CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, November 28, 2014

காவியத்தலைவன்

சினிமாவின் தாயென்று சொல்லப்படும் மேடை நாடகத்தை தமிழக மக்கள் கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும் இக்காலத்தில் அம்மூதாட்டியை கரம் பிடித்து அழைத்து வந்து சபையில் அமர வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் வசந்தபாலன். இப்படி ஒரு சப்ஜெக்டை தொடுவதற்கே ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வகையில் சபாவின் திரைக்கு பின்னே ஓடிப்போய் வசந்த பாலனிடம் கை குலுக்கி விட்டு இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ளலாம். அதற்கடுத்ததாக  நாடகம் எப்படி இருக்கிறது என்பதுதானே அதிமுக்கியமான விஷயம்? பார்க்கலாம் இனி.

மதுரை ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்த நாடக சபாவை நடத்தி வருபவர் சிவதாஸ் ஸ்வாமிகள். நெடுங்காலம் ராஜபார்ட் வேடம் போடும் நபர்  கருத்து மோதலால் அங்கிருந்து கிளம்பிவிட, அடுத்து அந்த பிரதான வேடத்திற்கு தகுதியானவர் யார் என யோசித்து காளியப்பனை தேர்வு செய்கிறார் சிவதாஸ். குருவினால் தொடர்ந்து தான் புறக்கணிப்படுவதை கண்டு விரக்தி அடையும் கோமதி நாயகம் இம்முறை உடைந்தே போகிறான். தம்பி போல பழகி வந்த காளியை இந்த ஒரு காரணத்திற்காக பழிவாங்கி, நாளடைவில் பிரபல ராஜபார்ட்டாக புகழை அடைகிறான் கோமதி. இதனிடையே காதலெனும் பேரலையும் இவர்களின் கால்களை பிடித்து இழுக்க கரை சேர்ந்தார்களா என்பதுதான் கதை.

நாடக்குழுவின் குருநாதராக நாசர். கொஞ்ச காலமாக நாசரின் பசிக்கு சோளப்பொறி மட்டுமே கிடைத்து வந்தது. இம்முறை வாக்காக ஒரு வாய்ப்பு கிட்டியதால் வாகை சூடியுள்ளார். சித்தார்த் எனும் இளவரசன் தலையில் ஒன்றரை டன் கிரீடம். கிரீடத்தை நழுவவிடாமல் ஆற்றை கடக்க என்ன பாடு படவேண்டி இருக்கிறது? 'டேய் ஒண்டிப்புலி.. இந்த ஆத்துல முதலை ஒண்ணு வலம் வருதாம்' என்று யாரேனும் தியேட்டரில் கத்தாத வரைக்கும்....'அப்பாடா'.  இவரது முந்தைய படங்களை வைத்து பார்க்கையில் இம்முறை சற்று மெருகேறி இருக்கிறது நடிப்பு.

சித்தார்த்தை விட பிரகாசித்து இருப்பது ப்ரித்விராஜ் தான். ஓரங்கட்டப்படும்போது ஏற்படும் வலியை விழிவழியே வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. வசனம் பேசும்போது ஆங்கங்கே மலையாள வாடை அடிப்பதால் உள்ளூர் ராஜபார்ட்டாக ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக இருக்கிறது. நாடகம் முடிந்ததும் 'இன்னைக்கி நடிச்சேனா?' என இரண்டு மூன்று இடங்களில் சித்தார்த்தை கேட்கிறார் வேதிகா. 'அழகா இருக்க. ஆனா அப்படி என்ன நடிச்சி கிழிச்ச?' என்று நாம் பேச வேண்டிய வசனத்தை சித்தார்த்தே படத்தில் பேசி இருப்பது தொலைநோக்கு பார்வையின் உச்சம்.

கௌரவ நடிகராக வந்து கம்பீரமாக பெயரை தக்கவைத்துக்கொள்கிறார் பொன்வண்ணன். நாடக வருமானம் போய் விட்டதே எனும் கோபத்தில்  மன்சூர் அலிகான் குடித்து விட்டு கலாட்டா செய்வதாக ஒரு காட்சி வருகிறது.  கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் ப்ரித்விராஜிடம் 'உன்னை அடிச்சிருவேன். ஆனா என் கண்ணுக்கு நீ கிருஷ்ணனா தெரியறியே' என அவர் சொல்லுமிடம் அட்டகாசம். 'கோவப்படாதீங்க தம்பி' என்று ஒவ்வொருவரையும் விலக்கி விடுவதிலேயே தம்பி ராமையாவிற்கு நேரம் போய் விடுகிறது. சிங்கம்புலியின் 'அம்மா...அம்மா ஆயிடுவாங்க' வசனம் சிரிக்க வைக்கிறது.


