CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, December 31, 2014

திரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் 2

காட்சி (வசனமின்றி): அமர காவியம்
காதல் கைகூடுமா ஆகாதா எனும் மன உளைச்சலுடன் காத்திருந்து வெறுத்துப்போய் மியா ஜார்ஜை சத்யா குத்தி சாய்க்கும் காட்சி. அமரகாவியமாக வந்திருக்க வேண்டிய படைப்பு. மெதுவான காட்சிகள் அதிகம் இருந்ததால் அமர விடா காவியமாய் போனது துரதிர்ஷ்டம்.

காட்சி (வசனத்துடன்):  காவியத்தலைவன்


தனது நாடகக்குழுவில் ராஜபார்ட்டை தேர்வு செய்ய பிருத்விராஜ் மற்றும் சித்தார்த்திற்கு பரீட்சை வைக்கிறார் நாசர். சூரபத்மனைப்போல ஆக்ரோசம் பொங்க பிருத்விராஜ் கர்ஜித்து முடித்த பிறகு மெதட் ஆக்டிங் பாணியில் சூரபத்மனை வெளிக்கொண்டு வந்து சித்தார்த் பேசும் காட்சி எனது பேவரிட். 


துணை நடிகை: சுகுமாரி - நம்ம கிராமம்
பாரதம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக கணவனை இழந்த பெண்களின் சுதந்திரம் எப்படி இரண்டாம் கட்டிற்குள் கட்டுண்டு கிடந்தது என்பதை சொன்ன படம் நம்ம கிராமம். தனக்கு நேர்ந்த கொடுமை தன் வீட்டுப்பெண் துளசிக்கும் நேரக்கூடாது எனப்போராடும் அம்மிணி அம்மாளாக வாழ்ந்திருந்தார் சுகுமாரி. கடைசி கட்டத்தில் அவர் எடுக்கும் முடிவு அதிர்வு. கதாபாத்திரத்திற்காக அசலில் தலைமுடியை துறந்து அர்ப்பணிப்பை காட்டினார். உலகை விட்டு போய்விட்டாலும் சிறந்த நடிகை எனும் முத்திரையை மீண்டும் பதித்துவிட்டு சென்றவர். மற்ற துணை நடிகைகளில் ரித்விகாவின் (மெட்ராஸ்) நடிப்பு இயல்பாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

துணை நடிகர்: கலையரசன் - மெட்ராஸ்


மெட்ராஸ் போஸ்டர்களில் முன்னிலைப்படுத்தாமல் போனதாலும், கார்த்தியை விட குறைவான காட்சிகளில் நடித்த காரணத்தினாலும் மட்டுமே இவரை துணை நடிகர் என்று நம்ப வேண்டியதாய் போனது. மற்றபடி அப்படத்தின் அசல் நாயகன் கார்த்திக் அல்ல. கலையரசன்தான். அதனை மேலே இருக்கும் போட்டோவும் நிரூபிக்கிறது. மதயானைக்கூட்டம் மூலம் கவனிப்பை பெற்றவர் 'மெட்ராஸ்' சுவர் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தார். 

'கலையரசனுக்கு போட்டி இவர்தானோ?' எனும் பிரமையை உண்டாக்கியவர் சித்தார்த். ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் ஹீரோவா, துணை நடிகரா என்று புரியாத அளவிற்கு தம் கட்டி நடித்து ஓரளவு இருப்பை தக்க வைத்துக்கொண்டார். 'ஜீவா' படத்தில் ரஞ்சி போட்டியில் தேர்வாகாத விரக்தியில் இருக்கும் க்ரிக்கெட் வீரனாக லக்ஷ்மணன் நன்றாய் நடித்திருந்தார். கலையரசனுக்கு அடுத்தபடியாக வந்த ரன்னர் அப் பெர்பாமன்ஸ் இவருடையது.

