கம் தருகையில் 'எனக்கும் சுயமரியாதை உண்டு' என்று பதிலடி கொடுப்பார். என்னா நடிப்பு சொக்கு செட்டியாரே!!

நெக்ஸ்ட் பெஸ்ட்:  தண்டிக்கப்பட்ட குற்றவாளியை தூக்கில் போடும் ஊழியர் எமலிங்கமாக 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'யில் நடித்த விஜய சேதுபதி. குற்ற உணர்ச்சியில் துடிக்கும் நபராக கவனிக்கத்தக்க நடிப்பை தந்திருந்தார். 


நடிகை: ஐஸ்வர்யா (காக்கா முட்டை)

 
சினிமா பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் ஐஸ்வர்யா. அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் மூலம் சற்று பரிச்சயமானார். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மட்டுமின்றி சென்னையின் சிறப்பு தமிழ் பேசுபவராகவும் இருக்க வேண்டும். வேறு நாயகிகள் என்றால் 'எனது கலையுலக பயணம் என்னாவது?' என்று கும்பிடு போட்டிருப்பார்கள். ஆனால் சவாலை ஏற்று நடித்தார் ஐஸ்வர்யா. கணவன் சிறையில் இருக்க வழக்கு மற்றும் குடும்பம் நடத்துவதற்கான செலவுகளை சமாளிக்க போராடும் அடித்தட்டுவாழ் இல்லத்தரசி கேரக்டரில் மிளிர்ந்தார். மகன்களை அடிக்க மனம் வராமல் கண்களால் மட்டுமே கண்டிப்பை காட்டும் பாசம் அழகு. அழுகை, ஆர்ப்பாட்டம் என வழக்கமான செயற்கை பூச்சுகளை அண்டவிடாமல் வெகு இயல்பாய் நடித்திருந்தார்.
s
நெக்ஸ்ட் பெஸ்ட்:  காது கேளாத பெண்ணாக நானும் ரவுடிதானில் கலக்கிய நயன்தாரா. தந்தைக்கு நேர்ந்த நிலையை அறிந்த பிறகு தெருவில் அழுதபடியே நடந்து செல்லும் காட்சி.. சென்டிமென்ட் கனமழை.

நடிகர்: மாஸ்டர் ரமேஷ் (காக்கா முட்டை)  
s

பெரிய நடிகர்களை விட சிறியவர்கள் சிறப்பாய் நடித்திருந்தாலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் எனும் வட்டத்திற்குள் அடைத்து விடுவது வாடிக்கை. கமல், ஜெயம் ரவி மற்றும் 'ஆரஞ்சு மிட்டாய்' விஜய் சேதுபதி என பிடித்த நடிகர்கள் வரிசையில் சிலர் இருந்தாலும் சின்ன காக்கா முட்டையாக அசால்ட் செய்த மாஸ்டர் ரமேஷ்தான் எனது ஃபேவரிட் நடிகர் 2015. பொருளை எடைக்கு போட்டதும் கிடைக்கும் காசை கண்டு மகிழ்வது, பீட்ஸா கடையை மிரட்சியுடன் பார்ப்பது, பலநாள் காத்திருப்பிற்கு பிறகு பீட்ஸா சாப்பிடும் ஆசை நிறைவேறும்போது 'ஆயா சுட்ட தோசையே பரவா இல்லல?' என முகம் சுழிப்பது என ஒவ்வொன்றுமே அளந்தெடுத்த க்யூட் ரியாக்சன்கள்.   

வசனகர்த்தா: மணிகண்டன் (காக்கா முட்டை)


சென்னையின் சிறப்பு பேச்சு வழக்கை கதாபாத்திர தன்மையுடன் முற்றிலும் ஒன்றவைத்து வசனங்களை தீட்டியிருந்தார் மணிகண்டன். எங்கும் துருத்தல்கள் இல்லை. 'திருடறமா?' 'இல்ல எடுக்கறோம்', 'ஏன் சிம்பு இந்த ரசம் சாதமெல்லாம் சாப்புட மாட்டானா?' என உதாரணங்கள் ஏராளம்.


இயக்குனர்(கள்): பிரம்மா மற்றும் மணிகண்டன்.

திரைப்படங்கள்: குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை.


மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மூடி மறைக்க முற்படும் பள்ளி நிர்வாகம், குற்ற உணர்ச்சி மனதை உலுக்க மன்னிப்பு கேட்க போராடும் ஆசிரியை, பாலியல் கல்வியின் அவசியம். இம்மூன்றையும் பிரதானமாக வைத்து சுழன்றது குற்றம் கடிதல். அடிப்படையில் பிரம்மா ஒரு நாடகக்கலைஞர் என்பதால் அதன் தாக்கம் படத்தின் சில முக்கிய கட்டங்களில் இருந்தது தொய்வு. மற்றபடி தமிழகத்தில் மட்டுமல்ல. சர்வதேச அங்கீகாரத்திற்கும் முழுத்தகுதி பெற்ற படைப்பை தனது முதல் முயற்சியிலேயே தந்தவர்  பிரம்மா. இப்படி ஒரு உயர்ந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த கிறிஸ்டி சிலுவப்பன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் இருவருக்கும் ஹாட்ஸ் ஆஃப்!!

  

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை படம் பிடித்தால் விருதுகளை நெருங்கி விடலாம். வறுமையின் கோரப்படியில் தவிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள், நெஞ்சை இறுக்கும் பின்னணி இசை, விரக்தி, அழுகை இத்யாதிகளை வைத்துக்கொண்டு பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட்டை பின்பற்றிய படங்களுக்கு மத்தியில் மணிகண்டனின் அணுகுமுறை மாறுபட்டு இருந்தது. கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களையும் நேர்மைத்தனம் கொண்டவையாக உருவாக்கினார். 'ஒரு கீரைக்கட்டு விக்க வெயில்ல காஞ்சி சாகறோம். எங்க கிட்ட பேரம் பேசற. ஆனா ஒடம்ப கெடுக்கற பீட்ஸாவையும், கோக்கையும் வாங்க நூத்துக்கணக்குல செலவு பண்ற' டைப் பொங்கல்கள் இல்லை. ஆனால் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்களை காட்சிகள் மூலமே அழகாய் உணர்த்தி அமைதியாய் சிரித்தது மணிகண்டனின் முதல் பொற்குஞ்சு.   

