CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, October 26, 2014

மூன்றாமாண்டு வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை 2014 நேரலை


வணக்கம் நண்பர்களே,

இன்று (26/10/2014) மதுரையில் நடைபெற்றுவரும் மூன்றாமாண்டு வலைப்பதிவர் சந்திப்பின் நேரலையை காண கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்யவும்:

இந்த லிங்க்கை தங்கள் வலைப்பூக்களிலும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Thursday, October 23, 2014

பூஜை


பக்திமயமான டைட்டில், பவ்யமான நாயகனின் குடும்பத்தார் என ஊதுபத்தி மணம் கமழ ஆரம்பிக்கும் ஹரியின் படங்கள். ஆனால் க்ளைமாக்ஸ் முடிந்ததும் சூறைக்காற்றின் பிடியில் இருந்து தப்பியவர்களை போல 'இப்ப நான் எங்க இருக்கேன்?' என கேட்க வைத்துவிடும். சாமி, வேல், சிங்கம் என கெடா விருந்து படைத்த  ஹரி அருள், சேவல், வேங்கை போன்ற வேகாத பொங்கல்களையும் தந்திருக்கிறார். சந்தேகமின்றி பூஜை இரண்டாம் வகைதான்.

கதை: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மார்க்கெட் பகுதிகளில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்பவன் பொள்ளாச்சியை சேர்ந்த அன்னதாண்டவம். கௌரவத்திற்கு இப்படி ஒரு தொழில் செய்தாலும் கூலிப்படையை ஏவி  கொலைகள் செய்வதுதான் இவனது முக்கிய வேலை. அதுபோக கோவில் ஒன்றின் அறங்காவலராகவும் இருக்கிறான். அன்னதாண்டவம் செய்யும் கிரிமினல் வேலைகளை தவிடுபொடியாக்க தீயாய் கிளம்புகிறான் வாசு. இருவருக்கும் இடையே கொழுந்துவிட்டு எரிகிறது பகை. நீதி வென்றதா? தர்மம் நிலைத்ததா?

பொதுவாக ஹரியின் நாயகர்கள் 'அதோ பாரு ரெண்டு வெள்ளை காக்கா ஜொய்யுனு பறக்குது' என்று தந்தைகள் சொன்னால் 'நீங்க சொன்னா சர்தானுங்..' என்று மறுப்பு பேசாத சமத்துகளாக இருப்பார்கள். ஒரு மாற்றத்திற்காக வாசு எனும் விஷாலை அம்மா பிள்ளையாக்கி இருக்கிறார் இயக்குனர். எனவே இது வழக்கமான ஹரி பட டெம்ப்ளேட்களை தகர்த்து எறிந்து புரட்சியை படைத்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

'வாசு...உன் பக்கத்ல இருக்குற ந்யூஸ் பேப்பரை கொஞ்சம் தாயேன்' என்று அம்மா, அண்ணி, காதலி, கணக்குப்பிள்ளை, செல்ல நாய் மணி என யார் உதவி கேட்டாலும் 'இதோ கெளம்பிட்டேன்' என்று ஸ்கார்பியோவில் பெட்ரோல் கூட போடாமல் அவினாசி, காந்திபுரம், பொள்ளாச்சி, திருப்பூர் ஏரியாக்களில் இருக்கும் அனைத்து ரவுடிகளின் வீட்டிற்கு முன்பு நின்று 'இது என் ஊருடா. என் மண்ணுடா. எனக்கே பேப்பர் இல்லையா? நாந்தன்டா வாசு. முடிஞ்சா முன்னூறு அருவாள எம்மேல வீசு' என்று உடல், பொருள், ஆவி பறக்க ஹை டெசிபலில் கதறி துடிக்கிறார் விஷால். ஆனால் தியேட்டரில் நோ விசில். ஆக்சன் காட்சிகள் அனைத்திலும் ஸ்ப்ரிங் போர்டில் படுத்து எழுகிறார்கள் ஸ்டன்ட் மேன்கள்.

