CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, October 23, 2014

பூஜை


பக்திமயமான டைட்டில், பவ்யமான நாயகனின் குடும்பத்தார் என ஊதுபத்தி மணம் கமழ ஆரம்பிக்கும் ஹரியின் படங்கள். ஆனால் க்ளைமாக்ஸ் முடிந்ததும் சூறைக்காற்றின் பிடியில் இருந்து தப்பியவர்களை போல 'இப்ப நான் எங்க இருக்கேன்?' என கேட்க வைத்துவிடும். சாமி, வேல், சிங்கம் என கெடா விருந்து படைத்த  ஹரி அருள், சேவல், வேங்கை போன்ற வேகாத பொங்கல்களையும் தந்திருக்கிறார். சந்தேகமின்றி பூஜை இரண்டாம் வகைதான்.

கதை: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மார்க்கெட் பகுதிகளில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்பவன் பொள்ளாச்சியை சேர்ந்த அன்னதாண்டவம். கௌரவத்திற்கு இப்படி ஒரு தொழில் செய்தாலும் கூலிப்படையை ஏவி  கொலைகள் செய்வதுதான் இவனது முக்கிய வேலை. அதுபோக கோவில் ஒன்றின் அறங்காவலராகவும் இருக்கிறான். அன்னதாண்டவம் செய்யும் கிரிமினல் வேலைகளை தவிடுபொடியாக்க தீயாய் கிளம்புகிறான் வாசு. இருவருக்கும் இடையே கொழுந்துவிட்டு எரிகிறது பகை. நீதி வென்றதா? தர்மம் நிலைத்ததா?

பொதுவாக ஹரியின் நாயகர்கள் 'அதோ பாரு ரெண்டு வெள்ளை காக்கா ஜொய்யுனு பறக்குது' என்று தந்தைகள் சொன்னால் 'நீங்க சொன்னா சர்தானுங்..' என்று மறுப்பு பேசாத சமத்துகளாக இருப்பார்கள். ஒரு மாற்றத்திற்காக வாசு எனும் விஷாலை அம்மா பிள்ளையாக்கி இருக்கிறார் இயக்குனர். எனவே இது வழக்கமான ஹரி பட டெம்ப்ளேட்களை தகர்த்து எறிந்து புரட்சியை படைத்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

'வாசு...உன் பக்கத்ல இருக்குற ந்யூஸ் பேப்பரை கொஞ்சம் தாயேன்' என்று அம்மா, அண்ணி, காதலி, கணக்குப்பிள்ளை, செல்ல நாய் மணி என யார் உதவி கேட்டாலும் 'இதோ கெளம்பிட்டேன்' என்று ஸ்கார்பியோவில் பெட்ரோல் கூட போடாமல் அவினாசி, காந்திபுரம், பொள்ளாச்சி, திருப்பூர் ஏரியாக்களில் இருக்கும் அனைத்து ரவுடிகளின் வீட்டிற்கு முன்பு நின்று 'இது என் ஊருடா. என் மண்ணுடா. எனக்கே பேப்பர் இல்லையா? நாந்தன்டா வாசு. முடிஞ்சா முன்னூறு அருவாள எம்மேல வீசு' என்று உடல், பொருள், ஆவி பறக்க ஹை டெசிபலில் கதறி துடிக்கிறார் விஷால். ஆனால் தியேட்டரில் நோ விசில். ஆக்சன் காட்சிகள் அனைத்திலும் ஸ்ப்ரிங் போர்டில் படுத்து எழுகிறார்கள் ஸ்டன்ட் மேன்கள்.

உலக நாயகி ஸ்ருதி க்ளாமரில் இதயத்தை கவ்வுகிறார். ஆனால் வசன உச்சரிப்பு உசுரை வாங்குகிறது. 'ஒன் இயர்' என்பது 'பண்ணையார்' என்று காதில் விழுகிறது. கவுண்டமணி செந்தில் பாணியில் சூரி, ப்ளாக் பாண்டி அடிக்கும் லூட்டிகளுக்கு அவர்களே சிரித்தால்தான் உண்டு. முகேஷ் திவாரியின் வில்லத்தனத்தில் ஆந்திரா காரம். ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் என டஜன் கணக்கில் கௌரவ நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் ராதிகாவிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது. மொட்டைத்தலை, கூலிங் கிளாஸ் சகிதம் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் சத்யராஜ் தரும் என்ட்ரியை பார்க்கும்போது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் விறைப்பாக நடப்பதோடு நிறுத்திக்கொண்டு அல்வா தந்துவிட்டார்.

யுவனின் இசையில் எந்தப்பாடலும் தேறவில்லை. கோவை, பாட்னா, பொள்ளாச்சி ஆகிய இடங்களின் முக்கிய பகுதிகள் ஏரியல் மற்றும் லாங் ஷாட்களில் வந்து போகின்றன. அவை திரையில் திட்டு திட்டாய் தெரிகின்றன. சாதாரண கேமரா கோணத்தில் இருக்கும் சில காட்சிகளும் இதே போன்றுதான் இருக்கின்றன. விறுவிறுப்பாய் காட்சிகளை நகர்த்த காட்டி இருக்கும் ஆர்வத்தை தெளிவாய் எடுப்பதிலும் காட்டி இருக்கலாம்.

முதல் பாதி மிகச்சுமார். இடைவேளைக்கு பிறகு மெகா சீரியல் போல ஜவ்வாய் இழுக்கிறது. ஹீரோ, வில்லன், அடியாட்களின் கால்களில் மட்டுமின்றி அவர்களது கார் டயர்களுக்கு அடியில் கூட அண்டா அண்டாவாக வெந்நீரை கொட்டி விட்டார் போல இயக்குனர் ஹரி. 'எங்களுக்கு வேலையில்ல. சும்மா நிக்க நேரமில்ல' என அலறிக்கொண்டே தெருத்தெருவாய் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி ஓய்ந்து மாய்ந்து நம்மை கிறுகிறுக்க வைக்கும் அளவிற்கு அப்படி என்ன கொலவெறியோ?

தெலுங்கிலும் 'பூஜை' டப் செய்யப்பட்டு இருப்பதால் ஸ்ருதி, பாட்னா சிறப்பு வில்லன், சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை உள்ளிட்ட தேவையான (!) மசாலாக்களை தூவி தமிழ் ரசிகர்களை பூ மிதிக்க வைத்திருக்கும் ஹரி அவர்களே.. தமிழ்நாட்டில் இருக்கும் தெருக்களை வலம் வந்தது போதும். அடுத்து நாம டெல்லில மீட் பண்ணுவோம். குஞ்சாணி. குஞ்சாணி.
.............................................................

Written for tamil.jillmore.com1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...