சர்வதேச விருதுகளை வென்றாலும் காக்கா முட்டை வெகுஜனங்களுக்கும் பிடித்த படமாக மாறியது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீட்ஸா. அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல. (கீழ்) நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் பெரிதும் பரிச்சயமில்லாத வஸ்து பீட்ஸா. செய்தித்தாள் உள்ளே வைக்கப்படும் நோட்டீஸ்கள் மற்றும் தெருவோர விளம்பரங்களில் வியாபித்து இருக்கும் பீட்ஸாவை ஒருமுறையாவது ருசித்தாக வேண்டும் எனும் எண்ணம் இல்லாத சாமான்யர்கள் குறைவுதான். அந்த பல்ஸை நச்சென பிடித்து கதையை உருவாக்கினார். டாப்பிங்காக நகைச்சுவையும் கலந்து தந்ததால் ரசிகர்களை எளிதில் கவர முடிந்தது. பிரமாதமான நடிகர்கள் தேர்வு, வசனங்கள், ஒளிப்பதிவு என அனைத்திலும் டிஸ்டிங்சன். ஸ்டார்கள் முக்கியமல்ல. சரியான முறையில் ப்ரசன்ட் செய்தால் வெற்றி நிச்சயம் என நம்பி தயாரித்த தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.

Sunday, October 11, 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்பு


வணக்கம் நண்பர்களே,


இன்று (11/10/2015) நடைபெறும் புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்பினை காண க்ளிக் செய்யவும்: 


http://dindiguldhanabalan.blogspot.com/2015/10/Pudukkottai-Live-Telecast.html
Tuesday, April 21, 2015

ஸ்பெஷல் மீல்ஸ் (21/04/15)காவலுக்கு கெட்டிக்காரர்:


தமிழக காவல்துறை என்றாலே இன்றளவும் பொதுவாக அதில் பணியாற்றுவோரை அச்சத்துடனும், சந்தேகத்துடனும் நோக்கும் மனப்பான்மை நமக்கு மாறவில்லை. ஆனால் வேகமாய் வளர்ந்து வரும் (கணினி)யுகம் அவ்வப்போது சில ஆச்சர்யங்களை தரத்தான் செய்கிறது. எனக்குப்பிடித்த பதிவுகளை முந்தைய ஸ்பெஷல் மீல்ஸ்களில் குறிப்பிட்டு வந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது ஃபேஸ்புக்கில் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நட்புகள் மற்றும் பதிவுகளையும் உங்களுக்கு பகிர முடிவு செய்திருக்கிறேன். அவ்வரிசையில் முதல் நபராக வருபவர் சென்னை கொரட்டூர் காவல் நிலைய அதிகாரியான ஆவடி சிவா.

'என்னது தமிழ்நாட்டு போலீஸ் ஒருத்தர் ஃபேஸ்புக்ல சகஜமா இயங்கறாரா?' எனும் ஆச்சர்யம் எனக்கும் முதல் தொற்றிக்கொண்டது. அதன்பிறகு அந்த போலீஸ் அதிகாரியை(யே) Follow செய்தேன். வெளிப்படையான கருத்துகள், ஆக்கப்பூர்வமான சிந்தனை, எளிதாக நட்பு பாராட்டுதல் என 'காவல்துறை உங்கள் நண்பன்' எனும் கூற்றுக்கு ஏற்ற நண்பராய் திகழ்கிறார். நான் படித்த வடசென்னை தியாகராயா கல்லூரியில்தான் இவரும் படித்தார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. காவலுக்கு கெட்டிக்காரரான நண்பர் ஆவடி சிவாவை (ஃபேஸ்புக்கில்) பின்தொடர....


...................................................................................


புறம்போக்கு என்கிற பொதுவுடமை:
பண பரிவர்த்தனை செய்ய வீட்டருகே இருந்த அரசு வங்கி கிளைக்கு சென்றிருந்தேன். இதற்கு முன்பாக அங்கு சென்று சில ஆண்டுகளாவது ஆகி இருக்கும். இப்போது நவீன வசதிகளுடன் ஜகஜோதியாக இருந்தது. வரவேற்பு பெண்மணி (ரிஷப்ஷனிஸ்ட்) அன்பாக அழைத்து அமர செய்தார். யாரை பார்க்க வந்தேனோ அந்த ஊழியரிடம் (வடக்கத்தி இளம்பெண்) என்னை 'கவனித்துக்கொள்ளுமாறு' கைகாட்டிவிட்டு 'அவங்க உங்களை கூப்பிடுவாங்க. வைட் பண்ணுங்க சார்' என்று பணிவுடன் கூறியபடி நகர்ந்தார். இருபது நிமிடங்கள் ஆகியும் ஒற்றை கஸ்டமருடன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் அந்த வடக்கத்தி. என்னதான் நவீன வசதிகள் வந்தாலும் இதுபோன்ற இழுவைகள் இருந்தால்தானே அரசு நிறுவனங்களுக்கு அழகு. 

சிறிது நேரம் கழித்து என்னருகில் வந்த ஒரு பெண்மணி 'நீங்கள் க்ரெடிட் கார்ட் வைத்திருக்கும் கம்பனியில் குறைந்தபட்ச தொகை எவ்வளவு வைத்திருக்க வேண்டும்?' என வினவ 'தெரியாது' என்றேன். அடுத்த கேள்வி 'இப்போது உங்கள் கணக்கில் எவ்வளவு இருக்கிறது?' பதில் 'அதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வேண்டும்?' என்ற பிறகுதான் 'நானும் இந்த பேங்க் ஸ்டாஃப்தான் சார். க்ரெடிட் கார்ட் வாங்குவீங்களான்னு கேக்கத்தான்..' என்று இழுத்தார். 'முதலில் நீங்கள் யாரென்று அறிமுகம் செய்துகொண்டிருந்தால் இந்த குழப்பமே வந்திருக்காதே?'  என நான் அம்மணிக்கு சொன்னபிறகுதான் உரைத்தது. அவரைச்சொல்லி குற்றமில்லை. அரசு வங்கி ட்ரைனிங் அப்படி. அடுத்து நீண்ட நேரமாக என்னருகே அமர்ந்திருந்த பெரியவரை பார்த்தேன். கையில் ஒரு நாவலை கிட்டத்தட்ட கீழே விழும் நிலையில் வைத்தவாறு தூங்கிக்கொண்டு இருந்தார். இன்னும் எனக்கான அழைப்பு வரவில்லை. விரைவில் இரண்டு பெரிய சைஸ் நாவல்களை வாங்கியாக வேண்டும். 
...............................................................................

