CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, June 26, 2014

வித் யூ விதவுட் யூ
இலங்கையை களமாக கொண்டு கடந்த சில காலமாக திரைக்கு வந்திருக்கும் படைப்புகளில் எந்த தரப்பு நியாயத்தை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று கண்கொத்தி பாம்பாக பார்ப்பவர்கள் ஒருபுறம், படம் பார்த்த பிறகு ‘சாதாரண சினிமாவுக்கான இலக்கணம் கூட இல்லாமல் அரைவேக்காடாக எடுக்கப்பட்டிருக்கும் இதற்கா இத்தனை விளம்பரம்?’ என்று தலையில் அடித்து கொள்பவர்கள் மறுபக்கம். அப்படி சமீபத்தில் வெளியான படங்கள்தான் மெட்ராஸ் கபே மற்றும் இனம். இவையனைத்தும் ‘இந்தியர்களால் இயக்கப்பட்டவை’. ஆனால் ‘வித் யூ விதவுட் யூ’ வின் இயக்குனர் பிரசன்ன விதனகே ஒரு சிங்களர். சர்வதேச திரைப்பட விழாக்களில் சபாஷ் சான்றிதழ் பெற்றதாக சொல்லப்படும் இந்த படைப்பு தமிழ் – சிங்கள மக்களின் கலாச்சார பாலமாய் விளங்கி இருக்கிறது என்று சொன்னவர்கள் சிலர். உண்மையில் அப்படித்தான் இருக்கிறதா? பார்க்கலாம் இனி.

சிங்கள ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று அடகுக்கடை நடத்தி வருபவன் ஷ்யாம். அங்கு நகையை அடகு வைக்க வரும் செல்வி எனும் தமிழ்ப்பெண் மீது நேசம் கொண்டு மணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறான். முதலில் சற்று தயங்கி அதன் பிறகு அவனை கரம் பிடிக்கிறாள். சில நாட்கள் மகிழ்ச்சியாய் செல்கிறது வாழ்க்கை. ஆனால் ஒரு கட்டத்தில் தன் கணவன் சிங்கள ராணுவ வீரனாய் இருந்ததை கேள்விப்பட்டு திடுக்கிடுகிறாள். வாக்குவாதம் விஸ்வரூபம் எடுக்க நாளடைவில் மனக்கசப்பு முற்றுகிறது. அதன் பிறகு என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை சொல்கிறது இப்படைப்பு.

‘உன் கண்கள் மற்றும் உதட்டில் இருக்கும் நெருப்பு என்னை மயக்கி விட்டது’ என தொடக்கத்தில் செல்வியை வர்ணிப்பார் ஷ்யாம் (சரத் சிறி). அது உண்மைதான் என்பதை சொல்கிறது அஞ்சலி பட்டேலின் தோற்றம். தன் சகோதரர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டதை சொல்லி கதறும் காட்சியில் அஞ்சலி அபாரம். விறைப்பாகவே முகத்தை வைத்துக்கொண்டு படம் முழுக்க நடித்து இருக்கிறார் ஷ்யாம். இன்னும் நன்றாக நடித்திருக்கலாம். இவருடைய ராணுவ நண்பராக வசந்தா மற்றும் பணியாளாக மகேஸ்வரி. துணை நடிகர்கள் என்று சொல்லிக்கொள்ள இவ்விருவர் மட்டுமே. மிகச்சுமாரான நடிப்புதான்.

‘பார்த்தீர்களா..இலங்கைப்போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை எவ்வளவு சிரமத்து இடையில் பதிவு செய்திருக்கும்’ பாணியில் வந்தது சந்தோஷ் சிவனின் இனம். ஆனால் தமிழர்களின் மன ரணத்தை மேலும் கிளறி சிங்கள ராணுவ வீரர்களை உத்தமர்களாக காட்டியது அப்படம். கொடூரமான கசப்பு பண்டத்தின் மேல் லாவகமாய் தேன் தடவி தரும் அந்த வித்தையை இன்னும் அழகாய் கையாண்டு இருக்கிறார் இயக்குனர் விதனகே.