உலக நாயகி ஸ்ருதி க்ளாமரில் இதயத்தை கவ்வுகிறார். ஆனால் வசன உச்சரிப்பு உசுரை வாங்குகிறது. 'ஒன் இயர்' என்பது 'பண்ணையார்' என்று காதில் விழுகிறது. கவுண்டமணி செந்தில் பாணியில் சூரி, ப்ளாக் பாண்டி அடிக்கும் லூட்டிகளுக்கு அவர்களே சிரித்தால்தான் உண்டு. முகேஷ் திவாரியின் வில்லத்தனத்தில் ஆந்திரா காரம். ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் என டஜன் கணக்கில் கௌரவ நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் ராதிகாவிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது. மொட்டைத்தலை, கூலிங் கிளாஸ் சகிதம் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் சத்யராஜ் தரும் என்ட்ரியை பார்க்கும்போது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் விறைப்பாக நடப்பதோடு நிறுத்திக்கொண்டு அல்வா தந்துவிட்டார்.

யுவனின் இசையில் எந்தப்பாடலும் தேறவில்லை. கோவை, பாட்னா, பொள்ளாச்சி ஆகிய இடங்களின் முக்கிய பகுதிகள் ஏரியல் மற்றும் லாங் ஷாட்களில் வந்து போகின்றன. அவை திரையில் திட்டு திட்டாய் தெரிகின்றன. சாதாரண கேமரா கோணத்தில் இருக்கும் சில காட்சிகளும் இதே போன்றுதான் இருக்கின்றன. விறுவிறுப்பாய் காட்சிகளை நகர்த்த காட்டி இருக்கும் ஆர்வத்தை தெளிவாய் எடுப்பதிலும் காட்டி இருக்கலாம்.

முதல் பாதி மிகச்சுமார். இடைவேளைக்கு பிறகு மெகா சீரியல் போல ஜவ்வாய் இழுக்கிறது. ஹீரோ, வில்லன், அடியாட்களின் கால்களில் மட்டுமின்றி அவர்களது கார் டயர்களுக்கு அடியில் கூட அண்டா அண்டாவாக வெந்நீரை கொட்டி விட்டார் போல இயக்குனர் ஹரி. 'எங்களுக்கு வேலையில்ல. சும்மா நிக்க நேரமில்ல' என அலறிக்கொண்டே தெருத்தெருவாய் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி ஓய்ந்து மாய்ந்து நம்மை கிறுகிறுக்க வைக்கும் அளவிற்கு அப்படி என்ன கொலவெறியோ?

தெலுங்கிலும் 'பூஜை' டப் செய்யப்பட்டு இருப்பதால் ஸ்ருதி, பாட்னா சிறப்பு வில்லன், சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை உள்ளிட்ட தேவையான (!) மசாலாக்களை தூவி தமிழ் ரசிகர்களை பூ மிதிக்க வைத்திருக்கும் ஹரி அவர்களே.. தமிழ்நாட்டில் இருக்கும் தெருக்களை வலம் வந்தது போதும். அடுத்து நாம டெல்லில மீட் பண்ணுவோம். குஞ்சாணி. குஞ்சாணி.
.............................................................

Written for tamil.jillmore.comWednesday, October 22, 2014

கத்தி

சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல சோதா மசாலா படங்களுக்கு மட்டுமே நம்மூரில் பெரும்பாலும் முட்டுக்கட்டைகள் விழும். அதற்கு இன்னொரு உதாரணம் இது. 'கத்தி வரக்கூடாது' என மாதக்கணக்கில் வாழ்வுரிமை மைந்தர்கள் கத்தியே ஓய்ந்தனர். எப்படியோ கடைசி பஸ்ஸில் ஃபுட்போர்ட் அடித்து தியேட்டர் வந்து சேர்ந்து விட்டது பொட்டி.