தவமாய் தவமிருந்து:
சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்கள் ரஜினி, கமல் போன்ற முக்கியஸ்தர்கள் பேசும் க்ளிப்பை ஒவ்வொரு இடைவேளைக்கு முன்பும் போட்டு 'அடுத்து வருவது' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதனை நம்பி முழு நிகழ்ச்சியையும் பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் 'கடைசியில்தான் இதனை போடப்போகிறார்கள்'  உஷாராகினர். அதற்கும் ஒரு மாற்றுவழியை கண்டுபிடித்து இருக்கிறார்கள் தற்போது. சன் டி.வி.யில் சென்ற வாரம் SICA திரை விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.  கமல் பேசும் க்ளிப்பை 'அடுத்து வருவது' எனக்காட்டியே இரவு 10 மணிக்கு மேல் வரை இழுத்துவிட்டு 'அடுத்த வாரம்' என்று அல்வா தந்து விட்டார்கள். என்ன ஒரு யாவார யுக்தி!!
.................................................................................

புதுப்பேட்டை: 


பெரிதாக பரிச்சயம் இல்லாத புதுப்பேட்டை ஏரியாவிற்கு செல்லும் சந்தர்ப்பம் சில மாதங்களுக்கு முன்பு அமைந்தது. தொழில் ரீதியாக வந்திருந்த நண்பர்களுடன் நாள் முழுக்க ஏரியாவை ரவுண்ட் அடித்தேன். வெளியூரில் இருந்து அங்கு வருவோருக்கு கடைகளின் பெயர்ப்பலகை முகவரிகள் முந்தைய கிர்ரடிக்க வைக்கும். முந்தைய ஹாரிஸ் ரோடு ஆதித்தனார் சாலையாக மாறி இருப்பினும்  கடைக்கு கடை தங்களுக்கு பிடித்த பெயர்களை வைத்திருந்தனர்: ஹாரிஸ் ரோடு, ஹரீஷ் ரோடு, ஆதித்தனார் சாலை. சிலர் இரண்டில் ஒன்றை அடைப்புக்குறிக்குள் எழுதி வைத்திருந்தனர். புதுப்பேட்டையின் முந்தைய பெயர் கோமளீஸ்வரன் பேட்(டை) எனும் தகவலும் மேலிருக்கும் கடை முகவரி மூலம் எனக்கு கிட்டியது.
.................................................................................

சென்னை எக்ஸ்ப்ரஸ்:
ஒவ்வொரு பதிவருக்கும் பெயர் சொல்லும்படி தனித்தன்மை கொண்ட அம்சங்கள் இருத்தல் சிறப்பு. ரயில்வே துறையில் பணியாற்றும் நண்பர் ஆரூர் முனாவுடன் ஒரு முறை பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது 'நீங்கள் ஏன் ரயில்வே சம்மந்தப்பட்ட ஒரு தொடரை எழுதக்கூடாது?' எனக்கேட்டிருந்தேன். அதற்கான காலம் தற்போதுதான் கனிந்திருக்கிறது. 'ஆரூர் முனா எக்ஸ்ப்ரஸ்' எனும் தலைப்பில் இதுவரை ஏழு பதிவுகளை எழுதி இருக்கிறார். வாசிக்க... 
 

...................................................................................

மெல்லத்திறந்தது கதவு:
புட்போர்ட் அடிப்பவர்களையும், நிறுத்தம் அல்லாத இடங்களில் ஏறி இறங்குவோரையும் கட்டுப்படுத்த ஓட்டுனர் துணையுடன் மூடி திறக்கும் தானியங்கி (!!) கதவு கொண்ட பேருந்துகளை சில ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளில் ஓடவிட்டது சென்னை மாநகர போக்குவரத்து கழகம். விபத்துகளை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு என்றாலும் பாதங்களுக்கும் பஞ்சமில்லை. தற்போது பெரும்பாலான கதவுகள் சரியாக இயங்காமல் இருக்கின்றன. எப்போது மூடிக்கொள்ளுமோ எனும் அச்சத்துடனே இறங்க வேண்டி இருக்கிறது. இயங்காத கதவுகளை சரி செய்யலாம் அல்லது பிடுங்கி போடலாம். 

சினிமாவில்தான் எங்கு திரும்பினாலும் திகில் காமடி படங்கள் வருகின்றன. போதாக்குறைக்கு இது வேறா?
.................................................................................

வெவரமான ஆளு: 
பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள இனாமாக தரும் ராய்த்தா, கத்தரிக்கா கொஸ்துக்களை கூட காம்போ லிஸ்டில் சேர்த்து வரும் மேட்டுக்குடி உணவகங்கள் ஒருபக்கமென்றால் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருக்கும் சில சிறு உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டிக்கடைகள் செய்யும் ஜகஜ்ஜால வேலைகள் தனிரகம். 'இரண்டு இட்லிக்கு குறைவாக ஆர்டர் செய்யக்கூடாது' என்கிற நிலை வேகமாக மலையேறி வருகிறது. 'குறைந்தது நாலு இட்லி வாங்கிக்கொள்ளுங்கள்' என அன்புகலந்த மிரட்டலுடன் ஆர்டர் போட ஆரம்பித்து விட்டார்கள். பூரியும் விதிவிலக்கல்ல. மூன்று பூரிக்கு குறைவாக தருவதில்லை. விரைவில் இந்நிலை அனைத்து உணவகங்களிலும் பரவலாக்கப்படும் என தெரிகிறது. அதுபோல சமோசா, பஜ்ஜிகளும் குறைந்தபட்சம் இரண்டாக வாங்க வேண்டுமென ஆங்காங்கே ஆர்டர்கள் இருந்து வருகின்றன. உதாரணம்: ஸ்பென்சர் ப்ளாசா தரைத்தளத்தில் இருக்கும் சிற்றுண்டியகம்.
.....................................................................................

