CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, October 13, 2014

ஸ்பெஷல் மீல்ஸ் (13/10/14)சங்கமம்:மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதி ஞாயிறு ஆண்டு மதுரை மாநகரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. சீனா ஐயா, தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் பொறுப்பேற்று இந்த நிகழ்வை நடத்துகின்றனர். சிறப்பு விருந்தினர்களாக இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் தா.கு. சுப்ரமணியம் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர். பதிவுலக நண்பர்கள் அளவளாவி கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறோம்.
...............................................................................

தீயா வேலை செய்யணும் குமாரு:
ஜில்மோர் சினிமா தளத்தில் தொடர்ந்து எழுதி வருவதால் மெட்ராஸ் பவனில் விழுந்திருக்கும் இடைவெளிக்கு மன்னிக்கவும் நண்பர்களே. சில தினங்களுக்கு முன்பு அண்ணா சாலை புஹாரி வாசலில் அண்ணன் கே.ஆர்.பி. செந்திலுடன் நின்று கொண்டிருந்தேன். 'நீங்க சிவகுமார்தான? மெட்ராஸ் பவன்....' என்று சந்தேகத்துடன் என்னை நோக்கி தன் நண்பருடன் வந்தார் ஒருவர். வேல்முருகன் என்று அறிமுகம் செய்துகொண்டார். 'ஆமா...நான்தான்...' என்று இழுத்தேன். ஒருவேளை என் பழைய பதிவை படித்த பாதிப்பில் மண்டையை உடைத்து மாவிளக்கு வைக்க வருகிறாரோ என்ற பதட்டம் அப்பி இருந்தது. ஆனால் அப்படி அசம்பாவிதம்  ஏதும் நடக்கவில்லை. இனிய சந்திப்பாகவே முடிந்தது. 'நீ செட் பண்ண ஆளுதான? ஏன்யா உனக்கு இந்த வெளம்பரம்' என ரவுசு விட்டார் கே.ஆர்.பி. சத்திய சோதனை!! பதிவு எழுதி வாரங்கள்/மாதங்கள் ஆகியும் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கும் இதயங்களுக்கு நன்றி.

இதனால் சொல்ல விரும்புவது என்னவென்றால் இனி மெட்ராஸ் பவன் ஷட்டரை ஏற்றி போதுமான இடைவெளியில் பதிவுகள் போட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்பதே. சினிமா சார்ந்த செய்திகள், புகைப்படங்கள், விமர்சனங்கள், மேடை நாடக விமர்சனங்கள் உள்ளிட்டவை கீழ்க்கண்ட தளங்களில் பெரும்பாலும் எழுதப்படும் என்பதால் தங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:......................................................................

கலகலப்பு:


'மின்னல் வரிகள்' வலைப்பூ எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களின் புத்தக வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. 'சரிதாயணம் - 2' மற்றும் 'நான் இருக்கிறேன் அம்மா' டூ இன் ஒன் புத்தகமாய் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இயல்பாகவே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட பாலகணேஷ் அவர்களிடம் இருந்து வெளிவந்திருக்கும் 'நான் இருக்கிறேன் அம்மா' எனும் தொகுப்பு நிச்சயம் பேசப்படும் என நம்புகிறேன். குமுதம் ரிப்போர்ட்டரில் 'அகம் புறம் அந்தப்புரம்' தொடர் மற்றும் 'சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும்' ஆகியவற்றை எழுதிய முகில், வலைப்பதிவர் சேட்டைக்காரன், பேராசிரியர் ஆதிரா முல்லை மற்றும் கமலம் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வேட்டைக்காரன் கெட்டப்பில் என்ட்ரி தந்து சிரிப்பின் மகத்துவத்தை விளக்கினார் சிரிப்பானந்தா. 

விழாவின் இடையே ஃப்ளாஷ் என்ட்ரி தந்த இயக்குனர் கேபிள் சங்கர். பப்ளிசிட்டியின் மகத்துவத்தை விசுவலாய் காண்பித்து விருட்டென வீட்டை நோக்கி பறந்தார். கே.ஆர்.பி.செந்தில், ரூபக், ஸ்கூல் பையன், முரளிதரன், பட்டிக்காட்டான் ஜெய், மதுமதி, அரசன், கோவை ஆவி உள்ளிட்ட பதிவர்கள் மற்றும் பாலகணேஷ் சார் மீது அன்புகொண்ட உள்ளங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மேடையில் அனைவரும் மனம் திறந்து பேச வாய்ப்பு கிடைத்தது.