 ரஹ்மானின் இசையில் 'வாங்க மக்கா வாங்க' துள்ளல். 'ஏய் மிஸ்டர் மைனரில்' மணிரத்னத்தின் 'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி' எட்டிப்பார்க்கிறது. இதர பாடல்கள் பெரிதாக மனதில் ரீங்காரமிடவில்லை. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பு. சந்தானத்தின் கலை இயக்கம் பாராட்டுக்குரியது. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை ஆகியவற்றில் நல்ல கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முக்கிய குறிப்பு: சித்தார்த் காதலியாக வரும் இளவரசியின் உதட்டில் மட்டும் சாயம் அதிகம்.

காவியத்தலைவன் மூலம் வசந்த பாலன் அடிப்படையில் சொல்ல வருவதென்ன? மறந்து போன நாடக உலகை மீண்டும் நம் கண்முன் வண்ணமயமாக நிறுத்துவது மட்டும்தானா? கர்ண மோட்சம், நாடக சபா, சங்கரதாஸ் சுவாமிகள், ராஜபார்ட் போன்ற பலகைகளும், உச்சரிப்புகளும் மட்டுமே காவியத்தலைவனை வெற்றி பெற வைக்க போதுமான அஸ்திரங்களா? சுதந்திர வேட்கைக்கும், கலை அர்ப்பணிப்பிற்கும் பெருந்தொண்டும், தியாகமும் செய்த தமிழ் நாடக கலைஞர்கள் பற்றிய ஒரு முக்கியமான பதிவை எடுக்கும்போது பிரதான பாத்திரங்களை தேர்வு செய்வது எத்தனை முக்கியமானது? சுமாரான நடிப்பும், செயற்கை பூச்சும் கொண்ட சித்தார்த், வேதிகாவை தேர்வு செய்து அவர்களிடம் நடிப்பை வாங்க இவ்வளவு மூச்சு வாங்க வேண்டுமா என்ன?

ப்ரிதிவிராஜ், சித்தார்த் இடையேயான உடன்பிறவா சகோதர பாசம், சித்தார்த் வேதிகா காதல் இரண்டிலும் போதுமான ஈர்ப்பே இல்லை. இளவரசியின் இல்லத்திற்கு ஏதோ கடலை பர்பி வாங்க போவது போல சர்வ சாதாரணமாக சென்று செல்வது, முதுகில் தோட்டா துளைத்த பிறகும் நெடிய வசனம் பேசுவது என சித்தார்த்தின் கதாபாத்திரம் சித்திர குள்ளனாய் மாறுவது நகைச்சுவை.

க்ளைமாக்ஸ் விறுவிறுப்பாக இருக்க வேண்டுமெனும் குல வழக்கத்தின்படி 'ராஜபார்ட் ரங்கதுரை' போல சுதேசி ஃபார்முலா இறக்கப்பட்டு உள்ளது. வந்தே மாதரம் என்று சித்தார்த் நம்மை பார்த்து முழங்கும்போது 'சொல்லுங்களடா வெற்றி வேல் வீர வேல் என்று' என சிப்பாய்களிடம் இம்சை அரசன் கெஞ்சும் காட்சி கண்முன் வந்து செல்கிறது. எழுத்துலக ஆளுமைகள் வசனம் எழுதும் தமிழ்ப்படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறாமலே இருப்பதன் 'ரகசியம்' என்னவென்று தெரியவில்லை. ஜெயமோகன் வசனம் எழுதி இருக்கும் இந்த காவியத்தலைவனிலும் அந்த ரகசியம் தெரிய வாய்ப்பே இல்லை.

'வாங்க மக்கா வாங்க. எங்க நாடகம் பாக்க வாங்க' என ட்ரைலரில் தெளிவாக சொன்ன பிறகும் 'சினிமாவை' எதிர்பார்த்து வருவது அபத்தம். ஆனால் நாடகத்தை கூட காட்டாமல் நாடக ஒத்திகையை மட்டும் இயக்குனர் காட்டியிருப்பது சங்கரதாஸ் ஸ்வாமிகளுக்கே பொறுக்காது மக்கா.

Written for tamil.jillmore.com

.....................................................................3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.....

பாராட்டுகள்.

சென்னை பித்தன் said...

வழக்கம் போல்-ஒரிஜினல் சிவா!

Unknown said...

Super ji !! I liked it very much !

Related Posts Plugin for WordPress, Blogger...