கதை: கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பும் கைதியை பிடிக்க இன்னொரு கைதியான கதிரேசனின் உதவியை நாடுகிறது போலீஸ். காரியத்தை முடித்து தந்துவிட்டு தானும் தப்பி சென்னை வந்து சேர்கிறான். அங்கே தன்னைப்போலவே இருக்கும் ஜீவானந்தத்தை காண நேரிடுகிறது. கைது செய்ய துடிக்கும் கொல்கத்தா போலீஸிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள ஜீவாவை பயன்படுத்திக்கொள்கிறான் கத்தி என்கிற கதிரேசன். ஒரு கட்டத்தில் ஜீவாவின் பின்னணியை அறியும் கத்தி தன்னூத்து எனும் சிற்றூர் விவசாயிகளின் பிரச்னையை எப்படி தீர்க்கிறான்?

விஜய்க்கு அரசியல் ஆசை..மன்னிக்கவும் மக்கள் சேவை செய்வதற்கான ஆசை துளிர்விட்ட காலத்தில் இருந்தே சமூகம் சார்ந்த வசனங்கள் அவரது படங்களில் சற்று அடர்த்தியாக இடம்பெற ஆரம்பித்தன. ஆனால் வானம் வசப்படவில்லை.  சமீபத்தில் அந்த கலரை மாற்றி துப்பாக்கியை தந்தார் முருகதாஸ். சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். இப்போது விஜய்யின் முறை. தன்னை மக்களின் தளபதியாக பிரகடனம் செய்யும் படைப்பு ஒன்று அவசியம் என இயக்குனரிடம் அடித்து  சொல்லி இருப்பார் போல. அதற்காக முருகதாஸ் தொட்டிருப்பது 'கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...விவசாயி' சப்ஜெக்டை.

ஜில்லாவில் டல்லாய் இருந்த விஜய் மீண்டும் பிரகாசமாகி இருக்கிறார். 'ஜெயில்ல இருந்து எப்படி ரிலீஸ் ஆன?' எனும் கேள்விக்கு 'நானே ரிலீஸ் பண்ணிக்கிட்டேன்' என்பதுதான் ஓப்பனிங் பஞ்ச். அருமையான ப்ளாக் காமடி. எம்.ஜி.ஆர். பட பாணியில் இரண்டு விஜய். அதாவது ஒரு உரையில் இரண்டு கத்தி. ஒன்று மிகச்சுமாரான கூர்மையுடன். இன்னொன்று பெயருக்காக மட்டும். எப்போதும்போல ஒரு இடத்தில் ஸ்டெடியாக நிற்காமல் சேட்டை செய்து கொண்டே ஆரம்பகட்ட காட்சிகளில் வந்து போகிறார் விஜய். சலிப்புதான் மிஞ்சுகிறது. 'பெட்டி எடுத்துட்டு உள்ளே வா' என கத்தும்போது 'உள்ளே போ' பாட்சா எட்டிப்பார்க்கிறார். 'ஹெஹ்ஹே..ஐ ஐம் வைட்டிங்' எனச்சொல்லும் இடைவேளைக்கு முந்தைய வசனம்... ஹெஹ்ஹே. 

சென்னை நகர ப்ளூ ப்ரிண்ட்டை பார்க்கும்போது டேபிளுக்கு அடியில் குழாயை பார்ப்பது வில்லேஜ் விஞ்ஞானித்தனம். சென்னையை கதிகலங்க வைக்க புழல் ஏரி குழாய்க்குள் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் அறப்போராட்டம் செய்வது புல்லரிப்பின் உச்சம்.

நாயகி சமந்தா, நகைச்சுவை சதீஷ், வில்லன் நீல் நித்தின் ஆகியோர் அட்மாஸ்பியருக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

கைதியிடம் ஜெயிலின் ப்ளூ ப்ரிண்ட்டை தரும் மங்குனி காவலதிகாரிகள், '17 வயது சிறுவனை வைத்து உன்னை கொன்று விடுவேன். அவனுக்கு பிரச்னை இல்லை. சில வருடம் சிறார் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுவான்' என்று விஜய் சொல்லும் அபத்தமான வசனம், ஷங்கர் பட பாணியில் நீளும் காட்சிகள் என இன்னும் பல 'ஸ்ஸ்....அப்பாடா' தருணங்கள் பஞ்சமின்றி.

