சும்மா
கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல சோதா மசாலா படங்களுக்கு
மட்டுமே நம்மூரில் பெரும்பாலும் முட்டுக்கட்டைகள் விழும். அதற்கு இன்னொரு
உதாரணம் இது. 'கத்தி வரக்கூடாது' என மாதக்கணக்கில் வாழ்வுரிமை மைந்தர்கள்
கத்தியே ஓய்ந்தனர். எப்படியோ கடைசி பஸ்ஸில் ஃபுட்போர்ட் அடித்து தியேட்டர்
வந்து சேர்ந்து விட்டது பொட்டி.
கதை:
கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பும் கைதியை பிடிக்க இன்னொரு கைதியான
கதிரேசனின் உதவியை நாடுகிறது போலீஸ். காரியத்தை முடித்து தந்துவிட்டு
தானும் தப்பி சென்னை வந்து சேர்கிறான். அங்கே தன்னைப்போலவே இருக்கும்
ஜீவானந்தத்தை காண நேரிடுகிறது. கைது செய்ய துடிக்கும் கொல்கத்தா போலீஸிடம்
இருந்து தன்னை காத்துக்கொள்ள ஜீவாவை பயன்படுத்திக்கொள்கிறான் கத்தி என்கிற
கதிரேசன். ஒரு கட்டத்தில் ஜீவாவின் பின்னணியை அறியும் கத்தி தன்னூத்து
எனும் சிற்றூர் விவசாயிகளின் பிரச்னையை எப்படி தீர்க்கிறான்?
விஜய்க்கு
அரசியல் ஆசை..மன்னிக்கவும் மக்கள் சேவை செய்வதற்கான ஆசை துளிர்விட்ட
காலத்தில் இருந்தே சமூகம் சார்ந்த வசனங்கள் அவரது படங்களில் சற்று
அடர்த்தியாக இடம்பெற ஆரம்பித்தன. ஆனால் வானம் வசப்படவில்லை. சமீபத்தில்
அந்த கலரை மாற்றி துப்பாக்கியை தந்தார் முருகதாஸ். சினிமா ரசிகர்கள்
கொண்டாடினர். இப்போது விஜய்யின் முறை. தன்னை மக்களின் தளபதியாக பிரகடனம்
செய்யும் படைப்பு ஒன்று அவசியம் என இயக்குனரிடம் அடித்து சொல்லி இருப்பார்
போல. அதற்காக முருகதாஸ் தொட்டிருப்பது 'கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த
தொழிலாளி...விவசாயி' சப்ஜெக்டை.
ஜில்லாவில்
டல்லாய் இருந்த விஜய் மீண்டும் பிரகாசமாகி இருக்கிறார். 'ஜெயில்ல இருந்து
எப்படி ரிலீஸ் ஆன?' எனும் கேள்விக்கு 'நானே ரிலீஸ் பண்ணிக்கிட்டேன்'
என்பதுதான் ஓப்பனிங் பஞ்ச். அருமையான ப்ளாக் காமடி. எம்.ஜி.ஆர். பட
பாணியில் இரண்டு விஜய். அதாவது ஒரு உரையில் இரண்டு கத்தி. ஒன்று
மிகச்சுமாரான கூர்மையுடன். இன்னொன்று பெயருக்காக மட்டும். எப்போதும்போல
ஒரு இடத்தில் ஸ்டெடியாக நிற்காமல் சேட்டை செய்து கொண்டே ஆரம்பகட்ட
காட்சிகளில் வந்து போகிறார் விஜய். சலிப்புதான் மிஞ்சுகிறது. 'பெட்டி
எடுத்துட்டு உள்ளே வா' என கத்தும்போது 'உள்ளே போ' பாட்சா
எட்டிப்பார்க்கிறார். 'ஹெஹ்ஹே..ஐ ஐம் வைட்டிங்' எனச்சொல்லும் இடைவேளைக்கு
முந்தைய வசனம்... ஹெஹ்ஹே.
சென்னை நகர ப்ளூ ப்ரிண்ட்டை பார்க்கும்போது
டேபிளுக்கு அடியில் குழாயை பார்ப்பது வில்லேஜ் விஞ்ஞானித்தனம். சென்னையை
கதிகலங்க வைக்க புழல் ஏரி குழாய்க்குள் பெட்ரோமாக்ஸ் விளக்குடன்
அறப்போராட்டம் செய்வது புல்லரிப்பின் உச்சம்.
நாயகி சமந்தா, நகைச்சுவை சதீஷ், வில்லன் நீல் நித்தின் ஆகியோர் அட்மாஸ்பியருக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
கைதியிடம்
ஜெயிலின் ப்ளூ ப்ரிண்ட்டை தரும் மங்குனி காவலதிகாரிகள், '17 வயது சிறுவனை
வைத்து உன்னை கொன்று விடுவேன். அவனுக்கு பிரச்னை இல்லை. சில வருடம் சிறார்
சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுவான்' என்று விஜய் சொல்லும்
அபத்தமான வசனம், ஷங்கர் பட பாணியில் நீளும் காட்சிகள் என இன்னும் பல
'ஸ்ஸ்....அப்பாடா' தருணங்கள் பஞ்சமின்றி.
அனிருத்தின் இசையில் 'செல்ஃபி புள்ள' மட்டும் சுமார். மற்றவை சுத்தமாய் எடுபடவில்லை.
கிராமத்து
நீராதாரத்தை கார்ப்பரேட் கம்பனி முதலைகள் எப்படி உறிஞ்சி கொழுக்கிறார்கள்
எனும் வலுவான கதையை கையில் எடுத்து இருந்தாலும் அதனை சரியாக ப்ரசன்ட் செய்ய
அநியாயத்திற்கு தடுமாறி இருக்கிறார் முருகதாஸ். 'எதிர்காலத்தில் தீவிர
அரசியல் குதிப்பேன்' என்பதை வசனங்கள் மூலம் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்
விஜய். 2G ஊழல் செய்தவர்களை வெளிப்படையாக சாடும் வசனமும் உண்டு.
கோலா
கம்பனி விளம்பரத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோவும், கார்ப்பரேட் கம்பனிகளுக்கு
படம் செய்யும் இயக்குனரும் அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிரடியாக
தாக்கி படம் பண்ணி இருப்பது விந்தைதான். மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும்
சேர்த்து மாமா பிஸ்கோத்து தந்திருக்கிறது கத்தி.
...................................................................................
Written for tamil.jillmore.com
...................................................................................
Written for tamil.jillmore.com
1 comments:
Where is your comments for Jigarthanda movie ?? are you bored to update your blog??
Post a Comment