தொகுப்பாளர் உயர்திரு. சீனு அவர்கள் நிகழ்ச்சி நடத்துவதில் முன்பை விட பெர்பெக்சன் காட்டி இருந்தது பாராட்டத்தக்கது. 'இன்னும் யாராவது பேசணுமா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு' என பிதாமகன் சூர்யா போல சீனு அழைக்க சகோதரி சமீரா 'ஓரம் போய்யா' என்று அவரை கிளப்பிவிட்டு அருமையாக பேச ஆரம்பித்தார். 'அப்ப சேட்டைக்காரன் யூத் இல்லையா?' ஃப்ளாஷ்பேக்கை அவர் விவரித்தது நல்ல காமடி. 

எழுத்தாளர் முகிலுடன் புத்தக வாசிப்பு குறித்து நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டேன். மொத்தத்தில் நிறைவான சந்திப்பாய் அமைந்தது.
 .........................................................................................

பிரியாணி: 
அண்ணா சாலை புஹாரியை நவீனப்படுத்தி மீண்டும் தீவிரமாக பிரியாணி சர்வீசை தொடர ஆரம்பித்த சமயம். பிரியாணி, ராய்த்தா வந்தது. கொஸ்துவை காணவில்லை. வினவினால் 'அது விரைவில் கெட்டுப்போகிறது. எனவே கஸ்டமர்கள் நலன் கருதி....'என்று தமாசு செய்தார் ஊழியர். 'அதை சாப்பிட்டா சைட் டிஷ் கேக்க மாட்டாங்க. அதுக்குத்தான?' என்று நான் சொன்னதற்கு சிரிப்பு மட்டுமே பதிலாய் வந்தது. அப்போதெல்லாம் பிரியாணி ருசியாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த சில விசிட்களில் தரம் குறைந்து இருக்கிறது. சாப்பிட்ட பிறகு நாக்கில் கசப்பு நீண்ட நேரம் ஒட்டிக்கொள்கிறது. அருகிலேயே தலப்பாகட்டி வேறு திறக்கப்பட்டு இருக்கிறது. விழித்துக்கொண்டால் மட்டுமே புஹாரி பெயரை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
.............................................................................

மெட்ராஸ்:
'ஆட்டோவுக்கு மீட்டர் அவசியம்' என்று உச்சநீதிமன்றம் சுத்தியலால் ஓங்கி அடித்தாலும் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை மாணிக் பாட்சாக்கள். முன்பைவிட ரேட்டை ஏற்றியதுதான் மிச்சம். அடுத்த வருடத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் கேட்பதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன. முன்பெல்லாம் 'ரவுண்டா குடுங்க' என்று மீட்டர் 21 ரூபாய் காட்டினால் முப்பதை கேட்பார்கள். இப்போது அவர்கள் பாஷையில் ரவுண்டு என்றால் 100, 150 தான். பக்கத்து ஏரியாவுக்கு பக்கத்து ஏரியா என்றால் நூறு. அதற்கும் பக்கத்து ஏரியா அல்லது இரவு ஒன்பதை தாண்டினால் 150 என அதிகாரபூர்வமற்ற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். நேர்மையாய் கட்டணம் வசூலிக்கும் மிகச்சில ஓட்டுனர்கள் மட்டுமே சராசரி வசதி படைத்த மக்களின் ஆபத்பாந்தவர்களாய் இருக்கிறார்கள். வாழ்க. 

குறை அவர்களிடம் மட்டுமில்லை. நம் 'பாமரர்'களையும் சும்மா சொல்லக்கூடாது. தி.நகர் பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் அலைகடலென கூட்டம். சற்று ஓரமாய் நின்று கிட்டத்தட்ட 20 ஆட்டோக்களை கவனித்தேன். ஓட்டுனர் பேரம் பேச தயாராக இருந்தால் கூட மக்களுக்கு விருப்பமில்லை. சொன்ன பணத்திற்கு சரியென தலையை ஆட்டிவிட்டு சரக் சரக்கென ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள். ஐ.டி. துறையை சேர்ந்தவர்கள்தான் ஆட்டோ கட்டண அராஜகத்துக்கு காரணம் என்று அதிசயமாய் கண்டுபிடித்த எடிசன்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மால்கள், ரங்கநாதன் தெரு போன்ற ஏரியாக்களில் அமோக வசூலை பார்த்து வருவதால் இனி ஆட்டோக்காரர்கள் இந்த அநியாய ரேட்டை குறைக்க  வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. 
 .........................................................................
 
