CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, November 13, 2014

ஸ்பெஷல் மீல்ஸ் (13/11/14)


மனிதனின் மறுபக்கம்:


அர்னாப் கோஸ்வாமி. பேரைக்கேட்டால் அதிருகிறதோ இல்லையோ. இரவு ஒன்பது மணிக்கு ந்யூஸ் ஹவரில் ஹைடெசிபல் சப்தம் எழுப்பி அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நம்மை போர்க்கால பதற்றத்தில் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர். ஒவ்வொரு முறையும் ந்யூஸ் ஹவரில் இவர்  அலற ஆரம்பிக்கும்போது வீட்டுப்பெண்களின் அர்ச்சனையை வாங்காமல் அந்நிகழ்ச்சியை காணும் ஆண்கள் அரிது. 'வந்துட்டானா அர்னாப்பு ..' என டென்சன் ஆகி காதை பொத்திக்கொண்டு பக்கத்து அறைக்கு ஷிஃப்ட் ஆகி விடுவார் என் அம்மா. 'நீ சும்மா ஸ்க்ரீன்ல வந்தாலே திக்குன்னு இருக்கும். ஏன்யா இப்ப பேசுன?'  என்று அதிரும் அளவிற்கு தேசிய அளவில் பெயர் வாங்கிய அர்னாப்பின் பின்னணியை புட்டு புட்டு வைக்கிறது இந்த பதிவு. மிக நீண்ட கட்டுரை என்றாலும் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. படித்துப்பாருங்கள்.


......................................................................

நில், கவனி, செல்லாதே: 
சென்ற வாரம் எஸ்கேப்பில் படம் பார்க்க எக்ஸ்ப்ரஸ் அவின்யூ சென்றிருந்தேன். அப்போது சுமார் ஐந்து வயதுள்ள சிறுமி ஒருத்தி எஸ்கலேட்டரின் கீழே நின்றவாறு கையை உயர்த்தி அழுது கொண்டிருந்தாள். என்னவென்று அவள் கை காட்டிய திசை நோக்கி பார்த்தால் 'அங்கேயே இரு. அப்பாவை அனுப்பறேன்' என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் அவளது தாயார். சிறுமியின் அருகில் என்னைத்தவிர எவருமில்லை. தன்னை தனியே தவிக்க விட்டு போய் விட்டார்களே எனும் சோகம் அவளது முகத்தில் அப்பி இருந்தது. எஸ்கலேட்டரில் ஏறும்போது மகளையும் உடன் அழைத்து செல்லாமல் இப்படி ஒரு அசாதாரண சூழலை உருவாக்கிவிட்டு கூலாக நின்று கொண்டிருந்த தாயை இதுவரை நான் கண்டதில்லை.  

கொஞ்சம் அசந்திருந்தால் எஸ்கலேட்டரில் ஏறிச்செல்ல அச்சிறுமி எத்தனித்து இருப்பாள். அவளை சற்று சமாதானம் செய்துவிட்டு பத்திரமாய் தூக்கிச்சென்று மகராசியிடம் ஒப்படைத்தேன். சாதாரண சம்பவம் நடந்தது போல தேங்க்ஸ் கூறினார் அப்பெண்மணி. என்னால் புன்முறுவல் கூட பூக்க முடியவில்லை. சில நிமிடத்திற்கு முன்பு கன்னம் சிவக்க அழுது தீர்த்த அந்த குட்டி ரோஜா தாயிடம் சேர்ந்த மறுகணம் அனைத்தையும் மறந்து சகஜமாய் சிரித்து பேச ஆரம்பித்ததைக்கண்டு பூரித்துவிட்டு இடம் பெயர்ந்தேன். குழந்தைகள் மற்றும் வயதான பெண்மணிகளை மால்களுக்கு அழைத்துவரும் பிரகஸ்பதிகள் எஸ்கலேட்டர் அருகே நின்று கொண்டு அதில் ஏறுவதற்கு வலுக்கட்டாய பயிற்சி அளிக்கும் ஆபத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். லிப்டில் அழைத்துசென்றால் என்ன? அவரசமாக படம் பார்க்க செல்லும் என் போன்ற கலை சேவகர்களுக்கு கூட வழிவிடாமல் கோச்சிங் க்ளாஸ் எடுப்பதில் அப்படி என்ன ஆர்வக்கோளாறு?
....................................................................................   

