CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, December 31, 2014

திரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள்


2014 ஆம் ஆண்டில் எனக்கு பிடித்த தமிழ்த்திரை படைப்புகள், கலைஞர்களை இப்பதிவின் மூலம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. பெரிய ஸ்டார்கள்/இயக்குனர்கள் படங்கள் எதுவும் பெரிதாய் கவரவில்லை. கூடைப்பந்தாட்டத்தை மையமாகக்கொண்டு வெளிவந்த வல்லினம், தமிழகத்தில் நடந்த மோசடிகளை சுவாரஸ்யமாய் தொகுத்த சதுரங்க வேட்டை, விறுவிறு கமர்சியலாய் இருந்த கோலி சோடா உள்ளிட்டவை ரசிக்க வைத்தன. 

சாதி/மத பிரச்னைகள், கார்ப்பரேட் கம்பனிகளின் அராஜகம் போன்ற முக்கியமான பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு படங்கள் வந்தாலும் அவைகள் எல்லாம் மசாலா பிடிக்குள் சிக்கியதால் 'க்ளாஸ்' வரிசையில் சேராமல் போயின. இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர்களில் படையெடுத்தாலும் மிகச்சிலருக்கே வெற்றி கிட்டியது. பேசப்பட்ட இயக்குனர்கள் கூட தடுமாற்றத்தை சந்தித்தனர். 2015 ஆம் ஆண்டில் வணிக ரீதியான வெற்றிப்படங்கள் அதிகம் வந்தால் மட்டுமே தமிழ் திரையுலகம் தப்பிக்க விட முடியும். 'சமூகத்துக்கு நல்லது சொன்னா போதும்' என்பதோடு திருப்தி ஆகிவிட்டால் போதாது. சிறந்த படங்கள் வசூலையும் சேர்த்து அள்ளினால்தான் முழுமையான வெற்றியை அனுபவிக்க முடியுமென்பது பலரும் அறிந்ததுதான். இனி 2014 இல் எனக்கு பிடித்த படைப்புகள்/கலைஞர்கள் பட்டியல்:

சண்டைப்பயிற்சி: சுப்ரீம் சுந்தர் - கோலி சோடா

    
ஓரளவுக்கேனும் லைவ்வான சண்டைகளை அமைப்பது என்பதே இந்திய சினிமாவில் அருகி வரும் நேரமிது. கயிறு மற்றும் கணினியின் துணையுடன் மட்டுமே நாயகன், வில்லன், அடியாட்கள் அனைவரும் பறந்து வருகிறார்கள். ரத்தம் தெறிக்கும் வன்முறைப்படங்கள் முன்புபோல இவ்வருடம் பெரியளவில் வரவில்லை. வன்மம், மெட்ராஸ், மீகாமன், ஜிகர்தண்டா போன்ற சில படங்களில் மட்டுமே 'மனசாட்சியுடன்' ஆக்சன் காட்சிகள் அமைக்கப்பட்டன.

மாஸ் கோலாக்களுக்கு இடையே பீறிட்டு வந்தது சுப்ரீம் சுந்தரின் கோலி சோடா ஆக்சன் ப்ளாக். மார்க்கெட்டில் நான்கு பசங்களும் ஆக்ரோசமாக போட்ட சண்டைதான் இவ்வருடத்தின் தாறுமாறு தகராறு. ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருந்தாலும் சரியான வெளிச்சம் கிடைக்காத வருத்தத்தை காலி செய்து சுந்தரை 'சுப்ரீம்' மாஸ்டர் ஆக்கியது  கோலி சோடா.
 
ஒளிப்பதிவு: கேவி ஆரி - ஜிகர்தண்டா


இவ்வருடம் ஏகப்பட்ட பேர் தங்கள் சிறந்த ஒளிப்பதிவு மூலம் தமிழ் திரையில் ஆளுமை செய்தார்கள். தினேஷ் கிருஷ்ணன் (தெகிடி), ராஜவேல் ஒளிவீரன் (நெடுஞ்சாலை), மனோஜ் பரமஹம்சா (பூவரசம் பீப்பீ), வெங்கடேஷ் (சதுரங்க வேட்டை), சங்கர் (முண்டாசுப்பட்டி), சன்னி ஜோசப் (ராமானுஜன்), , முரளி (மெட்ராஸ்), நீரவ் ஷா (காவியத்தலைவன்), ரவி ராய் (பிசாசு), சதீஷ் (மீகாமன்) என பட்டியல் நீள்கிறது. 

இதுதான் மதுரை என்று பலர் பயாஸ்கோப் காட்டி வந்தபோது இன்னொரு மதுரையை கண்டுபிடித்தார் கேமரா கொலம்பஸ் கேவி ஆரி. பகலையும், இரவையும் தனது கட்டளைக்கு ஆட்டுவித்து அப்ளாஸ் வாங்கிய ஒளி ஓவியர்.
  
பாடகி: உத்ரா - 'போகும் பாதை' (பிசாசு).


கண்ணுக்குள் பொத்தி (திருமணம் எனும் நிக்காஹ்), கோடையில (குக்கூ), நாராயண (ராமானுஜன்), அம்மா அம்மா (வேலையில்லா பட்டதாரி), புத்தம் புது காலை (மேகா), உச்சிமல (காடு), என் ஆள (கயல்) ஆகிய பாடல்கள் மூலம் முறையே சாருலதா மணி, வைக்கம் விஜயலட்சுமி, எஸ்.ஜானகி, ஆனந்தி, மகிழினி, ஷ்ரேயா கோஷல் போன்றவர்கள் அசத்தினார்கள்.   