அன்பே சிவம்:

அலுவலகங்களில் வேலை செய்வோருக்கு வீடு அல்லது உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவை கச்சிதமாக கொண்டு போய் சேர்ப்பதில் உலகப்புகழ் பெற்றவர்கள் மும்பை டப்பாவாலாக்கள். தங்கள் வாடிக்கையாளர்கள் சாப்பிடாமல் வைக்கும் உணவு வீணாகாமல் போக 'ஷேர் மை டப்பா' கான்சப்டை செயல்படுத்த ஆரம்பித்து மாதங்கள் ஆகின்றனவாம். பசியில் வாடும் எளியோருக்கு அந்த உணவை பகிர்ந்து அளித்துவிட்டு தங்கள் வேலையை நிறைவு செய்கிறார்கள் டப்பாவாலா சகோதரர்கள். ஹாட்ஸ் ஆஃப்.
 

 ...............................................................................

முன்தினம் பார்த்தேனே:

இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் எட்டிப்பார்க்கவில்லை. 'யான்' பாதிப்பு இன்னும் நம்மைப்பிடித்து ஆட்டுவதால் ரெஸ்ட் தந்துவிட்டார்கள் போல. குபீர், ஜமாய், வெண்ணிலா வீடு, பொலிடிக்கல் ரவுடி என சரமாரியாக குட்டிப்படங்கள் ரிலீஸ் ஆயின. 

அண்ணா சாலை சாய் சாந்தியில் 'குபீர்' படம் நைட்ஷோ பார்த்து மண்டை காய்ந்து போனேன். இது போதாதென்று அவ்வப்போது மூட்டைப்பூச்சி கடி வேறு. படம் துவங்கிய சிறிது நேரத்தில் ஆங்காங்கே குறட்டை சத்தம். சிலர் இருக்கைகளுக்கு கீழே தரையில் துயில் கொண்டனர். 'படமாடா இது?' என்று புலம்பி தள்ளிய நண்பன் ஒருவனை வீட்டிற்கு போக விடாமல் தோஸ்துகள் ஐந்தாறு முறை அழுத்தி அமர வைத்தது அந்தோ பரிதாபம். அந்த அமர (விடாத) காவியத்தின் விமர்சனம்:


கேரளத்தில் பிஜு மேனன் நடித்த 'வெள்ளி மூங்கா' நல்ல வரவேற்பை பெற்ற செய்தி கிடைத்ததால் வேளச்சேரி ல்யூக்ஸ் (சத்யம்) அரங்கில் படத்தை பார்த்தேன். அரசியல் சப்ஜெக்டை நல்ல நகைச்சுவை கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் ஜிபு ஜேகப். பிஜு மேனனின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. எனது விமர்சனம்:


.......................................................................................


 


4 comments:

”தளிர் சுரேஷ்” said...

நீண்ட நாளுக்கு பின் மெட்ராஸ் பவனில் சாப்பிட்ட புல்மீல்ஸ் சூப்பர்! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பதிவு. தொடர்ந்து இங்கேயும் எழுதுங்கள் சிவா....

Share my Dabba நல்லதொரு initiative. அவர்களுக்குப் பாராட்டுகள். எனது ஃப்ரூட் சாலட்-இலும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் - உங்கள் அனுமதியோடு! :)

சீனு said...

'உயர்திரு சீனு' என்னடா இன்னும் நம்மள வாரலைஏன்னு பார்த்தேன்..

நேற்று முகில் கூட பேசும் போது கூட சொன்னாரே. மெட்ராஸ்பவன் தளத்துக்கு நான் வாசகன் என்று :-) ஆ ஐ அம் வெரி ஆப்பி :-)

SevenTech said...

Thanks for the meals Mr.Siva. Meendum meals vasanai ilukkirathu. Thodarattum. I'm visiting tamil.jillmore regularly. I'm having some feedback about the site, where I can send you the feedback.

Vazgha Valamudan.

I Will prepare myself to post in Tamil from my next comment. forgive me this time Hotel ownere..

Related Posts Plugin for WordPress, Blogger...