நெஞ்சில் துணிவிருந்தால்:
சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது அவ்வப்போது கடுப்பை காட்டி வருவது தமிழ் திரைத்துறையினரின் வழக்கம். மிஷ்கினை தொடர்ந்து தற்போது சுஹாசினி பேசிய பேச்சு பெரிய விவாதத்திற்கு ஆளாகி இருக்கிறது. இந்தியாவின் வேறெந்த திரைத்துறையிலும் இல்லாத அளவிற்கு சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் மக்கள் மீது கோடம்பாக்க கலைஞர்களுக்கு கோபம் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெப்ஸி தொழிலாளர் யூனியன், திருட்டி விசிடி ஒழிப்பு, கட்சிகள் சார்ந்து சாட்டிலைட் உரிமை விற்பதில் வரும் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு குடும்ப பிரச்னைகளை சீர் செய்தாலே தமிழ் சினிமா செழிப்பாக இருக்கும். அதை விடுத்து சொந்தப்பணம் போட்டு படம் பார்க்கும் ரசிகன் மீது மட்டுமே காட்டத்தை காட்டிக்கொண்டு இருந்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
.................................................................................

ரோஜாக்கூட்டம்:
பிரபல நாளேடுகள்/இதழ்கள் அளிக்கும் பொங்கல், தீபாவளி சிறப்பு மலர்களை தொடர்ந்து வாங்குவதில்லை நான். பாதி புத்தகத்திற்கு விளம்பர ஆக்ரமிப்பு, சத்தற்ற விஷயங்கள் அதிகம் இருப்பது என காரணங்கள் பல. அதற்கு விதிவிலக்காக வந்திருக்கிறது தமிழ் இந்துவின் சித்திரை மலர். இளம் சாதனையாளர்கள், ஆன்மிகம், ஊர் புராணம், பெண் கவிகள் பற்றிய சிறப்பு கட்டுரைகள், நூலகங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள், 1960 களில் தமிழ் சினிமா எனும் தலைப்பில் கருந்தேள் ராஜேஷ் உள்ளிட்டோர் எழுதி இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள், சிறுகதைகள், நேர்காணல்கள் என அசத்தலாக இருக்கிறது இந்த மலர். விளம்பரங்கள் குறைவு. தரமான அச்சு. விலை 120. ஐ லைக் இட்.
........................................................................................

மயக்கம் என்ன? 
தனியார் பேருந்து ஓட்டுனரின் கடமை உணர்ச்சியை இக்காணொளியில் காண்க:


.................................................................................  
   

Friday, April 3, 2015

சகாப்தம்
தீவிர அரசியலில் தொபுக்கடீர் என விஜயகாந்த் குதித்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அந்த அகம்பாவத்தில் ஈராக்கின் ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகள் வாலாட்டி வருவதை வருத்தமாய்த்தான் பார்க்கிறது சர்வதேச சமூகம். குறிப்பாக கலையுலகில் ஏற்பட்ட இந்த பாலைவன வறட்சியை சற்றேனும் போக்க வைஸ் கேப்டன் சண்முகபாண்டியன் களமிறங்கி இருக்கும் படம் 'சகாப்தம்'.

கதை: தந்தை சொல் கேட்டு பொறுப்புடன் வாழும் இளைஞன் சகா. நல்ல வேலை தேடி மலேசியா செல்கிறான். முறையான கம்பனியில் வேலை பார்க்க பர்மிட் இல்லாததால் மலேசியாவில் கைதாகும் அவன் அதன் பிற்பாடு அந்நாட்டு போலீஸே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு எப்படி சமூக விரோதிகளை ஒடுக்குகிறான்?

ரெண்டு செட் நெய்ப்பொங்கல் சாப்பிட்டவர் போல பல சீன்களில் மந்தமாய் நடந்தவாறே நடித்திருக்கிறார் சண்முகம். 'மன்னிப்பு கேக்குறது எங்க பரம்பரைக்கே பிடிக்காது' என்று வைக்கும் பஞ்ச்...கடமை. நாயகி உதட்டோடு முத்தம் தந்தபிறகு ஏதோ ஓமப்பொடியை தட்டிவிடுவது போல தனது உதட்டை ஓரங்கட்டும் இடம்...கண்ணியம். கேப்டனுக்கு உரித்தான கத்திப்பேசும் வசனங்கள், நீள கோட் போன்ற ட்ரேட் மார்க் அம்சங்களை இவர் தவிர்த்து இருப்பது...கட்டுப்பாடு. ஆக்சன் காட்சிகளில் கூட அசமந்தமாய் இருந்துவிட்டு பிறகு போனால் போகிறதென்று எதிரிகளை ஊமைக்குத்து குத்தும் ஸ்டைல் உலக  சினிமாவிற்கு புதிதாகும். ஆரம்பம் முதல் இறுதிவரை காமடி என்கிற பெயரில் ஜெகன் எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனாலும் டயலாக் பேசுவதில் ஹீரோவுக்கு இவ்வளவு கூச்ச சுபாவம் ஆகாது.

'மாமன் பொண்ணு' நேஹா மற்றும் 'துப்பறியும் பெண் சிங்கம்' சுப்ரா ஆகியோரின் உதட்டசைவிற்கு டப்பிங் தந்த அப்பாவி ஜீவன்கள் இன்னும் உடல் நலத்துடன் இருக்கிறார்களா என்பது முக்கியமான கேள்வி? ரஞ்சித், தேவயானி, போஸ் வெங்கட் மற்றும் கேப்டனுக்கு 'ஜே' போடும் சில துணை நடிகர்கள் வரும் காட்சிகள் சீரியலுக்கு உரித்தானவை. சிங்கம்புலியின் காமடி எடுபடவில்லை. மலேசியா மாமாவாக பவர் ஸ்டார் செய்யும் ரவுசு அவரது ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்தமானவை.


 'கேட்டாலும் உதவி செய்யாதவங்களுக்கு மத்தியில கேட்காமல் உதவி செய்யற நீ... உங்க அப்பா மாதிரி, 'இந்த (சிவந்து பொங்கும்) கண்ணை இதுக்கு முன்ன எங்கயோ பாத்த மாதிரி இருக்கே' என புரட்சிக்கலைஞரின் பிரதாபங்கள் ஆங்காங்கே உண்டு.

இசை கார்த்திக் ராஜா. ரேஸ் குர்ரம் தெலுங்கு படத்தில் வரும் 'சினிமா சூபிஸ்த மாமா' பாடல் ஸ்டைலில் வரும்  'அடியே ரதியே' பாடல் துள்ளல். கண்ணைப்பறிக்கும் உடைகளை ஓரங்கட்டி பெரும்பாலும் கட்டம் போட்ட சட்டையுடன் சண்முகத்தை நடமாட விட்டிருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் ப்ரேமலதா விஜயகாந்த்.