அனிருத்தின் இசையில் 'செல்ஃபி புள்ள' மட்டும் சுமார். மற்றவை சுத்தமாய் எடுபடவில்லை.

கிராமத்து நீராதாரத்தை கார்ப்பரேட் கம்பனி முதலைகள் எப்படி உறிஞ்சி கொழுக்கிறார்கள் எனும் வலுவான கதையை கையில் எடுத்து இருந்தாலும் அதனை சரியாக ப்ரசன்ட் செய்ய அநியாயத்திற்கு தடுமாறி இருக்கிறார் முருகதாஸ். 'எதிர்காலத்தில் தீவிர அரசியல் குதிப்பேன்' என்பதை வசனங்கள் மூலம் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் விஜய். 2G ஊழல் செய்தவர்களை வெளிப்படையாக சாடும் வசனமும் உண்டு.

கோலா கம்பனி விளம்பரத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோவும், கார்ப்பரேட் கம்பனிகளுக்கு படம் செய்யும் இயக்குனரும்  அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிரடியாக தாக்கி படம் பண்ணி இருப்பது விந்தைதான். மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து மாமா பிஸ்கோத்து தந்திருக்கிறது கத்தி.

...................................................................................

Written for tamil.jillmore.com


Monday, October 20, 2014

மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014 - நிகழ்ச்சிநிரல்

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்,

வரும் ஞாயிறு (அக்டோபர் 26) அன்று மதுரையில் மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. கடந்த இரு வருடங்கள் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு அளித்த ஆதரவினை மதுரை நிகழ்விற்கும் தந்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல் விவரங்கள்:பதிவர் சந்திப்பு  நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை சுமாராக நான்கு மணி வரை நடக்க உள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் பதிவர்கள் அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டு நேரம் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.பதிவர்களே, நிகழ்ச்சிநிரல் படி எல்லா நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெற உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். நிகழ்ச்சி நிரலை தங்களது பதிவில் பகிர்ந்து, பெருவாரியான பதிவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு தாருங்கள்.
fff
பதிவர்  சந்திப்பு நிகழ்ச்சிகள் நேரலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரங்களை வருகிற நாட்களில் பதிவில் பகிர்கிறோம். நிகழ்ச்சிகளை நண்பர் மகேந்திரன் பன்னீர்செல்வம் அவர்களும் தீபா நாகராணி அவர்களும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
fff
வெளியூரிலிருந்து  வரும் பதிவர்கள் அரங்கத்திற்கு வரும் வழித்தடம் பற்றி அடுத்த சில நாட்களில் வரும் பதிவில் பகிர இருக்கிறோம். பதிவர்கள் தங்களுக்கான வழித்தடத்தை குறித்துக் கொள்ளுங்கள்.
ffff
பதிவர்  திருவிழாவில் மதிய உணவாக சுவை மிகுந்த சைவ சாப்பாடு வழங்க இருக்கிறோம். உணவு ஏற்பாடுகளை சீனா ஐயா, திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்துக் கொள்கிறார்கள்.பதிவர் திருவிழாவிற்கான நிர்வாக வரவு செலவு கணக்குகள் தமிழ்வாசி பிரகாஷ் கவனித்து கொள்கிறார்.
fff
அரங்க ஏற்பாடுகள், பதிவர்களுக்கான அடையாள அட்டை, விருது ஏற்பாடுகள், சிறப்பு விருந்தினர் தொடர்பு, போன்றவற்றை தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.வெளியூர்  பதிவர்கள் தங்குவதற்கான அறை ஏற்பாடுகளை தமிழன் கோவிந்தராஜ், ஜோக்காளி பகவான்ஜி அவர்கள் கவனித்து கொள்ள இருக்கிறார்கள்.
 fff
மேலும் விவரங்களுக்கு:


பதிவர் சந்திப்பு நடைபெறும் இடம்:

கீதா நடன கோபால நாயகி மந்திர்,
எண் 3, தெப்பக்குளம் மேற்கு வீதி,
மதுரை.