ஷ்யாம் எனப்படும் ராணுவ வீரனின் கதாபாத்திரம் இங்கே எப்படி சித்தரிக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா? அவன் அமைதியை விரும்புபவன், மனைவிக்காக அடக்குடையை கூட விற்று இந்தியா சென்று சினிமாக்களை பார்க்க லட்சியத்தை தியாகம் செய்யும் ‘அறிவாளி’. தான் ஏன் ராணுவத்தை விட்டு விலகினேன் என்பதற்கு ஒரு காரணமும் சொல்கிறான். அதாவது சக வீரர்கள் சிலர் தமிழ்ப்பெண் ஒருத்தியை கற்பழித்ததை பார்த்தானாம். அதனை கோர்ட் விசாரிக்கும்போது நண்பர்களை காப்பாற்ற உண்மையை மறைத்தானாம். தமிழ்ப்பெண்களை கற்பழித்த குற்றத்திற்கு இலங்கை ராணுவ வீரர்களை கோர்ட்டில் விசாரித்ததற்கான ஒரே ஒரு ஆதாரத்தை இயக்குனரால் காட்ட முடியுமா என்பது மிக முக்கியமான கேள்வி.

அவ்வப்போது சரத் புத்தரை வழிபடும் காட்சி ஒன்று வந்து செல்கிறது. தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு வரும் செல்வியிடம் அவன் கேட்கும் கேள்வி ‘என்ன வேண்டிக்கொண்டாய் உன் கடவுளிடம்? உங்கள் இனம் இந்த அளவிற்கு அழிவை சந்தித்தபோது எங்கே போனார் அந்த கடவுள்?’. அப்போது புத்தரும் கூட மௌனியாகத்தானே இருந்தார் இயக்குனர் விதனகே அவர்களே!!   சரத்தின் பின்னணி மற்றும் நற்குணாதிசியத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதில் இருக்கும் ஆர்வம் செல்வியின் பின்னணியை தெளிவுற சொல்வதில் இயக்குனருக்கு இல்லாமல் போனது ஏன்?


செல்வியின் குடும்பத்தார் ஏற்கனவே பலமுறை மணமான ஒருவரிடம் அவளை  தாரை வார்க்க முற்படுவது, இந்தியா சென்று சினிமாப்படங்கள் பார்க்கும் எண்ணம் கொண்டவளாக செல்வியை சித்தரிப்பதும், சிங்கள ராணுவத்தினர் என்றாலே வெறுப்பை கக்கும் ஒருத்தி அவ்வினத்தை சேர்ந்த ஒருவனை அழுத்தமான காரணம் இன்றி மணம் முடிக்க ஒப்புக்கொள்வதும்….எவ்வளவு சாமர்த்தியமாய் தமிழர்களை மட்டுப்படுத்தி தனது கலைத்திறனை புகுத்தி இருக்கிறார் பிரசன்ன விதனகே!!

மேற்சொன்ன அரசியல், யதார்த்தத்துக்கு புறம்பான கருத்து திணிப்புகளை தவிர்த்து பார்த்தாலும் இது ஒரு சுமாரான படம் மட்டுமே. விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை தியேட்டரில் செல்வியுடன் பார்த்துவிட்டு ‘வேஸ்ட் ஆப் டைம்’ என்று சரத் சொல்லும் வசனம் அருமை. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் படத்தின் தூண். ஒரே மாதிரியான காட்சிகளை ரிப்பீட் செய்வது அலுப்பு. மிகக்குறைந்த பட்ஜெட்டில் தொழில்நுட்ப ரீதியில் (மட்டும்) ஒரு நல்ல படத்தை தர முயற்சித்து இருக்கிறார் விதனகே. மற்றபடி சிங்கள – தமிழ் உறவுகளை இணைக்கும் பாலம் என்று இதனை சொல்வதெல்லாம் உச்சக்கட்ட நகைச்சுவை.

written for tamil.jillmore.com

...............................................................
 

6 comments:

Unknown said...

வணக்கம்,சிவா!நலமா?///தடை செய்ததாக சொன்னார்களே?எப்படியோ,பார்த்து தரமற்றது என்று விமர்சனம் கொடுத்தீர்களே,நன்றி!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல, நியாயமான தேர்ந்த விமர்சனம். வாழ்த்துகள்!

! சிவகுமார் ! said...

@ யோகா

வணக்கம். நலம். நீங்கள் நலமா? வெள்ளியன்று மட்டும் இப்படம் சென்னையில் திரைக்கு வந்தது. சர்ச்சை எழுந்ததால் மறுநாள் தியேட்டர்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தமிழ் ஸ்டுடியோ நண்பர்கள் சார்பாக சிறப்பு திரையிடல் ஒன்று நடந்தது. அப்போது பார்த்தேன்.

! சிவகுமார் ! said...

@ தோழர் ம.பா.

வருகைக்கு நன்றி.

SevenTech said...

Thiru. Sivakumar avargale,
Ungalin Full meals sappittu romba naal agitru.

Seekiram sappattirkku vazhi pannungal.

Regards,
M.Umashankar

! சிவகுமார் ! said...

@ உமா சங்கர்

கண்டிப்பாக. வழக்கம்போல் எழுத ஆரம்பிக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...