CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, December 16, 2014

ஸ்பெஷல் மீல்ஸ் (16/12/14)மௌனகுரு:இரண்டு சிறப்பான உணவுக்கடைகளில் சாப்பிடும் சந்தர்ப்பம் சமீபத்தில் அமைந்தது. 'கடல் பயணங்கள்' சுரேஷ் சென்னை வந்திருந்தார். கோவை ஆவி, கே.ஆர்.பி.செந்தில், சுரேஷ் ஆகியோருடன் பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருக்கும் பிரபல 'சீனா பாய் இட்லிக்கடை'க்கு விஜயம் செய்தேன். பத்து மினி நெய் இட்லிகள் மற்றும் இரண்டு ஊத்தாப்பங்கள். இந்த இரண்டு ஐட்டங்களை மட்டும் வைத்தே ஜரூராக வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். விலை ரூ 40. இட்லிக்கு சட்னி, சாம்பார் தேவையே இல்லை. பிரமாதமான சுவை கொண்ட இட்லிப்பொடியில் குளித்தவாறு சுடச்சுட வரும் இட்லிக்களை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கலாம். அந்த இட்லிப்பொடியில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கிறது. ஊத்தாப்பமும் ஆசம். 

இக்கடை குறித்து விரிவான தகவல்களை 'கடல் பயணங்கள்' சுரேஷ் எழுதி இருக்கிறார்

 http://www.kadalpayanangal.com/2014/12/blog-post_15.html
 

அடுத்ததாக கீழ்பாக்கம் ஓர்ம்ஸ் சாலை எண் 4/2 வில் இருக்கும் மௌனகுரு கண்ணப்பா உணவகத்தை பரிந்துரை செய்து அழைத்துச்சென்றார் கேபிள் சங்கர். பூரி சைஸில் இருக்கும் தட்டு இட்லி அங்கே ஸ்பெஷலாம். அத்துடன் பேபிகார்ன், மைசூர் மற்றும் பன்னீர் தோசைகளையும் ஆர்டர் செய்து உள்ளே தள்ளினோம். ஆப்ரிக்கன், மெக்சிகன், இத்தாலி மற்றும் ஜெயின் சமூக மக்கள் விரும்பும் தோசைகள் பல வெரைட்டிகளில் கிடைக்கின்றன. ஆனாலும் அங்கே தட்டு  இட்லிதான் ஹீரோ. கேபிள், கே.ஆர்.பி. மற்றும் நான் சாப்பிட்டது மொத்தம் நான்கு தட்டு இட்லிகள் மற்றும் மூன்று தோசைகள். பில் வெறும் 300 ரூபாய்தான்!!

இக்கடை குறித்து விரிவான தகவல்களை கேபிள் சங்கர் எழுதி இருக்கிறார்:
 
http://www.cablesankaronline.com/2014/12/blog-post.html


.................................................................................

சும்மா நச்னு இருக்கு:

தேசத்தின் முன்னேற்றத்திற்கு சம்மந்தம் இல்லாத கல்வி, சுகாதாரம், மத நல்லிணக்கம் போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு மொழித்திணிப்பு, மத துவேஷம் போன்ற அதி அத்யாவசிய செயல்பாடுகளில் ஈடுபட்டும் வரும் பா.ஜ.க. தலைவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அங்கே அமளி துமளி என்றால் இங்கே அநியாய அமைதி. நிஜத்தில் சொல்லப்போனால் பக்கோடா சாப்பிடும் பன்னீர் ஆட்சியில்தான் மாநிலம் அமைதிப்பூங்காவாய் திகழ்கிறது. கவட்டைக்கு கீழே பொக்ரான் குண்டை பற்ற வைத்தால் கூட சிலையாய் இருக்கும் கலையில் 100/100 வாங்கிய நபராகவே தெரிகிறார். வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் அசையாமல் இருக்கும் அண்ணாத்தையை கூட ஒரு நொடி கண்சிமிட்ட வைத்து விடலாம் போல. அருமையான தேசம், அற்புதமான மாநிலம்.

.................................................................................. 