நடிகை: மாளவிகா நாயர் - குக்கூ  லட்சுமி மேனன், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் குறிப்பிட்ட அளவு படங்களில் வந்து சென்றனர். கண்களில் நீர் தேக்குவதைத்தாண்டி இன்னும் அழுத்தமாய் நடித்திருந்தால் 'கயல்' ஆனந்தி பிடித்த நடிகையாய் இருந்திருப்பார். கண்பார்வையற்ற நபராக ஆகச்சிறந்த நடிப்பை மாளவிகா தரவில்லை  என்பது உண்மைதான். எனினும் இப்படி ஒரு சவாலான கேரக்டரை ஏற்று நடித்ததும், இவருக்கு போட்டியாக அருகில் எவரும் இல்லாததும் ப்ளஸ் ஆகி இருக்கிறது. 

நடிகர் & வில்லன்: சிம்ஹா - ஜிகர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா.


வில்லன்: சின்ன பயல்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கிய மதுசூதன ராவ் (கோலி சோடா), செந்தமிழ் பேசி அட்டகாசம் செய்த வளவன் (சதுரங்க வேட்டை), கொஞ்சமே பேசி அதிகமாய் பேசவைத்த அஷுதோஷ் ராணா (மீகாமன்) என இவ்வருடம் கையளவு வில்லன்களே மனதில் நின்றனர். மற்ற கார்ப்பரேட்/மும்பை வில்லன்கள் எல்லாம் சிரிக்க மட்டுமே வைத்தனர். 

அசால்ட் சேது எனும் கனமான கேரக்டரை தாங்க முடியாமல் சில இடங்களில் சிம்ஹா தடுமாறி இருந்ததாக தெரிகிறது. அதையும் மீறி இவ்வருடத்தில் எனக்குப்பிடித்த வில்லன் சிம்ஹா. 

நடிகர்: கமலும், விக்ரமும் இவ்வருடம் விடுப்பில் போய் விட்டார்கள். வி.ஐ.பி.யில் தனுஷின் நடிப்பு வழக்கம்போல் கவனிக்க வைத்தது. குக்கூ, திருடன் போலீஸ் மூலம் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் அக்கறையை காட்டி இருந்தார் தினேஷ். ஆனாலும் இன்னும் நடித்திருக்கலாமோ எனத்தோன்றியது.

ஜிகர்தண்டாவில் அசால்ட் சேதுவாகவும், ஆடாம ஜெயிச்சோமடாவில் 'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்' போலீஸாகவும் பிரமாதமாய் நடித்ததால் இவ்வாண்டின் சிறந்த நடிகராய் எனக்கு பட்டவர் சிம்ஹாதான். 

இயக்குனர்: ஞானராஜசேகரன் - ராமானுஜன்
 
  
மோகன் சர்மா (நம்ம கிராமம்), விஜய் மில்டன் (கோலி சோடா), மகிழ் திருமேனி (மீகாமன்), கார்த்திக் சுப்பராஜ் (ஜிகர்தண்டா), பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), ரஞ்சித் (மெட்ராஸ்), மிஷ்கின் (பிசாசு) என என்னை கவர்ந்த மற்றும் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடிய படைப்பாளிகள் இவ்வருடம் முத்திரையை பதித்தார்கள்.  

இவர்களைத்தாண்டி 2014 ஆம் வருடத்தில் எனக்கு அதிகம் பிடித்த இயக்குனராய் இருந்தது ஞானராஜசேகரன். கிட்டத்தட்ட அனைவரும் மறந்து போன கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை திரையில் பிரதிபலித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தார். பாரதி, பெரியார் படங்களுக்கு பிறகு மீண்டும் கடுமையான ஆராய்ச்சி, சோர்வடையா தேடல்கள் உள்ளிட்ட சிரமங்களை தாங்கி இந்த முக்கியமான வரலாற்றை பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு நன்றிகளும், வாழ்த்துகளும். அடுத்ததாய் எந்த படைப்பை எடுக்கப்போகிறார் எனும் ஆவல் அதிகரித்துள்ளது. 


திரைப்படம்: நம்ம கிராமம், ராமானுஜன் பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள்/படங்களை பட்டியலில் சேர்க்க விரும்புவதில்லை நான். அதையும் மீறி நம்ம கிராமமும், ராமானுஜனும்  பிடித்த படங்கள் வரிசையில் சேர்ந்து இருக்கின்றன. 