மரியான்:
பதிவுலகில் உணவு சார்ந்த பிரத்யேக கட்டுரைகளை எழுதும் ஆண்கள் மிகக்குறைவு. கேபிள் சங்கரின் 'சாப்பாட்டுக்கடை' பெரிய ஹிட்டானது. பசியோடு இருக்கும்போது அவரது பதிவுகளை படித்தால் நாக்கில் நீர் சுரக்கும். சாதாரண தள்ளுவண்டி கடையில் இட்லி, தோசை சாப்பிட்ட அனுபவத்தை கூட பிரத்யேக நடையில் எழுதி வாசகர்களை கவரும் நேக்கு அறிந்தவர். உணவு குறித்து கோவை ஜீவாவும் நிறைய பதிவுகளை எழுதி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு சுரேஷ்குமாரின் 'கடல் பயணங்கள்' வலைப்பூவில் உணவு சார்ந்து அவர் பகிர்ந்திருந்த பல இடுகைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

முதலூர் முஸ்கோத் அல்வா, ஆற்காடு மக்கன் பேடா, ராமசேரி இட்லி என கணக்கிலடங்கா உணவுகள் பற்றி விரிவான விளக்கங்கள், நிறைய புகைப்படங்கள் என அசத்தி இருக்கிறார். வெறும் உணவைப்பற்றி மட்டுமே கூறாமல் அதற்கான தான் பயணித்த விதம் மற்றும் அவ்வூர்களை பற்றிய அனுபவங்களையும் சுரேஷ் கலந்து தந்திருப்பது நாமும் அவருடன் பயணித்த உணர்வை தருகிறது. அபாரமான உழைப்பு. சுரேஷ்குமாரின் வலைப்பூவை வாசிக்க:
 

...................................................................

சில்லுனு ஒரு சந்திப்பு:
கல்லூரி படிப்பு முடிந்த பிறகு சென்னையில் நடக்கும் மேடை நாடகங்களை காணும் ஆர்வம் ஏற்பட்டது. வெகுஜனங்களை போல எனக்கு தெரிந்த ஸ்டார்கள் என்றால் கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா போன்றவர்கள்தான். மீசை ஆனாலும் மனைவி, ஆ.உ.வா.அ. சிகாமணி போன்ற தமாஷ் நாடகங்கள் சிலவற்றை பார்த்து முடித்த பிறகு தற்செயலாக இடைவெளி ஏற்பட்டது. சென்ற ஆண்டு முதல் தீவிரமாக மேடை நாடகங்களை பார்க்க ஆரம்பித்தேன். பாரம்பரிய குழுக்கள், புதியவர்கள் என வித்யாசம் பார்க்காமல் கிட்டத்தட்ட அனைத்து நாடகங்களையும் காணும் சந்தர்ப்பம் அமைந்து வருகிறது. 

மேடை நாடக குழுக்களில் தனக்கென ஒரு பாணியை அமைத்து வெற்றிகரமாக வலம் வருவது டம்மிஸ் ட்ராமா. வெற்று நகைச்சுவை, தேவையற்ற சென்டிமென்ட், உபதேச மழை என அரைத்த மாவை அரைக்காமல் பெரும்பாலும் சிறந்த படைப்புகளை தந்து வரும் நாடகக்குழு. அதிதி, விநோதய சித்தம், பரிக்ஷை போன்ற எவர் கிரீன் ஹிட்களை தந்து நாடகம் காண்போரின் பேராதரவரை பெற்று வருகிறார்கள். டம்மிஸ் ட்ராமாக்கள் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாய் இருப்பது ஸ்ரீவத்சனின் சிறந்த எழுத்துக்கள். நடிகராயும் மேடையில் தோன்றி ரசிகர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர். ஸ்ரீவத்சன் அவர்கள் மீது மரியாதையும், அவரது எழுத்திற்கு ரசிகனாகவும் இருப்பதில் எனக்கு பெருமையுண்டு. சமீபத்தில் வாணி மஹாலில் விநோதய சித்தம் நாடகம் நடந்தேறிய பிறகு அவருடன் சிறிது நேரம் அளவளாவி புகைப்படம் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி.  
..........................................................................

நவீன சரஸ்வதி சபதம்: 
சிறுகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்காக நண்பர் கோவை ஆவி வெள்ளித்தாள் டு வெள்ளித்திரை எனும் போட்டியை அறிவித்து இருக்கிறார். இப்போட்டியில் வெற்றி பெறும் சிறுகதையை குறும்படமாக எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களை அறிய:

 http://www.kovaiaavee.com/2014/10/blog-post_30.html 
................................................................................. 

தப்புத்தாளங்கள்:
தேர்தல் நேரத்தில் தங்கள் கட்சிக்கு ரஜினி வாய்ஸ் தர வேண்டும் எனும் விஷயத்தில் கோவிலில் உண்டைக்கட்டிக்கு அடித்துக்கொள்பவர்களை மிஞ்சி விடுவார்கள் நம் அரசியல்வாதிகள். முத்து, படையப்பா படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மாநில விருதை அளித்து மெய் சிலிர்த்துக்கொண்டன கழக ஆட்சிகள். இதற்கு தாங்கள் எவ்விதத்திலும்  குறைந்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட அவருக்கு முதலில் பத்மஸ்ரீ தராமல் நேரடியாக பத்மபூஷன் தந்து குளிர்வித்தது வாஜ்பாய் அரசு. 