பட்டியல்:

ஓரளவு பெயர் சொல்லும் படங்களை தந்து வந்த ஹிந்தி மற்றும் தமிழ் திரையுலகங்கள் இவ்வருடம் பெருமளவு ஏமாற்றி விட்டன. தெலுங்கில் 'நா பங்காரு தல்லி' ரசிக்க வைத்தது. சிறந்த படங்களை தந்து இவ்வருடம் முதலிடத்தை பிடித்து இருப்பது மலையாள சினிமாதான். இவ்வாண்டின் திரைப்படங்கள் குறித்த எனது பார்வையை tamil.jillmore.com தளத்தில் விரைவில் எழுதுகிறேன். எனக்குப்பிடித்த படங்கள்/கலைஞர்கள் பட்டியல் மெட்ராஸ் பவனில் வழக்கம்போல வெளியாகும். 

............................................................................... 


மூடர் கூடம்:

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரும்போதெல்லாம் உடனே மாறாமல் சற்று தாமதமாகவே அதனுடன் இணைந்து கொள்வேன். அலுவலகத்தில் அனைவரும் மொபைல் வாங்கிய பிறகு கூட பொறுமை காத்து அதன் அவசியம் தேவைப்பட்டபோதே வாங்கினேன். டி.வி. கணினி போன்ற பொருட்கள் புதுவடிவத்திற்கு மாறினாலும் அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தேன். அதுபோல ஃபேஸ்புக்கில் பரவலாக நண்பர்கள் உள்ளே நுழைந்து போதும் நிதானமாகவே அடியெடுத்து வைத்தேன்.


நல்ல நட்புகளை வைத்திருக்கும் நண்பர்கள் தடாலடியாக சில வார்த்தைகளை பிரயோகித்து அதன் நீட்சியாக அடித்துக்கொள்வதும், அதுவே மனக்கசப்பாக மாறி பிரிவதும் எளிதாக நடந்து வருகிறது. சில நொடியில் எழுதும் வார்த்தைகள் நிரந்தர பகைக்கு வழி வகுத்து விடுகின்றன. நட்புகளை வலுவாக்க உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் அனைத்து மனக்குமுறல்கள் மற்றும் வஞ்சங்களுக்கான ஒரே வடிகாலாய் ஆகி இருப்பது காலத்தின் கோலம். பிரச்னைகளை எழுப்பும் ஸ்டேட்டஸ்கள்/கமண்ட்கள் அருமையான நட்புகளை இழக்க வைக்கும் ஆபத்தை கொண்டிருப்பதால் 'கவனம்' அவசியம்.   

............................................................................ 


தாலாட்டு கேக்குதம்மா: 

டிசம்பர் மாதமென்பதால் சென்னையில் இசை விழாக்கள் ஏகத்துக்கும் களை கட்டி வருகின்றன. அனைத்து சபாக்களிலும் சங்கீத கச்சேரிகள் ஆக்ரமித்து இருப்பதால் மேடை நாடக பிரியனான எனக்கு இம்மாதம் ஒரு சில நாடகங்களை மட்டுமே காண வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. சங்கீத ஞானம் கருவேப்பிலை அளவு கூட இல்லை. ஆனால் கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோனில் மட்டும் ஏனோ ஒரு ஈர்ப்பு. சென்ற முறை அவரது அற்புதமான இசையை நேரில் கண்டு/கேட்டு லயித்தேன். இம்முறை டிக்கட் விலை வாயை பிளக்க வைப்பதால் அன்பளிப்பு/சொற்ப விலை டிக்கட் வாங்க திட்டம் தீட்ட வேண்டும். 


'சென்னையில் திருவையாறு' இசை  நிகழ்ச்சி குறித்து எங்கள் தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தியை படிக்க:  http://tamil.jillmore.com/chennaiyil-thiruvaiyaru-musical-programme-to-begin-on-18th-december/


..........................................................................

பாட்டாளி:
தமிழில் உருப்படியான நிகழ்ச்சிகளை வழங்கும் சேனல்களில் மக்கள் தொலைக்காட்சி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறது. காலப்போக்கில் வணிக சமரசத்திற்கு ஆட்பட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அதையும் தாண்டி மண்ணின் பெருமையை காத்து வருவது பாராட்டத்தக்கது. எதேச்சையாக ஞாயிறு காலை 10.30 மணிக்கு 'சின்ன சின்ன ஆசை' எனும் நிகழ்ச்சியை பார்த்தேன். முன்பொரு சமயம் இந்நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்து வந்தாலும் இம்முறை ஒளிபரப்பிய விஷயம் இன்னும் மனதில் நிழலாடிக்கொண்டு இருக்கிறது.