தொடர்புக்கு:
தமிழ்வாசி பிரகாஷ் - 9080780981
thaiprakash1@gmail.com
....................................................................

 

Monday, October 13, 2014

ஸ்பெஷல் மீல்ஸ் (13/10/14)சங்கமம்:மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதி ஞாயிறு ஆண்டு மதுரை மாநகரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. சீனா ஐயா, தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் பொறுப்பேற்று இந்த நிகழ்வை நடத்துகின்றனர். சிறப்பு விருந்தினர்களாக இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் தா.கு. சுப்ரமணியம் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர். பதிவுலக நண்பர்கள் அளவளாவி கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறோம்.
...............................................................................

தீயா வேலை செய்யணும் குமாரு:
ஜில்மோர் சினிமா தளத்தில் தொடர்ந்து எழுதி வருவதால் மெட்ராஸ் பவனில் விழுந்திருக்கும் இடைவெளிக்கு மன்னிக்கவும் நண்பர்களே. சில தினங்களுக்கு முன்பு அண்ணா சாலை புஹாரி வாசலில் அண்ணன் கே.ஆர்.பி. செந்திலுடன் நின்று கொண்டிருந்தேன். 'நீங்க சிவகுமார்தான? மெட்ராஸ் பவன்....' என்று சந்தேகத்துடன் என்னை நோக்கி தன் நண்பருடன் வந்தார் ஒருவர். வேல்முருகன் என்று அறிமுகம் செய்துகொண்டார். 'ஆமா...நான்தான்...' என்று இழுத்தேன். ஒருவேளை என் பழைய பதிவை படித்த பாதிப்பில் மண்டையை உடைத்து மாவிளக்கு வைக்க வருகிறாரோ என்ற பதட்டம் அப்பி இருந்தது. ஆனால் அப்படி அசம்பாவிதம்  ஏதும் நடக்கவில்லை. இனிய சந்திப்பாகவே முடிந்தது. 'நீ செட் பண்ண ஆளுதான? ஏன்யா உனக்கு இந்த வெளம்பரம்' என ரவுசு விட்டார் கே.ஆர்.பி. சத்திய சோதனை!! பதிவு எழுதி வாரங்கள்/மாதங்கள் ஆகியும் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கும் இதயங்களுக்கு நன்றி.

இதனால் சொல்ல விரும்புவது என்னவென்றால் இனி மெட்ராஸ் பவன் ஷட்டரை ஏற்றி போதுமான இடைவெளியில் பதிவுகள் போட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்பதே. சினிமா சார்ந்த செய்திகள், புகைப்படங்கள், விமர்சனங்கள், மேடை நாடக விமர்சனங்கள் உள்ளிட்டவை கீழ்க்கண்ட தளங்களில் பெரும்பாலும் எழுதப்படும் என்பதால் தங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:......................................................................

கலகலப்பு:


'மின்னல் வரிகள்' வலைப்பூ எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களின் புத்தக வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. 'சரிதாயணம் - 2' மற்றும் 'நான் இருக்கிறேன் அம்மா' டூ இன் ஒன் புத்தகமாய் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இயல்பாகவே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட பாலகணேஷ் அவர்களிடம் இருந்து வெளிவந்திருக்கும் 'நான் இருக்கிறேன் அம்மா' எனும் தொகுப்பு நிச்சயம் பேசப்படும் என நம்புகிறேன். குமுதம் ரிப்போர்ட்டரில் 'அகம் புறம் அந்தப்புரம்' தொடர் மற்றும் 'சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும்' ஆகியவற்றை எழுதிய முகில், வலைப்பதிவர் சேட்டைக்காரன், பேராசிரியர் ஆதிரா முல்லை மற்றும் கமலம் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வேட்டைக்காரன் கெட்டப்பில் என்ட்ரி தந்து சிரிப்பின் மகத்துவத்தை விளக்கினார் சிரிப்பானந்தா. 

