பத்மஸ்ரீ முத்துசாமியால் 1980 ஆம் வருடம்
எழுதப்பட்ட நாடக வடிவம்தான் உந்திச்சுழி. அதே காலகட்டத்தில் பசியின் வலி
குறித்து உரக்க சொன்ன நாடகம் ராஜசேகரனின் ‘வயிறு’. அந்த தாக்கத்தில்
உருவானதுதான் உந்திச்சுழி. பெண்ணொருத்தி முட்டையிட்டு குழந்தை பெறுவதாக
கதைக்கருவை அமைத்தார் முத்துசாமி. மியூசியம் தியேட்டரில் ஜூன் மாதம் 1980
ஆம் வருடம் அரங்கேறியது உந்திச்சுழி. ராமசாமியின் ‘ஜே. ஜே. சில
குறிப்புகள்’ நாயகனுக்காக இப்படைப்பை உருவாக்கியதாக சொல்கிறார் முத்துசாமி.
‘ஜே.ஜே.’ வில் புதுயுக மனிதனாய் நாயகன் வலம் வந்தாலும் அவனது முடிவு
சோகமாய் இருந்தது. ஆனால் உந்திச்சுழியோ பயமெனும் பிசாசை ஒழித்து வீறுநடை போட
உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்நாடகத்தில் நடித்திருப்பது மொத்தம் ஆறு
பேர். அனைவருக்குமான உடையின் நிறம் வெள்ளை. எவருக்கும் பெயரிடப்படவில்லை.
முட்டை ஒன்றினுள் இருந்து குழந்தை சத்தம் கேட்க அதை பிளந்து
பார்க்கிறார்கள் இரு நண்பர்கள். ‘முட்டையிலிருந்து பிள்ளையா? அப்படி எனில்
அது தனக்கு பிறந்திருக்க வாய்ப்பே இல்லை’ என மறுக்கிறான் மூன்றாமவன்
(தந்தை). பெற்றவளோ அவனிடம் மல்லுக்கு நிற்கிறாள். கோபத்தில் அங்கிருந்து
வெளியேறுகிறான் அவன். இப்போது அந்த இரு நண்பர்களின் காமப்பார்வையும்
அப்பெண்ணின் மேல் விழுகிறது. ‘உன்னையும், உன் மகனையும் நாங்கள்
காப்பாற்றுகிறோம்’ என அவர்கள் நிர்பந்திக்க, அவர்களின் வைப்பாட்டியாக
இருக்க சம்மதம் தெரிவிக்கிறாள் அவள்.
சில காலம் கழித்து அவளது கணவன் மீண்டும்
ஊர் வந்து சேர்கிறான். காமத்திற்காக மட்டுமே மனைவியுடன் சேரத்துடிக்கிறான்.
அந்நேரம் பருவ மங்கை ஒருத்தியும் அங்கு வருகிறாள் (வேறொருத்தி மூலம்
பிறந்த மகள்). முட்டை மூலம் பெண்கள் பிள்ளை பெற ஆரம்பித்தால் சமூகக்கேடு
என்றும், வயிற்றில் பிள்ளையின்றி இப்படி முட்டையை அடை காத்தால் பெண்கள்
மற்றவனுடன் சல்லாபிக்க வழிவகுக்கும் எனும் வாதம் முற்றுகிறது. ஆண்
வர்க்கத்தின் காம வெறிக்கு சாட்டையடி கொடுக்க மகள் எடுக்கும் முடிவு என்ன
என்பது உந்திச்சுழியின் முக்கிய கட்டம். மனைவியை திரவுபதியாகவும், மகளை
கண்ணகியாகவும் சித்தரித்து இருக்கிறார்கள்.
இந்நாடகத்தின் நீளம் அதிகபட்சம் 50
நிமிடங்கள் மட்டுமே. மேடையின் பின்னே வழக்கமாக இருக்கும் அரங்க அமைப்புகள்
எதுவும் இல்லை. வெண்திரையில் சில ஓவியங்கள் மட்டும் தீட்டப்பட்டிருந்தன.