ஹீரோ மலேசிய போவதையே ஒரு பெரிய சம்பவமாக்கி அநியாயத்திற்கு நேரத்தை கடத்தியுள்ளார் இயக்குனர் சுரேந்திரன். லாஜிக்கை தூக்கி கடாசிவிட்டு மலேசியா காவல்துறைக்கு உற்ற நண்பனாய் சண்முகத்தை ஜெட் வேகத்தில் ஏற்றி விட்டிருப்பது அநியாயம்.

க்ளைமாக்ஸில் விஜயகாந்த் மற்றும் சண்முகம் எதிரிகளை பந்தாடும் நிமிடங்கள் கண்கொள்ளா காட்சி. 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரிக்கு பிறகு தற்போதுதான் விஜயகாந்த் திரையில் தோன்றி இருக்கிறார். முகத்தில் முதுமை எட்டிப்பார்ப்பதால் முந்தைய கர்ஜனை மொத்தமாய் மிஸ்ஸிங். பிழைக்க வந்த தேசத்தில் இருக்கும் இந்திய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லி தனது கௌரவ பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிய கேப்டனுக்கு இதயம் நெகிழ்ந்த கும்பிடுகள்.

மொத்தத்தில் சண்முக பாண்டியனை 'நம்ம வீட்டுப்பிள்ளை' என நினைக்கும் கேப்டன் ரசிகர்கள் வேண்டுமானால் கொண்டாடலாம். மற்றபடி 'சகாப்தம்' உங்கள் பொறுமையை சக்கையாய் பிழியும் படம் மட்டுமே.

written for tamil.jillmore.com

........................................................................................
 


Monday, March 9, 2015

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை


 
தற்போது தமிழ் திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் சேரனின் சினிமா 2 ஹோம். புதிய திரைப்படங்களை டி.வி.டி., சாட்டிலைட் சேனல் உள்ளிட்ட வடிவங்களில் மக்களிடம் சுடச்சுட  டெலிவரி செய்யும் சிஸ்டம். இப்படி ஒரு திட்டத்தை சேரன் முன்னெடுக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர் தயாரித்து இயக்கிய ஜே.கே  எனும் நண்பனின் வாழ்க்கை படம்தான்.

கடுமையாக போராடியும் இப்படத்தை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் தவித்துப்போனார். அந்த குமுறலை தீர்க்க தன்னைப்போன்று கஷ்டப்படும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்காக C2H எனும் நிறுவனத்தை தோற்றுவித்து இருக்கிறார்.  இப்புதிய முயற்சியின் மூலம் வெளிவந்திருக்கும் முதல் படைப்பு ஜே. கே. எனும் நண்பனின் வாழ்க்கை. திரைக்கு வர இந்த அளவு தடுமாறிய ஜே.கே. எப்படி இருக்கிறது?

ஃபேஸ்புக், பார்ட்டி என நினைத்தபடி வாழ்க்கையை கடத்தி வரும் மாடர்ன் இளைஞன் ஜெயகுமார் (ஜே.கே.). எதிர்பாராமல் நடக்கும் விபத்தொன்று அவனது வேகத்திற்கு தடை போடுகிறது. அதன் பிறகு சீராக தனது வாழ்க்கைப்பாதையை அமைத்துக்கொள்கிறான். வெற்றி வசமானாலும் சோதனைகளும் ஒருபுறம் துரத்துகின்றன. அவற்றை எப்படி எதிர்கொள்கிறான் இந்த ஜே.கே?

நவநாகரீக இளைஞனாக சர்வானந்தை காட்டுவதில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து ஃப்ரேம்களிலும் மெட்ரோ செழிப்பு பளிச்சிடுகிறது. முதல் சில காட்சிகளை பார்க்கும்போது 'சிட்டியில் சேரனின் வெற்றிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்போல இருக்கே' என ஆச்சர்யப்படுவதோடு சரி. அதன்பிறகு இயக்குனருக்குள் இருக்கும் விக்ரமன் விஸ்வரூபமெடுத்து நம்மை உலுக்கிப்போடுகிறார். நல்லவேளை எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைக்கவில்லை. செவி தப்பியது செந்தூர் முருகன் புண்ணியம்!!

இடைவேளைக்கு பிறகு விக்ரமனின் இடத்தை சென்டிமென்ட் சேரன் ஆக்ரமிக்க நமக்கான உதறல் உச்சக்கட்டத்தை எட்டுகிறது. உற்ற நண்பனின் குடும்பத்தாரில் ஒற்றை தங்கை இருந்தால் அது பாமரத்தனமான படைப்பு. இது சேர ராஜ்ஜியம் என்பதால் மூன்று தங்கைகள்...சோகம்..நெகிழ்ச்சி..விரக்தி என சென்டிமென்ட் ரசம் குற்றால அருவியாய் தலையில் கொட்டி பித்தத்தை வெகுவாக அதிகரிக்கும் பாங்கை என்னவென்று சொல்ல?

இதுபோக படம் நெடுக பஞ்சமின்றி கொட்டிக்கிடக்கின்றன கருத்துக்குவியல்கள். அவற்றுள் சில:

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு, உடல் தானம் செய்வீர். ஊர் போற்ற வாழ்வீர், நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே கடுக்கணை கழற்றுவதாம் நட்பு, தானத்தில் சிறந்த தானம் நிதானம், சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்.

'இந்த நகரத்துக்கு என்னதான் ஆச்சு? சாம்பல் மேடுகளும்' பிரச்சார படத்தை சில நொடிகள் பார்க்கவே பொறுக்காமல் அலும்பும் இளசுகளை 'அது வெறும் ட்ரெய்லர். இனிமேதான் உங்களுக்கு இருக்கு தீபாவளி' என கிண்டி கிழங்கெடுத்துள்ளார் இயக்குனர்.