விழாவின் இடையே ஃப்ளாஷ் என்ட்ரி தந்த இயக்குனர் கேபிள் சங்கர். பப்ளிசிட்டியின் மகத்துவத்தை விசுவலாய் காண்பித்து விருட்டென வீட்டை நோக்கி பறந்தார். கே.ஆர்.பி.செந்தில், ரூபக், ஸ்கூல் பையன், முரளிதரன், பட்டிக்காட்டான் ஜெய், மதுமதி, அரசன், கோவை ஆவி உள்ளிட்ட பதிவர்கள் மற்றும் பாலகணேஷ் சார் மீது அன்புகொண்ட உள்ளங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மேடையில் அனைவரும் மனம் திறந்து பேச வாய்ப்பு கிடைத்தது.

தொகுப்பாளர் உயர்திரு. சீனு அவர்கள் நிகழ்ச்சி நடத்துவதில் முன்பை விட பெர்பெக்சன் காட்டி இருந்தது பாராட்டத்தக்கது. 'இன்னும் யாராவது பேசணுமா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு' என பிதாமகன் சூர்யா போல சீனு அழைக்க சகோதரி சமீரா 'ஓரம் போய்யா' என்று அவரை கிளப்பிவிட்டு அருமையாக பேச ஆரம்பித்தார். 'அப்ப சேட்டைக்காரன் யூத் இல்லையா?' ஃப்ளாஷ்பேக்கை அவர் விவரித்தது நல்ல காமடி. 

எழுத்தாளர் முகிலுடன் புத்தக வாசிப்பு குறித்து நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டேன். மொத்தத்தில் நிறைவான சந்திப்பாய் அமைந்தது.
 .........................................................................................

பிரியாணி: 
அண்ணா சாலை புஹாரியை நவீனப்படுத்தி மீண்டும் தீவிரமாக பிரியாணி சர்வீசை தொடர ஆரம்பித்த சமயம். பிரியாணி, ராய்த்தா வந்தது. கொஸ்துவை காணவில்லை. வினவினால் 'அது விரைவில் கெட்டுப்போகிறது. எனவே கஸ்டமர்கள் நலன் கருதி....'என்று தமாசு செய்தார் ஊழியர். 'அதை சாப்பிட்டா சைட் டிஷ் கேக்க மாட்டாங்க. அதுக்குத்தான?' என்று நான் சொன்னதற்கு சிரிப்பு மட்டுமே பதிலாய் வந்தது. அப்போதெல்லாம் பிரியாணி ருசியாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த சில விசிட்களில் தரம் குறைந்து இருக்கிறது. சாப்பிட்ட பிறகு நாக்கில் கசப்பு நீண்ட நேரம் ஒட்டிக்கொள்கிறது. அருகிலேயே தலப்பாகட்டி வேறு திறக்கப்பட்டு இருக்கிறது. விழித்துக்கொண்டால் மட்டுமே புஹாரி பெயரை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
.............................................................................

மெட்ராஸ்:
'ஆட்டோவுக்கு மீட்டர் அவசியம்' என்று உச்சநீதிமன்றம் சுத்தியலால் ஓங்கி அடித்தாலும் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை மாணிக் பாட்சாக்கள். முன்பைவிட ரேட்டை ஏற்றியதுதான் மிச்சம். அடுத்த வருடத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் கேட்பதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன. முன்பெல்லாம் 'ரவுண்டா குடுங்க' என்று மீட்டர் 21 ரூபாய் காட்டினால் முப்பதை கேட்பார்கள். இப்போது அவர்கள் பாஷையில் ரவுண்டு என்றால் 100, 150 தான். பக்கத்து ஏரியாவுக்கு பக்கத்து ஏரியா என்றால் நூறு. அதற்கும் பக்கத்து ஏரியா அல்லது இரவு ஒன்பதை தாண்டினால் 150 என அதிகாரபூர்வமற்ற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். நேர்மையாய் கட்டணம் வசூலிக்கும் மிகச்சில ஓட்டுனர்கள் மட்டுமே சராசரி வசதி படைத்த மக்களின் ஆபத்பாந்தவர்களாய் இருக்கிறார்கள். வாழ்க. 