அனைவரின் பின்னணி குரலையும் விட உத்ராவின் 'போகும் பாதை' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழச்சி தங்கபாண்டியனின் பாடல் வரிகள், அர்ரோலினின் வயலின் ஒலி, உத்ராவின் குரல் வளம், மிஷ்கினின் காட்சியமைப்பு என அனைத்தும் கச்சிதமாய் இணைந்து நீண்ட காலத்திற்கு மறக்க முடியாத பாடலை தந்தன. உன்னி கிருஷ்ணன் மகள் என்பதால் உத்ராவின் சாரீரம் வெகு சிறப்பாய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லைதான்.

பாடகர்: ஹரிஹரன் - 'போடா போ' (ஆள்) ஒனக்காக (பலராம் - பண்ணையாரும் பத்மினியும்), இந்த பொறப்புதான் (கைலாஷ் கேர் - உன் சமையல் அறையில்), விண்மீன் (அபே - தெகிடி),  கண்ணம்மா,  பாண்டி நாட்டு (அந்தோணி தாசன் - ஜிகர்தண்டா) போன்ற பாடல்கள் அதிகமாய் பிடித்திருந்தது. நம்ம கிராமம் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய 'இயற்கை அன்னையின்' பாடல் இன்னும் சிறப்பு. ஆனால் இதையும் தாண்டி மனதை கொள்ளையடித்த பாடல் ஹரிஹரன் பாடிய 'போடா போ' (ஆள்). தன்னம்பிக்கை தரும் வரிகளை கொண்ட இப்பாடல் ஹரிஹரன் மகுடத்தில் இன்னொரு வைரக்கல். இடையூறு செய்யாத ஜோஹனின் இசையும் சிறப்பு.

பாடலாசிரியர்: யுகபாரதி - குக்கூ, காடு, கயல்.

   
ஒனக்காக பொறந்தேனே (பண்ணையாரும் பத்மினியும்) பாடலில் அமரர் வாலி, 'போகும் பாதை'யில் (பிசாசு) தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தாமரை, கார்க்கி, கானா பாலா என ஆளுக்கொரு விதத்தில் அருமையான பாடல்களை இயற்றி இருந்தார்கள். எனினும் கபிலன் (தெகிடி, மெட்ராஸ்) மற்றும் யுகபாரதியின் எழுத்துக்கள்தான் என்னை அதிகம் ஈர்த்தன. ஆகாசத்த, கோடையில (குக்கூ), உச்சிமல, ஊரோரம் (காடு), டார்லிங் டம்பக்கு (மான் கராத்தே) மற்றும் கயல் பாடல்கள் அற்புதம். 

இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் - மெட்ராஸ், குக்கூ, ஜிகர்தண்டா


பின்னணி மற்றும் பாடலுக்கான இசையமைப்பு என இரண்டிலும் முன்னே நின்றது சந்தோஷ் நாராயணன்தான். மெட்ராஸ், குக்கூ, ஜிகர்தண்டா என சந்தோஷின் 2014 இசைப்பயணம் அட்டகாசம். ராஜா, ரஹ்மானுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் தனியிடம் பெறும் தகுதி நிறைந்தவராக இருக்கிறார். இவ்வாண்டின் இன்னொரு நம்பிக்கை தரும் வரவு இசையமைப்பாளர் சான் ரோல்டன். 

நகைச்சுவை நடிகர்: ராமதாஸ் - முண்டாசுப்பட்டி


போதுமான வாய்ப்புகள் கிடைத்தும் சூரி பிரகாசிக்கவில்லை. பௌலராக சுசீந்திரனின் ஜீவா படத்தில் மட்டும் ஸ்கோர் செய்தார். சதீஷ், பாலசரவணன் ஆகியோரும் சந்தர்ப்பங்களை கோட்டை விட்டனர். கோலி சோடாவில் இமான் அண்ணாச்சி காவல் நிலையத்தினுள் செய்த அலப்பறை சிரிக்க வைத்தது. வி.ஐ.பி.யில் குறைவாக பேசி நிறைவாய் மகிழ வைத்தார் விவேக். கப்பலில் காமடிக்கு உத்திரவாதம் தந்தார் விடிவி கணேஷ். அரண்மனையில் சந்தானத்தின் காமடியால் அரங்கம் அதிர்ந்தது. நாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தில் எதிர்பார்த்த அளவு கலகலப்பில்லை.

பெல்பாட்டம் காலத்தில் ஹீரோ வாய்ப்பு தேடி அலையும் முனீஷ்காந்த் வேடத்தில் பட்டையை கிளப்பினார் ராமதாஸ். முண்டாசுப்பட்டியில் வட்டார வழக்கு, 'நடிச்சா ஹீரோ சார்' தோரணை, க்ளைமாக்ஸ் கலாட்டா மூலம் நகைச்சுவை நாயகனாய் வெற்றிக்கொடி கட்டினார் இவர்.

..........................................................................

தொடர்ச்சியை படிக்க:

திரைவிரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் இரண்டு

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...