'எங்கேயும் எப்போதும்' மூலம் நகரத்து இளைஞனை யதார்த்தமாய் பிரதிபலித்த சர்வானந்த் மட்டுமே ஜே.கே.வின் ஒரு ஆறுதல். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவராலும் சேரனின் இழுப்பிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை பாவம். நித்யா மேனனை ஓகே கண்மணி என்று மட்டுமே சொல்லத்தோன்றுகிறது. பிரகாஷ் ராஜே சிரிக்கும் அளவிற்கு அவருக்கு ஒரு சோதா வில்லன் கதாபாத்திரம். 'சரக்கு அடிச்ச பையனும், முறுக்கு சாப்புடற பொண்ணும்' ரீதியில் சந்தானம் ஸ்பாட் ஜோக்குகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். கொஞ்சமே வந்தாலும் மனதை தொடுகிறது மனோபாலாவின் நடிப்பு. கிட்டி, ஜெயப்ரகாஷ் ஆகியோரும் இருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் 'ஃபேஸ்புக் லாகின்' மற்றும் 'உடலுறுப்பு தானம்' பற்றிய பாடல்கள் கேட்கத்தூண்டுகின்றன. எடிட்டராக ராமாராவின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை வெகுவாக புரிந்து கொள்ளமுடிகிறது.

இயக்குனர் சேரனுக்கும், தற்கால சினிமா ஆர்வலர்களின் ரசனைக்குமான 'தலைமுறை' இடைவெளி எவ்வளவு நீளமானது என்பதை எடுத்துச்சொல்ல இதைவிட 'சிறந்த' படத்தை மேற்கோள் காட்டிவிட இயலாது. ஒருவேளை இதில் சேரனும் நடித்திருந்தால்...அந்த திகிலை கற்பனை செய்யவே இதயம் பதை பதைக்கிறது. விழித்துக்கொள்ளுங்கள் சேரன். இது 2015. சமகால ரசனை எனும் நாடித்துடிப்பை நீங்கள் சரிவர  பார்க்கும் காலம் கனியும் முன் அது இன்னும் பத்தாண்டுகள் உங்களை விட்டு முன்னே சென்று விடாமல் கற்பனைக்குதிரையை செலுத்துங்கள். உங்களால் முடியும் சார். தும்பிக்கையை விட பெரியது நம்பிக்கை எனும் தத்துவத்துடன்  எமது சாஷ்டாங்க நமஸ்காரங்கள். வணக்கம்.

Written for tamil.jillmore.com
 

Thursday, February 5, 2015

என்னை அறிந்தால்
வணக்கம் நண்பர்களே,

அஜித், அருண்விஜய், த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் விமர்சனத்தை படிக்க:

http://tamil.jillmore.com/yennai-arindhaal-review/ ..................................................................

Friday, January 23, 2015

தொட்டால் தொடரும்

தனது வலைப்பக்க (Blog) சினிமா விமர்சனங்கள் மூலம் நன்கு அறியப்பட்ட கேபிள் சங்கர் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் 'தொட்டால் தொடரும்'. பல்வேறு படங்களுக்கு வெளிப்படையாக விமர்சனம் வைத்தவர் எடுத்த படைப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிய திரைத்துறை மற்றும் இவரது வாசகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது என சொல்லலாம். அப்படி ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் தொட்டால் தொடரும் எப்படி இருக்கிறது என்பதை இனி பார்க்கலாம்.

தனியார் நிறுவன கால் சென்டர் பிரிவில் வேலை செய்பவள் கதையின் நாயகி மது. வீட்டில் சில முக்கியமான பிரச்னைகள் வாட்டி எடுத்தாலும் சிவாவுடன் பூக்கும் காதல் அதனை மறக்கடிக்க செய்கிறது. ஆனால் அந்த பட்டாம்பூச்சி தருணங்கள் சில நாட்களே நீடிக்கின்றன. எதிர்பாராத இக்கட்டில் சிக்கிகொள்ளும் மது அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறாள். ஆபத்தில் இருந்து அவளை மீட்க சிவா எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைந்ததா என்பதுதான் கதை.

'ரொமாண்டிக் த்ரில்லர்' வகையிலான கதையை தேர்ந்து எடுத்திருக்கிறார் கேபிள் சங்கர். இது உண்மை சம்பவத்தின் தழுவல் என ரிலீசுக்கு முந்தைய பேட்டிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் 'இப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே' என டைட்டிலில் வருவது ஏனென்று புரியவில்லை.

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அனுபவம் கொண்ட அருந்ததி மற்றும் தமன் குமார் இருவரும்தான் இப்படத்தின் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். கதை முழுக்க அருந்ததியை மையமாக வைத்தே நகர்கிறது. பார்க்க அம்சமாய் இருக்கிறார். காதல், சோகம் என உணர்ச்சிகள் இயல்பாய் வருகின்றன. போனில் தொந்தரவு செய்யும் தமனிடம் எரிந்து விழும்போது ஆந்திரா காரம். க்ளோஸ் அப் காட்சிகளில் மட்டும் முதிர்ச்சி தெரிகிறது. HR அதிகாரி கேரக்டருக்கு சிறப்பாய் பொருந்திப்போகிறார் தமன். சராசரி கதாநாயகனுக்கான துள்ளல், அதிரடி என எதுவுமில்லாமல் நாயகிக்கு அடுத்தபடியாக வரும் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆபீஸை விட்டு வெளியே இருக்கும் தருணங்களில் கார்ப்பரேட் நிறுவன பாணியில் வசனங்களை உச்சரிப்பதும்  காதல் பொங்கும் போது கூட பக்கா ஃபார்மலான நபராக இருப்பதும் செயற்கையாய் இருக்கிறது.

வில்லனாக வின்சன்ட் அசோகன். இடைவேளைக்கு பிறகுதான் என்ட்ரி தருகிறார். ஒற்றை வரி வசனம் கூட பேசாமல் இளஞ்ஜோடிகளை விரட்டி மிரள வைத்திருக்கிறார். அருந்ததி, தமன் மற்றும் வின்சன்ட் மூவருக்கும் இப்படம் முக்கிய அடையாளமாக இருக்கும்.

காமடி என்கிற பெயரில் பாலாஜி பேசுபவை எதுவும் சிரிப்பை வரவழைக்கவில்லை. பெண்களுக்கு ரூட் விடும் சின்னி ஜெயந்த் கால டெக்னிக்கை வைத்துக்கொண்டு சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார் பாவம். 'தொட்டால் தொடரும்' படத்தின் முக்கிய பலவீனமாக இருப்பது துணை நடிகர்கள் தேர்வு. காவலதிகாரிகளாக வரும் துரைராஜ் ரஞ்சன் அருந்ததியின் பெற்றோர்கள் மற்றும் சில உபரி வில்லன்கள் ஆகியோரின் நடிப்பு மிக சுமாராய் இருக்கிறது. கதை/திரைக்கதை ஜிவ்வென இருப்பதற்கு இந்த கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அதற்கான நடிப்பு வெளிப்படாமல் போய்விட்டது. சில நிமிடங்களே வந்தாலும் பிரமிட் நடராஜன் மற்றும் நாடக  நடிகர் பாரதிமணி இருவரும் மனதில் நிற்கிறார்கள்.