1930 களின் இறுதியில் இருந்து சுதந்திரம் பெறும் சமயம் வரை பாலக்காட்டு பிராமண சமூகத்தில் நடந்த பெண்ணுரிமை மறுப்பு பற்றி பேசியது நம்ம கிராமம். கூர்மையான வசனங்கள் மற்றும் சம்வ்ருதா, சுகுமாரி, ரேணுகா போன்றோரின் இயல்பான நடிப்பு ஆகியவற்றின் மூலம் நல்லதோர் படைப்பை தந்தார் மோகன் சர்மா. தானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகளை வென்ற படமிது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகிய இப்படம் தமிழில் ஜனவரி மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மொத்தம் மூன்று பாகங்களை கொண்டிருக்கும் கதை. அடுத்த பாகத்தை காண காத்திருக்கிறேன்.


முன்பு சொன்னதுபோல தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பு ராமானுஜன். கணிதமேதை ராமானுஜன் பற்றிய முக்கிய குறிப்புகளை எடுக்க இயக்குனர் ஞானராஜசேகரனுக்கு முழுதாய் ஓராண்டு தேவைப்பட்டது .ராமானுஜத்தின் துணைவியாரும் இறந்துவிட அவரைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்றின் துணையுடன் ஆய்வை துவக்கினார். லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடத்தவும் பல சோதனைகள். இறுதியில் ராமானுஜன் உயிர்த்தெழுந்து நீக்கமற நினைவில் நின்றார்.
 
வசனகர்த்தா & FIND OF THE YEAR : வினோத் - சதுரங்க வேட்டை


வசனகர்த்தா: 'ராஜாவோட வேலை...வேலை செய்யறது இல்ல. வேலை சொல்றது', 'உனக்கு மட்டும் புரிஞ்சிடுச்சின்னா நான் வேற ஐடியா யோசிக்கணும்' என யதார்த்தம் கலந்த நையாண்டி வசனங்கள் மூலம் பட்டையை கிளப்பினார் வினோத். பெரும்புள்ளி ஒருவரை வலையில் வீழ்த்த நட்ராஜ் செய்யும் ரைஸ் புல்லிங் மோசடி வசனங்கள் அமர்க்களம். இப்படி படம் நெடுக நேர்த்தியான வசனங்களை அமைத்திருந்தார். பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் ரஞ்சித்தின் மெட்ராஸ் ஆகியவற்றை விட சில அடிகள் முன்னே நின்றது வினோத்தின் பேனா வீச்சு.

FIND OF THE YEAR: நடிப்பு, தொழில்நுட்பம், பாடல்கள், இயக்கம் என வெவ்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இவ்வருடம் தங்களுக்கான அடையாளத்தை பதித்தனர். சைவம், பிசாசு படங்களுக்கு பின்னணி பாடிய உத்ரா, அறிமுக பாடலிலேயே உச்சம் தொட்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், முதல் படமான வல்லினத்தில் தேசிய விருது பெற்ற எடிட்டர் பாஸ்கர்  போன்றோர் முக்கியமானவர்கள். 

உப்மா கமர்சியல்கள் எடுப்பதை ஒதுக்கிவிட்டு உருப்படியான படங்களை எடுப்பதில் இளம் இயக்குனர்கள் தீவிரம் காட்டி வருவது திரைத்துறைக்கு ஆரோக்யம் தரும் விஷயம். பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என உதாரணங்களை சொல்லலாம். இந்த பட்டியலில் வினோத்தும் சேர்ந்து இருக்கிறார்.

பித்தலாட்டங்களை செய்யும் நாயகனை முன்னிறுத்தும் ஜனரஞ்சக படம் என்பதோடு நிறுத்தி விடாமல் யதார்த்தமான கருத்துக்கள், நல்ல தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களையும் கலந்திருந்தார் இயக்குனர். சதுரங்க வேட்டை மூலம் ராஜாவாகி இருக்கும் வினோத் வரும் ஆண்டுகளிலும் பட்டத்தை தக்க வைப்பார் என நம்பலாம். 

............................................................................


முந்தைய பதிவு:


     


 

2 comments:

Yoga.S. said...

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்,சிவா சார்!///திரை விரு(ந்)து,அருமை!

ஜீவன் சுப்பு said...

after a long time i seen madras bhavan siva by this post....:)

Related Posts Plugin for WordPress, Blogger...