தமிழ்நாட்டின் பொக்கிஷங்களான பாரதி,
பெரியார் போன்றோரின் வரலாற்று பக்கங்களை செல்லுலாய்டில் படம் பிடித்து
பெருமை சேர்த்த இயக்குனர் ஞான ராஜசேகரனின் மற்றுமோர் உன்னத முயற்சி
ராமானுஜன். கும்பகோணத்தில் பிறந்து தனது அபார கணித ஆற்றலால் உலகப்புகழ்
அடைந்த ஸ்ரீனிவாச ராமானுஜனின் புகழை திரை வடிவம் மூலம் வெளிச்சத்திற்கு
கொண்டு வந்திருக்கிறார். ‘குட்வில் ஹன்டிங் எனும் ஆங்கிலப்படம் ராமானுஜன்
எடுக்க இன்ஸ்பிரேஷனாய் இருந்தது’ என அவர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தால் என்ன
கிடைக்கும்? ஏன் பூஜ்யத்தை நீங்கள் மதிப்பதில்லை’ என்று பள்ளி ஆசிரியரை
தனது வயதுக்கு மீறிய கணித ஞானத்தால் திணறடிக்கிறான் பாலகன் ராமானுஜன்.
எனினும் ‘கணிதத்தில் 100/100 வாங்கினால் போதுமா? மற்ற பாடங்களில் பாஸ்
ஆகாவிட்டால் என்ன பயன்?’ என ஆசிரியர்களால் ஒதுக்கப்படுகிறான். மகனின் அதீத
கணித ஆர்வத்தால் அவன் பட்டப்படிப்பில் தேறுவதே கேள்விக்குறி என்பதால்
தந்தையும் எரிந்து விழுகிறார். கும்பகோணம் அங்கீகரிக்காத மேதைக்கு ஹார்டி
எனும் பிரிட்டிஷ் பேராசிரியர் பேருதவி செய்கிறார். கேம்ப்ரிட்ஜ்
பல்கலைக்கழகம் சென்று தன் அசாத்திய கணித கண்டுபிடிப்புகளால் உலகப்புகழ்
பெறுகிறான். ஆனால் தீரா நோய் அவனை வாட்டி எடுக்க மகாகவி பாரதி போன்றே சொற்ப
வயதில் இயற்கை எய்துகிறான் இந்த கணிதப்புலி.
வலுவான கேரக்டரை தாங்கி இருக்கும் நாயகன்
அபிநய் கூடுமானவரை சிறப்பாக நடித்திருக்கிறார். கணிதத்தை தவிர்த்து மற்ற
அனைத்தையும் கசப்பு மருந்தாகவே பார்க்கும் முகபாவம் கச்சிதமாய் பொருந்தி
இருக்கிறது. சோகக்காட்சிகளில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம். குட்டி
ராமானுஜன் அன்மோல்…அருமையான தேர்வு. மனைவி ஜானகியாக பாமா. சரளமான நடிப்பால்
மனதை கவர்கிறார். ராமானுஜனின் தாயாராக சுஹாசினிதான் இப்படத்தின்
பெரும்பலம். குடும்பத்தாரிடம் காட்டும் கண்டிப்பு, இறுதியில் மகனுக்காக
விசும்பும் இடம் என கும்பகோண வட்டார வழக்கில் மிளிர்கிறார்.
சரத் பாபு, அப்பாஸ், மனோபாலா, ராதாரவி,
டி.பி. கஜேந்திரன் என நட்சத்திர பட்டாளம் அணிவகுத்து நிற்கிறது.
அனைவருக்கும் சிற்சில நிமிடங்களே ஒதுக்கப்பட்டு உள்ளன. நல்லி
குப்புசாமியும் இதில் அடக்கம். நிழல்கள் ரவி மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா
ஆகியோரின் அனுபவம் மிக்க நடிப்பு நன்று. இதுபோக பல ஆங்கில நடிகர்களும்
நடித்துள்ளனர். ராமானுஜனுக்கு உதவும் பேராசிரியர் ஹார்டி வேடத்தில் கெவின்
கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
ரமேஷ் விநாயகத்தின் பின்னணி இசை ‘இளையராஜா
ஏனிங்கு இல்லை’ என கேட்கத்தூண்டும் அளவிற்கு இருக்கிறது. கும்பகோணம் முதல்
கேம்ப்ரிட்ஜ் வரை இயல்பாய் பயணித்து பெரும்பாலான இடங்களில் கண்களுக்கு
விருந்தளிக்கிறது சன்னி ஜோசப்பின் கேமரா.
சிறுவன் ராமானுஜன் சட்டென மெட்ரிக் படித்த
இளைஞனாய் வந்து நிற்பது உறுத்தல். இடைப்பட்ட வயதினை உடைய காட்சி
ஓரிரண்டையாவது சேர்த்திருக்கலாம். ஆங்கில நடிகர்கள் அனைவரும் (டப்பிங்
உதவியுடன்) தமிழில் உரையாடுவது போல காட்சிகளை வைத்திருப்பது ஏனென்று
தெரியவில்லை. தமிழர்களிடம் அப்படி பேசுவது போக தங்களுக்குள்ளும் தமிழில்
உரையாடுவது ஆங்கில டப்பிங் படம் பார்க்கும் உணர்வை ஏகத்துக்கும்
தந்திருப்பது குறையாக படுகிறது. எப்போதும் போல சப் டைட்டில் போட்டிருந்தால்
சிறப்பாய் இருந்திருக்கும்.
‘ராமானுஜனின் இறுதி சடங்கிற்கு அதிக
எண்ணிக்கையில் ஆட்கள் வரவில்லையே? பரவாயில்லை. அவனுக்கு அனைத்து எண்களும்
பிடித்தமானவைதான்’, ‘நான் பெருமாள் என்ன செய்ய போகிறாரோ என்று
எண்ணிக்கொண்டு இருக்க, நீ சாரங்கபாணி பட்டர் குறித்து கேட்கிறாயே’ போன்ற
அழுத்தமான வசனங்கள் மறக்க முடியாதவை.
கும்பகோணம் ஒதுக்கிய மாமேதை எப்படி
உலகப்புகழ் பெற்றான் என்பதை தனது பாணியில் கடும் ஆராய்ச்சி செய்து
சித்திரமாக்கி இருக்கிறார் ஞான ராஜசேகரன். தற்போது நாம் பயன்படுத்தும்
ஏ.டி.எம் பாஸ்வோர்ட் உள்ளிட்ட முக்கியமான அறிவியல் முன்னேற்றங்களுக்கு
ராமானுஜத்தின் கணித சூத்திரங்கள் தான் காரணம் என்று இறுதியாக டைட்டில்
போடுவதை பார்க்கையில் தமிழர்கள் அனைவரும் கம்பீரமாய் தலை நிமிரலாம்.
written for tamil.jillmore.com
......................................................................................
3 comments:
வணக்கம்,சிவா!நலமா?///குறைகளை சுட்டி நல்ல விமர்சனம்.இது போன்ற படங்களுக்கு ராஜா தான்........!
அன்று இந்தப் படத்தை உன்னுடன் சேர்ந்து பார்க்கும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டதற்காக இப்போது வருத்தம் இழையோடுகிறது. விரைவில் பார்த்து விடுகிறேன். நடுநிலையான அழகான விமர்சனம் சிவா.
Thiru Siva Avargale,
Special meals kidaikkuma kidaikkadha?...
Urimaiyudan,
Umashankar
Post a Comment