'சாகறதுக்கு எடுத்த ரிஸ்க்கை விட வாழறதுக்கு எடுத்த ரிஸ்க்கை நினைச்சாதான் பயமா இருக்கு' 'சினிமா விமர்சனம் எழுதுனா கூடவா கொலை பண்ணுவாங்க' போன்ற வசனங்களில் கேபிள் சங்கரின் எழுத்து மிளிர்கிறது. துருத்தல்கள் இல்லாமல் இயல்பாய் பயணிக்கும் வசனங்கள் ப்ளஸ்.

பி.சி.சிவனின்  'பாஸு பாஸு' 'பெண்ணே பெண்ணே' பாடல்கள் சிறப்பு. 'யாருடா மச்சான்' ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது. சக்தி செல்லத்தின் 'காதலென்ன தாய்ப்பாலா..அழுதவுடனே கிடைக்க' வரிகள் வாவ். சமூக அவலங்களை சொல்லும் 'பாஸு பாஸு' பாடல் வரிகள் இயக்குனர் மற்றும் கார்க்கி பவா இருவராலும் கச்சிதமாய் செதுக்கப்பட்டு இருக்கின்றன. சேஸிங் காட்சிகளில் பரபரக்க வைக்கும் பின்னணி இசை மற்ற இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

சிற்சில குறைகள் இருந்தாலும் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு நன்று. சண்டைக்காட்சிகள் எதுவும் இல்லாவிடினும் 'த்ரில்ஸ்' என்று சொல்லப்படும் வாகன துரத்தல்கள் போன்ற தருணங்களில் 'நாக்கவுட்' நந்தாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறுகிய பட்ஜெட் படத்தில் ஒற்றை லாரி மற்றும் காரை வைத்துக்கொண்டு போதுமான பரபரப்பை கிளப்பி இருப்பதற்கு சபாஷ் போடலாம். உடைத்தேர்வுகளில் நன்றாய் கவனம் செலுத்தி இருப்பது இன்னொரு பாஸிடிவ் விஷயம்.

முதல் பாதியில் 'காலமெல்லாம் காதல் வாழ்க' முரளி - கவுசல்யாவை  நினைவுபடுத்தும் ஃபோன் காதல் இயல்பாய் இருந்தாலும் நீளம் அதிகம். மற்றபடி நம்மை தொடர்ச்சியாக கொட்டாவி விட வைக்காமல் கதையை நகர்த்திய விதத்தில் தடம் பதித்துள்ளார் இயக்குனர். முன்பு குறிப்பிட்டது போல கவனத்தை ஈர்க்காத துணை நடிகர்கள், சில நாடக பாணிக்காட்சிகள், பாலாஜியின் காமடி, விறுவிறுப்பை கிளப்பாத விசாரணை காட்சிகள் போன்ற அம்சங்களை நன்றாய் மெருகேற்றி இருந்தால் செமத்தியான த்ரில்லராய் இருந்திருக்கும்.

நாயகர்களை கொண்டாடும் தமிழ் சினிமாவில் படம் நெடுக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையை தேர்வு செய்திருக்கும் கேபிள் சங்கருக்கு பாராட்டுகள். முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள்/காட்சிகள் இல்லாததால் குடும்பத்துடன் பார்க்க விரும்புபவர்கள் தயங்க வேண்டியதில்லை.


ஆகமொத்தத்தில் புதுமுக இயக்குனர், பெரியளவில் பரிச்சயமாகாத நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் இருந்து வந்திருக்கும் ஓகே படைப்பு இந்த 'தொட்டால் தொடரும்'.
Written for tamil.jillmore.com

.............................................................................

Wednesday, January 14, 2015


விக்ரம் - வசூலில் அடாது சோதனைகள் வந்தாலும் விடாது போராடும் கலைஞன். பீமா, ராவணன், கந்தசாமி, ராஜபாட்டை, தாண்டவம் போன்றவற்றில் முன்னணி இயக்குனர்கள் இருந்தும் காரியம் ஆகவில்லை. இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் பேனர் வேறு. இந்த முறையாவது 'ஐ'டியாக்கள் வொர்க் அவுட் ஆகினவா?

மிஸ்டர் தமிழ்நாடு வசமான பிறகு மிஸ்டர் இந்தியா பட்டம் வெல்வதை குறிக்கோளாக கொண்டிருக்கிறான் பாடி பில்டர் லிங்கேசன். விளம்பர மாடல் தியா என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். தியாவுடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் வர மகிழ்ச்சியில் திளைக்கிறான். அதற்காக மிஸ்டர் இந்தியா கனவை கூட தியாகம் செய்யும் லிங்கேசனுக்கு பரிசாய் கிடைப்பது 'ஐ'எனும் Influenza வைரஸ் கிருமிதான். அது அவனுடைய உருவத்தையே அகோரமாக்கி விட பின்னணியில் இருந்தவர்களை எப்படி பழிதீர்க்கிறான்?

காதலுக்கு ஒன்று, சமூக பிரச்னைகளுக்கு ஒன்று என இரண்டே ஐட்டங்கள்தான் ஷங்கரின் மெனுவில் எப்போதும் இருக்கும். இப்போது காதலை கரம்பிடித்து இருக்கிறார். ஷங்கரின் வழக்கமான காதல் கதைகளில் இருந்து 'ஐ' எந்த அளவு மாறுபட்டு இருக்கும் எனும் சிந்தனையை தியேட்டர் வாசலில் இருக்கும் முயல் பொம்மையின் வயிற்றில் போட்டுவிட்டு உள்ளே செல்வதுதான் உத்தமம். அந்நியனில் சுட்ட பரோட்டாவை குளிர்பதன கிடங்கில் இருந்தெடுத்து சூடு பண்ணி தந்திருக்கிறார்கள். தட்ஸ் ஆல். 'டி.டி.ஆர்....' என நீங்கள் கதறினாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