கதை நடக்கும் சூழல், நடிப்பவர்களின் மனவோட்டம் ஆகியவற்றை பிரதிபலிக்கும்படி
வெவ்வேறு வண்ணங்களில் சிறப்பான ஒளி அமைப்பு செய்யப்பட்டு இருந்தது.
முட்டையிலிருந்து பிறக்கும் பிள்ளையாக
பாஸ்கர். படுத்த வண்ணமே சில நிமிடங்கள் ஒரே மாதிரி கால்களை உயர்த்தி பாவனை
செய்திருப்பது பாராட்டத்தக்கது. இளையராஜா(தாய்), கணேஷ் குமார்(தந்தை),
ரஜிதா(மகள்), நண்பர்களாக சிவசங்கர் மற்றும் சந்திரசேகர் ஆகியோரின்
நடிப்பும் கச்சிதம்.
வசனங்கள் அனைத்தும் ‘உம்மில் யார் உத்தமர்?’ என
சமூகத்தை சாடும் யதார்த்தங்களால் நிரம்பி இருக்கிறது. சற்று ஆழமான சிந்தனை
இருப்பவர்களுக்கு கதையின் தன்மை ஓரளவு புரிந்து விடும். ஆனால் சராசரி
ரசிகர்களுக்கு அவ்வளவு எளிதில் பிடிபடுவது சந்தேகமே. ஆனால் அதற்கும்
தீர்வுண்டு.
நாடகம் முடிந்த பிறகு அதனை
பார்த்தவர்களிடம் கருத்துகளும், கேள்விகளும் வரவேற்கப்பட்டன. ‘இம்மாதிரி
குடும்பத்துடன் பார்க்க வெகுவாக யோசிக்க வேண்டும். அந்த அளவிற்கு புணர்தல்,
முரண் உறவுகள் சார்ந்த வசனங்கள் மேலோங்கி இருக்கின்றன’ என்பது ஒரு
பார்வையாளரின் ஆதங்கம். ‘உந்திச்சுழி மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?
என்றொரு கேள்வி எழ ‘இதன் மூலம் எந்த கருத்தையும் சொல்ல வரவில்லை.
எங்களைப்பொறுத்தவரை நாடகம் என்பது படைப்பாளியையும், பார்வையாளர்களையும்
Engage செய்யும் விஷயம் மட்டுமே’ என்பது பதிலாய் வந்தது. அதுபோக
இந்தியாவில் பிற பகுதிகளில் நடக்கும் நாடகங்களை பார்த்து வரும்
நபர்களிடமிருந்தும் வலுவான கேள்விகள் முன்வைக்கப்பட அதற்கும் பதில்களை
அளித்தனர் கூத்துப்பட்டறையினர். இதில் நடித்தவர்களிடம் கேள்விகள்
முன்வைக்கப்பட்டன. மேடையில் கீழ் இருக்கைகள் இன்றி அமர்ந்தவாறே தமது
நடிப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் அனைவரும்.
குடும்ப உறவுகள். நகைச்சுவை, இதிகாச
புராணங்கள் என வெவ்வேறு களங்களில் மேடை நாடகங்கள் வெளிவருவது ஒரு
பக்கமெனில், கூத்துப்பட்டறையின் உந்திச்சுழி போன்ற படைப்புகள் மூலம் தனக்கென ஒரு
பாதையமைத்து வெற்றிகரமாக வலம் வருகிறது கூத்துப்பட்டறை குழு. பல ஆண்டுகள்
கழித்து இப்படைப்பை மீண்டும் மேடையேற்றி ஆரோக்யமான விவாதத்திற்கு வழி
வகுத்து இருக்கும் இயக்குனர் ஹார்ட்மன் டி சோசா மற்றும் துணை இயக்குனர்
ஆண்ட்ரியா பெர்ரெரா ஆகியோருக்கு வாழ்த்துகள்.
written for tamil.jillmore.com
...................................................................
1 comments:
நல்ல பகிர்வு.வித்தியாசமான விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்ட(முட்டை) கதைக் கரு!
Post a Comment