சஸ்பென்ஸ்/ஆக்சன் த்ரில்லர் கதைகள்.
அதற்கேற்ற நல்ல பட்ஜெட். தேர்ந்த துணை நடிகர்கள். ஃப்ரெஷ் ஆன நாயகிகள்.
தற்போதைக்கு விக்ரம் பிரபுவின் மச்ச ரேகை இப்படித்தான் இருக்கிறது. இவன் வேற மாதிரியை விட அரிமா
நம்பி சில படிகள் உயர்ந்து இருந்தது. சிகரம் தொடு....மேலும் சிறப்பாய்.
நேர்மையான
போலீஸ் அதிகாரி என்று பெயரெடுத்த செல்ல பாண்டியன் கலவரத்தை அடக்கும்போது
தனது காலை இழக்க வேண்டி வருகிறது. எனவே குற்ற ஆவண காப்பகத்தில் கோப்புகளை
பார்க்கும் பிரிவில் வேலையை தொடர்கிறார். தனது மகன் முரளி பாண்டியன்
மாநிலம் போற்றும் சிறந்த போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது அவரது கனவு.
தந்தைக்கு நேர்ந்த கதியால் காவல் துறை வேலையே வேண்டாமென முடிவெடுக்கிறான்
முரளி. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவனை காக்கிச்சட்டை போட வைக்கிறது. அதன்
பிறகு பொறுப்பை உணரும் முரளி புறநகர் ஏ.டி.எம். மையங்களில் தொடர்ந்து
கைவரிசை காட்டும் நபர்களை ஒடுக்க எம்மாதிரியான திட்டங்களை வகுத்து வாகை
சூடுகிறான் என்பதை சொல்கிறது சிகரம் தொடு.
போலீஸ்
அதிகாரி என்றால் ACP யாக இருக்க வேண்டும், ஆர்ம்ஸை முறுக்கி அதிரடி வசனம்
பேச வேண்டும், அரசியல்வாதியை அடித்து துவைக்க வேண்டும் உள்ளிட்ட
ஹீரோயிசங்களை அப்புறப்படுத்தி அடக்கி வாசித்து இருப்பதற்கே விக்ரமை பாராட்ட
வேண்டும். நடிப்பா? அது ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்குற கடைல
கெடைக்கும் என சொல்லி தப்பித்து வந்தவர் ஒருவழியாக இப்போதுதான்
முழித்துக்கொண்டு இருக்கிறார். சுமாராக நடிப்பும் எட்டிப்பார்க்கிறது.
நெகிழ்வான தந்தையாக சத்யராஜுக்கு இன்னொரு கௌரவமான கதாபாத்திரம். அழகிற்கு
நாயகி மோனல். அசட்டுத்தனமாக எதுவும் செய்யாததே அழகுதான்.
ஹீரோவின்
நண்பனாக சதீஷ் ஃப்ளைட்டிலும், சாமியாரிடமும் செய்யும் அலப்பறை ஜாலி
பட்டாசு. ஆனால் சந்தானம் பாணியில் சக நடிகர்களை நக்கல் விடுவது வேலைக்கு
ஆகாது. அட்மாஸ்பியருக்காக ஈரோடு மகேஷ். சில வார்த்தைகள் பேசினாலும்
சின்னத்திரை எஃபெக்ட் வருவதை தவிர்க்க வேண்டும். இரட்டை கொள்ளையர்களில்
ஒருவராக இயக்குனர் கௌரவே நடித்திருக்கிறார். பெரிதாக குறை இல்லாவிட்டாலும்,
அனுபவம் மிக்க நடிகரை போட்டிருந்தால் பவர்ஃபுல்லாக இருந்திருக்கும்.
லொள்ளு சபா மனோகர், சிங்கமுத்து இருவரும் கிடைத்த சான்ஸை நன்றாக
பயன்படுத்தி இருக்கிறார்கள்.
விக்ரம்
பிரபுவின் காதல், சத்யராஜின் நேர்மை, சதீஷின் காமடி என சீராய் பயணிக்கும்
முதல் பாதி அதன் பிறகு இன்னும் விறு விறுக்கிறது. தொடர்ந்து கொள்ளை
நடக்கும்போது ஏ.டி.எம். உள்ளே முகத்தை மறைக்காமல் ஸ்கிம்மர் மற்றும்
கேமராவை ஒரு நபர் பொருத்துகிறார். அவ்வளவு அசால்ட்டாகவா இருக்கிறது காவல்
துறை? போலி க்ரெடிட் கார்ட் அடிக்கும் நபர் எந்த விசாரிப்பும் இன்றி
விக்ரமை சந்திக்கும் மறுநிமிடம் ஓக்கே என்பது, தனது காதலி இருக்குமிடத்தை
லாக்கப்பில் இருக்கும் க்ரிமினல்கள் காதில் விழும்படி விக்ரம் சொல்வது,
முன்பின் அறியாத நபரிடம் மருத்துவமனை ஊழியர் டாக்டரின் செல்போன் நம்பரை
தருவது என ஆங்காங்கே அல்வா பொட்டலங்களை மடித்து தந்திருக்கிறார்கள்.
இமானின்
பின்னணி இசை பெருமளவு ரசிக்க வைக்கிறது. 'டக்கு டக்கு' மற்றும் 'சீனு
சீனு' பாடல்கள் யூத் ஸ்பெஷல். 'அன்புள்ள அப்பா' உணர்வுபூர்வம். விஜய்
உலகநாதனின் கேமரா இன்னொரு நாயகனாய். சண்டைக்காட்சிகள் அளவாய் இருந்தாலும்
அதிர்வு.
கதைக்கு
முக்கியத்துவம் தந்து சின்ன சின்ன நடிகர்களையும் சரியான வேடத்தில் நடிக்க
வைத்திருப்பதால் சிகரம் தொடு தொய்வின்றி நகர்கிறது. நல்ல சப்ஜெக்ட்டை
தேர்வு செய்தாலும் நடிப்பில் கோட்டை விட்டு வந்த விக்ரம் பிரபு இம்முறைதான்
ஓரளவு ரூட்டை பிடித்திருக்கிறார். சிகரத்தை தொட வருடங்கள் ஆகலாம். ஆனால்
அதற்கான பயணத்திற்கு இந்தப்படம் இன்னொரு படிக்கல்.
Written for tamil.jillmore.com