இப்போது ரஜினிக்கு Film Personality of the Year எனும் விருதை அறிவித்து அகமகிழ்கிறது மோடி அரசு. வாழ்நாள் சாதனையாளர் விருது தந்தால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு அவர் என்ன சாதனை செய்தார் என்பது ரஜினிக்கு கூட புலப்பட வாய்ப்பில்லை. போகோ பார்க்கும் குழந்தைகள் கூட கோச்சடையானை நையாண்டி செய்ய வைத்து புண்ணியத்தை கட்டிக்கொண்டார் 'இயக்குனர்' சவுந்தர்யா. வலது பக்கம் இண்டிகேட்டர் போட்டு, இடதுபுறம் கைகாட்டி நேராக ஆட்டோவை ஓட்டிப்போவதில் ரஜினி ஒரு மாணிக் பாட்சா என்பது தெரிந்தும் அவரது சிக்னலுக்காக காத்திருக்கும் கட்சிகளை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. 
.....................................................................

படிக்காதவன்:
சில மாதங்களுக்கு முன்பு வரை பல்வேறு வார பத்திரிக்கைகளை தொடர்ச்சியாக வாங்கி படித்து வந்தேன். இப்போது ரெகுலராய் வாங்குவது ஜூனியர் விகடனை மட்டுமே. அதுவும் எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியவில்லை. உருப்படியான சரக்கில்லாமல் அரசியல் சார்புடன் வெட்டி நியாயம் பேசி மிளகாய் அரைக்கும் பத்திரிக்கைகளுக்கு கும்பிடு போட்டாகி விட்டது. எப்போதாவது ஒருமுறை 'இந்த வாரமாவது தேறுமா?' என்று ஏதேனும் ஒரு இதழை வாங்குவதோடு சரி. இந்தியா டுடே (தமிழ்) இதழில் வெளியாகும் கட்டுரைகளின் எழுத்துநடை பெரிதாய் மாறியபாடில்லை. இன்னும் ஹிந்திப்பட டப்பிங் பக்ட்டையே எழுத்தில் பின்பற்றி வருகிறார்கள். பேசாமல் முரசொலி, நமது எம்.ஜி.ஆர். ஆயுட்கால சந்தா வாங்கினால் என்னவென்று தோன்றுகிறது? உண்மை செய்திகளை அப்படியே உள்வாங்கி புத்தியை சாணை தீட்டிக்கொள்ளலாமே!!
......................................................................................  

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா:
நீண்ட வருடங்களுக்கு பிறகு சென்னையில் பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் செப்டம்பர்/அக்டோபர் வந்தால் லேசாக ஒரு சாத்து சாத்திவிட்டு கிளம்பி விடும் வருண பகவான் இம்முறை அடிக்கடி விஜயம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிதமான மழை, மென்குளிர் என நல்ல சீதோஷ்ண நிலை. அம்மா ஜாமீனில் வெளிவந்த நாளில் இவ்வாண்டிற்கான இரண்டாவது இன்னிங்ஸை சென்னையில் தொடங்கிய வருணர் இந்நாள் வரை 'சிலுத்துக்க' வைத்துக்கொண்டே இருக்கிறார். ஒப்பனை கலந்து பல்லை இளிக்கும் தெருக்கள், அடுத்து தொடரவுள்ள பேயடி வெயில் அனைத்தையும் மறந்துவிட்டு...லிவிங் த முமன்ட்!! 
..........................................................................................

 
பட்டைய கெளப்பணும் பாண்டியா: 

லவ் ஆந்தம், லாலிபாப் ஆந்தம் என்று இசையுலக சிகாமணிகள் வித விதமாய் நாதஸ் வாசித்து வரும் காலமிது. எத்தனை தலைமுறைகள் மாறினாலும் தலைவர் கவுண்டமணியின் காமடிக்கு வரவேற்பு நிச்சயம். யூத் சம்மந்தப்பட்ட புரட்சி என்றால் கவுண்டர் இல்லாமலா? தலைவருக்காக ஒரு ஸ்பெஷல் ஆந்தம் உருவாக்கி யூ ட்யூப்பில் உலவ விட்டிருக்கிறார் ஜிதேந்திரா என்கிற இளைஞர். ஒரு மாதத்திற்குள் 37,000 ஹிட்ஸ்களை அள்ளி இருக்கிறது. பின்னி பெடலெடுக்கும் அந்த காணொளியை காண:


.............................................................................................


5 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையான பல செய்திகளுடன் புல் மீல்ஸ் பிரமாதம்! நன்று! நன்றி!

Yoga.S. said...

நீண்ட கால இடைவேளைக்குப் பின் வாய் விட்டுச் சிரிக்க வைத்த உங்களுக்கு நன்றி!ஸ்பெஷல் மீல்'ஸ்...........இல்ல....இல்ல..புள்(FULL) மீல்'ஸ்!

சீனு said...

குழந்தைக்கு தோள் கொடுத்த உத்தமரே அடுத்த யுகத்தின் நவம்பர் பதினாலே நீர் வாழ்க உம் குலம் வாழ்க :-)

சக்தி கல்வி மையம் said...

கடல் பயணங்கள் - நானும் வாசகன், அருமையாக உள்ளது அந்த வலைப்பூ

tamilmurugan said...

Nice post amazing 📰..

Related Posts Plugin for WordPress, Blogger...