மிரட்டல் ஜிம் பாடி, பக்கா மாடல் கெட்டப், வைரஸ் குதறிய உடல் என விக்ரமின் உழைப்பு எப்போதும் போல அபாரம். நடிப்பதை விட மாறுவேஷம் கட்டுவதில் கமலுக்கு தம்பியாக இருந்தாலும் அவை பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீராய் போகையில் வருத்தம்தான். சென்னை லோக்கல் தமிழில் தடுமாறுகிறார். முதல் பாதி முழுக்க 'மோடம்' என்ற வார்த்தையை வைத்தே சமாளிக்க நினைத்திருப்பது ஏனோ? காஸ்ட்யூம்கள் அனைத்தும் சிக்கென பொருந்துகிறது ஏமி ஜாக்சனுக்கு. நீச்சல் உடையில் இவர் நடந்து வரும்போது நாமும் 'ஏரிக்கரை' லிங்கேசனாவது உறுதி. காதல்தான் பிரதானம் என்றாகிவிட்ட பிறகு இருவருக்குமான கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லாதபோது எரிச்சல்தான் மிஞ்சுகிறது.

கொஞ்சமே வந்தாலும் பவர் ஸ்டார் ராக்ஸ். 'நாலு பேரை போட்டுருக்கியா?' சந்தானம் காமடி சிக்கன் டிக்கா. மற்றபடி ஸ்பெஷலாய் ஒன்றுமில்லை. க்ளைமாக்ஸில் உடலால் ரணமானவர்களை கண்டு சந்தானம் கிண்டல் செய்யுமிடம் கசப்பின் உச்சம். இதை காமடி என்று சொல்வது அபத்தம். அதுபோல திருநங்கை கேரக்டரை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டிகள், சீனர் ஒருவரை 'சப்பை' என்று விக்ரம் சொல்வது போன்றவையெல்லாம் சகிக்கவில்லை. என்ன கொடும ஷங்கர் இது? உங்களை அண்ணாந்து பார்ப்பது தவறு என்று சொல்ல வருகிறீர்களா? 


பொதுவாக ஷங்கரின் படங்களில் துணை நடிகர்கள் தேர்வு சிறப்பாய் இருக்கும். ஆனால் இம்முறை அனைவருமே சொதப்பி இருப்பதற்கு  இயக்குனரின் தேர்வைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். சுரேஷ் கோபி, ராம்குமார், உபேன் படேல் என ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு சுரத்தையற்ற பெர்பாமன்ஸை தந்திருப்பது பெரிய மைனஸ். 

'மெர்சலாயிட்டேன்' செவிக்கினிமை. 'ஆய்லா ஆய்லா' தொழில்நுட்ப அதிரடி. 'என்னோடு நீயிருந்தால்' அந்தோ பரிதாபம்.  ஷங்கர், மணிரத்னம், ரஜினி படங்களில் மட்டுமே கொஞ்சம் தம் கட்டி வாசித்து வந்தார் ரஹ்மான். இப்போதெல்லாம் அந்த ரிஸ்க்கையும் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட ஆரம்பித்து விட்டார். விக்ரம் குல்பி ஐஸ் வண்டியை தள்ளும்போது மட்டும் பின்னணி இசை முன்னணியில்.

உடற்பயிற்சிக்கூடம், புகைவண்டி சண்டைகளில் விஷுவல் எபெக்ட்டுகள் கைகொடுத்து இருப்பதால் அனல் அரசுவை பெரிதாய் காக்காமல் போகிறது அவரது அடைமொழி. கூரைக்கு மேல் போடும் சைக்கிள் சண்டையை பீட்டர் மிங் நன்றாய் செய்திருக்கிறார். எனினும் 'அயன்' ஆப்ரிக்க சேஸ் அளவிற்கு பரபரப்பு இல்லாமல் போனது ஏமாற்றம்.

'எனக்கு இப்படி ஆகி இருந்தா நீ விட்டிருப்பியா'  வசனம், ஜில்லட் ப்ளேட் விளம்பரம், சைனா லொக்கேஷன் என சில இடங்களில் மட்டும் ஷங்கரின் டச் தெரிகிறது. செயற்கைக்காதல், அதிகமாய் அப்பி இருக்கும் அந்நியன் சாயல், டப்பா டான்ஸ் ஆடும் திரைக்கதை, அமெச்சூர்தனமான துணை நடிகர்கள் என சலிக்க வைக்கும் சமாச்சாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. படத்தின் நீளம் வேறு மூன்று மணிநேரம் ஒன்பது நிமிடங்கள். இப்படி நாம் சோதனைச்சாலை எலியாவோம் என முன்பே தெரிந்திருந்தால் கருட புராண தண்டனைகளில் ஒன்றை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கலாமே என பிரார்த்திக்க வைக்கும் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.

ஷங்கர் இயக்கியவற்றில் பாய்ஸ், சிவாஜி போன்றவைதான் முடியல சாமி லிஸ்டில் இருந்தன. அப்போதாவது ரஹ்மானும், மொட்டை பாஸ் ரஜினியும் முறையே பாய்ஸ் மற்றும் சிவாஜிக்கு முட்டு தந்தார்கள். இம்முறை 'எங்க... உங்கள நீங்களே தூக்கிக்காட்டுங்க' எனும் சவால் இருப்பதால் 'மிஸ்டர் தமிழ்நாடு' ஆகவே ஷங்கர் படாதபாடு பட வேண்டி இருக்கும். 'மிஸ்டர் இந்தியா' கனவை நிறைவேற்ற கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்கு 'ஐ' நிச்சயம் ஒரு Eye ஓப்பனர் என்பதில் ஐயமில்லை.


Written for tamil.jillmore.com   
....................................................................... 

Saturday, January 3, 2015

ஃபேஸ்புக்கில் நான்மெட்ராஸ் பவன் தளத்தை வாசித்து ஆதரவு தந்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

 
மெட்ராஸ் பவன் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருவதற்கு முக்கிய மற்றும் ஒரே காரணம் நீங்கள்தான். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் பல்வறு அயல் தேசங்களில் இருந்து இத்தளத்தை வாசித்து ஊக்கம் அளித்து வரும் ஒவ்வொருவருக்கும் நன்றி. இவ்வருடமும் என்னால் ஆன நல்ல பதிவுகளை எழுதுவேன்.

ஃபேஸ்புக்கில் என்னை தொடர... மின்னஞ்சல் முகவரி: madrasminnal@gmail.comஅனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

.......................................................................................
Related Posts Plugin for WordPress, Blogger...