குறை அவர்களிடம் மட்டுமில்லை. நம் 'பாமரர்'களையும் சும்மா சொல்லக்கூடாது. தி.நகர் பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் அலைகடலென கூட்டம். சற்று ஓரமாய் நின்று கிட்டத்தட்ட 20 ஆட்டோக்களை கவனித்தேன். ஓட்டுனர் பேரம் பேச தயாராக இருந்தால் கூட மக்களுக்கு விருப்பமில்லை. சொன்ன பணத்திற்கு சரியென தலையை ஆட்டிவிட்டு சரக் சரக்கென ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள். ஐ.டி. துறையை சேர்ந்தவர்கள்தான் ஆட்டோ கட்டண அராஜகத்துக்கு காரணம் என்று அதிசயமாய் கண்டுபிடித்த எடிசன்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மால்கள், ரங்கநாதன் தெரு போன்ற ஏரியாக்களில் அமோக வசூலை பார்த்து வருவதால் இனி ஆட்டோக்காரர்கள் இந்த அநியாய ரேட்டை குறைக்க  வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. 
 .........................................................................
 
அன்பே சிவம்:

அலுவலகங்களில் வேலை செய்வோருக்கு வீடு அல்லது உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவை கச்சிதமாக கொண்டு போய் சேர்ப்பதில் உலகப்புகழ் பெற்றவர்கள் மும்பை டப்பாவாலாக்கள். தங்கள் வாடிக்கையாளர்கள் சாப்பிடாமல் வைக்கும் உணவு வீணாகாமல் போக 'ஷேர் மை டப்பா' கான்சப்டை செயல்படுத்த ஆரம்பித்து மாதங்கள் ஆகின்றனவாம். பசியில் வாடும் எளியோருக்கு அந்த உணவை பகிர்ந்து அளித்துவிட்டு தங்கள் வேலையை நிறைவு செய்கிறார்கள் டப்பாவாலா சகோதரர்கள். ஹாட்ஸ் ஆஃப்.
 

 ...............................................................................

முன்தினம் பார்த்தேனே:

இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் எட்டிப்பார்க்கவில்லை. 'யான்' பாதிப்பு இன்னும் நம்மைப்பிடித்து ஆட்டுவதால் ரெஸ்ட் தந்துவிட்டார்கள் போல. குபீர், ஜமாய், வெண்ணிலா வீடு, பொலிடிக்கல் ரவுடி என சரமாரியாக குட்டிப்படங்கள் ரிலீஸ் ஆயின. 

அண்ணா சாலை சாய் சாந்தியில் 'குபீர்' படம் நைட்ஷோ பார்த்து மண்டை காய்ந்து போனேன். இது போதாதென்று அவ்வப்போது மூட்டைப்பூச்சி கடி வேறு. படம் துவங்கிய சிறிது நேரத்தில் ஆங்காங்கே குறட்டை சத்தம். சிலர் இருக்கைகளுக்கு கீழே தரையில் துயில் கொண்டனர். 'படமாடா இது?' என்று புலம்பி தள்ளிய நண்பன் ஒருவனை வீட்டிற்கு போக விடாமல் தோஸ்துகள் ஐந்தாறு முறை அழுத்தி அமர வைத்தது அந்தோ பரிதாபம். அந்த அமர (விடாத) காவியத்தின் விமர்சனம்:


கேரளத்தில் பிஜு மேனன் நடித்த 'வெள்ளி மூங்கா' நல்ல வரவேற்பை பெற்ற செய்தி கிடைத்ததால் வேளச்சேரி ல்யூக்ஸ் (சத்யம்) அரங்கில் படத்தை பார்த்தேன். அரசியல் சப்ஜெக்டை நல்ல நகைச்சுவை கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் ஜிபு ஜேகப். பிஜு மேனனின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. எனது விமர்சனம்:


.......................................................................................


 


Related Posts Plugin for WordPress, Blogger...