திரிசூலம் மலையருகே இரண்டு தண்ணீர் பேரல்களை மாட்டு வண்டியில் ஏற்றி அப்பகுதியில் இருக்கும் சிற்றுண்டி கடைகளுக்கு சப்ளை செய்து வரும் பெரியவர் பற்றிய பிரத்யேக நிகழ்ச்சி. 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 'நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலாததால் வேறு தொழிலுக்கு செல்ல முடியவில்லை. பிள்ளைகளுக்கு திருமணம்  செய்து வைத்துவிட்டேன். வருடா வருடம் வேறு மாடு வாங்க வேண்டி இருக்கிறது. எனக்கும், மாட்டிற்கும் நித்தம் 150 ரூபாய் செலவாகிறது. மோட்டார் வாகனங்களில் தண்ணீர் சப்ளை செய்பவர்கள் நீக்கமற நிறைந்து இருப்பதால் இன்னும் எத்தனை காலம் தாக்கு பிடிப்பேன் என்று தெரியாது. அப்படி ஒரு நிலை வந்தால் ஊர்ப்பக்கம் சென்று விட வேண்டியதுதான். பயணத்தின் இடையே களைப்பாற சற்று ஓய்வெடுக்கும் சமயத்தில் டயர், பேரல் போன்றவற்றை சிலர் திருடி விடுகிறார்கள்' என கவலை பொங்க கூறினாலும் உழைப்பாளிக்கான பெருமிதம் அவரிடம் ஸ்திரமாக குடிகொண்டிருந்தது.

'உங்கள் ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி தருகிறோம்' என தொகுப்பாளர் கூற '250 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களை விட 500 லிட்டரில் ஒரே பேரலாக இருந்தால் வேலை சுலபமாக நடக்கும்' எனக்கூறினார் பெரியவர். சில கடைகளை தாண்டி ஒருவழியாக அவர் எதிர்பார்த்த பேரல் கிடைத்துவிட்டது. 1,857 ரூபாய் மதிப்புள்ள அப்பொருளுக்கான பணத்தை பெரியவரிடம் தந்து கடைக்காரரிடம் தரச்சொன்ன தொகுப்பாளரை தோள்தட்டி பாராட்டலாம்.  
........................................................................

சவாலே சமாளி:
இந்த வருடம் கிட்டத்தட்ட அனைத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களும் வசூலில் மண்ணை கவ்வி விட்டன. இதற்கு ஒரே காரணம் முன்பைப்போல பொழுதுபோக்கு படைப்பை தர முடியாமல் கற்பனை வறட்சியில் கோடம்பாக்கம் தள்ளாடியதுதான். 2015 ஆம் வருடம் இன்னும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக இவ்வருடம் வெளியாகாமல் தள்ளிப்போடப்பட்டு இருக்கும் படங்களுக்கு. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் உலகக்கோப்பை க்ரிக்கட், பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், அதன் பிறகு ஐ.பி.எல் என பல்வேறு நிகழ்வுகள் காத்திருகின்றன. எனவே கடும் போராட்டத்திற்கு இடையேதான் தமிழ்ப்படங்கள் வெற்றிக்கனியை பறிக்க இயலும்.  தலைவர் கவுண்டமணியின் '49 ஓ' மட்டுமே நான் பெரிதும் எதிர்பார்க்கும் படம். 
................................................................................ புருஷ லட்சணம்: 
For Hire - சமீபத்தில் ரசித்த குறும்படம். இரவுப்பின்னணியில் சுவாரஸ்யமாக கதை சொல்லி இருக்கிறார்  இயக்குனர் விஷ்ணு ராகவ்: 
 


..........................................................................................  

3 comments:

ஜோதிஜி said...

test

ஜோதிஜி said...

மிக மிக அற்புதம்

Yoga.S. said...

ஸ்பெஷல் மீல்'ஸ் சுவை!///தெலுங்கில் "மனம்" என்றொரு படம் காணக் கிடைத்தது.(ஆங்கில மொழி பெயர்ப்புடன்)திரையில்,மே'2014 ல் வெளியானது.

Related Posts Plugin for WordPress, Blogger...